மனசுக்குள் மத்தாப்பு
அன்புள்ள சிநேகிதியே,

தங்களுடைய உறவினர்களால் ஏற்படும் சண்டைகளைப் பற்றியே பலரும் இந்தப் பகுதியில் எழுதி வருகிறார்கள். அதற்கு மாறாக, எனக்குக் கிடைத்த அருமையான உறவுகளைப் பற்றி உங்களுக்கு எழுதினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அதனால் அனுபவிக்கும் சோகத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் சிறு வயதிலேயே அப்பா இறந்து விட்டார். 8 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அம்மாவையும், என்னையும் என் மாமா அழைத்துக் கொண்டு போய்த் தன்னுடன் வைத்துக் கொண்டார். என் அம்மாவுக்கு சிறிது மற்றவர்களுடன் ஒத்துப் போகாமல் இருக்கும் சுபாவம். என் அப்பா போனபின் மாமியார், மைத்துனருடன் சண்டை போட்டுக்கொண்டு தன் அண்ணா வீட்டுக்கு வந்து விட்டாள். என் மாமாவும் முன்கோபக்காரர். அவருக்கு ஒரு பெண். என்னை விட 2 வயது பெரியவள். அவளும் கோபக்காரி. ஐயோ... பாட்டி வீட்டிலும் ஒரே ரகளை. இங்கேயும் ஆரம்பித்து விடுகிறதே என்று அந்த வயதிலும் நான் உள்ளுக்குள் பயப்படுவேன். அப்பாவை அடிக்கடி நினைத்து ஏங்குவேன். இத்தனைக்கும் நடுவில் ஒரு சுகம். அது என் மாமி. என் தலையை வாரிவிட்டு பள்ளிக்கு அனுப்புவது மட்டும் இல்லாமல், என்னுடைய மனதை எப்படி வருடி விட்டிருக்கிறாள்... அந்தப் பெண்தெய்வத்தைப் பற்றி நான் ஒரு புத்தகமே எழுதலாம். அதுவும், அவளுடைய கோபக்கார, பொறாமைக் குணம் படைத்த பெண்ணையும் விட்டுக் கொடுக்காமல் என்னை எப்படி வளர்த்தாள்! ஒவ்வொரு சம்பவத்தை நினைக்கும் போதும் என் கண்கள் குளமாகின்றன.

##Caption## எனக்கு சொஜ்ஜியப்பம் என்றால் மிகவும் பிடிக்கும். என் மாமா பெண்ணுக்கு அவள் அம்மா, அவளுக்கு ஈடாக என்னை நடத்துவது பிடிக்காது. என்னுடைய மார்க் ஷீட் அல்லது ஏதாவது பரிசு வந்ததை மாமியிடம் காட்டி, அவர் என்னைக் கட்டி முத்தம் கொடுத்தால் ஓவென்று அழ ஆரம்பித்து விடுவாள். ஒரு நாள் யாரோ கொண்டுவந்து கொடுத்த சொஜ்ஜி அப்பத்தை என் மாமி அவளுக்கு 1-1/2யும் எனக்குப் பாதியும் கொடுத்தார். நான் மலங்க, மலங்க என் மாமியைப் பார்த்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லாமல் அந்தப் பாதியைச் சாப்பிட்டேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. எப்படியோ அடக்கிக் கொண்டு வந்து விட்டேன். என் மாமி நல்லவர் என்று நினைத்தேன், இப்படிச் செய்து விட்டாரே என்று துக்கம் தாங்கவில்லை.

