'கிச்சன் கில்லாடி' சமையல் போட்டியின் சமையல் குறிப்புகள் அனைத்தும் மிக நன்றாக இருந்தன. இங்குள்ள எல்லா ஊர்களிலும் தென்றலின் சார்பாக மாதம் ஒரு முறை இதுபோன்ற போட்டிகளை நடத்தலாம். கல்யாண மண்டபம் சிறுகதை அருமை. முடிவு அற்புதம். 'ஒருமணிப் பொழுது' கதை பாதியிலேயே நின்றிருந்தது ஏமாற்றத்தை அளித்தது. உபயோகமான விஷயங்களை மக்களுக்குத் தரும் ‘நலம் வாழ' பகுதி பாராட்டத்தக்கது. - லதா சந்திரமௌலி, பென்சில்வேனியா
*****
('ஒருமணிப் பொழுது' கதையின் தொடர்ச்சி பக்கம் A26ல் உள்ளது. இதனை A24ல் குறிப்பிடாமைக்கு வருந்துகிறோம் - ஆசிரியர்)
முழுநேரப் பொறியியல் அறிஞராக இருந்தும் தமிழின்மீது கொண்ட ஆழ்ந்த பற்றின் காரணமாகக் கவிஞர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டு விளங்கும் இலந்தை ராமசாமி அவர்களுடனான நேர்காணல் இனிமையாக இருந்தது. நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழர் மாநாட்டில் அவருடைய தலைமையில் நடந்த கவியரங்கத்தை நேரில் கண்டு ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்க மாநிலங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக அவர் எழுதிவரும் கட்டுரைகளை 'தமிழ் டைம்ஸ்' பத்திரிகையில் படித்து வருகிறேன். தென்றல் மேலும் பல்லாண்டு சிறப்புடன் வளர்ந்தோங்க எனது வாழ்த்துகள்.
வாசகர் கடிதம் பகுதியில், லதா சந்திர மௌலியின் ‘பெண்ணைப் பெற்றவர்கள் தாமே தம்மை கவனித்துக் கொள்ளும்போது பையனின் பெற்றோரும் அப்படியே செய்யலாமே' என்ற கருத்து மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. மகள்/மகன்களை வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து வைப்பது எப்படி பெற்றோர்களுக்குக் கடமையோ, அதுபோலப் பெற்றோர்களைப் பேணிப் போற்றுவதும் - குறிப்பாக அவர்களுடைய வயதான காலத்தில் பல்வேறு வகையிலும் உறுதுணையாக இருப்பதும் மகன்களுடைய கடமையாகும். இதனை உலகம் முழுதிலுமுள்ள பெரும்பான்மை இந்தியக் குடும்பங்கள் பின்பற்றி வரும் நிலையில், இத்தகைய உயர்ந்த கோட்பாட்டுக்கு வேட்டு வைப்பதாக இந்தக் கருத்து உள்ளது.
குடும்பம் என்பது தனது மனைவி, தனது மகள்/மகன்கள் மட்டுமல்ல. பெற்றோர், திருமணமாகாத மற்றும் திருமணம் ஆகியும் ஆதரவு தேவைப்படும் சகோதரிகளும் அடங்கிய அமைப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இளைஞர்களிடையே பொறுப்பின்மையையும், சுயநலத்தையும் ஊக்குவித்து, பெற்றோர்களை உதாசீனப்படுத்தித் துன்பத்தில் ஆழ்த்துவன இத்தகைய கருத்துக்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. இந்த உண்மையை உணர்வோம். வாழ்வில் தொடர்ந்து கடைப்பிடிப்போம். - சண்முகம் பெரியசாமி, நியூயார்க்
*****
|