உரையாடல்: பிரபாகர் சுந்தரராஜன், சி.கே. வெங்கட்ராமன் தமிழாக்கம்: மதுரபாரதி
திருநெல்வேலி சுப்ரமணியம் ரவி (T.S. ரவி) (CEO, கிரிஸ்டல் சோலார்) சென்னை IITயில் படித்தவர். BHEL திருச்சி மற்றும் ஹைதராபாதில் குறுகிய காலம் பணிபுரிந்த பின் அரிஸோனா ஸ்டேட் பல்கலையில் படித்தார். அங்கே 1989ல் முதுகலை படித்தபின் பெல் கம்யூனிகேஷன்ஸ் ரிசர்ச் லேபில் (நியூஜெர்சி) வேலைக்குச் சேர்ந்தார். அரைக்கடத்திகள் (செமி கண்டக்டர்ஸ்) துறையில் ஆய்வு செய்யும் அப்ளைடு மெடீரியல்ஸ் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தபின் நொவெலஸ், மல்டைபீம் சிஸ்டம்ஸ் ஆகியவற்றில் இருந்த பின் கிரிஸ்டல் சோலார் நிறுவனத்தைத் தொடங்கினார்.
சிவா என்று அழைக்கப்படும் விஸ்வேஸ்வரன் சிவராம கிருஷ்ணன் (EVP (Engineering), கிரிஸ்டல் சோலார்) சென்னை IITயில் படித்தார். கிரிஸ்டல் சோலார் நிறுவனர்களில் ஒருவர். இர்வைனிலுள்ள கலிபோர்னியா பல்கலை, அரிசோனா ஸ்டேட் பல்கலை ஆகியவற்றில் படித்தார். பின்னர் அப்ளைடு மெடீரியல்ஸ் நிறுவனத்தில் சுமார் 19 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதுதான் இவரும் ரவியும் இணைந்து கிரிஸ்டல் சோலாரைத் தொடங்கும் எண்ணம் வந்தது. இவர்களோடு இணைந்து கிரிஸ்டல் சோலாரைத் தொடங்கிய மூன்றாமவர் ஆஷிஷ் ஆஸ்தானா. இவரும் IIT பட்டதாரி. ஆனால் அவர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபெறவில்லை.
ரவி, சிவா இவர்களுடன் தென்றலுக்காக நிகழ்த்திய கலந்துரையாடலில் இருந்து சில பகுதிகள்...
பிரபாகர்: நீங்கள் சூரிய சக்தித் துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
##Caption##சிவா: இருவருமே வெகுகாலம் அரைக் கடத்தித் (semi conductor) துறையில் இருந்து வந்தோம். அதில் ஒரு தேக்கம் வருவதை கவனித்தோம். தவிர, சூரிய சக்திக்கும் அரைக்கடத்திக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன - இரண்டுமே கருவிகளுக்கு முக்கியத்துவம் தருவன; இரண்டிலுமே உற்பத்தி விலை, திறன் ஆகியவற்றில் முன்னேற்றம் வரவேண்டியிருந்தது. கட்டமைப்பிலும் உற்பத்திமுறையிலும் கூடப் பல ஒற்றுமைகள் உள்ளன.
ரவி: சூரிய சக்தித் துறை 40 ஆண்டுகளாக இருந்து வருகிறது. நிறைய முன்னேற்றம் கண்டிருக்கிறது. அரைக்கடத்தித் துறைக் கம்பெனிகள் சூரிய சக்தித் துறையிலும் ஏதாவது செய்து வந்திருக்கின்றன. இதில் மிகப் பெரிய பிரச்சனை உற்பத்திச் செலவு தான். செமி கண்டக்டர் துறையில் 18-24 மாதங்களில் புதுத் தொழில் நுணுக்கத்தில் எந்திரம் வந்துவிடும். இருக்கும் எந்திரம் மதிப்பிழந்துவிடும். எனவே, சூரிய சக்தித் துறையில் புதுமையைக் கொண்டுவர, அரைக்கடத்தித் துறையினரே வரட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஓர் அரைக்கடத்தியின் வேகம் இரண்டாண்டுகளில் இரண்டு மடங்காகும் என்ற மூர் விதிப்படி நிறையப் புதுமை வந்து கொண்டிருந்தது. ஆனால் சூரிய சக்தித் துறையில் அது நடக்கவில்லை. அது 60-70களின் தொழில் நுணுக்கத்திலேயே நின்று கொண்டிருந்தது. சிக்கலான எந்திரங்களைப் பெருமளவில் தயாரிப்பவர்களால் இந்த அனுகூலத்தை அரைக்கடத்தித் துறையிலிருந்து சூரிய சக்திக்கும் கொண்டுவர முடியும் என நினைத்தேன். அந்த அடிப்படையில்தான் இந்தத் துறைக்குள் நுழைந்தேன். சிலவற்றை எங்களால் செய்ய முடிந்தது என்பதும் உண்மைதான்.
பிர: சூரிய சக்திதான் உங்கள் துறை என்று தீர்மானித்ததும் முதலில் தோன்றிய எண்ணம் என்ன?
ரவி: 2005-06ல் சூரிய சக்தித் துறையின் வளர்ச்சி விகிதம் 30-40 ஆக இருந்தது. அரைக்கடத்திகளோ 5-6 சதவிகிதத்துக்குச் சென்றுவிட்டது. ஒரு வளரும் துறையில் தானே நாம் இருக்க விரும்புவோம். செமி கண்டக்டர்கள் விற்பனைப் பண்டங்களாகி விட்டன. இன்டெல்கூட பூரித நிலையை அடைந்துவிட்டது. சூரியசக்தியின் வளர்ச்சி விகிதம் குறைந்த போதும் 40லிருந்து 26 சதவிகிதத்துக்குத்தான் வந்திருப்பதாக ஃபினான்சியல் டைம்ஸ் சொல்கிறது. எனக்கும் சிவாவுக்கும் இதனால் இந்தத் துறையில் சில புதுமைகள் செய்ய வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது.
பிர: அப்போது உங்கள் மனதில் ஓடியது 'அரைக்கடத்தித் துறையோடு தொடர்புள்ள ஒரு துறையில் நுழைகிறேன்' என்றா? 'சுத்த சக்தித் துறையில் நுழைய விரும்புகிறேன்' என்றா?
ரவி: சுத்த சக்தி என்பதுதான். என்னிடமிருக்கும் திறமையைக் கொண்டு, இதில் என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்தேன்.
பிர: உங்களை சுத்த சக்தியைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது எது?
ரவி: நான் முதலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கம்பெனியில் அதி விரைவான சில்லுகளை (chips) உருவாக்க உழைத்துக் கொண்டிருந்தேன். அது வெற்றி பெற்றாலும் வீடியோ கேம்களுக்குத்தான் அது பயன்பட்டிருக்கும். அதே நேரத்தில், என் பதினோரு வயது மகன் எப்போதும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் செய்யும் பணி ஒரு நல்லதற்குப் பயன்பட வேண்டும் என்று எண்ணினேன். அல்கோர் எடுத்த 'Inconvenient Truth' என்ற ஆவணப் படத்தை அப்போது பார்த்தேன். நிலைமை எவ்வளவு மோசம் என்பதை அது உணர்த்தியது. சூரிய சக்தித் துறை முன்னேறுவதால் இந்தியாவிலுள்ள ஏழைகள் மட்டுமல்ல, உலகெங்கிலுமுள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்று தோன்றியது.
