அன்று திங்கட்கிழமை காலை எழுந்ததே தாமதம்; சங்கிலித் தொடராகப் பதற்றம் நிறைந்திருந்தது. போதாக்குறைக்குக் கிளம்பும்போதே ஒரு தொலைபேசி அழைப்பு, உப்புப் பெறாத விஷயத்தை நீட்டி முழக்கித் தெரிவித்தாள் தோழி வினிதா. நேரமாகிவிட்ட பரபரப்பில் அவளுக்குச் சரியாகக்கூட பதில் கொடுக்காமல் பறந்து ஒருவிதமாக அலுவலகம் நுழைந்தாள். சேர்மன் அழைப்பதாக இன்டர்காமில் செய்தி வந்தது. இன்று ஏதாவது 'வாண வேடிக்கை' இருக்குமோ என அலுப்புடன் அவர் காபினை நோக்கி நடந்தாள்.
"பவித்ரா, உன்னையும், இன்னும் இரண்டு ஊழியர்களையும் நம் பங்களூரு கிளைக்கு ஆறு மாதம் அனுப்பி வைக்க நினைக்கிறேன். சில ஆராய்ச்சி ரிபோர்ட்டுகள் தயாரிக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. உன் விருப்பத்தைத் தெரிவித்தால் பதினைந்து நாட்களுக்குள் கிளம்ப ஏற்பாடு செய்து விடுகிறேன்" என்றார். பவித்ராவினால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அங்கேயே ஒரு சுற்றுச் சுற்றி நடனம் ஆடலாம் போலிருந்தது. பீறிக் கொண்டு எழுந்த உற்சாகத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு "தேங்க் யூ சார்" என மரியாதையுடன் மொழிந்துவிட்டுத் தன் கேபினை அடைந்தாள்.
அன்றிரவே சென்னைக்குத் தொலைபேசி நற்செய்தியை ஒலிபரப்பி விட்டு, ஊருக்குக் கிளம்ப ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டாள். காலை எழுந்து சிகாகோவின் போக்குவரத்து நெரிசலில் காரை ஓட்டிச் செல்லும் தொல்லை, வறுத்தெடுக்கும் வெயில் முடிந்த சுவட்டோடு எலும்பைத் துளைக்கும் குளிர், பனிப்பொழிவுகள், புயல்கள் எல்லாவற்றிலிருந்தும் தாற்காலிக விடுதலை. எல்லாவற்றுக்கும் மேல் அம்மா, அப்பா, தம்பியுடன் மாதம் ஒருமுறையாவது சேர்ந்து இருக்கலாம். தம்பியின் படிப்பு, அப்பாவின் வேலை என்ற காரணங்களால் உடன் யாரும் இருக்க முடியாதுதான். ஆனால் என்ன, நினைத்தால் நாலு மணி நேரத்தில் சென்னை சென்றுவிடலாமே.
##Caption##அலுவலகத்தின் பங்களூரு கிளை நண்பர்களே முன்னின்று அவளுக்கும், மற்ற இரு சக ஊழியர்களுக்கும் நகரின் மையத்தில் அருமையான தொகுப்பு வீட்டை அமர்த்திக் கொடுத்து விட்டனர். ஊருக்கு ஒதுக்குப் புறத்திலிருந்த அலுவலகத்துக்குச் சென்று வரப் பேருந்து ஏற்பாடாகி இருந்தது. சென்னையிலிருந்து வந்த அம்மா, ஒரு வாரம் இருந்து குடித்தனம் வைத்துவிட்டுச் சென்றாள். அமெரிக்காவில் ஒருவித உதவியுமின்றி சமையல், வீட்டு நிர்வாகம் என எல்லாவற்றையும் சமாளித்தவளுக்கு இங்கு வீட்டு வேலை செய்ய ஒரு பெண்மணியும் இருக்கவே எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் வேலைப்பளு சில சமயங்களில் அதிகமாக இருப்பது வழக்கம்தான்.
