பரவச நிலையில் நின்று கவிஞன் பேசுகையில் சொல்வீழ்ச்சி மட்டுமன்றி, பொருள்வீழ்ச்சியும் நடப்பது உண்டு; அவ்வாறு நடப்பது இயற்கையானதே என்பதை விளக்குவதற்காக, கம்பனுடைய ஒரு பாடலை எடுத்துக் கொண்டு, அதனுள் வீழ்ந்திருக்கும் பொருள்வீழ்சி--விளை பொருள் என்று நாம் அழைப்பது--உண்மையிலேயே நிகழ்ந்திருக்கிறதா, அல்லது அது ஒரு மாயத்தோற்றமா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக அந்தப் பாடல் அமைந்திருக்கும் சூழலை ஆயப் புகுந்தோம். அதே சூழல் வால்மீகியின் மூலக்கதையில் விவரிக்கப்பட்டுள்ள விதத்தை நோக்கி, அதற்கும் கம்பனுடைய விவரிப்புக்கும் இடையிலுள்ள மாறுதல் நம்முடைய இந்த முடிபுக்குத் துணைநிற்குமா என்பதைக் காணப் புகுந்தோம். இனி, சென்ற இதழில் நிறுத்திய இடத்திலிருந்து தொடர்வோம்.
ராமன், தசரதனும் கைகேயியும் இருந்த அறைக்குள் நுழையும் கட்டத்தில் தசரதன் விழித்திருந்தான்; ஆனால் பேச முடியாதபடி தளர்ந்து போயிருந்தான் என்று வால்மீகி குறிப்பிடுகிறார். ராமன் உள்ளே நுழைந்ததும் தசரதனையும் கைகேயியையும் தரையில் விழுந்து நமஸ்கரிக்கிறான். ராமனைப் பார்த்த தசரதனால் பேச முடியவில்லை. வால்மீகி சொல்கிறான்: "ராமனைப் பார்த்த தசரதன் ‘ராம!' என்று தொடங்கினான். அவனால் மேற்கொண்டு பேசமுடியவில்லை; அதற்கு மேல் ஒரு வார்தையையும் அவனால் சொல்ல முடியவில்லை. அவன் கண்களில் நீர் வடியலாயிற்று." (வால்மீகி ராமாயணம், அயோத்யா காண்டம், ஸர்க்கம் 18, ஸ்லோகம் 3).
##Caption##இதற்கு அடுத்ததாக ராமனுக்குத் திகைப்பு ஏற்பட்ட நிலையைக் கவி விவரிக்கிறார். தசரதன் துக்க சாகரத்தில் மூழ்கிக் கிடந்த நிலையையும் அவனால் ஒன்றுமே பேச இயலாமல் போன நிலைமையையும் சொல்கிறார். அதைத் தொடர்ந்து ராமன் திகைத்துப் போய், ‘நாம் ஏதும் தவறு செய்து விட்டோமோ, இவர் ஒருநாளும் இப்படி இருந்ததில்லையே' என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டு, கைகேயியைப் பார்த்து, ‘நான் என் அறியாமையால் தவறேதும் செய்துவிட்டேனா? ஏன் தந்தையார் என்னிடத்திலே கோபமாயிருக்கிறார்? எனக்காக நீங்கள் அவரிடத்தில் பரிந்து பேசவேண்டும் (தாயே!)' (மேற்படி ஸர்க்கம், ஸ்லோகம் 11) என்று தொடங்கி அதற்கு மேல், ‘பரத சத்ருக்னர்கள் நலமாகத்தானே இருக்கிறார்கள்? அவர்களுடைய நலத்தைக் குறித்த செய்தி ஏதாகிலும் தந்தையை வருத்துகிறதா' என்றெல்லாம் கேட்டு, கடைசி கடைசியாக ராமன், கைகேயினிடத்திலே ஒரு கேள்வி கேட்கிறான்:
கச்சித் தே பருஷம் கிம்சித் அபிமானாத் பிதா மமா உக்த பவத்யா ரோஷேண யத்ர அஸ்ய லுலிதம் மன: (மேற்படி ஸர்க்கம், ஸ்லோகம் 17)
‘என்னுடைய தந்தையின் இதயம் அகம்பாவமும் கோபமும் நிறைந்த உன் கடுஞ்சொல்லால் காயப்பட்டு விட்டதோ?' இந்த வாக்கியத்தை மீண்டும் கவனியுங்கள். ஊன்றிப் பாருங்கள். ‘தே அபிமானாத்'--உன்னுடைய அகந்தையால்; ‘பவத்யா ரோஷேண'--உன்னுடைய கோபத்தால் வெளிப்பட்ட சொற்களால் என் தந்தையுடைய இதயம் புண்பட்டிருக்கிறதா? அதனால்தான் இப்படி வாட்டமுற்று இருக்கிறாரோ? கம்பனுடைய ராமனிடத்திலே பார்க்கவே முடியாத வெளிப்பாடு, கேட்கவே முடியாத பேச்சு. அதுவும் தாயரில் தான் பெரிதும் நேசித்த தாயாரிடத்தில்!
