சுத்த சக்தியின் சங்கடம் - பாகம் 18
முன்கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளராகி விட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள்.

ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டனின் சுத்த சக்தி தொழில் நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருக்கிறது. முரளி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தார். மார்க், வெர்டியான் பல வடிவங்களில் வளைக்கக் கூடிய, ஆனாலும் பெருமளவில் சூர்ய ஒளி மின் சக்தி தரும் புரட்சிகரமான நுட்பத்தை வெர்டியான் உருவாக்கியிருப்பதாகவும் விளக்கினார். சூர்யா விஞ்ஞானி யூ பிங் சூ தாக்கப்பட்டதைப் பற்றிக் கேட்கவே, ஷாலினியின் உதவியுடன் அவரை நேரில் விசாரிக்கச் சென்றனர். யூ வீடு திரும்ப பார்க்கிங் லார்டுக்குப் போன போது கார் அருகிலேயே தாக்கப்பட்டதைக் கேட்டு, உள் ஆட்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சூர்யா சந்தேகித்தார். மீண்டும் வெர்டியானுக்குச் சென்று மார்க்கின் மற்ற உபதலைவர்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டு முதலாவதாக பேட்டரி நுட்ப விஞ்ஞானியான பீட்டர் பார்க்கருடனும், நிதித்துறைத் தலைவர் ரிச்சர்ட் கோல்ட்டனுடனும் உரையாடினார். பிறகு, பிரச்சனைக்குக் காரணம் என்ன என்று தெரிந்து விட்டது என்று சூர்யா ஒரு அதிர்வேட்டு வீசினார். பிறகு...

***


பிரச்சனை தீரும் தருணம் நெருங்கிவிட்டதாக சூர்யா அறிவித்தவுடன் அடக்க முடியாத பரபரப்புடன் மார்க் விளக்கம் கேட்டாலும், யூ-பிங்-சூ-வின் மருத்துவமனை அறையில் மேலும் விளக்குவதாக சூர்யா கூறிவிடவே, அனைவரும் மிக்க பரபரப்புடன் அங்கு விரைந்தனர்!

##Caption##அவசர அவசரமாக கிரண் ஷாலினியை செல்பேசியில் அழைத்து, விஷயத்தைக் கூறி, அங்குக் கூடுவதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்டுக் கொண்டான். தன் சூர்யா, வெர்டியான் பிரச்சனையைத் தீர்க்கப் போகிறாரே என்ற அளவிலா உற்சாகத்துடன் ஷாலினியும் மருத்துவமனை அலுவலகத்தாரை அதிவேகமாக முடுக்கி ஒரு பெரிய கூட்ட அறையையே ஏற்பாடு செய்து அங்கு யூ-பிங்-சூவுக்கும் சாய்ந்து உட்கார ஒரு படுக்கை வசதியும் செய்து விட்டாள். இந்த தடபுடல் ஏற்பாட்டுக்கெல்லாம் என்ன காரணம் என்று யூ-பிங் கேட்கவும், ஷாலினி அது ஒரு ரகசியம், சீக்கிரம் தெரியும் என்று கூறிவிடவே, அவரும் மிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில், சூர்யா வெர்டியானின் மொத்த நிர்வாகக் கூட்டம் புடைசூழ அறைக்குள் வந்தார். அவர்களையெல்லாம் பார்த்து, மார்க் ஷெல்ட்டனின் முகத்திலிருந்த பரபரப்பையும் உணர்ந்த யூ-பிங் "என்ன, என்ன விஷயம், என்ன ரகசியம்?" என்று வினவவே, கிரண் ஒரு பொய் அலட்சியத்தோடு, "அ... பெரிசா ஒண்ணுமேயில்லை யூ-பிங், சூர்யா வெர்டியான் பிரச்சனை என்னன்னு தெரிஞ்சுடுச்சு, இங்கே விளக்கறேன்னு எங்களை சும்மா இழுத்திட்டு வந்திருக்கார் அவ்வளவு தான்!" என்றான்.

அதைக் கேட்ட யூ-பிங் "என்ன?!" என்று அதிர்ச்சியுடன் படுக்கையிலிருந்து சடாரென எழுந்திருக்க முயற்சிக்க, அவரை மீண்டும் சாய வைத்து, ஷாலினி கிரணைக் கடிந்து கொண்டாள். "என்ன கிரண் இது? நானே அவரை அமைதியா உக்கார வச்சிருக்கேன், இப்படி திடீர்னு சொன்னா எப்படி? ரிலாக்ஸ் யூ-பிங், சூர்யா எல்லாம் விளக்குவார்."