அன்று அலுவலக வண்டியிலிருந்து இறங்கிய பவித்ராவுக்கு மாடியேறித் தன் ஃப்ளாட் செல்லக்கூடத் தெம்பில்லாததைப் போல் மனமும் உடலும் சோர்ந்திருந்தன. கைப்பையை ஒருபுறம் வீசிவிட்டு முகம் கழுவப்போனாள். காலையிலிருந்தே வேலையில் நிறையப் பிரச்னைகள், மண்டைக் குடைச்சல்கள்; ஏகத்துக்கு கெடுபிடிகள். வெறுப்படித்தது. முகத்தைத் துடைத்தவாறே காபி கலக்கச் சமையலறைக்குச் சென்றாள்.
காபிக் கோப்பையும் கையுமாய் அமர்ந்து அன்றையத் தபால்களை நோட்டமிட ஆரம்பிக்கையிலெயே திடீரென்று ஒரு ஓலம். "ஐயோ, என்ன விடுங்கம்மா, இனிமே ஒழுங்கா வேலை செய்யறேன்" என்று கிராமியக் கன்னடத்தில் அலறும் சிறுமியின் கதறல். எதைக் கீழே போட்டு உடைத்ததோ, எந்த வேலையில் குறை கண்டார்களோ, கண்மண் தெரியாமல் அடி விழும் ஓசை, தொடர்ந்து அலறல். ஏற்கெனவே இருந்த தலைவலி அதிகமாகி, பவித்ரா தலையைப் பிடித்துக்கொண்டு சரிந்து விட்டாள். கலந்து வைத்த காபியைக் குடிக்கக்கூடப் பிடிக்கவில்லை. அருமையான குடியிருப்பு, வசதி என எல்லாம் அமைந்திருந்தாலும் அடுத்த ஃப்ளாட்டிலிருந்து சதா வரும் இந்தக் கத்தல், கதறல்தான் தலைவேதனையாக இருந்தது.
அன்று சனிக்கிழமை. வார இறுதி என்பதால் கையில் பட்டியலுடன் அருகிலிருந்த அங்காடிக்குச் சென்று மளிகை, காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்திலேயே சாமான்களைத் தேர்ந்தெடுத்துக் கைவண்டியில் போட்டபடியும், அடிக்கடி அருகிலிருந்த பெண்ணை அதட்டியபடியும் இருந்த பெண்மணியைப் பார்த்தாள். அவ்வப்பொழுது பார்த்துக் கொள்வதும், அவசியம் இருந்தால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசுவதுமாக இருந்த அடுத்த ஃப்ளாட் அம்மாள்தான். கூடவே கூடையைச் சுமந்துகொண்டு, கிடைக்கும் வசவுகளை வாங்கிக் கட்டிக்கொண்டு வந்தது அந்த அப்பாவிப்பெண்.
பணம் செலுத்த நின்ற நீண்ட வரிசையில் முன்னும் பின்னுமாக நின்றதால் ஏதாவது பேசவேண்டுமே என்று "இவ்வளவு வியாபாரம் ஆகுமிடத்தில் பணம் வாங்க இன்னும் இரண்டு ஆட்களைப் போட்டால் இப்படிக் காக்க வேண்டாம் இல்லையா?' என்றாள் பவித்ரா. "ஏதோ அவசரத்துக்குக் கடைன்னு ஒண்ணு பக்கத்திலே இருக்கேன்னு வரோம். இல்லாட்டி நாலு தெரு தள்ளிப்போகணும். நம் வசதிக்கு ஏத்தபடி இவங்க அதிகப்படி ஆள் அமர்த்தணும்னு எதிர்பார்க்க முடியுமா?" என்று பதிலுரைத்தாள் அவள். சந்தடி சாக்கில், "இவள் ஏன் அடிக்கடி அழுது கத்தறா? வேலை சரியில்லையின்னா வேறு ஆளைத் தேடிக்கலாமே." என்று வினவவும், பதிலேதும் சொல்லாமல் முறைத்துவிட்டு அந்தப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு வேகமாக வெளியேறி விட்டாள் அந்தம்மாள். அந்தப்பெண் பரிதாபமாக இவளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றது.