கைகேயியிடம் கர்வமும் மற்றவரை மதியாத அலட்சியப் போக்கும் இயல்பாகவே கலந்திருந்ததாகத்தான் வால்மீகி சித்திரித்திருக்கிறார். கோசலையிடத்திலும் சுமித்திரையிடத்திலும் அவளுடைய உறவு அவ்வளவு திருப்திகரமாக இருந்ததில்லை என்பதும் வால்மீகியின் சித்திரிப்புதான். ஒருவேளை வாசகன் இந்த இடத்தில் ராமனுடைய நேரடிக் கேள்வியில் வெளிப்படும் கைகேயி குணச்சித்திரத்தையும், அதை ராமன் உணர்ந்திருந்தான் என்பதையும் தவறவிட்டு விட்டால் என்ன செய்வது என்பது போலவோ என்னவோ, இப்படிப்பட்டதான வாக்கியங்களை பரதன் மூலமாகவும் பேசச் செய்திருக்கிறார் வால்மீகி.
தசரதன் இறந்த பிறகு, பரதனை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கும் தூதர்களிடம் பரதன் அயோத்தியில் இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் நலம் விசாரித்து வருகையில், கோசலை நலமா, சுமித்திரை நலமா என்றெல்லாம் கேட்ட பிறகு, ‘எப்போதும் தன்னை மட்டுமே நேசிப்பவளும், மூர்க்கமான குணம் படைத்தவளும் ('ஸதா சண்டீ'), தன்னைத் தானே புத்திசாலி என்று வியந்து கொள்பவளுமான என் தாய் கைகேயி ஆரோக்கியமாக இருக்கிறாளா? எனக்கு என்ன செய்தி சொல்லி அனுப்பினாள்?' என்று அவனையும் கேட்க வைத்து இவளுடைய தன்மையைக் குறித்த சித்திரத்துக்கு வலுவூட்டுகிறார் வால்மீகி. (கைகேயியின் பாத்திரப் படைப்பை சென்னை ஆன்லைன் வெளியிட்ட என் ஆங்கிலத் தொடரில் விரிவாக எழுதியிருக்கிறேன். இங்கே பார்க்கலாம்)
அது வால்மீகியின் சித்திரிப்பாகட்டும் அல்லது கம்பனுடைய சித்திரமாகட்டும். இரண்டிலுமே ராமனுக்கும் கைகேயிக்கும் இடையே நிலவி வந்த மிகமிக உன்னதமான அன்பு அபரிமிதமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. அளவுக்கு அதிகமான அன்பையும் மரியாதையையும் கைகேயியிடத்து ராமன் செலுத்தினான் என்று வால்மீகியின் சித்திரம் சொல்வதை மறுப்பதற்கில்லை. கம்பன் இந்தச் சித்திரத்தை இன்னமும் ஆழப்படுத்தினான். அதே நேரத்தில், கைகேயியின் உண்மையான சுபாவத்தையும் ராமன் உணர்ந்தே இருந்திருக்கிறான் என்பதையும் வால்மீகி மிக அழுத்தந் திருத்தமாக ராமனுடைய வாய்மொழியாகவே வெளிப்படுத்திவிடுகிறார். ராமன் கைகேயிபால் வைத்திருந்த அபிமானம், அவளுடைய அகந்தை முதலான மற்ற விரும்பத்தகாத குணங்களைத் தாண்டிய ஒன்று என்பதே வால்மீகியின் சித்திரம்.