பிர: சிவா, நீங்கள் சொல்லுங்கள், உங்களுக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
சிவா: என்னுடைய மகள்கள் தொழு உரம், மறுசுழற்சி, சுத்த சக்தி என்று இவற்றில் ஈடுபட்டிருந்தனர். அதனால் எனக்கும் புதுப்பிக்கத் தக்க சக்திகளில் ஆர்வம் ஏற்பட்டது. LED (லைட் எமிட்டிங் டையோடு) துறையில் எனக்கு ஈடுபாடு இருந்தது. அப்ளைடு மெட்டீரியல் நிறுவனமும் சூரிய சக்தியில் பெருமளவில் நுழைந்தது. அங்கே இருக்கும் போதே எனக்கு இந்தச் சுத்த சக்தியில் ஆர்வம் உண்டாயிற்று.
பிரபாகர்: அப்ளைடு மெட்டீரியல் கம்பெனியிலேயே தொடராமல், தனக்கென்று இதற்காக ஒரு புதிய கம்பெனி தொடங்க ஏன் தோன்றியது?
சிவா: அவர்கள் தொழில்நுட்பம் மென்படலம் (thin film) சார்ந்தது. அதன் திறன் குறைவுதான். மிகப் பெரிய பேனல்களைக் (panel) கையாள வேண்டி வரும். அதற்கு மாற்று வேண்டுமென்று நினைத்தோம். விலைகுறைவாக, கையாள எளிதாக.
பிர: சரி, சுத்த சக்தித் துறையில் இறங்க வேறு காரணங்கள் ஏதாவது இருந்தனவா?
ரவி: இந்திய கிராமங்களில் மூன்றிலொரு கிராமத்தில் நேரடி மின்சக்தி இல்லை என்று எங்கோ படித்தேன். அவர்களுக்கு அரசு மானியம் தர வேண்டியதிருக்கிறது. அரசின் உதவியில்லாமலே அவர்களுக்கு சூரிய சக்தி தரமுடியுமா என்று யோசித்தால், மென் படலப் பேனல்களின் அதிக விலை குறுக்கே நிற்கிறது. கிராமத்துக்காரர்கள் வாங்க முடிந்த விலையில் இதைச் செய்ய வேண்டும் என்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன்.
பிர: இந்தியாவுக்குப் போகும்போது இதை கவனித்தீர்களா?
ரவி: 2006ல் சென்னையிலே இருந்து தெற்கே போய்க்கொண்டு இருந்தேன். பல ஊர்களில் மின்சாரம் இல்லை. ரோடெல்லாம் போட்டிருக்காங்க. உள்ளே போனால் மண்ணெண்ணெய் விளக்கில் பையங்க படிச்சுக்கிட்டிருந்தாங்க. 21ஆம் நூற்றாண்டில் நிலைமை இப்படியான்னு யோசிக்க வைத்தது.
பிர: நீங்க 'சுவதேஷ்' படம் பார்த்திருக்கீங்களா?
ரவி: ஆமாம். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்.
பிர: தண்ணியை மேலேயிருந்து கொண்டு வந்து ஒரு விளக்கை எரிய வைக்கும் சீன் ஞாபகம் இருக்கா?
ரவி: ஆமாம், நீர் மின்சார முறையில். நானும் அதுபோலச் செய்ய விரும்பினேன். மொராக் கோவில் ஒரு கிராமத்தில் 1980ல் சூரிய பேனல்களைப் பொருத்தினார்கள். வழக்கமான ஈயத்தகடு-அமில பேட்டரிகளைத்தான் பயன்படுத்தினார்கள். சென்ற 28 ஆண்டுகளாக அவை பிரச்சனையின்றி வேலை செய்து வருகின்றன. அந்த நாட்டின் வறட்சியான, மேகமே மூடாத தட்பவெப்பம் அதற்கு உதவுகிறது. யாராவது ஒருவர் யோசித்துச் செய்தால் பிற நாடுகளிலும் தீர்வு காணலாம்.
சிவா: ஆரோவில் (பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ளது) போயிருக்கிறீர்களா? அங்கே முழுக்க முழுக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலைத் தான் பயன்படுத்துகிறார்கள். அங்கே வெறும் செம்மண்தான். இன்றைக்கு நல்ல பசுமையாக இருக்கிறது. 30 ஆண்டுகளாக வளர்ந்த மரங்கள். எல்லா வீடுகளிலும் சூரிய சக்தி தான் பயன்படுத்துகிறார்கள். இயற்கை உரம் போட்டுச் செடி வளர்க்கிறார்கள். சாப்பிடுவதற்கான அனைத்துப் பயிர்களையும் அவர்களே வளர்க்கிறார்கள்.
பிர: 30 வருஷத்துக்கு முன்னமேயே அவர்கள் இதை யோசித்திருக்கிறார்கள்.
சிவா: ஆமாம். சிறிய கூட்டுக் குடியிருப்பில் இது சாத்தியம். அரவிந்த அன்னை அதைச் செய்திருக்கிறார்கள்.
பிர: சூரிய சக்தித் துறையில் ஏராளமானவர்கள் குதித்திருக்கிறார்கள். சூரிய வெப்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று வினோத் கோஸ்லா வலுவாகச் சொல்லி வருகிறார். ஜெர்மானிய ஒளிமின்கல (Photo voltaic) முறை சரியானதல்ல என்றும், சூரிய வெப்ப முறைதான் பெரிய அளவில் பயன்படும் என்று அவர் கூறி வருகிறார். CIGS [காப்பர் இண்டியம் கேலியம் சயனைட் - (Cu(In,Ga)Se2)] தான் வளையக் கூடியது, எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறுகிறவர்கள் உள்ளனர். இதில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
##Caption## ரவி: கோஸ்லா சொல்வதில் உண்மை இருக்கிறது. ஜெர்மனியில் நான் ஒரு சூரிய பேனலை 2 டாலர், ஒரு வாட் மின்சாரத்துக்கு 5 டாலர் என்று சொன்னாலும் வாங்கிக் கொள்வார்கள். அதற்கு அரசு பணம் கொடுக்கும் என்ற நிச்சயம் இருக்கிறது. அதனால் அங்கே விலை குறைப்புக்கான புதுமை செய்ய அவசியமில்லை. எப்போது சூரியசக்திப் பேனல்களும் தற்போது இருக்கும் நீர்மின் சக்திக்கு இணையான விலையில் ஆற்றல் தர வேண்டும் என்ற போட்டி ஏற்படுகிறதோ அப்போதுதான் புதுமை வரும். கோஸ்லா அதைத்தான் சொல்கிறார்.
