நதியைச் சார்ந்து வாழும் மக்கள் நிறைந்து செல்லும் நதியைப் பார்க்கும்போது ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுவதை கவனித்திருக்கிறீர்களா, நீண்டநாள் கழித்து கடலைப் பார்க்கும் மீனவனைப் போல? ஆடிப்பெருக்கு சமயம் - ஜனக்கூட்டத்தில் அம்மா மண்டபம் சாலை ஒற்றையடிப் பாதையாக மாறியிருக்க, வாகனங்களைத் திருவானைக்காவல் வழியாகத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். இருசக்கர வாகனத்தில் 'வீடு அங்கிட்டு சார்' என்று காவலரிடம் சொல்லிவிட்டு அந்த ஒற்றையடிப் பாதையில் ஜனத்திரளின் ஊடாகச் சென்றோம். ஏராளமான மக்கள். குளித்துப் புத்தாடை உடுத்தி பானைகளைச் சுமந்து கொண்டு. மண்டபத்தின் உள்ளே நுழைய முடியாதபடி கூட்டமிருந்ததால் மாம்பழச் சாலையை நோக்கி விரட்டி, பாலத்தில் சென்று நடுவில் நிறுத்தி தடுப்புச் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டோம். இடது கரையில் மேலசிந்தாமணியின் படித்துறையும் வலது கரையில் அம்மா மண்டபப் படித்துறையும் எறும்புகளாக மனிதர்களுடன் இருக்க, மீதியிருக்கும் தென்னை மரங்களையும், புதிய அபார்ட்மெண்ட் கட்டிடங்களையும் தாண்டி ஸ்ரீரங்க கோபுரத்தை இடுப்புக்கு மேலே பார்க்க முடிந்தது.
காவிரி கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்ததும் என்னையறியாமல் எழுந்தது நிம்மதிப் பெருமூச்சு. வருடம் முழுவதும் இப்படி ஓடினால் எப்படி இருக்கும் என்று வழக்கம் போல நினைத்துக் கொண்டேன். வெங்காயத்தாமரைக் கூட்டம் ஒன்று விரைந்து கடந்து பாலத்தின் அடியில் நுழைந்து அப்புறம் சென்றது. பாலத்துக்கு அந்தப் பக்கம் பழைய நடைபாதைப் பாலம் எக்ஸ்னோரா உதவியுடன் தூய்மையாகவே இருந்தது. தொலைவில் ரயில் செல்லும் பாலம். எதிரே மலைக்கோட்டை - வெயிலின் கானலில் மலைக்கோட்டைப் பாறை நெளிந்தது. தொலைவிலிருந்து பார்க்கையில் எல்லாம் அப்படியே மாறாதிருப்பதுபோன்ற பிரமை. அருகில் நெருங்கிப் பார்த்தால்தான் அழுக்குகளும், அழிவுகளும் தென்படுகின்றன போலும்!
##Caption## இங்கே அமெரிக்காவில் State Parks எனப்படும் பெரிய பெரிய பூங்காக்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நிறைய உண்டு. பெரிய ஏரியுடன் ஏராளமான மரங்களுடன், தாராளமான புல்வெளிகளுடன் உண்டு. வாரயிறுதிகளில் குடும்பத்துடன் சென்று காலாற நடந்து, உண்டு, களைத்து, உறங்கி, விளையாடி, படகுச் சவாரி செய்துவிட்டு மாலையில் உற்சாகமாக வீடு திரும்பி விடலாம். வண்டிக்கு நுழைவுக் கட்டணம் 5 டாலர். படகுச் சவாரி செய்தால் 15 டாலர். "பிக்னிக் எங்கே போலாம்?" என்று கேட்டதற்கு நண்பர்கள் திருதிருவென்று விழித்தார்கள். சினிமாவைத் தவிர பெரிய பிக்னிக் எதுவும் நம் ஜனங்களுக்கு இல்லை என்பது சோகம். முக்கொம்பைத் தவிர வேறு எதையும் குழந்தைகளுக்கான இடமாக அவர்களால் சொல்லமுடியவில்லை.