அன்று மாலை மாமி என்னை கோவிலுக்குக் கூப்பிட்டார். வழக்கமாக நான் மாமி எங்கு கூப்பிட்டாலும் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடுவேன். அன்று ஏனோ எனக்கு போகப் பிடிக்கவில்லை. அப்புறம் தோன்றியது, 'நமக்கு அப்பாவும் போய் விட்டார். அம்மாவும் அருகிலில்லை. மாமியும் தன் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார். இனிமேல் கடவுள்தான் கதி' என்பது போலத் தோன்றியது. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் போனேன். தனியாகப் போய் தரிசனம் செய்து விட்டு, பிள்ளையாரை மனதில் நன்றாகத் திட்டினேன். அப்புறம் சாரி கேட்டேன். அதுவும் மனதால்தான். மாமி, 'கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்து விட்டுப் போகலாம் வா' என்று அந்த பிரகாரத்தில் ஒரு தனியிடத்தில் போய் உட்கார்ந்தார்.

இஷ்டம் இல்லாமல் நான் போய் பக்கத்தில் உட்கார்ந்தேன். பையிலிருந்து எதையோ எடுத்தார். ‘இந்தா, இதைச் சாப்பிட்டு விட்டு, அப்புறம் ஆத்துக்குப் போகலாம்' என்று கொடுத்தாள். அது ஒரு முழு சொஜ்ஜியப்பம். ‘இதோ பார், உனக்கு 9 வயது ஆகிவிட்டது. கொஞ்சம் புத்திசாலி. அதனால் சொல் கிறேன். இவளுக்கு (தன் மகளுக்கு) எனக்கு பிடிக்காத சுபாவம் நிறைய இருக்கிறது. என்ன செய்வது... கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாத்தணும். ஏற்கனவே உன்னை மாதிரி படிப்பில்லை, அழகில்லைன்னும் காம்ளெக்ஸ் வேறு. அதனால் அவளுக்கு உன்மேல ஏதும் வெறுப்பு வந்துடக் கூடாதுன்னு தான், நேத்திக்கு நான் அவளுக்கு நிறையப் பங்கு கொடுத்தேன். உனக்கு சொஜ்ஜியப்பம் ரொம்ப பிடிக்கும்னு தெரிஞ்சும் மாமி அப்படி பண்ணுவேனா... எனக்கு என் மனசில அவளுக்கும், உனக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அவ வயத்தில பிறந்தவ... நீ ஆத்துல பிறந்தவ' என்று என்னைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்துச் சாப்பிட வைத்தார்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எனக்கு என் மாமிதான் அம்மா, தோழி எல்லாமே! என் மாமா பெண்ணுக்கே முதல் மரியாதை என்பதை நானும் புரிந்து கொண்டு அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தேன். அங்கேயும் கொஞ்சம் நிம்மதி. அம்மாவுக்கும், மாமாவுக்கும்தான் அவ்வப்போது பிரச்சனை வரும். நான் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போது என் அம்மாவும் இருதய நோயால் போய்ச் சேர்ந்தார்.

என் கணவருடைய குணாதிசயங்களை அளந்து, ‘இந்தப் பையன் உன்னை நன்றாக வைத்துக் கொள்வான். ஒன்று, இரண்டு விஷயங்களில் உன் எதிர்பார்ப்பில் குறைந்து இருக்கலாம். ஆனால் உன் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வான்' என்று சிபாரிசு செய்தாள். நானும் மாமி சொல்படிதான் கேட்டேன்.

இன்று, பழகப் பழக இப்படியொரு கணவர் எனக்கு வாய்த்திருக்கிறாரே என்று நான் கடவுளுக்கு தினம் நன்றி சொல்கிறேன்.