எந்தவித மான்யமும் இல்லாமல் சூரிய சக்தித் தொழில்நுட்பம் நீர்மின்சக்திக்கு இணையாக வரவேண்டும் என்பது சரிதான். ஆனால், மிகப் பெரிய அளவில், கிகாவாட் கணக்கில் திட்டங்கள் வகுத்தால்தான் சூரிய சக்தி சரிப்படும். அணு மின்சக்தி போலவே தான் இதுவும். அப்போதுதான் விலை குறையும். ஒளி மின்கலங்கள் விஷயம் வேறு. சிறிய அளவில் செய்தாலும் போதும். அதிகச் செலவு கிடையாது. பிற தொழில்நுட்பங்கள் அப்படியல்ல. அதனால்தான் ஒளிமின்கல முறை பிரபலமாக இருக்கிறது.
நீங்கள் CIGS பற்றிக் குறிப்பிட்டீர்கள். சன் பவர், சான்யோ போன்றவை மிக விலை கூடிய திறன்மிக்க சூரிய மின்கலன்களைத் தயாரிக்கின்றன. மொத்தத்தில் 22 சதவிகிதக் கலன்களை இவை தயாரிக்கின்றன. மறுபக்கம் பார்த்தால் அப்ளைடு மெடீரியல்ஸ் போன்ற மென்படலக் கம்பெனிகள். சோல்யாண்ட்ரா மிக மெல்லிய, வளைகின்ற சிக்ஸ் பிலிமைத் தயாரிக்கிறது. ஒன்று அல்லது இரண்டு மைக்ரோன் கனமே உடைய பிலிம்கள் இவை. ஆனால் இவற்றின் திறன் மிகக் குறைவு, 8 அல்லது 9 சதவிகிதமே. அதனாலென்ன, அதிகப் பரப்பளவில் வைத்தால் போயிற்று என்று நினைக்கலாம். சரி, கூரைமேல் பேனலை வைக்கலாம் என்றால் கூரையின் பரப்பளவுக்குத்தானே வைக்கமுடியும். அதில் உற்பத்தியாகும் சக்தி போதுமானதாக இருக்காது. அதனால் கூரைகளில் ஒற்றைப்படிக சிலிகான் மாட்யூல்களையே (single crystal silicon modules) காண முடிகிறது.
CIGS, கேட்மியம் டெலரைட், சிலிகான் செல்கள் ஆகியவை பெரிய அளவிலான சூரிய சக்திப் பண்ணைக்கே உகந்தவை. வினோத் கோஸ்லாவின் க்ளெய்னர் பெர்க்கின்ஸ் போன்ற நிறுவனங்கள் இவற்றில் பெரும் நிதி முதலிடுவதனாலேயே இவற்றை இவ்வளவு பரவலாகக் காண முடிகிறது.
ஒரு வாட் மின்சக்திக்கு 2.50 டாலர் வரை முதலீடு தேவைப்படும். சிலிகான் தகட்டின் விலை அதிகம் என்பது இதற்குக் காரணம். எங்களது கண்டுபிடிப்பு இந்த முதலீட்டுச் செலவை 95 சதவிகிதம் குறைக்கும்.
பிர: நீங்கள் எப்படி அதைச் செய்கிறீர்கள்?
ரவி: அதுதான் எங்க ஸ்பெஷாலிடி! இப்ப என்ன செய்யறாங்கன்னா, ஒரு பெரிய சிலிகான் பாளத்தை முதலில் படியவைத்து, அதிலிருந்து தகடுகளாகப் பிரிக்கிறார்கள். அதற்கு நிறையச் சக்தி செலவாகும். அப்படிப் பிரிக்கும்போது நிறைய சிலிக்கான் சேதாரமும் (kerf loss) ஆகும். நாங்கள் நேரடியாகத் தகடுகளாகவே சிலிக்கானைப் படிய வைக்கிறோம். இதற்கு எபிடாக்ஸியல் ரியாக்டர் தேவைப்படும். இந்த முறையில் சிலிகானை மற்றொரு சிலிகான்மீதே படிய வைத்து உயர்ரக சிலிக்கான் தகடு செய்யலாம்.
நான் ரவியிடம் விவாதித்தது என்னவென்றால் இந்த எபிடாக்ஸியல் முறையை மிகக் குறைந்த செலவில் செய்ய வழி கண்டு பிடிக்க முடியுமா என்பதுதான். ரவியும் மற்றொருவரும் இதற்கான வழியைக் கண்டு பிடித்தனர். அதுதான் எங்கள் கம்பெனியின் உயிர்நாடி.
பிர: இது சூரிய சக்திப் பிரச்சனை மட்டும் அல்லவே. சிலிகான் தகடு தேவைப்படும் செமை கண்டக்டர் துறைக்கும் இதேதானே பிரச்சனை?
ரவி: இல்லை. காரணம், இன்டெல் தனது சில்லுகளை எல்லாம் ஒரு சிலிக்கான் தகட்டில் பதித்ததும் அதன் மதிப்பு 10000 டாலர் ஆகிவிடும். அதிலிருக்கும் சிலிக்கானின் விலை 20 டாலர்தான். எனவே இது சில்லுத் துறையை பாதிப்பதில்லை.
பிர: ஒரு வாட் மின்சாரம் தயாரிக்கும் செலவில் சிலிக்கான் தகட்டின் விலையையும், ஒரு கணினிச் சில்லின் விலையில் சிலிக்கான் தகட்டின் விலையையும் ஒப்பிட்டால் முன்னது மிக மிக அதிகம், அல்லவா?
ரவி: ஆமாம்.
சிவா: அரைக்கடத்திகளைவிட சூரிய சக்திக்கு 6 மடங்கு அதிகம் சிலிக்கான் தேவைப்படுகிறது. சில்லு உற்பத்தி முறைகள் முன்னேற்றமடைவதால் அவற்றில் பயன்படும் சிலிக்கான் குறைந்துகொண்டே போகிறது. 2005ல் நிலைமையில் ஒரு திருப்பம் வந்தது. மொத்தச் சில்லுத் துறையில் பயன்படும் சிலிக்கானின் அளவை, சூரிய சக்தித் துறையில் பயன்படும் சிலிக்கானின் அளவு தாண்டிவிட்டது. சில்லுத் துறை 300 பில்லியன் டாலர் துறை இன்றைக்கு.
பிர: புரியுது. உங்கள் (கிரிஸ்டல் சோலாரின் புதிய) தொழில்நுட்பம் வேலை செய்யாது என்று யாராவது சொன்னால், உங்கள் பதில் என்ன?
ரவி: 'சூரிய சக்தித் துறை 40 வருடமாக இருக்கிறது. நீங்கள் புதிதாக என்ன செய்துவிடப் போகிறீர்கள்?' என்று யாராவது எங்களைக் கேட்டவண்ணம் தான் உள்ளனர். முதலில், குறைந்த செலவில் சிலிக்கான் படிகங்களைப் புறப்படலத்தில் வளர்ப்பது எப்படி என்று கண்டறிய வேண்டும். இரண்டாவது, செமை கண்டக்டர் துறையில் சென்ற பத்தாண்டுகளில் வந்த புதிய முறையை இங்கே பயன்படுத்தப் போகிறோம். முன்பு இந்த வழி இருக்கவில்லை. சிவாவும் குழுவினரும் இந்தக் கம்பெனிக்கு அந்தப் புதிய அறிவைக் கொண்டுவந்து செய்திருக்கும் வேலை, விலைக் குறைப்பைச் சாத்தியமாக்கப் போகிறது.