மற்ற அனைவரும் மேஜையைச் சுற்றி அமரவே, சூர்யா அறையின் ஒரு பக்கத்தில் நடந்தவாறே விளக்க ஆரம்பித்தார். அனைவரும் ஊசி விழுந்தால் கேட்கும் படியான அமைதியுடன் அவர் விளக்கத்தை ஆவலுடன் கேட்கலாயினர்.

சூர்யா முதலில் வெர்டியான் நிறுவனத்தினர் ஒவ்வொருவர் முகத்தையும் கூர்ந்து சில நொடிகள் பார்த்து விட்டு இறுதியில் மார்க் ஷெல்ட்டனைப் பார்த்து விளக்கத்தை ஒரு அதிர்வெடியோடு ஆரம்பித்தார். "மார்க், நீங்கள், யூ-பிங் உங்கள் நிறுவனத்தின் அருகில் தாக்கப்பட்டதைக் கேள்விப் பட்டவுடனேயே, பிரச்சனைக்கு ஒரு வெர்டியான் வேலையாளர் தான் காரணம் என்று நான் நினைத்தேன், உங்களுக்கும் கூறினேன். அதுதான் நிஜம் என்று இப்போது எனக்கு நிரூபணமாயிடுச்சு!"

மார்க் பரபரத்தார். "என்ன! நிரூபணமாயிடுச்சா? யார் அந்த ராஸ்கல்? சொல்லுங்க, அவனை..." என்று கை நெறித்தார்.

சூர்யா தன் கையை உயர்த்தி அவரை அமைதிப்படுத்தினார். "சொல்றேன், சொல்றேன். ஆனா, என் எண்ணப் போக்கை முதலிலிருந்து விளக்கினாத்தான் அது ஏன் சரியான கருத்துன்னு உங்களுக்குப் புரியும். வெர்டியான் ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பத்தை வணிகரீதிக்குக் கொண்டு வரும் தருணத்தில் உள்ளது. அதற்குத் தடங்கல் ஏற்பட்டால், யாருக்குப் பெரிய பலன் என்று யோசித்துப் பார்த்தேன். தற்போதைய, பெட்ரோலியம் மற்றும் அதுபோன்ற எரிபொருட்களை விற்கும் பெரும் நிறுவனங்கள் மற்றும் மூலப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் போன்றவைகளாகத்தான் இருக்க முடியும்.

ஆனால் விஞ்ஞானியான யூ-பிங்கைத் தாக்குவானேன்? வேறு வழியில்லையா என்ன என்று எண்ணிப் பார்த்தேன். வெர்டியானோ யூ-பிங்கோ இல்லாவிட்டால் சூர்யசக்தி முன்னேற்றம் நின்று விடுமா என்ன? இதை ஆழ்ந்து யோசித்ததில், இந்தப் பிரச்சனை உண்டாக்கியவர்களின் முக்கிய நோக்கம் வெர்டியானை அழிப்பதல்ல, அதன் தொழில்நுட்ப வேகத்தை வெகுவாகக் குறைப்பது, அதன் மூலம் வெர்டியான் நிறுவனத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகத்தான் இருக்கும் என்று தோன்றியது."

மற்ற அனைவரும் ஒன்றும் பேசாமல் சூர்யாவின் விளக்கத்தை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். மூச்சு இழுத்துக் கொண்ட சூர்யா தொடர்ந்தார். "அந்தக் காரண கர்த்தாக்கள், உயர்நிலை உள் ஆதரவில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது என்பதால், இங்குக் கூடியிருக்கும் வெர்டியான் நிர்வாகக் குழுவில் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்."

மார்க் ஆட்சேபிக்க ஆரம்பித்தார். "இல்லை சூர்யா, இருக்கவே முடியாது நீங்கத் தப்பாக் கணிச்சிட்டீங்க..."

கையை உயர்த்தி அவரைத் தடுத்த சூர்யா வேகமாகத் தொடர்ந்தார். "ஆனால் இந்தக் குழுவில் யாராக இருக்க முடியும்? ஒருவரையும் சந்தேகத்துக்கப்பாற்பட்டவர் என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. மார்க், உங்களையும் கூடத்தான்!"