##Caption## அமெரிக்காவுக்கு வந்து 12 வருடங்கள் ஆகின்றன. ஒரு ஐந்து வருடமாகத்தான் வசதியுடன் வாழ முடிகிறது. மாமியைக் கூப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆசைதான். ஆனால் மாமா படுத்த படுக்கையாகப் போய்விட்டார். இரண்டு வருடத்திற்கு முன் அவரும் போய்ச் சேர்ந்து விட்டார். மறுபடியும் இங்கே வரவழைக்க முயற்சி செய்தோம். அந்தச் சமயத்தில் ஒரு ஆட்டோ விபத்தில் மாமியின் கால் முறிந்து விட்டது. முதுகிலும் நல்ல அடி. சரியாக மருத்துவ உதவி கிடைக்காமல், யாரும் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள முடியாத நிலைமை. மாமா பெண் வந்து இரண்டு வாரம் இருந்து யாரையோ பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டுப் போய் விட்டாள். ஆனால் அந்த நர்ஸ் நிலைக்கவில்லை. நான் அப்போதுதான் இங்கே என்னுடைய பட்டப்படிப்பை முடித்து ஒரு வேலையில் சேர்ந்திருந்தேன். எனக்கு இரண்டு பையன்கள் 12, 10 வயது. இரண்டு சம்பளம் என்பதால் பெரிய வீடாகப் பார்த்து வாங்கும் நிலையில் இருந்தோம். மாமியைப் பற்றிய செய்தி மிகவும் மனதை வருத்தியது. என் கணவரும் நானும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம். குழந்தைகளிடம் தெரிவித்தோம். நான் வேலையை உதறினேன். வீடு வாங்குவதைத் தள்ளி வைத்தோம். கிளம்பிப் போய் விட்டேன் இந்தியாவிற்கு. ஒரு மாதத்தில் திரும்பி வருவதாகத்தான் இருந்தேன். ஆனால் மாமியால் 6 மாதத்திற்கு கம்பு வைத்துக் கொண்டுகூட நடக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் குணமாகும் வரை ஆறுமாதம் இருந்து விட்டு, சமீபத்தில் தான் திரும்பி வந்தேன். மாமிக்குப் பழைய நிலைமை திரும்புவது கஷ்டம் என்று சொல்லி விட்டார் டாக்டர். என்னால் முடிந்த அளவுக்கு சௌகரியங்கள் செய்து கொடுத்து, தினமும் போன் செய்து பேசுகிறேன்.

மனதில் ஒரு சின்ன திருப்தி. எனக்கு தாயாக இருந்த என் மாமிக்கு, நான் பெண்ணாக இருந்து செய்ய முடிந்ததே என்று. அந்தக் கடமையைச் செய்து முடிக்க என் கணவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் என்னால் முடிந்திருக்காது. என் குழந்தைகள் பொறுப்பாக இல்லை என்றால் அது நடந்திருக்காது. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று வாக்குக் கொடுத்து என் குழந்தைகளை அவ்வப்போது கவனித்துக் கொண்ட அந்த இரண்டு குடும்பங்கள், என் அருமைத் தோழிகள் இல்லாவிட்டால் முடிந்திருக்காது. எத்தனை அன்பான உறவுகள்... அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால் எனக்கு மறுபடியும் என் மாமி வேண்டும், என் கணவர் வேண்டும், என் குழந்தைகள் வேண்டும். தோழிகள் வேண்டும். இப்படி உண்மையான பாச உணர்ச்சி இருப்பதால் சோகம், குற்ற உணர்ச்சி இரண்டுமே என்னைத தாக்குகிறது. மாமி இப்படித் தனியாக இருக்கும்படி ஆகி விட்டதே, கணவர் இத்தனை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு பொறுமையாக இருந்திருக்கிறாரே, நீச்சல் பயிற்சி, விளையாட்டு என்று குழந்தைகளின் கனவுகளைத் தகர்த்து விட்டோமே, இரண்டு குடும்பங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை தோழிகளுக்குக் கொடுத்து விட்டோமே என்று. அவ்வளவு தான்.

இப்படிக்கு
....................

அன்புள்ள சிநேகிதியே

நீங்கள் பாதி தொலைபேசியிலும், மீதி எழுத்திலும் தெரிவித்தபோது என் மனதுக்குள் மத்தாப்பு பூத்தது. இப்போது எழுதும் போது I am overwhelmed. மொத்தத்தில் அருமை, அருமை, பெருமை, பெருமை, இனிமை, இனிமை. சோகத்துக்கு இங்கு இடமே இல்லை.

வாழ்த்துக்கள்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com