பிர: இதில் பிரச்சனைகள் உண்டா?
ரவி: உண்மையாகவே இது சாத்தியமா? நாங்கள் சொல்கிற அளவு செலவு குறையுமா? நாங்கள் செய்து பார்த்த முன்னோட்ட மாதிரிகள் இதைச் சாத்தியம் என்றே காண்பிக்கின்றன. நாம் பேசிக்கொண்டிருக் கும் இதே சமயத்தில் எங்கள் ஆய்வுக் கூடத்தில் ஒரு முன்மாதிரி பரிசோதிக்கப்படுகிறது.
இதில் மற்றொரு விஷயமும் இருக்கிறது. வேறொரு சிலிக்கான்மேல் சிலிக்கானை நாங்கள் படியவைப்பதில்லை. வழக்கமான சிலிக்கான் தகட்டின் மேல் 'அரித்தெடுக்கும்' (etching) முறையில் ஒரு சிலிக்கானின் நொய்ய அடுக்கு (fragile layer) ஒன்றை உண்டாக்குகிறோம். இதுதான் நாங்கள் செய்த புதுமை. நொய்ய அடுக்கில் இருக்கும் சிலிக்கானின் திசைநோக்கம் (orientation) ஒன்றாகவே தாய்ப் படிகத்தைப் போலவே இருக்கும். இந்த நொய்ய சிலிக்கானை உரித்து எடுத்தபின் மீண்டும் படிக வளர்ப்புக்கு அதே சிலிக்கான் தகட்டைப் பயன்படுத்த முடியும். இந்த முறையில் அதிக சிலிக்கானைச் செலவழிக்காமல், அப்படியே வாயுவை சிலிக்கானாகச் சேதாரமில்லாமல் மாற்றமுடிகிறது.
பிர: நான் ஒன்று கேக்கட்டுமா? சிலிக்கான் என்பது மண்தான். மண் விலை குறைவானது. சிலிகான் ஏன் விலை கூடினதாக இருக்கிறது?
ரவி: மண் என்பது சிலிக்கான் டையாக்ஸைடும் சில மாசுகளும் சேர்ந்தது. 'ஆக்ஸிஜன் ஒடுக்கல்' (reduction) முறையில் அதிலிருக்கும் ஆக்ஸிஜனை நீக்க வேண்டும். ஆனால் சிலிக்கான் டையாக்ஸைடு மிக உறுதியான சேர்மம். அதை உடைக்க ஏராளமான ஆற்றல் தேவைப்படும். மிக உயர்ந்த வெப்பநிலையில், பலவகை வாயுக்களினூடே அதைச் செலுத்திச் செய்யப்படுகிறது.
பிர: சரி, நீங்கள் செய்யப்போவதில் புதுமை என்ன என்பதை விளக்கி விட்டீர்கள்...
ரவி: இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். நாங்கள் செய்யப் போவதில் முக்கியமானது எங்கள் சிலிக்கான் உலையை நாங்கள் கட்டமைக்கும் விதம் தான். எங்கள் எதிர்பார்ப்பின்படி உலை இயங்கினால், அதன் காரணமாகவே செலவு மிகவும் குறையும். அப்போது ஒரு வாட் மின்சாரத்துக்கான செலவு சென்ட் கணக்கில்தான் ஆகும்.
பிர: நீங்க தொழில்நுட்பத்துக்குக் காப்புரிமை வாங்கிட்டீங்க. இதனை வணிக ரீதியாக்குவது பற்றிச் சொல்லுங்கள்.
ரவி: முதலில் நாங்கள் தயாரிக்கும் சிலிக்கான் தகடுகளிலிருந்து சூரிய மின்கலத் தொகுப்பைச் செய்து விற்பதாகத்தான் நினைத்தோம். சிலிக்கான், அதிலிருந்து சூரிய மின்கலன், அவற்றைச் சேர்த்து மின்கலத் தொகுப்பு ஆகும். இந்தியாவிலும் பல சிறிய சூரிய மின்கலத் தொகுப்புத் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். தொகுப்புச் செய்வதில் அதிக லாபம் இல்லை, சிலிக்கானில் இருக்கிறது. விரைந்து வருமானம் பார்க்க வேண்டுமென்றால் நாங்கள் சிலிக்கானாகவே விற்க வேண்டும். சிலிக்கானுக்கு கிராக்கி இருக்கிறது. சிலிக்கான் வேல்லியிலுள்ள சில சூரிய மின்கலக் கம்பெனிகள் எங்களிடமிருந்து வாங்க ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். சிலிக்கானாகவே விற்பதானால் ஓராண்டில் லாபம் பார்க்கத் தொடங்கலாம். அதுவே சூரிய மின்கலன் தொகுப்புச் செய்து விற்பதானால் லாபம் என்று கண்ணால் பார்க்க 2010 ஆகிவிடும். இப்போதிருப்பதை விடப் பெரிய தயாரிப்பு வசதிகள் அதற்கு வேண்டும்.
பிர: உங்கள் கம்பெனியில் முதலீடு செய்தவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
ரவி: அதை என்னிடமே விட்டு விட்டார்கள். சந்தை எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் பார்க்க விரும்புகிறார்கள். அன்றாடப் பணிகளில் அவர்கள் தலையிடுவதில்லை.
பிர: சரியான பாதை எது என்பதை உங்களிடமே விட்டுவிட்டாற் போலத் தோன்றுகிறது.
ரவி: ஆமாம். நாங்கள் சந்தையை கவனித்து அவர்களுக்குச் சொல்கிறோம். என்னுடைய இணை-நிறுவனர் ஆஷிஷ் (தலைவர், வர்த்தக வளர்ச்சிப் பிரிவு) அன்றாடம் இதை கவனித்து அறிக்கை தருகிறார்.
பிர: உங்கள் முதலீட்டாரிடமிருந்து இப்போதே உங்களுக்கு எதிர்வினை கிடைக்கிறது, அல்லவா?
ரவி: ஆமாம், அவர்களும் மிக ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இப்போது நாங்கள் செய்திருக்கும் இந்தத் தகடுகள் (ஒரு சிலிக்கான் தகட்டைக் காண்பிக்கிறார்) மிக மெல்லியவை. 50 மைக்ரானுக்கும் குறைவு. இதுவரை யாரும் செய்ததில்லை. இதைப் படிய வைத்து உரித்தெடுக்கிறோம்.
சிவா: இது ஒரு சிலிக்கான் தாளைப் (foil) போல இருக்கிறது. அவ்வளவுதான் தேவை. கனமான சிலிக்கான் தகடானாலும்கூட 30-50 மைக்ரான் மேல்தளம்தான் செயல்படும்.
பிர: இன்னும் கொஞ்சம் பெரிய அளவில், மனித குலத்துக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? இந்தியா, ஆப்ரிக்கா இங்கெல்லாம் நீங்கள் எப்படிப் போய்த் தொடப் போகிறீர்கள்?
