கோவினா ஐக்கிய இந்து ஆலயத்தில் முருகன் திருக்கல்யாணம்
நவம்பர் 2, 2008 அன்று கலிபோர்னியாவின் கோவினா நகரில் அமைந்துள்ள ஐக்கிய இந்து ஆலயத்தில் சூரசம்கார பூஜையும் முருகன் திருக்கல்யாண பூஜையும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன். இக் கந்த சஷ்டிச் சிறப்பு பூஜையில் தென் கலிபோர்னியா அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். சூரசம்கார பூஜையின் சிறப்பம்சம், காவடிப் பாடல்களுக்குத் துடிப்பான ஆட்டத்துடன் சிறுவர் சிறுமியர் காவடி சுமந்து ஊர்வலமாய் வீதிவலம் வந்தமையாகும். காவடி ஊர்வலத்தின் பின்னே கன்னியர், தாய்மார், பக்தர்கள் பால் செம்பு சுமந்து முருகன் துதி பாடி சஷ்டிவிரத அநுஷ்டானங்களைப் பூர்த்தி செய்தனர்.

அன்றைய தினத்தில் ஐக்கிய இந்து ஆலயம், சிறார்களுக்கு கலை, கல்வி, மொழி வளர்ச்சியை மேம்படுத்தும் நன்நோக்கில் மிருதங்கம், தபேலா, சித்தார், சுலோகம், தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகியவற்றுக்கான வகுப்புக்களையும், பெரியவர்களின் உளநல, ஆன்மீக வளர்ச்சிக்காக யோகம், தியான வகுப்புக்களையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குழுவாரியான வகுப்புக்கள் அன்பர்களின் தேவைகளுக்கேற்ப வார நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.

மேலும் தகவலுக்குத் தொடர்புகொள்க:ந. மகேந்திரராஜா: Noelrajah@aol.com - 323.327.8903

இணையதளம்: www.unitedhindutemple.org

பிரதீபன்

© TamilOnline.com