சுண்டல் ஏதோ நவராத்திரி சமயத்தில் செய்வது என்று பலர் நினைக்கிறார்கள். பயறு வகைகளால் செய்யப்படுவதால் சுண்டல் புரதத்தைப் பெற மிகச் சிறந்த உணவுப் பொருளாக அமைகிறது. அதிலும், உணவில் மாமிசம் சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கு இது அவசியம். தவிர பயறுகளின் தோலில் நார்ப்பொருளும், பல விட்டமின்களும் கிடைக்கின்றன. மெரீனா பீச்சில் பார்க்காத சில சுண்டல் வகைகள் இதோ...
பின்ட்டோ பீன்ஸ் சுண்டல்
தேவையான பொருட்கள் பின்ட்டோ பீன்ஸ் - 2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 5 பச்சை மிளகாய் - 2 உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கொத்துமல்லி விதை - 2 தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தாளிக்க இஞ்சி - சிறிய துண்டு வெங்காயம் - தேவைப்பட்டால்
செய்முறை பீன்ஸை முதல் நாளே ஊறப்போட்டு, காலையில் உப்புப் போட்டு வேக வைக்கவும். (சுமார் எட்டு மணி நேரம் ஊறினால் போதும்). நீரை வடித்து, வாணலியில் கொத்துமல்லி விதையை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்யவும். கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து எண்ணெயில் தாளித்து, வெந்த பீன்ஸை அதில் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவவும். வெங்காயத்தைத் தாளிக்கும் போது வதக்கியும் போடலாம். இது மிகவும் சுவையான சுண்டல் ஆகும்.
தங்கம் ராமசாமி |