கோபாக்ருஹத்தில் இருந்த கைகேயியும் தசரதனும் தனித்திருந்த அறைக்குள் பிரவேசித்த ராமன் முதலில் பேசியது தசரதனிடத்தில்தான்; அவனால் ‘ராம!' என்ற ஒற்றைச் சொல்லுக்கு மேல் எதுவுமே பேச இயலவில்லை. அப்படிப்பட்ட சூழலில், நிலைமையைத் தன் வசப்படுத்திக் கொண்டு 'ஏழிரண்டாண்டு காட்டுக்குப் போ' என்று மன்னவன் பணியை ராமனுக்குத் தெரிவித்து, ராமன் விடைகொண்டு ஏகுவது எல்லாமும் தசரதனின் கண்ணுக்கு எதிரிலேயே நிகழ்கிறது. ‘மிகுந்த மன, உடல் வலிமையைப் படைத்திருந்த போதிலும், அரசன் தன்னுடைய மகனிடமிருந்து பிரியப் போகும் துயரத்தால் அழுத்தப்பட்டு, ஏதும் செய்ய இயலாதவனாக இருந்தான்' என்ற 41ம் ஸ்லோகத்துடன் மேற்படி ஸர்க்கம் முடிகிறது. அதாவது, இந்த நாடகம் முழுவதும் தசரதன் தன்னுணர்வோடு இருந்த சமயத்திலேயே, அவன் கண்ணுக்கு முன்னாலேயே நடந்து முடிந்திருக்கிறது.
வால்மீகி படைத்த காட்சியின் இந்தப் பகுதியை மட்டுமன்றி, வாக்கையும் அப்படியே எடுத்துக் கொண்டு ‘ஸப்தஸப்த ச வர்ஷாணி' என்பதை, மூலத்தை ஒட்டி அப்படியே ஒலிக்குமாறு ‘ஏழு இரண்டு‘ என்று தன் சித்திரத்தை வனைந்திருக்கிறானல்லவா கம்பன்? (அவர் இரண்டு முறை ‘ஏழு'--ஸப்தஸப்த--என்றார்; கம்பன் ஏழு இரண்டு' என்று வகுத்தான்). ‘பூழிவெங்கான நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி, ஏழிரண்டாண்டின் வா' என்று சொல்வது முழுக்கவே வால்மீகியின் மேற்படி ஸ்லோகத்தின் நேரடி மொழி பெயர்ப்பு என்றே சொல்லிவிடலாம். அவ்வளவு நெருக்கமாகப் பின்னியிருக்கிறான்.
எனில், மேற்படிச் சம்பவத்தின்போது கம்பனுடைய சித்திரத்தில் தசரதன் என்ன ஆனான், எங்கே இருந்தான், என்ன செய்துகொண்டிருந்தான்? இந்தக் காட்சி நெடுகிலும், ஒரு அடிவிடாமல் துருவித் துருவிப் படித்தாலும், தசரதன் அந்த நேரத்தில் என்ன செய்துகொண்டிருந்தான் என்பதற்கான எந்தச் செய்தியையும் காண முடியவில்லை என்பதல்லவா உண்மை?
வசிஷ்டர் சொன்னதன் பேரில் தசரதனை அழைத்துவரச் செல்லும் சுமந்திரனிடம் கைகேயி, ‘பிள்ளையைக் கொணர்க' என்று உத்தரவிட்டு, ‘பெண்டிரிற் கூற்றம் அன்னாள்' சொன்னதைக் கேட்டு பேருவகையோடு சுமந்திரன் ராமனை அழைத்து வருவதும், ராமன் தந்தையைத் தேடியபடியே நடந்தவாறு, அவனை எங்கும் காண முடியாமல் கைகேயியுடைய அரண்மனைக்குள் புகுவதுமாக கம்பனுடைய காட்சி விரிகிறது.