ரவி: ஒரு சூரிய மின்கலத் தொகுப்பாவது செய்யணும்னு முதலில் நாங்கள் நினைக்கக் காரணம் இதுதான். விலை அதிகம் என்பதால் சூரிய பேனல்களை இந்தியாவில் மிகக் குறைவாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு செல்போன் கோபுரம் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு டீஸல் ஜெனரேட்டர் பயன்படுத்துகிறார்கள். அங்கே 24/7 மின்னாற்றல் தேவைப்படுகிறது. டீஸல் விலைகூடிய எரிபொருள், சூழலை மாசுபடுத்தவும் செய்கிறது. செல்கோபுரத்தை இயக்கவும், மின்வெட்டுக் காலத்தில் சக்தி தரும் பாட்டரிகளைச் சார்ஜ் செய்யவும் சூரிய பேனல்களைக் ஒரு வாட்டுக்கு 2 டாலர் என்பது போல குறைந்த விலையில் கொடுப்பது ஒரு வாய்ப்பு. இது 3-4 பில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத் துறை. இது ஒரு உதாரணம் மட்டுமே.
பிர: அவர்கள் என்ன சொல்கிறார்கள்.
ரவி: ஆர்வமாக இருக்கிறார்கள். ரிலையன்ஸ் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. விலைக்குறைப்புதான் இதில் முக்கியம். அதற்கு ஒரே வழி, எங்கள் தொழில்நுட்பம் தான். சன் பவர் போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகளுக்கு எங்களுடையதைப் போல மூன்று மடங்கு விலை ஆகிறது. நார்வேக்காரர் ஒருவர் எங்கள் கம்பெனி முதலீட்டாளர். அவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நுண்கடன் தருவதன் மூலம் கிராமங்களில் சூரிய சக்திப் பேனல்களை வைக்க உதவமுடியும் என நம்புகிறார். அவர்கள் இப்போது மண்ணெண்ணெய் பயன்படுத்துகிறார்கள்.
பிர: (பங்களாதேசத்தில் கிராமீன வங்கி வழியே நுண்கடன் கொடுத்துவரும்) முஹமது யூனிஸுடன் தொடர்பு கொண்டிருக்கிறீர்களா?
ரவி: ஆமாம். இந்தியாவிலும் யூனிஸ் போன்றவர்கள் இருக்கிறார்கள். ICICI வங்கி இதில் நாட்டம் கொண்டிருக்கிறது. இதன்மூலம் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன். தங்கள் சக்திக்கான செலவை அவர்கள் ஏற்பதற்கு ஏதாவது ஊக்கம் தேவையல்லவா. அதை வங்கிகள் நடுவிலிருந்து செய்யும். அவர்களுக்கு சூரிய பேனல் வாங்க வங்கி பணம் கடனாகத் தரும், அவர்கள் அந்தக் கடனை அடைக்க வேண்டும். இதையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். கொஞ்சம் நாளாகும்.
பிர: இப்போதெல்லாம் இந்தியாவில் மொட்டை மாடிகளில் டிஷ் ஆண்டென்னாவுக்குப் பக்கத்தில் ஒரு சூரியக் கொதிகலனையும் பார்க்க முடிகிறது.
ரவி: கிராம மக்களுக்கும், சூரிய ஒளி இருந்தால் ரேடியோ, டி.வி. ஆகியவற்றை அதில் இயக்கலாம் என்று புரிய வைக்க வேண்டும். அப்போது அவர்கள் அதற்குப் பணம் செலவழிக்கத் தயாராக இருப்பார்கள்.
பிர: குளிக்கறதைவிட அது அதிக முக்கியம், அல்லவா?
ரவி: ஆமாம். டி.வி. சீரியலை விடமுடியுமா?
பிர: உங்களுக்கு இந்தியாவில் கிளை உள்ளதா?
ரவி: இல்லை. நாங்கள் எங்கள் தொழில் நுட்பத்தை முதலில் செம்மையாக்கிக் கொள்ள விரும்புகிறோம். பிறகுதான் அதை எடுத்துச் செல்லும் வழி.
பிர: ஆனால், தற்போது நிதித்துறை இருக்கும் நிலையில், மக்களிடம் நம்பிக்கை ஊட்டுவது எப்படி? ஒபாமா மாற்று எரிபொருள் துறையில் அரசு முதலீடு குறித்துப் பெரிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். இதில் உங்களுக்குப் பங்கு உண்டா? யாருடனாவது தொடர்பில் இருக்கிறீர்களா?
ரவி: ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். இதைச் செய்யப் பல வழிகள் உள்ளன. முதலில் ஆற்றல் துறைக்கு (Department of Energy) நிதி ஒதுக்கக் கோரி விண்ணப்பிக்கப் போகிறோம். எங்கள் பணி நேரடியாக மின்சாரம், புதுப்பிக்கத் தக்க ஆற்றல் ஆகியவற்றின் விலைகளை பாதிக்கிறது. எனவே நாங்கள் அரசின் முயற்சியில் பங்கேற்க முடியும். கிரிஸ்டல் சோலார் கம்பெனி பெருமளவில் தயாரிப்பைத் தொடங்கும் போது, ஏராளமான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். இந்தக் கம்பெனி அடிப்படையில், விலை குறைவான சூரிய மின்கலத் தயாரிப்புக்கு உதவும் ஒரு புதுப்பிக்கத் தக்க ஆற்றல் கம்பெனி.
நாங்கள் இதற்கான அரசு மானியங்களைப் பெற வேண்டும். அதைவிட முக்கியமாக, வங்கிகளின் உத்தரவாதங்களுடன் பெரிய அளவில் திட்ட முதலீடுகளைப் பெற வேண்டும். அது ஒபாமாவால் முடியும். அதைத் தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக, வெல்ஸ் ஃபார்கோ போன்ற வங்கிகளை 50-100 மில்லியன் டாலர் வரை சூரிய சக்தித் திட்டக் கடன்களுக்கு உத்தரவாதம் தரச் சொல்லியிருக்கிறார்கள்.
பிர:கலிபோர்னியா ஆளுனர் ஆர்னால்ட் ஸ்க்வார்ஜ்னெகர் கூட மாற்று ஆற்றல்களின் ஆதரவாளர்தானே?
ரவி: ஆமாம். ஆனால் அவரது பட்ஜெட் உள்ளூர் முயற்சிகளுக்கானது. உதாரணமாக, சான் ஹோசேவில் ஒரு கம்பெனி தொடங்கினால் அவரிடமிருந்து மான்யம் கிடைக்கும். நாங்கள் விரும்பும் வளர்ச்சிக்கு அது போதுமானதாக இராது.
சிவா: ஐக்கிய அரசுத் திட்டங்களைத் தாம் நாங்கள் எதிர்பார்க்க வேண்டும்.
பிர: '30 சதவிகித ஆற்றல் தேவை புதுப்பிக்கத் தக்க ஆதாரங்களிலிருந்து பெறப்பட வேண்டும்' என்பது போன்ற சட்ட வரைவுகள் உங்களிடம் உள்ளனவா?
ரவி: அது சமீபத்திய தேர்தலில் நிறைவேறவில்லை.
சிவா: டெஸ்லா மோட்டார்ஸ் பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். சான்ஹோசேயில் ஒரு தொழிற்சாலை தொடங்க முயற்சித்தனர். முடியவில்லை.
பிர: ஏன்?