திரும்பும் வழியில் கீழ் ஃப்ளாட் கீதா சந்தர் சேர்ந்துகொண்டாள். குடி வந்ததிலிருந்தே பவித்ராவுடன் சற்று தாராளமாகப் பழகும் அவள் "உன் பக்கத்து ஃப்ளாட் அச்வத்தம்மா ஏன் கோபமாப் போறாங்க?" எனக் கேட்டாள். நடந்ததைக் கூறிய பவித்ராவிடம், "அந்தப் பெண் கௌரியை அவங்கம்மாவுக்கு ஏதோ கடன் கொடுத்துட்டு கிராமத்திலிருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வந்திருக்காங்க. சக்கையாய்ப் பிழிந்து வேலை வாங்குவதுடன் அடி, உதை வசவுகளும் தாராளமாக் கொடுக்கிறாங்க. அந்தப் பெண்ணின் அம்மா இதுவரை இங்கே வந்ததேயில்லை. கேட்க ஆளில்லைன்னு இந்தக் கொடுமைப்படுத்தறாங்க பாவம் அது, சரியாக வயிற்றுக்குக் கூடப் போடுவாங்களோ இல்லையோ" என்றாள். கனத்த மனத்துடன் தன் ஃப்ளாட்டை அடைந்தாள் பவித்ரா.
அச்வத்தம்மாவின் கணவர், பசவண்ணா மண்டியாவில் வியாபாரம் செய்து வந்தார். வாரம் ஒருமுறை வந்து தலையைக் காட்டி விட்டுச் செல்வதுடன் அவர் பொறுப்பு முடிந்துவிடும். மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மகன் ஒருவன் மட்டுமே உடனிருந்தான். அப்படி என்னதான் தொலையாத வேலையிருக்குமோ அந்தச் சிறு குடும்பத்தில்! ஒரு நிமிஷம் கூட விடாமல் கௌரி, கௌரி என இருவரும் மாறி, மாறி அழைத்தபடியும், சதா அவளைத் திட்டியபடியும் இருந்தனர். ஏறக்குறைய வாரத்தில் நான்கு நாட்கள் அடுத்த ஃப்ளாட்டிலிருந்து அலறலும், அடிதடி ஓசைகளும் வருவது சகஜமாக இருந்தது. பவித்ராவும், அண்டை அயலார் நாலைந்து பேரும் சந்திக்கும் பொழுது பேசும் முதல் விஷயமே இந்தப் பெண்ணின் அவலம் பற்றியதாகத் தான் இருக்கும். "ஏதாவது செய்து இதை நிறுத்த முடியுமா; அல்லது அவளுடைய பெற்றோருக்கு இந்தக் கொடுமையைப் பற்றித் தெரியப்படுத்தலாமா?" எனப் பேசிக்கொள்வார்களே தவிர அந்த கௌரியின் பெற்றோரது விலாசமோ வேறு விவரமோ தெரியாத நிலையில் நடக்கும் கொடுமைகளைக் கையாலாகாத் தனத்துடன் பார்க்க, கேட்க மட்டுமே அவர்களால் முடிந்தது.
இடையில் வேலை விஷயமாக பவித்ரா டில்லிக்கும் மும்பைக்கும் சென்று மூன்று வாரங்களுக்கும்மேல் தங்க வேண்டியிருந்தது. ஊர் திரும்பியதும் வீடு வீடாகவே இல்லை. வேலைக்கு இருந்த பெண்மணியும் சொல்லாமல் கொள்ளாமல் நின்று விட்டாள். வேலைக்காரி வேட்டையில் தீவிரமாக இறங்கி கீதா சந்தரிடம் சொல்லிவைத்தாள். மாலை எதிர் ஃப்ளாட் சவிதாவுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் "வேலைக்காரி வேணும்னீங்களாமே அக்கா; நான் வரட்டுமா" என்றபடி கௌரி எதிர் வந்தாள். "ஆகட்டும், ரெண்டு நாளிலே சொல்றேன்" என்று அவளை அனுப்பி வைத்தாள். சவிதா "இவளை நீ வேலைக்கு அமர்த்தினால் அச்வத்தம்மா பிரச்னை பண்ணுவாள். அவளுடைய அம்மா பட்ட கடன் கழிந்துவிட்டதாம். அவளைத் திருப்பி அனுப்பாமல் வீட்டோடு வைத்துக்கொண்டு சம்பளம் என்று ஏதோ கண்ணில் காட்டி விட்டு வேலை வாங்கப் போவதாக என்னிடமே சொல்லியிருக்கிறாள். அவளுக்கு இத்தனை குறைந்த சம்பளத்துக்கு மாங்கு மாங்குன்னு உழைக்க ஆள் எங்கே கிடைப்பாங்க" என்றாள் கௌரியின்மேல் பரிதாபம் இருந்தாலும் வம்பை ஏன் விலைக்கு வாங்க வேண்டும் என்று எண்ணி வேறு வழிகளில் தேடி ஒரு பெண்மணியை அமர்த்தி விட்டாள். கௌரியும் அடுத்த வீட்டிலேயே தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள்.