##Caption## இந்தக் காட்சியின் ஆரம்ப கட்டத்தில் நாம் தசரதனைப் பார்க்கிறோம். கைகேயிக்கு வரம் கொடுத்த அந்தக் கணத்தில், ‘வன்துயர் ஆகத்து இடை மூழ்கத்//தேறான் ஆகிச் செய்கை மறந்தான்' (துன்பம் நெஞ்சத்தை மூழ்கடிக்கவும், அந்தக் காரணத்தால் செயலை மறந்தான்' என்று பட்டதும் படாததுமாகச் சொல்லி நிறுத்திவிடுகிறான். தசரதன் ‘செயல் மறந்தான்') என்று சொல்லும் காரணத்தால், செயல் இழந்து, மயக்கத்தில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. சரி. அப்படியானால், அந்த அரண்மனைக்குள்தானே ராமன் வந்தான்? அவனைக் கைகேயி எங்கே சந்தித்தாள்? தசரதன் இருந்த அதே அறையிலா அல்லது இன்னொரு அறையிலா? கவி அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. செயல் மறந்து கிடக்கும் தசரதனைக் காட்டிய பாடலுக்குச் சுமார் 55 பாடல்கள் தாண்டி, ஆயன நிகழும் வேலை, அண்ணலும் அயர்ந்து தேறாத் தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி, 'நாயகன் உரையான் வாயால்; நான் இது பகர்வென்' என்னா, தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள்
(இப்படிப் பலவாறான நிகழ்வுகள்) நடந்து கொண்டிருந்த சமயத்தில், ‘அண்ணலும் அயர்ந்து தேறாத் தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி' என்று மகா ஈரொட்டாக ஒரு வாக்கியத்தைப் போட்டான் கம்பன். இந்த ‘அயர்ந்து தேறா' என்பதை ராமன் மேலும் ஏற்றலாம்; தசரதன் மேலும் ஏற்றலாம். ராமன் மேல் ஏற்றினால், ‘அண்ணலும் அயர்ந்து' ராமன் (பல இடங்களில் தசரதனைத் தேடி, அவனைக் காண முடியாமையால்) அயர்ச்சி அடைந்து, ‘தேறா' பிறகு (அவன் கைகேயி மனையில் இருக்கக்கூடும் என்று) தெளிந்து, ‘துருவினன் வருதல் நோக்கி' தேடிக் கொண்டு வருவதை நோக்கிய கைகேயி... என்று பொருள் கொள்ளலாம். (‘தெளிவில்லா' என்ற பொருள்படும் ‘தேறா' என்ற சொல் எப்படி ‘தெளிவடைந்தான்' என்ற பொருளைத் தரும் என்பதற்கான இலக்கண விளக்கங்களைத் தவிர்க்கிறேன். இந்தப் பொருளைத்தான் உரையாசிரியர் வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் மேற் கொண்டிருக்கிறார்).
இதையே தசரதன்மேல் ஏற்றிச் சொன்னால், ‘அண்ணலும் (கமா) அயர்ந்து தேறாத் தூயவன் இருந்த சூழல் துருவினன்' ராமனும், அயர்ச்சி அடைந்து இன்னமும் மயக்கம் தெளியாத நிலையில் இருந்த, தூயவனாகிய தசரதன் இருந்த இடத்தைத் தேடிக்கொண்டு வந்தான்' என்றும் பொருள்கொள்ள முடியும். இந்த இடத்தில் ‘தேறா மன்னா செப்புவதுடையேன்' என்று பாண்டியன் அவைக்களத்தில் கண்ணகி பேசும் ‘தேறா'--தெளிவில்லாத, தெளிவை அடையாத--என்ற (சுற்றி வளைக்காத, நேரடியான) ஆட்சியாகக் கொள்ள இயலும். மயங்கியது ராமனா அல்லது தசரதனா என்று நாம்தான் மயங்கவேண்டி வருகிறது!