சிவா: கலிபோர்னிய பட்ஜெட் பற்றாக்குறை தான். பெடரல் அரசு போலப் பெரிய நிதி ஆதாரம் தேவைப்படும்.
ரவி: மானியமெல்லாம் சரிதான். ஆனால் நிதிவசதி மிக முக்கியமானது. நான் ஒரு சூரிய பேனல் அல்லது மின்கலத் தொழிற்சாலை தொடங்கினால் நூற்றுக்கணக்கில் அங்கே வேலை வாய்ப்பு உண்டாகும். நான் வென்ச்சர் முதலீட்டாளர்களிடமோ, வங்கிகளிடமோ கடன் வாங்கலாம். இந்தக் கடனுக்கு பெடரல் அரசின் உத்தரவாதம் இருக்குமானால் கடன் வாங்குவது எளிதாகும். அதைத்தான் ஒபாமா நிர்வாகம் செய்யப் போகிறது. அவை அவர் கூறும் 'பசுமைப் பணி'களாகவும் இருக்கும். சிலிக்கான் வேல்லிதான் புதுமைகள் செய்வதற்கான இடம். ஐரோப்பிய முதலீட்டாளர்கள் என் போன்றவர்களைத் தேடிவரக் காரணமே, இதைச் செய்யச் சிறந்த திறமை இங்கே இருக்கிறது என்பதனால்தான்.
பிர: கேஸ் ஒரு காலன் 5 டாலர் விற்றது போய் இப்போது 2 டாலர் விற்கிறது. சூரிய சக்தித் துறையில் இதன் தாக்கம் என்ன?
ரவி: இதன் தாக்கம் ஒரு 'மன உணர்வு' தான். '60 மினிட்ஸ்' நிகழ்ச்சியில் ஒபாமாவை இதே கேள்வி கேட்டார். அவருடைய பதில் அற்புதமாக இருந்தது. 'ஒரே பீதி நிலையில் இருந்து மோன நிலைக்குப் போய்விடுகிறோம்' என்றார் அவர். 70களில் எண்ணெய்த் தட்டுப்பாடு வந்தபோது அப்போதைய அதிபர் ஜிம்மி கார்டர் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் நிறைய முதலீட்டைச் செய்தார். வெள்ளை மாளிகையில் சூரிய சக்திப் பேனல்களை நிறுவினார். எண்ணெய் விலை இறங்கியதும் அவையெல்லாம் மறந்து போனது. அப்படி ஆக விடமாட்டேன் என்கிறார் ஒபாமா.
அதைவிடப் பெரிய பிரச்சனை 'புவிச் சூடேற்றம்'. இதற்கு கேசலீன் பெரிதும் காரணமாக இருக்கிறது. தட்பவெப்ப மாற்றத்துக்கு ஒபாமா முக்கியத்துவம் தருகிறார். நீடித்த ஆற்றல் பாதுகாப்புணர்வும் அவசியம். இந்தக் காரணங்களால், கேஸ் விலை குறைவு யாரையும் இந்த முறை யாரையும் ஏமாற்றாது.
சரி, இப்போது இது எப்படி சூரியப் பேனல்களை பாதிக்கும் என்று பார்க்கலாம். எண்ணெய் விலைக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. சூரியப் பேனல்களைப் பொருத்தி நாம் கார் ஓட்டவில்லை. மின்சாரம் தயாரிக்க மட்டுமே இவற்றைப் பயன்படுத்துகிறோம். PG&E-யின் விலைக்கே நாம் சூரிய மின்சாரத்தைக் கொண்டுவர முடிந்தால் நாம் யாருடனும் போட்டியிடலாம். அதற்குத்தான் புதிய உத்திகள் தேவை. அந்தப் புதிய உத்திகளைக் கண்டடையும் முயற்சிகளை அரசு ஆதரிக்க வேண்டும். அதுதான் சிலிக்கான் வேல்லியில் நடக்கிறது.
சிவா: சிலிக்கான் வேல்லியில் 8% வேலையின்மை உள்ளது. அதைத் தவிர்க்க அரசு ஆய்வு முயற்சிகளுக்கு நிதியுதவ வேண்டும். செமி கண்டக்டரிலிருந்து சூரிய சக்தித் துறைக்குப் பலர் மாறிவிட்டனர். இல்லாவிட்டால் வேலையின்மை இன்னும் அதிகமாக இருக்கும்.
பிர: சைப்ரஸ் செமை கண்டக்டர்ஸ் சூரிய சக்தித் துறையில் பெரிய பெயர். அதன் CEOவின் வாதம் என்னவென்றால், தொழில்துறை என்ன செய்ய வேண்டும் என்ற கொள்கை விஷயத்தில் அரசு தலையிடக் கூடாது என்பது. இதனால் அரசுக்கும் இந்தத் தொழில்துறைக்கும் இடையே உரசல் ஏற்படுமா?
ரவி: உண்டாகத்தான் செய்யும். சன் பவர், ஃபர்ஸ்ட் சோலார் போன்றவர்களின் லாபியிங் கூட அதிகமாகும். அதனாலென்ன, கஜானா ஆழமாக இருக்கிறது. எல்லோரும் பங்கு பெறலாம்.
சிவா: மொத்தத்தில், பெடரல் அரசின் ஆதரவு நமக்கு அவசியம். புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறை நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். சிலிக்கான் வேல்லி தன்னைத் தானே மீள்காணும். அதிகப் பயிற்சி தராமலே, அதே திறமைகளை நேரடியாக இந்தத் தொழில்துறையில் பயன்படுத்த முடியும்.
பிர: ஏற்கனவே இருக்கும் திறமைகளை சூரிய சக்தித் துறை பயன்படுத்திக் கொள்வதால் அதற்கானதை அரசு செய்வது நல்லதென்று நீங்கள் சொல்கிறீர்களா?
சிவா: ஆமாம். அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் ஆய்வுத் திறனை அது உலகில் முன்னணியில் நிறுத்துகிறது. சிலிக்கான் வேல்லிக்கு, உற்பத்தி செய்வதைவிட, புதிதாய்க் கண்டுபிடிப்பது இயல்பானது.
CK: இது தொடர்பாக இந்திய அரசின் கொள்கை என்ன என்பதையும் கவனித்து வருகிறீர்களா?
ரவி: லேசா, ரொம்ப இல்லை. 2012 வாக்கில் இத்தனை சதவிகிதம் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் வரவேண்டும் என்று மன்மோஹன் சிங் கூறியதை கவனித்தேன். ஆனால் அதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்பது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொருத்த வரையில் ரிலையன்ஸ் போல ஒரு தனியார் கம்பெனி அடியெடுத்து வைத்தால் அரசும் உடன் நடக்கும்.
சிவா: வீட்டு மாடிகளில் சூரியப் பேனல் வைக்க ஏராளமான இடம் இருக்கிறது. அந்த மின்சாரமும் சேர்ந்தால் போதுமானதாக இருக்கும். அமெரிக்காவோடு ஒப்பிட்டால் இந்தியர்கள் பயன்படுத்தும் மின்சாரம் மிகக் குறைவானதுதான். டெல்லியில் இது நடக்கிறது. ஆனால் அது அரசின் வற்புறுத்தலால் நடக்கிறதா என்று தெரியவில்லை.