ஒரு மாதம் சென்றிருக்கும். வேலையிலிருந்து திரும்பியவளிடம் மாடிப் படியருகே நின்றிருந்த ஒல்லியான ஒரு பெண்மணி, கிராமத்துக் களை முகத்திலே அப்பிக் கிடந்தது, "இங்கே அச்வத்தம்மவரு வீடு எதுங்க?" என்று வழி கேட்டு நின்றாள். அவள்தான் கௌரியின் தாய் என்று தெரிய வந்தது. அவளுடன் பேசிக்கொண்டே மாடிக்குச் செல்லும் வழியில் அவளிடம் "கௌரியை வீட்டுக்குக் கூட்டிப் போய் அங்கே ஏதாவது வேலை செய்யச் சொல்லுங்களேம்மா. பாவம் அவ இங்கே ரொம்பக் கஷ்டப்படறா" என்றாள். அதற்கு அந்தப் பெண்மணி "அங்கே ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை. அவங்கப்பன் ஓசூரிலே சொல்ப சம்பளத்திலே வேலை செய்யறாரு. இவளாவது சோறு தண்ணிக்குத் தவிக்காம இருக்காளே. அதே போதும். அவள் தங்கைக்குப் பத்து வயசாகுது; அவளைக்கூட இங்கே யார் வீட்டிலாவது வேலைக்கு அனுப்பலாமான்னு பார்க்கறேன்" என்றாள். 'கொடிது கொடிது வறுமை கொடிது; அதனிலும் கொடிது இளமையில் வறுமை' என்னும் வரிகள் பவித்ராவின் நினைவுக்கு வந்தன. மாடியில் அச்வத்தம்மாவின் குரல் கூரையைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது. "இவளுக்கு ஒழுங்கா வேலை செய்யத் தெரியலை; தீனி மட்டும் நல்லா எட்டு வயிறு தின்கிறாள். ஏதோ கொடுத்ததை வாங்கிக்கிட்டுப் போய்ச் சேரு" என்று கத்தியபடி ஏதோ ஒரு சிறு தொகையைக் கொடுத்து அவளை அனுப்பி வைத்தாள் போலிருந்தது. பின்னால் அழுது கொண்டு நின்றிருந்த கௌரியைத் திட்டி உள்ளே அனுப்பியதும் தெரிந்தது.