சிங்காரத் தோப்பைக் கடந்து கொஞ்சம் ஜன, வாகன சமுத்திரத்தில் நீந்தினால் சாலையின் நடுவே நந்தி போன்று பூங்கா (என்ற பெயரில்) ஒன்று இருக்கிறது. உள்ளே முட்புதர்கள் மண்டிக்கிடக்க கதவுப் பூட்டப்பட்டு துருவேறிக் கிடக்கிறது. இரவில் மக்கள் அவசரத்திற்கு ஒதுங்குகிறார்கள். சட்டவிரோதக் காரியங்களும் நடக்கின்றன. கோவையில் காந்தி பூங்கா பரவாயில்லாமல் இருக்கும் (ரொம்ப காலத்துக்கு முன்பு, இப்போது தெரியவில்லை). சென்னையில் நடேசன் பார்க் என்று இணையர்கள் மாநாடெல்லாம் அடிக்கடி நடந்து கலகலப்பாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். பார்த்ததில்லை. மதுரை என்ற கந்தக பூமியில் பூங்காக்கள் அங்கங்கே இருந்தாலும் வைரமுத்து பாணியில் சொல்லப்போனால் அங்கு ஐஸூக்கும் வேர்க்கும்!
சிந்தாமணி ஸ்ரீரங்கத்துக்காரர்களுக்கு காவிரிப் பாலம்தான் பிக்னிக் ஸ்பாட். மாலை ஆறு மணியளவில் பானிபூரித் தள்ளு வண்டிக் கடைகள் விளக்கேற்றிக் கொள்ள, சாரிசாரியாக வருகிறார்கள் மக்கள். வண்டியை அப்படியே ஓரமாய் நிறுத்தி விட்டுக் காவிரியை வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். வீசும் சன்னமான காற்று ஒன்றுதான் அவர்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கும் ஒரே ஆறுதலாய்த் தோன்றியது. இளைஞர்கள், புதிதாய்க் கல்யாணமான தம்பதிகள், வயதான ஒற்றையாட்கள், பிச்சைக்காரர்கள் என்று கதம்பமாய் மக்கள் கூட்டம் பாலம் முழுதும் - எல்லா மாலை வேளைகளிலும். அவ்வப்போது விளக்குப் புள்ளிகளுடன் தடதடத்துச் செல்லும் ரயிலைப் பார்த்து ஆரவாரமிடுகின்றன குழந்தைகள். மலைக்கோட்டை உச்சியிலும் பிள்ளையார் கோவிலின் விளக்கு வரிசை பாம்பு மாதிரி நீள்கிறது. எங்கும் நிறைந்திருக்கும் மஞ்சள் ஒளியில் மனமாச்சரியங்களெல்லாம் கரைந்து அலுப்புத் தீர்வது போலத் தோன்றுகிறது. காவிரியோரத்தில் நீளமாக மக்கள் இளைப்பாறிப் பொழுதுபோக்கும் வண்ணம் பூங்காக்களை நிறுவினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது - கூடவே சலிப்பும்!
தமிங்கிலம்
இதென்ன திமிங்கிலம் போல ஒரு பிராணியா என்று வியக்காதீர்கள். மேலே படியுங்கள் தெரியும்.
'ஒரு நிமிடம் தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசினால் பரிசு' என்று அறிவிப்பு. சீனாவில் தமிழ் கற்றுக் கொள்ளும் சீனர்களுக்கா? இல்லை வெளிநாடுவாழ் தமிழர்களின் 'It's weird' குழந்தைகளுக்கா? இல்லை ஐயா - தமிழ்நாட்டின் சென்னை மாநகரத்தில் வணிகவளாகம் ஒன்றில் 'மறத் தமிழர்களை' அழைத்து இப்படிச் சவால் விட்டவர் பிருத்விராஜ் - தொலைக்காட்சிச் சேனல் ஒன்றுக்காக!
