ஆயிரமாண்டின் மாமனிதர் (Millennium Man) என்று அமெரிக்க அரசால் பாராட்டப் பெற்ற பாலம் கலியாணசுந்தரம் அவர்களைத் தலைவராகக் கொண்ட 'அன்பு பாலம்' சேவை அமைப்பு தனது 56வது ஆண்டு விழாவையும், சுதந்திரதின வைர நிறைவு விழாவையும் சாதனையாளர்களை கௌரவிக்கும் முப்பெரும் விழாவாகச் சமீபத்தில் சென்னையில் நடத்தியது. விழாவில், கலை, இலக்கியம், ஆன்மீகம், சமூகசேவை, மனிதநேயம் எனப் பலதுறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு தங்கப் பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
எழுத்துத் துறையில் சாதனைக்கான விருது தென்றல் துணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குத் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் தலைமை வகித்தார். கர்நாடக அரசின் உயர்நீதி மன்ற நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான், வருமான வரித்துறை ஆணையர் கிரீஷ் பாண்டே, மகாத்மா காந்தியின் தனிச் செயலர் வி.கல்யாணம், காந்திஜியிடம் நேரடியாகப் பயிற்சி பெற்ற 101 வயதான தியாகி குருசாமி ஐயா, தியாகி கே.லட்சுமிகாந்தன் பாரதி இ.ஆ.ப. ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, திரைப்பட நடிகர் லாரன்ஸ், கடம் விநாயக் ராம், நடிகர் ஜே.கே. ரித்தீஸ், கேரம் சாதனைப் பெண் செல்வி இளவழகி, சொல்லருவி மு.முத்து சீனிவாசன், கவிமாமணி இளையவன், திருப்புகழ் மதிவண்ணன் ஆகியோரும் கௌரவிக்கப் பெற்றனர். |