இரவு ஒன்பது மணியிருக்கும். வெளியில் நல்ல மழை; இங்குதான் தசரா மழை, யுகாதி மழை, கணேசா மழை என்று விதவிதமாகப் பெயர் வைத்துக்கொண்டு பெய்த வண்ணமிருக்கிறதே. வேலைகளை முடித்துவிட்டுப் படுக்கச் செல்லுமுன் க்ரில் கதவைப் பூட்டப் போன பவித்ராவின் கண்களில் பட்டது அந்தக் காட்சி. நான்கு ஃப்ளாட்களுக்கும் பொதுவாக இருந்த சிறு நடையில் கௌரி ஒரு கந்தல் பாயும் பழம்புடவையுமாகச் சுருண்டு கிடந்தாள். விளக்கைப் போட்டுக் குனிந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அனலாகக் கொதிக்கும் காய்ச்சலில் அரற்றிக்கொண்டிருந்தாள். பவித்ராவால் இதைச் சகிக்க முடியவில்லை. அடுத்த ஃப்ளாட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். யாரும் பதிலளிப்பதாக இல்லை. "கௌரி, எழுந்து உள்ளே வந்து படு. மாத்திரை ஏதாவது எடுத்துக் கொண்டாயா? ஏதாவது சாப்பிட்டாயா?" என விசாரித்தாள். கோவையின்றி அவளிடமிருந்து வந்த பதிலிலிருந்து அவளுக்கு நான்கு நாட்களாகவே காய்ச்சல் என்றும், வேலை செய்யாமல் படுத்துக் கிடக்கும் அவளுக்கு ஆகாரம் கிடையாது என்று திட்டி வெளியே தள்ளிக் கதவைச் சார்த்திக் கொண்டு விட்டதாகவும் தெரிய வந்தது. உள்ளே அழைத்து வந்து காலை உணவுக்காக வைத்திருந்த ரொட்டியையும், சிறிது பாலையும் அவசரத் தேவைக்காக இருந்த ஜுர மாத்திரையையும் கொடுத்து ஹாலிலேயே படுக்கச் செய்தாள். இதற்கு ஏதாவது வழி செய்தாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
##Caption## காலை எழுந்ததும் அச்வத்தம்மாவிடம் "பாவம், ராத்திரி பூரா நல்ல ஜுரம் அடித்துக்கொண்டிருந்தது; பசி ஒரு பக்கம். இவளை வெளியே மழைச் சாரலில் படுக்கச் சொல்லியிருக்கீங்களே; வருஷம் பூரா நமக்காக வேலை செய்கிறவளுக்கு ஒரு நோய் நொடியின்னு வந்தால் நாம் பார்த்துக் கொள்ள வேண்டாமா?" என வினவினாள். "ஊரெல்லாம் அங்கங்கே ஃப்ளூ ஜுரம் வந்தபடி இருக்கு; என் பையனுக்கு இரண்டு வாரத்தில் பரீட்சை, அவனுக்கும் தொத்திக்கிட்டா என்ன செய்றது? அதெல்லாம் கிராமத்துக் கட்டை; இதுவும் தாங்கும், இன்னமும் தாங்கும். அது சரி உன்னை யார் உள்ளே கூட்டிப்போய் சீராட்டச் சொன்னது, இங்கு வந்து பஞ்சாயத்து பண்ணச் சொன்னது. உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ" என்றாள் கடுப்புடன்.
சில நாட்கள் சென்றிருக்கும். அலுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பவித்ராவின் முன் எதிர், கீழ் ஃப்ளாட் பெண்மணிகள் நாலைந்து பேர் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். மாடியேறப் போன அவளை நிறுத்தி, "விஷயம் தெரியுமா, கௌரியை அச்வத்தம்மா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போயிருக்கிறாள். கூட சவிதாவும் போயிருக்கிறாள். அவளது உள்ளங்கையில் சூட்டுக் காயம்; பாவம் அலறித் துடித்து விட்டாள்" என்றார்கள். சிறிது நேரத்தில் மருந்துக் கட்டுடன் கௌரியை அழைத்துக் கொண்டு வந்திறங்கிய அச்வத்தம்மாவுடன் பேசவே பிடிக்கவில்லை. சவிதாவிடம் "என்ன ஆச்சு; எப்படி சூட்டுக்காயம் ஏற்பட்டது?" என வினவினாள். அச்வத்தம்மா முனகும் குரலில், "அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டுட்டு, காஞ்சுதான்னு பார்க்கச் சொன்னால் கையை வைத்து, சூடு பட்டுக்கொண்டு நிற்கிறது, ஜடம். இதால எனக்கு வேற அனாவசிய கெட்ட பேரு, வைத்தியச் செலவு. எல்லாம் என் போதாத காலம்தான். பேசாமல் ஊருக்கு அனுப்பித் தொலைச்சுடறேன்" என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டே அவளையும் இழுத்துக்கொண்டு படியேறினாள். கூடியிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். பவித்ராவுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. அச்வத்தம்மாவுடன் பேசிப் பயனில்லை. அது மந்திரத்தால் விழும் மாங்காய் இல்லை. வேறு வகையில் இதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்று தீர்மானம் செய்துகொண்டாள்.
