தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு
அ.தி.மு.க பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்ற கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் தீர்ப்பில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் வன்முறையிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பிப்ரவரி 2, 2000 அன்று அதே நாளில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேரும் மாணவிகள் 50 பேரும் இரண்டு பேருந்துகளில் கல்விச் சுற்றுலா சென்றனர். இறுதியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு வந்தனர். அன்று சுற்றுலாவின் இறுதி நாளானதால் மாணவ, மாணவிகள் முதலில் ஏற்காடு செல்லத் திட்டமிட்டனர். மலைப்பாதையில் பஸ் செல்வது கடினம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு மாறினார்கள். மாணவிகளின் பேருந்து தர்மபுரியை அடுத்த இலக்கியப்பட்டியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அ.தி.மு.க.வினரால் நிறுத்தப்பட்டது.

கண்மூடிக் கண்திறக்கும் நேரத்துக்குள் அ.தி.மு.க.வினர் மாணவிகள் வந்திருந்த பேருந்துக்குத் தீவைத்தனர். பேருந்தில் இருந்த மாணவிகள் இறங்குவதற்குள் பேருந்துக்குள் வைத்த தீ மளமளவென்று பற்றிக் கொண்டனர். அத்தீயில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்னும் மூன்று மாணவிகள் கருகிப் போயினர்.

28 அ.தி.மு.க.வினர் இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால், வழக்கு தருமபுரியிலிருந்து கிருஷ்ணகிரி செசன்சு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, நவம்பர், 2000த்தில் வழக்கு விசாரணை தொடங்கியது.

விபத்தில் பலியான கோகிலவாணியின் தந்தை இந்த வழக்கைக் கோவை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கைச் சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.

சுமார் 7 வருட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான 3 அ.தி.மு.க.வினருக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்ட¨னை வழங்கப்பட்டது. மேலும் 25 பேருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கினார்.

'இவ்வழக்கில் நீதி கிடைத்தது மனநிறைவு அளிக்கிறது.. இனி யாருக்கும் இத்தகைய கொடுமை நிகழக்கூடாது' என்று இத்தீர்ப்பு குறித்து பலியான மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com