அக்னி புஷ்பம்
அம்மா!
தலைவாரி பூச்சூடி தாய்ப்பாசம் தினம்பூசி
பள்ளி சென்ற தமிழச்சி - இன்று
உயிர் கொடுத்து உயிர்காக்க குண்டு
சரம் கோர்த்து தினம் நிற்கிறேன்

என் நாட்டில் என் வீட்டில் என் மூச்சை
நான் மட்டும் ஏன் திருடி சுவாசிக்கிறேன்

உன் மடியில் தலைசாய்த்து ஓராயிரம் கதைகேட்டு
உண்டு வந்த நாட்களெங்கே?
சோறு தேடி நிதம் திரியும் நாய்போல
உரிமை தேடி தினம் ஓடும் அவலமிங்கேன்?

கடைவீதியில் கனவிரண்டு கடன் வாங்கித் தருவாயா
கண்டுவிட்டுத் தந்திடுவேன் காலையில் குண்டடிக்குமுன்

அப்பா தந்த பட்டுத் தாவணியை அணியுமுன்னரே கிழித்துவிட்ட
பட்டாளத்துக் காட்டுமிராண்டிக்கு மனிதவேஷம் போட்டது யார்?

பூத்தவுடன் கல்லறைக்கு போகுமுன்னு தெரிஞ்சிருந்தும்
பதியம் போட கிளிநொச்சியைத் தேர்ந்தெடுத்தது ஏனம்மா!

அன்று பெய்த மழையினிலே ஆடிவரச் சென்ற தம்பி
பெய்த அந்த ரசாயன மழையில் கருகி வந்த கோலமென்ன

தம்பியிழந்து தந்தையிழந்து தாத்தாவை யிழந்து
உன்னை இழந்து என்னையும் இழந்து ஒதுங்கி நின்றேன்
அகதியாக

ஓடின்றிப் பிச்சையிட்டு சுயமானத்தைச் சூறையாடும்
கருணை மிக்க முகாம்களை குற்றம் சொல்லிப் பயனில்லை

விடியல் பார்த்து நாளாயிற்று
இருளே இனி வாழ்வாகுமோ!

புதியபாரதி

© TamilOnline.com