பவித்ராவின் நினைவில் முதலில் தோன்றியது பாகீரதி சௌந்தர்தான். மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகளுக்காகப் போராடும் பிரபல சமூக சேவகி. அநியாயம் நடக்கும் இடங்களில் ஆபத்பாந்தவியாகத் தோன்றி பிரச்னையைத் தீர்ப்பவள். பவித்ராவுக்கு ஏதோ தூரத்து உறவினள்கூட. அன்றே அலுவலகத்திலிருந்து அவளுக்குத் தொலைபேசி, கௌரியின் கதையை விஸ்தாரமாகக் கூறிவிட்டு "அந்தப் பெண்பிள்ளையை முதலில் உள்ளே தள்ளவேண்டும். ஏதாவது வழி சொல்லேன்" என்று கேட்டாள். "அந்தப் பெண்ணே தன்னைக் கொடுமைப்படுத்துவதாக முன்வந்து புகார் செய்யவேண்டும். இல்லையென்றால் நீங்கள் அண்டை அயலார் நாலைந்து பேராகப் பொதுவில் புகார் செய்யலாம். அது எதற்காவது ஏற்பாடு செய்துவிடு. நான் மீதியைப் பார்த்துக் கொள்கிறேன்" என்றாள் பாகீரதி. அன்றே கௌரிக்கு நடக்கும் கொடுமைகளைத் தேதி வாரியாக விவரமாக எழுதி எதிர் ஃப்ளாட் சவிதா, கீதா சந்தர் இன்னும் அவள் வீட்டிலும், மற்ற வீடுகளிலும் வேலை செய்யும் பெண்கள் ஆகியோரிடம் கையெழுத்து வேட்டையாடி மனுவை சமூக சேவகியிடம் சேர்ப்பித்தாள்.
மேலே நடவடிக்கைகள் வேகமாக நடந்தன. மகளிர் போலீஸும், சமூகநல அமைப்பும் கை கோத்துக்கொண்டு இயங்கியதில் குழந்தைத் தொழிலாளரைப் பணிக்கு அமர்த்தியது, வன்கொடுமை என்ற பல செக்சன்களைக் காட்டி வழக்குத் தொடர்ந்து விட்டனர் சமூக நல அமைப் பினர். "அவளுக்குப் பதினைந்து வயதாகி விட்டது; வளர்த்திதான் போதாது" என்பது போல் வாதாடினாள் அச்வத்தம்மா. கௌரியின் தாயை அழைத்து அவளது பிறந்த தேதியைக் கேட்டால் "அதாங்க, தொட்டபல்லாபூரிலே எங்க நாத்தனார் பையன் கல்யாணத்துக்குப் போன இடத்திலே பிறந்தா; நாங்க என்ன, கணக்கு ஜாதகமெல்லாமா வச்சிருக்கோம்? என்ன வயசுன்னு குறிப்பா தெரியாதுங்க" என்னுமளவுக்கு மௌடீகமாக இருந்தாள். அல்லது ஒருவேளை அச்வத்தம்மாவால் ஏதாவது ஆபத்து வருமோ என பயந்த மாதிரியும் இருந்தது. ஒரு கட்டத்தில் அச்வத்தம்மாவின் கூற்று உண்மையில்லை என்பது நிரூபணமாய்விட்டது. மற்ற ஃப்ளாட்காரர்களின் சாட்சியும் உறுதியாக இருந்ததால் அச்வத்தம்மா தண்டனைக்குத் தப்ப முடியாதென்பது நிச்சயமான நிலையில், ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு உதவிய திருப்தி ஏற்பட்டது பவித்ராவுக்கு. அவளும் அந்தப் பகுதியில் ஒரு வீராங்கனை என்ற அளவுக்குப் பேசப்பட்டாள்.