ஆக, எப்படிப் பொருள்கொண்டாலும், தசரதன் அந்த இடத்தில் இல்லை, அவன் மயங்கிக் கிடக்கிறான் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. ஏனெனில், சுமந்திரன் வந்து அழைத்த சமயத்தில் கைகேயி மட்டுமே பதில் சொல்கிறாள். தசரதன் என்ன சொன்னான் என்பதைப் பற்றிய பேச்சே இல்லை. (உன்னுடைய வாழ்த்தொலி என்னுடைய மர்மஸ்தானத்தைச் சென்று தாக்குகிறது என்று இந்தக் கட்டத்தில் வால்மீகியின் தசரதன், சுமந்திரனிடம் பதில் சொல்வதைச் சென்ற இதழில் பார்த்தோம்.) தசரதனுடைய நிலைமை என்ன என்பது இந்தக் கட்டத்தில் நமக்குத் தெளிவாகத் தட்டுப்படுவதே இல்லை. பின்னர் ராமன் காட்டுக்குப் போயே போய்விட்ட பிறகு, நெடுநேரம் கழிந்த பின்னரே ‘மயக்கம் தெளிந்து எழும் தசரதன்' அருகிலிருக்கும் வசிஷ்டர் கைகேயியைக் கடிந்துகொள்ளும் வார்த்தையைக் கேட்டே ‘தன் மகன் காட்டுக்குச் சென்றுவிட்டான்' என்று உணர்கிறான். ஆகவே, கைகேயியும் ராமனும் உரையாடிக் கொண்டிருந்த சமயம் தொடங்கி, ராமன் காட்டுக்குக் கிளம்பிப் போய்விட்ட தருணம் வரையில் தசரதன் தன் நினைவில்லாமல்தான் கிடந்திருக்கிறான் என்றுதான் நாம் ஊகிக்க முடிகிறது. சொல்வனவற்றை பொட்டில் அறைந்ததைப் போன்று தெளிவாக்ச் சொல்லும் கம்பனா இப்படி மயக்கம் தரும்படியான வாக்கிய அமைப்பைச் செய்திருக்கிறான் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. ஏதோ ஒரு விஷயத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் இப்படிச் செய்திருக்கிறானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அப்படியானால், ‘மன்னவன் பணி இது' என்று ஏவுகிறாளே கைகேயி, அந்தச் சமயத்தில், தந்தையைத் தேடிக்கொண்டு வந்தவனான ராமன், தசரதன் எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான், என்ன நிலைமையில் இருக்கிறான் என்பதைக் கூடவா பார்க்கத் தவறிவிட்டான்? மயக்கம் போட்டு விழுந்திருக்கும் தந்தையைப் பார்க்காமலேயே அல்லவா இந்த ‘அப்பா செல்லம்' காட்டுக்குப் போனான்? அப்பாவுக்கு உடல், மன நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறியாமலா அவன் அப்படி, தந்தையிடம் விடைகூடப் பெறாதவனாக வனம் புகுந்தான்? நாம் யாருமே இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க மாட்டோம். ‘பித்ரு வாக்கிய பரிபாலனமே' தன்னுடைய வாழ்வின் முதற் கடமையாகக் கொண்ட ராமன் இப்படிச் செய்யலாமா?
அல்லது, ‘இது மன்னவன் பணி அன்று' என்று ராமன் ஊகித்திருந்தான் என்ற முடிவுக்கு நாம் வரவும் முடியுமா? முடியும். பின்னால், வசிஷ்டர், ராமன் காட்டுக்குப் போவதைத் தடுக்கும்போது இதற்கான விடை ராமன் வாய்மொழியாகவே கிடைக்கிறது. ‘வெவ்வரம் பயில்சுரம் விரவென் றானலன்' என்று (வெம்மையான முட்கள் நிறைந்திருக்கும் காட்டுக்குப் போ என உனக்கு ஆணையிட்டவன் மன்னவன் அல்லன் என) வசிஷ்டர் பேசத் தொடங்கியதுமே, கைகேயியிடத்தில் பேசிக் கொண்டிருந்த சமயத்திலேயே ராமன் என்ன அனுமானித்திருக்கக்கூடும், ஏன் அவ்வளவு கடுமையான சூழலில், பரிதாபமாக, தன் சுயநினைவற்றுக் கிடந்த தந்தையைப் பற்றி ஏதும் விசாரிக்காமல், விடையும் கொள்ளாமல் ராமன் காடேகுவதாய் கம்பன் தன் நாடகத்தைச் செலுத்தி யிருக்கிறான் என்பதற்கான விடை ராமன் வாய்மொழியாகவே, சூட்சுமமாய் வருகிறது.
ராமன் என்ன சொல்கிறான்? கேட்போம்.
ஹரி கிருஷ்ணன் |