இந்தியாவின் முதல் நிலவு விண்கலமான சந்திரயான்-1ன் வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கு புதிய விண்கலம் ஒன்றை அனுப்ப உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு 'ஆதித்யா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறும்போது 'ஆதித்யா ஒரு குறுங்கோள். சூரியனிலிருந்து என்ன மாதிரியான கதிர்வீச்சுக்கள் நிகழ்கின்றன என்பதை இது ஆராயும். கொரானாவின் காந்தப் புல அமைப்புப் பற்றியும் இது ஆய்வு செய்யும். அதன் வரைவடிவும் தயாராகி விட்டது. ஆனால் இந்த ஆய்வு சற்றுக் கடினமானது. உலகில் மிகச்சில நாடுகள்தாம் இத்தகைய ஆய்வில் ஈடுபட்டுள்ளன' என்றார்.
ஆதித்யா திட்டவடிவமைப்புப் பணியில் இஸ்ரோ தலைமை விஞ்ஞானி ஜெயதி தத்தா ஈடுபட்டுள்ளார். சந்திரயானைப் போலவே, ஆதித்யா விண்கலமும் முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படவுள்ளது. முற்றிலும் இந்தியத் தொழில் நுட்பத்தில் தயாராகும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம்தான் ஆதித்யாவும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் குறித்த ஆய்வில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஈடுபட்டுள்ளன. இதில் தற்போது இந்தியாவும் இணைந்திருப்பது உண்மையிலேயே பெருமை தரக் கூடிய ஒன்று.
அரவிந்த் |