நவம்பர் 22, 2008 அன்று சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழாவை அரோரா பாலாஜி கோவில் அரங்கத்தில் சிறப்புற நடத்தியது. 125க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் படைத்த பல்சுவை நிகழ்ச்சிகள் அருமையாக அமைந்திருந்தன. கர்னி மற்றும் ஷாம்பர்க் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். பிறகு காயத்ரி ஷ்யாமின் மூன்று வயதுக் குழந்தை 'முதாகராத்த மோதகம்' என்று மழலையில் யானைமுகக் கடவுளை அழைத்தது. ஆகாஷ் பழனி, ரவி ரங்கநாதன், வருண்குமார், யுகன் சக்தி ஆகிய எட்டுவயதுக்குட்பட்ட சிறுவர்கள் ப்யூஷன் நடனம் ஆடினர்.
பிறகு ஹிதா உதய், வீணா சுந்தர், பிருந்தா நரேஷ், காயத்ரி நரேஷ் ஆகியோர் திரைப்பாடலுக்குத் திறம்பட ஆடினர். இரண்டு, மூன்று வயதுக் குழந்தைகள் விக்ரம் பழனி, ஷ்ரேயா, அனன்யா, அஷ்விதா ஆடை அணிவகுப்பு ஒன்றை வந்தேமாதரம் பாடலுடன் அழகாக வழங்கினர். 'ஷாலலா' பாடலுக்கு மழலைப் பட்டாளங்கள் ஆர்த்தி, விஷ்ணுப்ரியா, கோகுல், ராகவ், யாசஸ்வினி, பார்வதி, லட்சுமி, லஜ்வந்தி, கணேஷ், ஆதி, ஸ்னேகா, ப்ரியா அழகாக ஆடினர். பழைய அலிபாபா படத்தின் 'சலாம்பாபு' பாடலுக்கு, ஷாலு, மகிமா, லட்சுமி, சுருதி, மதுமிதா, காயத்ரி ஆகியோர் திறம்பட ஆடினர்.
கர்னி தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சுமார் 15 பேரும், ஆசிரியர்களும் வழங்கிய 'தமிழா நீ பேசுவது தமிழா?' என்ற பல்சுவை நிகழ்ச்சி அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. இந்நிகழ்ச்சியை கர்னியைச் சேர்ந்த அருளொலியும், சுரேசும் அற்புதமாக அமைத்துத் தொகுத்து வழங்கினர். 'நிலா காய்கிறது' பாடலுக்கு நிருஷா, அனிகா, ஸ்வேதா அபிநயம் பிடித்தனர். 'வருவானே கண்ணன்' என்று திவ்யா சிவராசாவும், அருண் சிவராசாவும் மீராவாகவும், கண்ணனாகவும் மாறி ரசிகர்களை கோகுலத்துக்கு அழைத்துச் சென்றனர். பிறகு சுஷ்மிதா அருண்குமாரின் மாணவியர் சிந்தூரா, ரெஜினா, க்ரிஸ்டல், சுப்ரமண்ய கவுத்தவத்திற்கு அழகாக அபிநயித்தனர்.
ஐந்து வயதுக்குட்பட்ட சூர்யா ரவி, விஸ்வா ராஜேஷ்,சிவம் ஆகியோர், 'நாக்க முக்க' பாடலுக்கு அதிரடி ஆட்டம் ஆடினர். மீனு பசுபதியின் அக்ஷயா மியூசிக் அகடமி மாணவர்கள் சுமார் 35 பேர் படைத்த இசையுடன் கூடிய திருக்குறள், பாரதியார் பாடல்கள், வில்லுப்பாட்டு ஆகியவை சுவையாகவும், சுகமாகவும் இருந்தன. ஆல்தோட்டபூபதி பாடலுக்கு ப்ராணிகா, ஷாமா, சாகித்யா, கெளரிசங்கர் ஆகியோரின் நடனம் நன்றாக இருந்தது. கரயோக்கி முறையில் திவ்யா ஆனந்தன் 'முகுந்தா, முகுந்தா' பாடலைப் பாட, மூன்று வயது முதல், எட்டு வயதுச் சிறார்கள் தீபா, மணிஷா, ரிதிகா, நிகிதா, வினுதா, மாயா, ஷ்ரேயா, யவனா, சஹானா, ஷ்ரியா, மாதவ் ஆகியோர், தசாவதாரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் பொருத்தமான இடங்களில் அபிநயித்தது அழகு. 'அலைபாயுதே கண்ணா' என்று நந்தினி, நிகிதா, உமா வழங்கிய நாட்டியம் அமுதம்.
வனிதா வீரவல்லியின் மாணவியர் அன்விதா, அஞ்சனி, ஜனனி, அம்ரிதா, நேகா, சாத்விகா, நடேச கவுத்துவத்திற்கு திறம்பட ஆடினர். ஹேமா ராஜகோபாலன் மாணவியர் அனு, ரோகிணி, ரேவதி, பூர்ணா ஆகியோர் அருமையாக வழங்கிய பரத நாட்டியத் தில்லானாவுடன், குழந்தைகள் விழா இனிதே நிறைவுற்றது. சிறுமிகள் ப்ரீத்தா ராஜ் மற்றும் ஷ்ரேயா ஸ்ரீராம், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் ரகுராமன் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை அறிவித்தார். பொருளாளர் கிங்சன்ராஜ், நிதி அறிக்கையை வாசித்தார். சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக இந்தக் குழந்தைகள் குதூகல விழாவினை, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வேலு பழனி, அறவாழி, சேகர் சிறப்புற நடத்திக் கொடுத்தனர்.
ஜோலியட் ரகு |