மார்க் கொந்தளித்தேவிட்டார். "சூர்யா! என்ன சொல்றீங்க! இதைப் பத்தி நாம ஏற்கனவே..." என்று சிவந்த முகத்துடன் உரத்த குரலில் ஆரம்பித்தவரை, சூர்யா தன் இரண்டு கைகளையும் தூக்கிக் காட்டி அடக்கினார். "மார்க், நான் சீக்கிரமே நீங்க செஞ்சிருக்க மாட்டீங்க, இந்த கேஸ்ல, உங்க நிலைமையில இருக்கறவருக்கு இந்தப் பிரச்சனையால எல்லாமே நஷ்டந்தான், எந்த லாபமுமில்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன். அது மட்டுமில்லாம, உங்க நல்ல மனசையும், சூர்யசக்தியிலையும், உலகசுற்றுச் சூழல் மேல உங்களுக்கிருக்கற உண்மையான ஆர்வத்தையும் அறிஞ்சுக்கிட்டு நீங்க சம்பந்தப்படலைங்கற முடிவுக்கு வந்தேன்."

மார்க் அடங்கினார். "அப்ப வேற யார்னு..."

சூர்யா தலையாட்டிக் கொண்டு தொடர்ந்தார். "யார்னு குறிப்பிட்டு சொல்றத்துக்கு முன்னால, இங்க இருக்கற உங்க நிர்வாகக் குழுவில யார் வேணும்னா இருக்கலாம்னு நினைச்சது ஏன்னு சொல்றேன். பீட்டர், ரிச்சர்ட், இன்னும் நான் சந்திக்காதவங்க யார் வேணும்னா இருந்திருக்கலாம்னு நினைச்சேன். ஏன் யூ-பிங் கூடத்தான். அவர் தன்மேல் ஏற்பட்ட தாக்குதலை சும்மா நாடகமா நடத்தியிருக்கலாமோன்னு சந்தேகிச்சேன்."

அவ்வளவுதான்! மருத்துவமனை புயலடித்தது போல் ஒரே களேபரமாகி விட்டது. பீட்டர், ரிச்சர்ட் இருவரும் எழுத்து சூர்யாவை ஏசத் தொடங்கினர். யூ-பிங்கும் கூட படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள சிரமப்பட்டவாறே "என்ன சொல்றீங்க சூர்யா, நாடகம் நடத்தினேனா? இந்தக் காயத்தைப் பாத்தீங்களா? குத்துயிரும் குலையுயிருமா நாள் கணக்கில கிடந்தேன் தெரியுமா?" என்று வெடித்தார். சூர்யா மீண்டும் இரண்டு கைகளையும் தூக்கி அமைதி கொள்ளுமாறு காட்ட, ஷாலினி யூ-பிங்கை அடக்கி மீண்டும் சாய்ந்து கொள்ள வைத்தாள். "கொஞ்ச நேரம் பொறுத்துக்குங்க யூ-பிங். நீங்கதான் செஞ்சீங்கன்னு சொல்லலை. ஆரம்பத்துல யார் வேணும்னாலும் செஞ்சிருக்கலாம்னு சந்தேகிச்சதாத்தான் சொல்றார். சூர்யா விளக்குவார். அமைதியா இருங்க!" என்றாள்.

சூர்யாவும் தலையாட்டி ஆமோதித்தார். "ஆமாம் யூ-பிங். ஷாலினி இஸ் ரைட். உங்களை இப்ப சந்தேகிக்கலை. நீங்க சொல்றா மாதிரி உங்க உடல் நிலைமையைப் பாத்ததுமே சந்தேகம் விலகிடுச்சு!"

கிரண் இடைபுகுந்து "ஆமாமாம்! இந்த அளவுக்கு அடி வாங்கி தகிடுதத்தம் பண்றவரா நீங்க தெரியலை! எதோ லேசா மண்டையில ஒரு சின்ன முட்டை மட்டும் கிளம்பியிருந்தா இன்னும் சந்தேகம் இருந்திருக்கும்!" என்று கூறவே யூ-பிங் அவனை முறைக்க, ஷாலினி அவனை அடக்கினாள். "சே, கிரண் என்ன இது? இப்ப பேசற பேச்சா இது?!" சூர்யாவும் கிரண் பக்கம் ஒரு கையை ஆட்டி அடக்கி விட்டு படாரென ஒரு வெடி வீசினார்! சுட்டு விரலை நீட்டிக் காட்டி, "எல்லாரையும் ஆரம்பத்துல சந்தேகிச்சாலும், இப்ப எனக்கு நிச்சயமாத் தெரிஞ்சுடுச்சு, இந்தப் பிரச்சனைக்குக் காரணம்... இதோ, இந்தப் பீட்டர் பார்க்கர்தான்!"

