காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 அன்று வெளிவந்தது. இத்தீர்ப்பின்படி தமிழகத்துக்குக் கர்நாடகம் ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும்; தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்படுவதைக் கண்காணிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கவு வேண்டும். நடுவர் மன்றத்தின் தலைவர் நீதிபதி என். பி. சிங், உறுப்பினர்கள் என்.எஸ்.ராவ் மற்றும் சுதிர் நாராயண்.

காவிரியில் உற்பத்தியாகும் மொத்த நீரின் அளவு 740 டி.எம்.சி. என்று நடுவர்மன்றம் ஆய்வின் அடிப்படையில் முடிவு செய்தது. இதில் தமிழகம் 562 டி.எம்.சி. தேவை என்று நடுவர் மன்றத்தில் கோரியது. ஆனால் தமிழகத்தின் பங்காக 192 டி.எம்.சி.யை நடுவர் மன்றம் ஒதுக்கியுள்ளது. கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சியும், கேரளத்துக்கு 30 டி.எம்.சியும்,, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி.யும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 டி.எம்.சி.யில் 10 டி.எம்.சி. நீர் மீன்வளம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், 4 டி.எம்சி. கடலில் கலக்கும் அளவாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளிவந்த நாள் முதல் அத்தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகம் முழுவதும் பல்வேறு பந்த், போராட்டம் என்று அங்குள்ள ஆளும் கட்சியும், முக்கிய எதிர்க் கட்சிகளும், விவாசாயிகளும், சினிமா நட்சத்திரங்களும் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை நேரிடையாக தில்லியில் சந்தித்து தங்கள் மாநிலத்தின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர்.

இறுதித்தீர்ப்பு வெளியான நாளிலிருந்து தமிழகப் பேருந்து எதுவும் கர்நாடக மாநிலத்துக்குள் செல்லாமல் ஓசூரில் நிறுத்தப்படுகிறது. தமிழகம்-கர்நாடகம் இடையிலான லாரிப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாகத் தமிழகம் பல கோடி ரூபாயை இழக்க நேரிட்டது.

'தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது' என்பதே முதல்வர் கருணாதன் உடனடிக் கருத்தாக இருந்தது. இந்தக் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா நடுவர் மன்றத் தீர்ப்பு வரவேற்கதக்கதல்ல என்றும், இது தமிழகத்துக்குச் சாதகமானது அல்ல என்றும் கூறினார். இது குறித்து உடனடியாகத் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஜெயலலிதாவுக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், இறுதித் தீர்ப்பு நகலை முழுமையாக படித்த பின்பு, தமிழகத்திற்கான சாதக, பாதக விஷயங்களை ஆராய்ந்த பின்பு, உச்சநீதி மன்றத்தைத் தமிழக அரசு அணுகும் என்று கூறினார்.

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ மற்றும் ஆளும் தி.மு.க. கூட்டணியின் அங்கமான பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் இப்பிரச்னை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றனர்.

இதையடுத்து பிப். 19ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வரின் தலைமையில் கூடியது. இக்கூட்டத்தின் முடிவில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது. தமிழக அரசின் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் உறுதியளித்தனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வழிகளைத் தமிழக அரசு உடனே தெரிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இறுதித் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகெளட தலைமையில் கர்நாடக அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் உள்ளடக்கிய குழு ஒன்று கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்த ராமதாஸ், இப்பிரச்சினையில் தமிழகத்தில் பொதுவேலை நிறுத்தம் செய்து தமிழகத்தின் ஒருமித்த குரலை எதிரொலித்திருந்தால் நாடாளுமன்றத்தில் விவாதம் அனுமதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்.

ராமதாசுக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி பொதுவேலைநிறுத்தம் நடத்துவதில் தமிழக அரசுக்குத் தயக்கம் இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com