ரவி: சென்ற ஐந்தாறு வருடங்களில் இந்தத் தொழில்நுணுக்கத்தை முன்னகர்த்த ஏதும் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.
CK: சூரிய சக்தித் துறை பேட்டரித் தொழில்நுணுக்கம்/துறையுடன் தொடர்பில் உள்ளதா?
ரவி: இல்லை. அதுவும் ஒரு பிரச்சனைதான். அந்தத் துறையிலும் புதுமை அதிகம் வரவில்லை. பேட்டரி, சூரிய சக்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து வீடுகளில் கொண்டுவர சில கம்பெனிகள் முயற்சிக்கின்றன. ஆனால் அதுவும் விலை கூடுதலாக இருக்கிறது. இன்னும் பேட்டரித் துறை முன்னேற வேண்டும்.
பிர: ஆனால் கார் பேட்டரியில் நல்ல முன்னேற்றங்கள் நடந்துகொண்டு இருக்கின்றனவே. அது இங்கேயும் வரும், இல்லையா?
ரவி: ஆமாம்.
பிர: ஏதாவது பேட்டரிக் கம்பெனியுடன் கைகோர்க்க முயற்சி எடுக்கிறீர்களா?
ரவி: அதிகார பூர்வமாக அல்லாமல் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இப்போதைக்கு எங்கள் தொழில்நுணுக்கத்திலும் வணிக முறையிலும்தான் கவனம் செலுத்தி வருகிறோம்.
CK: ஊர்ப்புறத்துக்கு உங்கள் புதிய தொழில்நுணுக்கம் போய்ச் சேர வேண்டுமென்றால்...
ரவி: ...பேட்டரி மிகவும் முக்கியம்.
பிர: அதனால் பேட்டரி கம்பெனிகளுடன் சேர்ந்து இயங்குவது பற்றிக் கேட்டேன்.
ரவி: தொடக்க நிலையில் வழக்கமான ஈயத்தகடு/அமில பேட்டரிகளே போதுமானவை. ராஜஸ்தானில் நடப்பது போல, ஒரு பெரிய தொகுப்பு பேட்டரிகள் இருந்தால் 20 ஆண்டுக் காலம் ஒரு கிராமத்தின் தேவைகளைச் சமாளித்துவிடலாம். அவை இரும்புக் கொள்கலத்தில் வருவதால் சில சுற்றுச் சூழல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால், ஆரம்ப நிலையில் அதுதான் விலைகுறைவான வழி.
பிர: லிதியம் அயான் பேட்டரிகளை எடைகுறைவாகச் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றனவே...
ரவி: ஆமாம், ஆனால் அவற்றின் விலை அதிகம். வழக்கமான பேட்டரிகளைப் போல 5-10 மடங்கு விலை.
பிர: கருத்தளவில் மட்டுமல்லாமல், செயலளவிலும் சிந்திக்க வேண்டியதிருக்கிறது அல்லவா? அதைத்தானே சி.கே. பிரஹலாத் கூறுகிறார், 'பிரமிடின் கீழ்ப்பகுதி மனப்பான்மை' என்று?
ரவி, சிவா: (இருவருமே) ஆமாம். ஆனால் எங்கள் பகுதியை நாங்கள் சரியாகச் செய்துவிடுவோம்.
CK: ஒரு சூரியத் தொழில்நுணுக்கக் கம்பெனி CEO என்ற முறையில் சூரிய மின் சக்திப் பரவல் உங்கள் கவனத்தை ஈர்க்கிறதா?
ரவி: அப்படியல்ல. நாங்கள் வடிவமைத்துள்ள தொழில்முறை வெற்றி பெற்றால், வருமானத்துக்குக் குறைவிருக்காது. ஆனால், அதற்கு அப்பால் நான் யோசிக்கிறேன். கிராமங்களுக்கு அதிகச் செலவில்லாமல் இதைக் கொண்டுபோவது எப்படி? சூரியப் பேனல் விலை எங்களால் குறைந்துவிடும். ஆனால் லிதியம் அயான் பேட்டரியின் விலை குறைவதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது. அது குறையாது.
சிவா: கார் உற்பத்தித் துறை அதன் விலையைக் குறைக்கக் காரணமாக அமையலாம், அடுத்த பத்து ஆண்டுகளில்.
பிர: அதற்கு முன்னர், இன்று இருப்பதை வைத்து எப்படி மேலே செல்வது என்று யோசிக்க வேண்டும் என்கிறீர்கள்?
ரவி: இந்திய அரசாங்கத்தின் தொலைபேசித் துறை போன் இணைப்புத் தரத் தாமதம் செய்தது. கிராமத்து மக்கள் அதற்காகக் காத்திருக்காமல் செல்போன்களை வாங்கிக் கொண்டனர், அல்லவா? அதைப்போல, அரசாங்கத்தால் கிராமங்களுக்கு மின் இணைப்புத் தர முடியாவிட்டால், கிராமங்களே நுண்கடன் வசதி பெற்று, சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். அதற்குச் சரியான இடம் இந்தியாதான்.
பிர: செல்போனுக்காவது அருகில் ஒரு செல் கோபுரம் வேண்டும். இதற்கு அவ்வளவு கூடத் தேவையில்லை. தனது வயலில் ஒரு சூரிய மின்கலனை வைத்துக் கொண்டு ஒரு விவசாயி அதைத் தண்ணீர் பாய்ச்சப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
CK: அதற்கு பேட்டரி தேவைப்படுமே...
ரவி: ஆமாம்.
பிர: சரி, இன்றிலிருந்து 5 ஆண்டுகளில், 10 ஆண்டுகளில் கிரிஸ்டல் சோலார் எங்கே இருக்கும் என்று மனக் கண்ணில் பார்க்கிறீர்கள்?
ரவி: 5 ஆண்டுகளில் பல மில்லியன் டாலர் கம்பெனியாகவும், 10 ஆண்டுகளில் ஒன்று ஒன்றரை பில்லியன் டாலர் கம்பெனியாகவும் இருக்கும். சூரிய மின்கலம் செய்யும் முன்னோடி நிறுவனங்களின் வரிசையில் இருக்கும்.
பிர: சூரிய மின்கலம் என்று சொன்னாற்போல இருந்ததே?
ரவி: ஆமாம், எங்கள் லட்சியம் அதுதான்.
பிர: சரி, உலகத்துக்கு என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
ரவி: இந்திய கிராமங்களின் பெரும்பகுதியில் கிரிஸ்டல் சோலாரின் சூரியப் பேனல்கள் மின்சாரம் தர வேண்டும் என்பது என் ஆவல்.
பிர: அதை எங்கேயிருந்து தொடங்குவீர்கள்?
ரவி: அடுத்த ஆண்டின் நடுவில் அதற்கான எங்கள் முயற்சி தொடங்கும். அப்போது எங்கள் அடிப்படைத் தொழில்நுட்பத்தால் செய்த சூரிய மின்கலங்கள் தயாராகி இருக்கும். அப்போது நுண்கடன் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவோம். ஹைதராபாதில் சூரிய பேனல் தொழிற்சாலை தொடங்குவதற்காக நான் ஒருவருடன் பேசி வருகிறேன்.