கிரண், பீட்டர் எரிமலை மாதிரி கோபப்பட்டு வெடிப்பார் அல்லது பயந்து நிலை குலைவார் என்று எதிர்பார்த்தான், ஆனால் ஏமாந்தே போனான். பீட்டர் வாய்விட்டுச் சிரித்தார். "ஹா, ஹா! என்ன ஜோக் அடிக்கறீங்களா? இல்லை வேற மடையன் கிடைக்கலைன்னு என்னமோ வெறுமனே யூகிச்சு என் தலையில கட்டப் பாக்கறீங்களா? என்ன மார்க் சும்மா இருக்கீங்க? என்னைப் பத்திச் சொல்லுங்க இவருக்கு."

மார்க்கும் குழப்பத்துடன், "ஆமாம் சூர்யா, என்ன சொல்றீங்க. என் நிர்வாகக் குழுவில யாரும் இருக்க முடியாதுன்னுதான் நான் இன்னும் நினைக்கறேன். ஏன் பீட்டரை சந்தேகிக்கறீங்க சொல்லுங்க? எதானாலும் அவர் விளக்கம் சொல்லி உங்க தப்பபிப்பிராயத்தை நீக்கிடுவார்" என்றார்.

சூர்யா தலையாட்டி மறுத்தார். "தப்பபிப்ராயமுமில்லை, வெறும் யூகமுமில்லை. யூகத்துல ஆரம்பிச்சு மேற்கொண்டு குடைஞ்சு கிடைச்ச ஆதாரத்தால சொல்றது. நான்கூட ரிச்சர்டோட குதிரைப் பந்தயப் பழக்கத்துனால அவர் செஞ்சிருக்கலாம்னு தான் ஆரம்பத்துல சந்தேகிச்சேன். அதுவும் அவர் முதல்ல எங்களோட சரியா முகம் குடுத்துப் பேசலை. அது மட்டுமில்லை. பிரச்சனை பெரிசாகி நிறுவனத்துக்கு ஆபத்து வந்தாலும் நிதித்துறை நிபுணர் ரிச்சர்ட் பாதிக்கப்படமாட்டார். அதுனால, அவருக்கு பேட்டரி நுட்பம் தெரிஞ்சில்லைன்னாலும், யாரையோ வச்சு செஞ்சிருக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனா பீட்டரோட பேசினதைப் பத்தித் திரும்ப யோசிச்சதுல அவர்தான் காரணம்னு நல்லாப் புரிஞ்சுடுச்சு. ஆதாரமும் கிடைச்சுடுச்சு."

பீட்டர் உதாசீனமாக "என்ன புரிஞ்சுடுச்சு. ஆதாரமாம் ஆதாரம். வெறும யூகம், அவ்வளவுதானே?" என்றார்.

##Caption## சூர்யா தலையசைத்து மறுத்து விட்டுத் தொடர்ந்தார். "முதல்ல எப்படிப் புரிஞ்சதுன்னு சொல்றேன், அப்புறம் ஆதாரத்துக்கு வருவோம். இந்தப் பிரச்சனையில நிச்சயமா ஒரு பேட்டரி நிபுணர் கலந்திருக்கணும். பேட்டரி அப்பப்ப வெடிக்கறா மாதிரி, ஆனா வேற எதுக்கும் ஆபத்தாகாத மாதிரி சரியா செய்யக் கூடிய நிபுணரா இருந்திருக்கணும். பீட்டர் நிச்சயமா அத்தகைய நிபுணர். மேலும், இதை செஞ்சவர் வெர்டியான் மேல முழுப் பிடிப்பு இல்லாதவரா, சமீபத்துல வந்தவரா இருக்கணும்.

பீட்டர் முதல்ல இருந்திருந்தாலும், வெளியேறிட்டு மீண்டும் வந்தவர். அந்த விவரத்தை வேலையாட்கள் பட்டியலில் பார்த்தேன்."

