என் இரண்டு பெண்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். நான் கிரீன் கார்டு வாங்கிக்கொண்டு இங்கே இருக்கிறேன். விகடன், குமுதம், கலைமகள் என்று பல தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்தாலும் தென்றல் படித்தால்தான் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் நிலைமையை அறிய முடிகிறது.
அனுசூயா பத்ரி கோர்டே மடிரா, கலி.
***
தென்றல் எவ்வளவு பரவலாகச் சென்றடைகிறது என்பதை உணர்கிறேன். பல ஆண்டு முயற்சியில் இதை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இன்னும் உயரங்களை நீங்கள் எட்டுவீர்கள் என்பது நிச்சயம்.
லாரன்ஸ் பரணீதரன், www.ChannelLive.tv
***
நவம்பர் 2008 தென்றல் அட்டைப்படம் வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது. திணறல்கள் சிறுகதை படித்து கண்கள் கலங்கின. வாஞ்சிநாதனின் குறுக்கெழுத்துப் புதிர் விடை கிடைக்காவிட்டால் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது. மிகவும் சுவாரசியம். 'அன்புள்ள சிநேகிதியே' நான் ஆவலுடன் படிக்கும் பகுதி.
டாக்டர் நிர்மலா பிரசாத்தின் நேர்காணல் தமிழ்ப் பெண்ணின் சாதனையைப் படம் பிடித்தது. 'சிரிக்க சிந்திக்க' வேதனைகளை வெளிக்காட்டியது. மக்கள் கவனிப்பார்களாக.
'பிதாமகன்' கதை மனதை வருடியது. இந்தியாவில் உள்ள பலரும் வெளிநாட்டில் மகன் இருந்தால் மொத்தச் செலவும் அவன் தலையில்தான். இந்தியா சென்றாலும் சரி, அவர்கள் இங்கு வந்தாலும் சரி, பையனின் பாக்கெட் காலியாகும்வரை அவர்களுக்குச் செலவு வந்துகொண்டே இருக்கும். அது தவிர, கிளம்பும்போது, மாதாமாதம் மறக்காமல் பணம் அனுப்பு என்ற கட்டளை வேறு. வெளிநாட்டில் சம்பாதிக்கிறோம், ஆனால் நம் குடும்பத் தேவைக்குப் பணம் அனுப்பியும், ஏர்லைனுக்குக் கப்பம் கட்டியுமே 'சேவிங்ஸ்' 'ஷேவிங்ஸ்' ஆகிவிடுகிறது. பெண்ணைப் பெற்றவர்கள் தாமே தம்மைக் கவனித்துக் கொள்ளும் போது, பையனின் பெற்றோரும் அப்படியே செய்யலாமே.
சித்ரா ரமேஷின் எழுத்தில் உண்மை நிதர்சனம். 'எங்கள் வீட்டில்' பகுதி அழகான ஆரம்பம்.
தென்றலில் வரும் விளம்பரங்களும் கூட உபயோகமானவையே. புதிதாகச் செல்லும் ஊரில் கடை, உணவகங்கள் என பலவிதமான விளம்பரங்கள் எல்லோருக்கும் உதவும்.
லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா. ***
சென்ற இதழ் அட்டைப்படம்... நவம்பர் 2008 தென்றல் இதழின் அட்டையை அலங்கரிக்கும் கண்ணுக்கினிய புகைப்படத்தை எடுத்தவர் இளம் புகைப்படக் கலைஞர் சேதுபதி அருணாசலம் (பெங்களூரு). |