திண்டுக்கல்லைச் சேர்ந்த தோமையார்புரத்தில் வசிக்கும் சிறுவன் மருது பாண்டியன் (13). இவன் வீட்டுக்குச் சற்றுத் தொலைவே மதுரை-சென்னை ரயில் பாதை அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஒருநாள் ரயிலைக் காண்பிப்பதற்காக தனது தங்கையை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறான். அப்போது தான் வைகை எக்ஸ்பிரஸ் கடந்து சென்றிருக்கிறது. கடைசிப் பெட்டி கடந்து சென்ற போது தண்டவாளம் உடைந்ததைக் கண்டான் மருது பாண்டியன். உடனடியாகத் தனது தந்தையிடம் விஷயத்தைத் தெரிவிக்க, அவர் அருகில் உள்ள ரயில்வே கேட் கீப்பருக்கு விஷயத்தைத் தெரிவிக்க, அவர் மூலம் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் பரவியது. அந்த வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. பாதை செப்பனிடப்பட்ட பின்னரே பிற ரயில்கள் அனுப்பப்பட்டன. புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு ரயில் விபத்தைத் தடுத்த சிறுவன் மருது பாண்டியனுக்கு, 2008ம் ஆண்டின் வீரதீரச் செயலுக்கான விருது வழங்கப்பட இருக்கிறது. 2009 ஆண்டில் நடக்க இருக்கும் குடியரசு தினவிழாவில் பிரதமர் மன்மோகன்சிங் இந்த விருதை வழங்குகிறார். சிறுவனை வாழ்த்துவோம்.
அரவிந்த் |