நவம்பர் 2, 2008 அன்று பாரதி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளித்திருநாள் கொண்டாட்டம் சன்னிவேல் ஹிந்துக் கோவில் கலையரங்கத்தில் நடந்தேறியது. சங்கத் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்புரையில் தீபாவளித் திருநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் கலாசார அடையாள நாள் என்பதைக் குறிப்பிட்டு, இத்திருவிழா அமெரிக்க காங்கிரஸாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஃப்ரீமாண்ட் நகரவை உறுப்பினர் அனு நடராஜன் அவர்கள் தலைமை ஏற்றுச் சிறப்புரையாற்றினார். பாரதி தமிழ்ச் சங்கத்தின் கலைப்பணியைப் பாராட்டிப் பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடங்கி விடாமல் அமெரிக்க சமூக அரசியல் தளங்களில் அமெரிக்காவாழ் தமிழ்ச் சமூகம் தன்னம்பிக்கையோடு வெளிவந்து பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டது, பாரதி தமிழ்ச்சங்கத்தின் விருதுவாக்கான 'வையத் தலைமைகொள்' என்ற பாரதியின் கூற்றை அடிக்கோடிடுவதாக அமைந்தது.
விநாயகர் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பாரதியார் பாடல்கள், கர்நாடக இசைப் பாடல், மிருதங்க பக்க வாத்தியத்துடன் கூடிய பாடல், பரதநாட்டியம், குச்சிபுடி என்று அடுத்தடுத்து வந்த நிகழ்ச்சிகள் வளரும் தலைமுறையின் கலையார்வத்தைப் பறை சாற்றின. சிறு குழந்தைகளின் குறத்தி நடனம், புல்லாங்குழல் இசை, கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு, திரையிசை நடனங்கள் ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகளால் அரங்கமே களைகட்டியது. தீபா மஹாதேவன் அவர்கள் இயக்கத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. சுகி அவர்கள் இயக்கிய 'கைலாயத்தில் அவ்வையார்' நாடகம் அருமையான உடை மற்றும் மேடை அலங்காரங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அடுத்தவாரம் அமெரிக்கத் தேர்தல் என்ற நிலையில், மெக்கெய்ன் ஒபாமா தொலைக்காட்சி விவாதங்களை வைத்து கோமதி அவர்களது இயக்கத்தில் உருவான 'தேர்தல் சரவெடிகள்' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி அரங்கத்தில் சிரிப்பலைகளை உண்டாக்கியது. கட்டபொம்மன் வசனங்களைச் சிறு குழந்தைகள் உணர்ச்சிகரமாகப் பேசி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் கைதட்டல்களை அள்ளியது. நிகழ்ச்சியின் முடிவில் சுகந்தா ஐயரின் இயக்கத்தில் உருவான பரதநாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது. 'தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற பாரதியின் பாடலுக்கு சஹானா கிருபாகரனின் அருமையான நடனம் சபையோரைக் கட்டிப்போட்டது. பிரமிளா நடராசனின் இயக்கத்தில் உருவான 'ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்' என்ற புதுமையான நிகழ்ச்சியில் இரு அணிகள் கர்நாடக மற்றும் திரையிசைப் பாடல்களை எடுத்துக்கொண்டு அவற்றின் ராகத் தொடர்பினைப் பாடிக்காட்டினர். ஆறுமுகம் மிகச்சிறப்பாக நிகழ்ச்சிகளை ஒளிப்படம் பிடிக்க, ஸ்ரீகாந்த், கிருத்திகா ஆகியோர் நிகழ்ச்சிகளைச் சுவையாகத் தொகுத்து வழங்கினர்.
பின்னர் அருண் விஸ்வநாதனின் ஒருங்கிணைப்பில் நடந்த வளைகுடாப்பகுதியின் பிரபல இசைக்குழுவான 'சஹானா' குழுவின் இன்னிசைக் கச்சேரி பெரும் வரவேற்பைப் பெற்றது. 'மன்றம் வந்த தென்றலுக்கு', 'சங்கீத மேகம்', 'எங்கேயும் எப்போதும் சங்கீதம்', 'வான் மேகம் பூப்பூவாய்' போன்ற என்றும் இனிய பாடல்களிலிருந்து இன்றைய ஹிட் பாடலான 'நாக்கு மூக்கா' வரை பல பாடல்களைப் பாடி கைதட்டல்களை அள்ளிச் சென்றது சஹானா இசைக்குழு. அருண் விஸ்வநாதனின் பல்குரல் வித்தகம் பெரும் வரவேற்பைப்பெற்றது.
நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பாரதி தமிழ்ச்சங்க முத்திரை பொறித்த பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்ச்சியின் இடையிடையே குலுக்கல் முறையில் வந்திருந்தோர் பலருக்கும் பலவிதப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட, ஏறக்குறைய ஐந்நூறு பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி விமரிசையாக நடந்து முடிந்தது.
சுந்தரேஷ் |