குழந்தைகளே, எல்லோரும் ஓடி வாங்க, ஒரு கதை சொல்றேன் கேளுங்க!
ஒரு ஊரில் நான்கு சோம்பேறி இளைஞர்கள் இருந்தார்கள். எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பதும், சாப்பிட்டுவிட்டு ஊரைச் சுற்றுவதும்தான் அவர்கள் வேலை. இப்படியே வருடங்கள் கடந்தன. நால்வருக்கும் வாழ்க்கை சலித்துவிட்டது. 'நாம் சாமியாராகி விடலாம்' என்றான் ஒருவன். 'ஆம், அதுதான் சுகமான வாழ்க்கை' என்றான் மற்றொருவன். எல்லோருமாக அருகிலுள்ள காட்டுக்குச் சென்றனர்.
அங்கே ஒரு முனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் கண் விழித்ததும் நால்வரும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். முனிவர் முதலில் மறுத்தார். 'நீங்கள் இளைஞர்கள், ஏதாவது தொழில் செய்து வாழ்க்கை நடத்துங்கள். சாமியாராவது அவ்வளவு எளிதல்ல, அதற்கு அதிகப் பொறுமையும், அவமானத்தைச் சகித்துக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்' என்றார் அவர். இளைஞர்களோ, ‘எப்படியாவது எங்களை உங்கள் சீடராகச் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்கிறபடியெல்லாம் கேட்கிறோம்' என்றனர். 'அப்படியானால் சரி, நான் சொல்கிறபடி கேட்டால் நிச்சயம் உங்களைச் சீடராகச் சேர்த்துக் கொள்கிறேன்' என்றார் முனிவர்.
'முதலில் இன்று முழுவதும் அனைவரும் பட்டினியாக இருக்க வேண்டும். தண்ணீர்கூடச் சாப்பிடக் கூடாது' என்றார் முனிவர். நால்வரும் ஒப்புக் கொண்டனர். முனிவர் வெளியே புறப்பட, நால்வரும் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். முனிவர் காடு மேடல்லாம் சுற்றினார். வெயிலில் அலைந்தார். வெப்பம் தகிக்கும் பாறையில் அமர்ந்தார். நான்கு இளைஞர்களும் அவ்வாறே அவர் பின் சென்று, அவர் செய்வதையெல்லாம் தாங்களும் செய்தனர். பசித்துக் களைத்த காரணத்தால் அவர்கள் உடல் சோர்ந்து போயிற்று. தாகத்துக்குத் தண்ணீர் கூட அருந்த முடியாத நிலை. இருந்தும் வேறு வழியில்லாமல் எப்படியாவது சீடராக வேண்டும் என்ற ஆசையால் அவர் செய்வதையெல்லாம் செய்தனர். இரவும் வந்தது.
இறுதியாக முனிவர் அவர்களைக் காட்டிலிருந்த தனது குடிலுக்கு அழைத்துச் சென்றார். ஒரு பானைத் தண்ணீரைக் கொடுத்து, ‘நான் சொன்னபடி ஒருநாள் கழிந்தது. இனி அடுத்த ஒருநாள் முழுவதும் நீங்கள் ஒருவருடன் ஒருவர் பேசக் கூடாது. மௌன விரதம் இருக்க வேண்டும். இதோ, இந்த நீரைக் குடித்து விட்டு அனைவரும் நன்றாக உறங்குங்கள்' என்று கட்டளையிட்டார்.
தண்ணீரைக் குடித்து விட்டு பசியுடனும், பட்டினியுடனும் நால்வரும் படுத்துக் கொண்டனர். யாருக்கும் உறக்கம் வரவில்லை. துறவி ஆவதென்றால் அதில் இத்தனை கஷ்டங்கள் இருக்கின்றனவா, இன்னும் என்னென்ன சோதைனகள் இருக்குமோ என தமக்குள் பயந்துகொண்டு யோசித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்று வெளியே ஏதோ 'கர்புர்' என்ற உறுமலும், யாரோ ஓடும் சத்தமும் கேட்டது. நால்வரும் பயந்து போயினர். அச்சத்துடன் எழுந்து பார்த்தபோது முனிவரைக் காணவில்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒருவன், ‘ஏய், யார் அங்கே, என்ன சப்தம் அது?' என்றான். மற்றொருவனோ, ‘சாமியாரையும் காணோம், வாங்கடா என்னன்னு போய் பார்ப்போம்' என்றான். மூன்றாமவனோ, ‘மூடர்களே, முனிவர் நம்மை மௌன விரதம் இருக்கச் சொன்னாரே அதை மறந்துட்டீங்களே!' என்றான். நான்காமவனோ, ‘நல்லவேளை, முனிவர் இங்கில்லை, இருந்தால் என்ன ஆவது? நம் நான்கு பேரில் நான் மட்டும்தான் வாயையே திறக்கவில்லை. எனவே நான்தான் அவருக்குச் சீடனாகப் போகிறேன்' என்றான் மகிழ்ச்சியுடன்.
இதையெல்லாம் கேட்டவாறே வெளியே கன்றுகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்த முனிவர் உள்ளே வந்து, 'பொறுமை, சகிப்புத்தன்மை இல்லாத நீங்கள் நான்கு பேருமே எனக்குச் சீடனாகவோ, துறவியாகவோ ஆகத் தகுதியற்றவர்கள். உடனே இங்கிருந்து சென்று விடுங்கள்' என்றார் அமைதியாக.
அவர் பாதங்களில் பணிந்து நால்வரும் மன்னிப்பு வேண்டியதுடன், 'எந்த ஒரு நிலையுமே எளிதல்ல என்ற உண்மையை உணர்ந்தோம். இனி வாழ்க்கையில் உழைத்துப் பிழைத்து உயர்ந்து காட்டுவோம்' என்று அவரிடம் உறுதி கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டனர்.
அடுத்த மாதம் சந்திக்கலாம், வரட்டுமா!
சுப்புத்தாத்தா |