இசை ஒரு நோய் நிவாரணி
இசை பொழுதுபோக்கு மட்டும் இல்லை. அதற்குப் பல பரிமாணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் இசை மருத்துவம். இசை ஒரு நோய் நிவாரணி. ஒருவரது ஞாபக சக்தியை அதிகப்படுத்த, மன உளைச்சலிலிருந்து மீண்டு வர, சர்க்கரை நோயைக் குணமாக்க எனத் தொடங்கி, இதய நோயைக் குணப்படுத்த, படபடப்பைக் குறைக்க, ஒற்றைத் தலைவலியை ஒழிக்க எனப் பல விதங்களில் இசை சிகிச்சை பலன் தருகிறது. ஒரு தாய் கருவுற்றிருக்கும் போது, 23 வாரங்களில், அவளது வயிற்றுக்குள் இருக்கும் கருவானது, சுற்றி உள்ள ஒலிகளைக் கேட்கும் என்று உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
- டாக்டர் மைதிலி திருமலாச்சாரி, இசை சிகிச்சையாளர்

*****


ஆதிசங்கரர் பற்றிய புனித பிம்பத்தை நான் காட்ட நினைக்கவில்லை. படத்தில் அவர் பூஜை செய்யும் காட்சி ஒன்று கூட இடம்பெறவில்லை. அத்வைதம் வழியாக ஆதிசங்கரை அறிந்து கொள்ளவே முயற்சிக்கிறேன், அதனால் தான் சமஸ்கிருதத்தில் அதைப் படமாக்கினேன். எனது திரைப்படங்கள் கேளிக்கைப் படங்கள் அல்ல அதுபோல கலைப் படங்களும் இல்லை. மாறாக வேதாந்தப் படங்கள்.
- ஜீ.வி. அய்யர், இயக்குநர்

*****


இளைய தலைமுறையின் சங்கீதத்தில் 'டெப்த்' இல்லை என்று நிச்சயமா ஒப்புக்கமாட்டேன். அப்போதெல்லாம் இத்தனை கச்சேரிகள் கிடையாது. ஜமீன்தார் வீட்டுக்குப் போய் ஒருநாள் தங்கிட்டு மறுநாள் சாவகாசமாக நான்கு மணி நேரம், ஐந்து மணிநேரம் பாடிவிட்டு வருவார்கள். இப்போது யாருக்கும் டைம் இல்லை. ஆடியன்ஸிடம் பொறுமையும் இல்லை. நாங்கள் கச்சேரியை `பேக்கேஜ்' மாதிரி தர்றோம். அப்போதெல்லாம் இரண்டு தனி ஆவர்த்தனம் இருக்கும். தவிர இப்போது மீடியா வேற வந்துவிட்டது. அப்புறம், பாணி என்பது உருவாக நிறைய வருஷங்கள் ஆகும். இப்போதைக்கு நாங்கள் செம்மங்குடி, அரியக்குடி போன்ற மேதைகளின் பாதையைத்தான் பின்பற்றுகிறோம்!
- உன்னிகிருஷ்ணன்

*****


அம்மாவைப் பார்த்துதான் சன் பயப்படணுமே தவிர, சன்னைப் பார்த்து அம்மா பயப்பட அவசியமில்லன்னு ஒரு டயலாக் வச்சேன். அதுக்கு பெரிய அளவுல ரெஸ்பான்ஸ். அந்த ஒரு டயலாக்குக்காகவே சன்டிவில அரைமணி நேரம் என்னைத் திட்டி ப்ரொக்ராம் பண்ணினாங்க. 'சன்னைப் பகைச்சுகிட்டா பின்னால புண்ணாயிடும்'னு டயலாக்லாம் வச்சாங்க.
- எஸ்.வி சேகர்

*****


ஜெயலலிதா பல சவால்களையும், பின்னடைவுகளையும் சந்தித்து வெற்றி கண்ட மிகச் சிறந்த சாதனையாளர். பகுஜன் சமாஜ்-அதிமுக கூட்டணி வருமா என்பதைத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தெரிந்து கொள்ளலாம்.
- சிவகாமி, பகுஜன் சமாஜ் கட்சி

*****


ஒரு கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று இன்னொரு கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டுத் தொண்டர்களைத் தாக்கியது காட்டுமிராண்டித் தனமான, அநாகரிகமான, மக்களாட்சியின் வேரையே அறுக்க முயல்வது போன்ற கொடிய செயல்.
- குமரி அனந்தன்

*****


நவீன தமிழ்ப் படைப்புகளுடன் வேற்று நாட்டு இலக்கியங்களை ஒப்பிடும்போது எங்கள் இலக்கியத்தின் தரம் சமமாகவே இருக்கிறது. இன்னும் பார்த்தால் மேலானது என்று கூடச் சொல்லலாம். சு.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தன், எஸ்.பொ. போன்றவர்களுடைய படைப்புகள் எல்லாம் உலகத் தரமானவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் நாவல்களை மொழிபெயர்த்தால் அவை உலக நாடுகளில் பெரிய அலையைக் கிளப்பும். எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் இன்னொரு சிறந்த படைப்பு. தமிழின் இன்றைய அவசரத் தேவை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள். உலக இலக்கியத் தரத்தில் மேலான படைப்புகள் தமிழில் இருக்கின்றன. தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ப.சிங்காரம், அசோகமித்திரன், ஜெயமோகன், பிரமிள், அம்பை, மு. தளையசிங்கம், சல்மா என நிறைய எழுத்தாளர்களின் படைப்புகளைச் சொல்லலாம். அவை வெளியுலகத்துக்குத் தெரிய வருவதில்லை. காரணம், அவற்றை மொழிபெயர்க்க ஆங்கில இலக்கியத்தில் தேர்ந்தவர்கள் முன்வராததுதான்.
- அ. முத்துலிங்கம்

© TamilOnline.com