##Caption##இப்படி ஒரு போட்டி வைத்ததே தமிழர்களுக்கு அவமானம். நாம்தான் மறத் தமிழர்களாயிற்றே. முப்பத்திரண்டு பற்களும் தெரியக் கலந்து கொண்டார்கள். பிருத்வி 'எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசுங்கள் - நீங்கள் பார்க்கும் வேலையைப் பற்றிக்கூட பேசுங்கள்' என்று உசுப்பேற்றியும் ஒவ்வொருவராக வந்து சில நொடிகளில் குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று விலகினார்கள். ஒருவரிடம் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு 'Marketing' என்று சொன்னார். 'சரி ஒரு நிமிடம் வேண்டாம். Marketing-க்கு தமிழில் என்ன என்று சொல்லிப் பரிசை வெல்லுங்கள்' என்று பிருத்வி கேட்டதற்கு அந்த நபர் பேச்சற்றுப் பேய்முழி முழித்தார் பாருங்கள். இன்னொருவர் 'நான் பேசறேன்' என்று முன்வந்து ஆரம்பித்தார் 'வண்டிய ட்ரைவ் பண்ணும்போது சிக்னல்லாம் பாத்து லெஃப்ட் ரைட் டர்ன் பண்ணும்போது இண்டிகேட்டர் போட்டு, சேஃப்டியா டிரைவ் பண்ணனும்'.
எனக்கென்னவோ இத்தலைமுறைக்கு 'ஆங்கிலம் கலக்கா நல்ல தமிழ்' என்பது எது என்பதே தெரியாது என்று தோன்றுகிறது. பிறந்தது முதல் பெற்றோரிடமிருந்தும் மற்றோரிடமிருந்தும் ஊடகங்கள் வழியாகவும் எங்கெங்கும் எப்போதும் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழையேக் கேட்டுப் பேசிப் பழகி வளர்ந்த தலைமுறைக்குத் தாம் பேசுவது நல்ல தமிழ்தான் என்று நம்ப ஆயிரம் காரணங்கள் உண்டு.
இறுதிவரை ஒரு நிமிடம் யாரும் தமிழ் பேசமுடியாததால் 35 வினாடிகள் பேசிய ஒருவருக்கு பிருத்விராஜ் பரிசைக் கொடுத்தார்! இன்னும் அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தால் அணிந்திருந்த பெர்முடாஸ், முண்டா பனியனுடன் தெருவில் இறங்கி ஓடிவிடுவேன் என்று தோன்றவே வேறு அலைவரிசைக்கு மாற்றினேன். கணவன், மனைவி கலந்து கொள்ளும் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி. அட்டைத் தூண்களுக்குள் மறைந்திருக்கும் கணவன்மார்களின் கண்களை மட்டும் பார்த்து மனைவி அவரது கணவனைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்தப் பெண்மணி தூண் தூணாகச் சென்று கண்களை உற்றுப் பார்த்துத் தேட எனக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. இம்மாதிரி நிகழ்ச்சிகளின் ஆதார நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். கணவன் மனைவி இருவரும் மனமொருமித்து இனிய இல்லறம் நடத்துவதை இம்மாதிரிப் பந்தயங்களில் ஜெயித்துத்தான் நிரூபிக்கவேண்டுமா?
"நான் டிவில வர்றேன் பாரு" என்ற பெருமையடித்துக் கொள்ளுதல் தவிர வேறு எந்தக் காரணமும் தோன்றவில்லை. சுஜாதா அடிக்கடி குறிப்பிட்ட 15 நிமிடப் புகழுக்காக என்னவெல்லாம் செய்யத் துணிகிறார்கள்! மேலைநாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அப்படியே தமிழ் வடிவத்தில் ஒளிபரப்புகிறார்கள். நளதமயந்தி படத்தில் மாதவனும் கீது மோகன்தாஸும் அவரவர் வாழ்க்கை விவரங்களை உருப்போட்டுக் கொண்டு தயார் செய்வது போல, இந் நிகழ்ச்சிக்கென தம்பதியர்கள் மிகவும் மெனக்கெடுகிறார்கள் போலிருக்கிறது. ஜெயித்தவர்கள் பரவாயில்லை. போட்டியில் தவறான விடை சொல்லித் தோற்ற தம்பதியரின் மனதில் என்ன மாதிரி சிந்தனைகள் தோன்றியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில் கவலையாக இருந்தது. போட்டிக்குப் பிறகான அவர்களது நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்று யோசனை ஓடியது.
இன்னும் வரும்...
வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன் |