பீட்டர் இன்னும் அலட்சியப்படுத்தினார். "ஸோ? அது வெர்டியான்ல இன்னும் இருபது பேர் அப்படியிருக்கலாமே?"

சூர்யா தலையாட்டினார். "உண்மைதான். ஆனா வேற யாரும் வெர்டியானை விட்டு விலகிட்டுச் சில மாதங்களில திரும்பலை. நீங்க ஏன் அப்படின்னு யோசிச்சேன். அப்பதான் உங்க அலுவலகத்துல, திறந்திருந்த மேஜை இழுப்பறையில குதிரைப் பந்தயச் சீட்டுக்கள் கத்தையா இருக்கறதைப் பார்த்தேன். நீங்க லாவகமாக ரகசியமா மூடறதையும் கவனிச்சுட்டேன். ரிச்சர்டோட சேர்ந்து குதிரைப் பந்தயம் போய்ப் பழகியிருப்பீங்கன்னு நினைச்சேன்..."

சூர்யா நிறுத்திவிட்டு ரிச்சர்டைப் பார்க்கவும் அவர் கவலையோடு மெல்லத் தலையாட்டி ஆமோதிக்கவும், மேலே தொடர்ந்தார். "அந்தப் பணத் தட்டுப்பாட்டால, வெர்டியானைத் தடுக்க நினைக்கும் யார் கிட்டயோ பணம் வாங்கிக்கிட்டு நீங்க பேட்டரியைக் கெடுத்திருக்கணும்னு உணர்ந்துக்கிட்டு, நாம் இங்க வரும் வழியில் கிரணை விட்டு உங்க நிதி நிலைமை பத்திய விவரங்களை ஆராயச் சொன்னேன். அவனோட நிதித்துறை நண்பர்கள் எல்லா விஷயங்களையும் போட்டு உடைச்சுட்டாங்க. உங்க கிரெடிட் கார்டெல்லாம் ஒரே கடன் மயம், வீட்டுக் கடன் பிரச்சனை வேற இருந்தது. ஆனா, நீங்க வெர்டியானுக்கு திரும்பி வரதுக்கு சில நாள் முன்னாடியிலிருந்து கடனெல்லாம் போய், மீண்டும் குதிரைப் பந்தய சூதாட்டம் ஆட ஆரம்பிச்சீங்கன்னும் தெரிஞ்சுது. எப்படி வந்தது அந்தப் பணம், யார் அனுப்பிச்சாங்கன்னு போலீஸ் விசாரிச்சா எல்லா ஆதாரமும் கிடைச்சுடும். நீங்க இனிமேத் தப்பமுடியாது பீட்டர்!"

பீட்டர், கேலி கலந்த அலட்சியம் பறந்து போய், காற்றிறங்கிய பலூன் போல் தொய்ந்து, தோள்கள் சரியத் தலைகுனிந்து கொண்டு, மெல்லிய குரலில் யூ-பிங்கிடம் மன்னிப்புக் கேட்டார். "யூ-பிங், நான் நிச்சயமா உங்களுக்கு அபாயம் ஏற்படும்னு ஒரு நொடி கூட நினைக்கலை. அந்த முட்டாள் கிராதகங்க வெர்டியானைத் தடுக்க பேட்டரிப் பிரச்சனை போதாதுன்னு தாங்களே முடிவு செஞ்சு என்னைக் கேட்காம செஞ்சுட்டாங்க. உங்க உயிருக்கே ஆபத்து வந்துடுச்சு. என்னை மன்னிச்சுடுங்க!"

மார்க் ஆத்திரம் தாங்காமல் கொந்தளித்து எழுந்து கண்கள் சிவந்து, புயல்போல் பாய்ந்தே விட்டார். "பீட்டர்! நீ என்ன செஞ்சுட்டே! எங்க ஆயுள்கால உழைப்பையே அழிக்கப் பார்த்தயே மோசக்காரா! உன் உழைப்பையும் கூடத்தான்! உன்னை... உன்னை... அப்படியே..." என்று பீட்டரின் கழுத்தை நெறிப்பதுபோல் மார்க் தாவவே, முரளி, கிரண் இருவரும் குதித்து அவரின் இரு கைகளையும் பிடித்துப் பின்னால் இழுத்துத் தடுத்தனர். முரளி மார்க்குக்குச் சமாதானம் கூறி அமைதிப்படுத்தினார்.