வழக்கு நீதிமன்றப் படியேறும் தருவாயில் அலுவலக விஷயமாக அமெரிக்கா சென்று, அங்கேயே ஆறு மாதம் தங்க வேண்டிருந்ததால், ஃப்ளாட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றாள் பவித்ரா. ஒருவழியாக அமெரிக்க வாழ்வுக்குக் கும்பிடு போட்டுவிட்டு பங்களூருவிலேயே வேறொரு நிறுவனத்தில் வேலையில் அமர்ந்து விட்டாள். நகரின் வேறொரு பகுதியில் குடியிருப்பு. இம்முறை பத்து நாட்கள் இருந்து உதவத் திருச்சியிலிருந்து பவித்ராவின் சித்தி வந்திருந்தாள். "இன்னும் நாலு நாளில் நான் ஊருக்குப் போய்விடுவேன். ஏதாவது ஊறுகாய் வகைகள் செய்து வைத்து விடுகிறேனே" என்று முன்வந்தாள் சித்தி. மாகாளிக் கிழங்கும், கடாரங்காயும் பவித்ராவுக்கு மிக விருப்பமான ஊறுகாய்கள். ஆனால் வாங்க மடிவாள மார்க்கெட்டுக்குதான் போக வேண்டும். அலுவலகத்திலிருந்து வந்து சித்தியுடன் சென்று தேவையானதை வாங்கிக் கொண்டிருந்தவள் "அக்கா, காய் வாங்கிக் கங்கக்கா" என்றழைத்த பரிச்சயமான குரலைக் கேட்டுத் திரும்பினாள். கௌரி, தன் தாயுடன் பரப்பி வைக்கப்பட்ட காய்கறிகளுக்கு இடையே மும்முரமாக வியாபாரத்தில் முனைந்திருந்தாள்.
வியப்புடன் "அட, கௌரியா, எப்படி இருக்கே; கடையெல்லாம் வைத்துக் கொண்டு நல்லா இருக்கே போலிருக்கே" என்றாள். அவளை முந்திக்கொண்டு அவள் தாய், "ஏதோ வேலைக்காரியை ரெண்டு தட்டு தட்டினதுக்கு ஊரைக் கூட்டிக் கோர்ட்டு, பஞ்சாயத்துன்னு அமர்க்களப் படுத்தினயே. அந்த அம்மவரு, அவங்க எஜமானரு எல்லாம் வீடு தேடி வந்து 'கௌரி எனக்கும் மகள் மாதிரிதான். ஏதோ கோவத்தில் முன்னபின்ன நடந்திருக்கும். அதுக்காக உன்னையும் அவளையும் விட்டுக் குடுப்பேனா? ஆயிரமானாலும் நாமெல்லாம் ஒரு குடியில்லையா? உனக்கு நல்லது செய்யறது என் கடமையில்லையா?'னு சொல்லி உடன் பிறப்பாட்டம் பத்தாயிரம் ரூபாயைக் குடுத்துப் பிழைப்புக்கு வழி செஞ்சாங்க. அவங்க அந்தஸ்துக்கு எங்க வீட்டுக்கெல்லாம் வரப்போகுமா! என்ன இருந்தாலும் பெரிய மனுசங்க பெரிய மனுசங்கதான். அவங்க மேலே பிராது பண்ணினா தேவருக்கே பொறுக்காதுன்னு பிராதை வாபஸ் வாங்கிட்டோம். இப்பப் பாரு, கடையிலே நல்ல வருமானம். கௌரி கல்யாணத்துக்குக் கூட உபகாரம் செய்றேன்னிருக்காங்க" என்று இடித்துக் கூறினாள்.
தந்திரமாக இந்த அப்பாவிகளைப் பணத்தால் அமுக்கி, நீதியையும் வளைத்து விட்ட கொடூரம் மனத்தில் அறைந்தது. ஆற்றாமையுடன் பாகீரதிக்குத் தொலைபேசினாள். "இந்த மாதிரி நூறு தோல்விகளை நாங்கள் சந்திக்கிறோம். ஒன்றிரண்டு வழக்குகளிலாவது நீதி கிடைக்கிறதே என்று மனதைத் தேற்றிக்கொண்டு அயராது எங்கள் கடமையை செய்கிறோம்" என்று அவள் நிதானமாகப் பதிலளித்தாள்.
வாயடைத்து நின்றாள் பவித்ரா.
அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சான் ஹோசே |