பிர: பிற இந்தியத் தொழில்முனைவோருடன் சேர்ந்து சூரிய மின்கலத் தொழிற்சாலைகள் தொடங்குவீர்களா?
ரவி: ஆரம்பத்தில் செய்வோம். சிலர் பேசுகிறார்கள், ஆனால் எதுவும் செய்வதில்லை. யாருடன் இணைவது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது.
CK: ஒரு CEO என்ற முறையில், இன்றைய உலகப் பணிச் சூழலில், IIT பட்டதாரிகளைப் பணியமர்த்தத் தயங்குவேன் என்று கூறியிருந்தீர்களே?
ரவி: அவர்களை நன்றாகத் தெரிந்தாலொழிய இயலாது. ஒரு பரந்த சிந்தனைக் களத்தில் அதைக் கூறினேன். IITயிலிருந்து வருபவர்களுக்கு ஓர் ஆரோக்கியமான அகம்பாவம் இருக்கிறது. அவரைத் தெரிந்திருக்க வேண்டும், அல்லது அவரோடு நான் பணி புரிந்திருக்க வேண்டும். நாங்கள் சேர்ந்து இயங்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்க வேண்டும். நான் எப்போதும் அவரது அகம்பாவத்தை வருடிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலை யில் செயல்படுவது கடினம். ஆஷிஷ் IIT கான்பூர் மாணவர்தான். நானும் சிவாவும் படித்த அதே வருடத்தில் படித்தவர். ஒத்திசைவு இருக்குமானால், வெகு நல்லது. இல்லாதபட்சத்தில் அதற்கென்று தனியாக முயற்சி எடுக்க வேண்டி வரும். எனது நண்பர்களிடமிருந்தும் இதைக் கேட்டிருக்கிறேன். IIT என்றாலே ஏதோ பெரிய விஷயம் என்றில்லை. CEO ஆவது பெரிதல்ல, அதை வைத்துக்கொண்டு என்ன செய்கிறாய் என்பது முக்கியம்.
பிர: உங்கள் தந்தையாரின் எதிர்பார்ப்பைப் பற்றி ஒரு முறை கூறினீர்கள்...
ரவி: ஆமாம். IIT முடித்ததும் நான் இந்தியாவிலேயே இருந்து சேவை செய்ய வேண்டும் என்பது அவரது கருத்து. இப்படி ஏதோ வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. 'பணம் சம்பாதிப்பதே ஒரு லட்சியமாக இருக்கக் கூடாது; பணம் வந்தால் சரி, ஆனால் பயணம் மிக முக்கியம்' என்று அவர் கூறுவதுண்டு. அவர் 1987ல் மறைந்தார்.
பிர: அவரது எண்ணம் சிலர் விஷயத்தில் வேறுவகையிலும் நிறைவேறியதுண்டே. அவர்கள் இங்கே வந்து பணம் சம்பாதிக்கிறார்கள். பின்னர் அதை இந்தியாவில் சேவைக்குப் பயன்படுத்துகிறார்கள்.
சிவா: 10 ஆண்டுகள் முன் வரை நான்கூட அப்படித்தான் நினைத்தேன். இந்தியாவுக்கு ஒன்றும் செய்யவில்லையே என்ற குற்றவுணர்வு இருந்தது. நமது பலங்களால் நாம் சம்பாதிப்பது, இந்தியாவுக்குப் பயன்படுகிறது என்பதை இப்போது உணர்கிறேன்.
பிர: அதுமட்டுமல்ல, உங்கள் முயற்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுபோக முடியும், அவர்களிடம் பேசி ஊக்குவிக்க முடியும்.
ரவி: ஆமாம். எனது முயற்சியின் சிறு பகுதியேனும் இந்தியக் கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டு வந்தால் என் தந்தை மிகவும் சந்தோஷப்படுவார்.
பிர: கிரிஸ்டல் சோலாரின் பேனல்களை உங்கள் வீட்டுக் கூரையின் எந்தப் பகுதியில் போடப் போகிறீர்கள்.
ரவி: தயாரான உடனே, என் ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் எல்லோர் வீட்டின் மேலும் பொருத்துவதற்கு இலவசமாகத் தரப் போகிறேன்.
பிர: எங்களுக்கும் தென்றல் வாசகர்களுக்கும் தள்ளுபடி விலையில் தருவீர்களா?
ரவி: நிச்சயமாக.
சிவா: தென்றலை அச்சடிக்கும் அச்சகத்துக்கும் உண்டு.
பிர: இந்த முயற்சியைப்பற்றி உங்கள் குடும்பத்தில் என்ன நினைக்கிறார்கள்?
சிவா: என் குடும்பத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சிதான்.
ரவி: என் குழந்தைகள் இன்னும் இவற்றை கவனிக்கவில்லை.
பிர: நான் கவனித்த வரையில் சிலிக்கான் வேல்லி தொழில்முனைவோர் என்ன செய்கிறார்கள் என்பதைக் குடும்பத்தினர் புரிந்துகொள்வது கடினம். அவர்கள் செய்வது அன்றாட வாழ்க்கைத் தேவைக்கானதாக இருக்காது என்பதே அதற்குக் காரணம்.
சிவா: நான் அப்ளைடு மெடீரியல்ஸ் கம்பெனியில் என்ன செய்தேன் என்பதை அவர்கள் 18 ஆண்டுகளாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
CK: பசுமைத் தொழில்நுட்பத் துறையில் நுழைய விரும்புகிறவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
ரவி: முன்தயாரிப்பு மிகவும் அவசியம். எதுவுமே எளிதல்ல. ஒவ்வொன்றிலும் சிக்கல்கள் உண்டு. முதலில் இதில் நுழைந்த போது, இது சுலபம், அரைக்கடத்திகள்தான் கஷ்டம்னு நினைத்தேன். இதற்கேயான சிக்கல்கள் உண்டு. உள்ளே போனால்தான் அது தெரியும். வெளியே நாலு பேர்கிட்ட பேசும்போதுதான் உண்மையாகவே நாம் செய்வது புதுமையானதுதானா என்பது தெரியவரும்.
முதலில் இதற்கு வந்ததும் எப்போதும் மடிக்கணினியில் (laptop) குடைந்து கொண்டே இருப்பேன். ஏராளமாக இதைப்பற்றிப் படித்தேன். 'இவர் எப்போதும் மாடியிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே' என்று என் மனைவி நினைத்தாள். வார இறுதியில் கூட ஆய்வு செய்தபடியே இருப்பேன். நாம் தயார்நிலையில் இருந்தால் தான் நம் முயற்சியில் முதலீடு செய்யும்படி வேறொருவரிடம் பேச முடியும்.
பிர: 1% உள்ளூக்கம் 99% உழைப்பினால் உருப்பெற வேண்டுமே...
ரவி: ஆமாம். அதேதான். சரியான கருத்துரு ஆன பின்னரே உழைப்பு தொடங்குகிறது.
உரையாடல்: பிரபாகர் சுந்தரராஜன், சி.கே. வெங்கட்ராமன் தமிழாக்கம்: மதுரபாரதி |