பீட்டரோ குற்ற மனப்பான்மையுடன் பதிலளித்தார். "உங்களுக்கு சுலபமா இருக்கலாம் மார்க். நீங்க ஒரு லட்சியவாதி. அதுவும், வாழ்க்கை பூரா பணமிருந்திருக்கு. ஆனா நான் அப்படியில்லை. இது எனக்கு லட்சியமில்லை. ஒரு பிழைப்புத்தான். முன்காலத்துல பணமில்லாமக் குடும்பக் கஷ்டம் அதிகம். அதுவும் குதிரைப் பந்தய வெறியால இன்னும் பெரும் பணக் கஷ்டத்துல மூழ்கின என்னால, எண்ணெய் உற்பத்தி நாடுகளும் நிறுவனங்களும் சேர்ந்து வீசின பணத்தைப் பார்த்து தடுத்துக்க முடியலை. ஆனா யாருக்கும் உயிராபத்து நான் சத்தியமா நினைச்சுக் கூடப் பார்க்கலை. அதை மட்டும் மன்னிச்சுடுங்க. வெர்டியானின் வெற்றிக்கு நான் தடையாயிருந்ததுக்கும் மன்னிப்பு எதிர்பார்க்கலை. என்ன தண்டனையாயிருந்தாலும் ஏத்துக்கறேன்." என்றார்.

கோபம் தணிந்து விட்ட மார்க், சோகத்துடன் ஆனாலும் இன்னும் வெறுப்புத் தணியாமல் விரக்தியோடு தலையசைத்துக் கொண்டு, "பீட்டர், நான் உனக்கு எவ்வளவு உதவி செஞ்சேன்? என் நண்பனா, ஏன் சகோதரனா பாவிச்சு ஒவ்வொரு பிஸினஸ் விஷயமா கத்துக் கொடுத்தேன். ஆனா நல்ல மனுஷனா நடந்துக்கக் கத்துக் கொடுக்க மறந்துட்டேன். என் தப்பு. பழங்கால நட்புக்காக இத்தோட விட்டுடறேன் இப்பவே வெளியே போயிடு. ஆனா சட்டம் உன்னைச் சும்மா விடாது, அது என் கையிலில்லை. உன் குடும்பத்துக்கு என்னாலான உதவி செய்யறேன். பார்க்கலாம்." என்றார்.

பீட்டரும் குனிந்த தலையுடன் வெளியேறினார்.

மார்க்கும் யூ-பிங்கும் தங்கள் மொத்த வாழ்க்கையின் சாதனையைக் காப்பாற்றியதற்காக மனமார்ந்த நன்றிகளை சூர்யா மேல் பொழியலாயினர்!

ஷாலினி தனதருமை சூர்யாவைப் பொங்கி வந்தப் பெருமை கலந்த நேசத்துடன் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டாள். அதைக் கண்ட கிரணும் முரளியும் ஒருவருக்கொருவர் கண்ணடித்து முறுவலித்தனர். சூர்யாவோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் பி.டி.ஏ-வில் வந்திருந்த ஒரு அவசர மின்னஞ்சலைப் பார்த்து விட்டு "ஹே கிரண், நாம உடனே ஆஃபீஸ்க்குப் போயாகணும் வா!" என்று பரபரக்கவே முரளியை அங்கேயே விட்டு விட்டு இருவரும் அடுத்த முக்கிய காரியத்தை கவனிக்க விரைந்தனர்!

ஷாலினி "ஏய் கிரண் பார்த்து மெள்ள ஓட்டு!" என்று அவர்கள் பின் கூவவும், கிரண் பதிலுக்குச் சீண்டினான். "எனதருமை சகோதரியே, பார்த்து ஒட்டறதுல நான் கில்லாடிதான் நீ ஒண்ணும் சொல்லத் தேவையில்லை. மெள்ள நத்தை மாதிரி போறதெல்லாம் உன் டிபார்ட்மென்ட்! அதுல நீ பிரமாதம். ஸோ, ரெண்டுத்தையும் பிரிச்சு செஞ்சுடுவோம், ஓகே! இது எப்படி இருக்கு!"

அனைவரும் சுத்த சக்தியின் சங்கடம் நீங்கிய நிம்மதியோடு மனமார நகைத்தனர்.

- முற்றியது -

கதிரவன் எழில் மன்னன்

© TamilOnline.com