உலக அளவில் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் முப்பத்தாறாவது இடத்தில் உள்ளது இந்தியா. ஆசிய அளவில் ஒன்பதாவது இடம். சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தாமை தான் இதற்கு முக்கியக் காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. தனது ஆய்வறிக்கையில் அது, இந்தியாவின் 633 மாவட்டங்களில், 199 மாவட்டங்கள் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்படும் காற்றழுத்தம் சூறாவளியை உருவாக்கும் வகையில் உள்ளதாலும், இமயமலையின் வடக்கு எல்லைப் பகுதிகளுக்கு அதிக நிலநடுக்க அபாயம் உள்ளதாலும் பேரிடர் நடவடிக்கைகளை உடனடியாக இந்தியா மேம்படுத்த வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
காடுகளை அழிப்பதால் மண்ணின் தன்மை பெருமளவு மாற்றம் கண்டுள்ளதாகவும், அதன் காரணமாக மிதமான, பெருமழைக் காலங்களில் வெள்ள நீரை மண் உறிஞ்சுவதில்லை என்றும், அதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடாவிட்டால் எதிர்காலத்தில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. ஒரு பக்கம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்; மறுபுறம் அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகள், புதிதாக இதுபோன்ற சிக்கல்கள். இந்திய அரசு கவனமாகச் செயல்பட வேண்டிய காலகட்டம் இது.
அரவிந்த் |