கலிபோர்னியா அட்டார்னி ஜெனரல் பதவிக்கு கமலா ஹாரிஸ்
சான் ஃபிரான்சிஸ்கோவின் டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியாக இருக்கும் கமலா ஹாரிஸ் அவர்கள் கலிபோர்னியா மாநில அட்டார்னி ஜெனரல் பதவிக்கு 2010-இல் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சியில் முதலில் இருந்தே ஒபாமாவை ஆதரித்த சிலரில் கமலா ஹாரிஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை டோனல்ட் ஹாரிஸ் ஜமைக்கன் அமெரிக்கர். தாய் ஷ்யாமளா கோபாலன் தமிழகத்திலிருந்து வந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பிரபல மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளர். அலமேடா கௌண்டியில் வழக்கறிஞராகத் துவங்கிய கமலா ஹாரிஸ் டிசம்பர் 2003-இல் டிஸ்ட்ரிக்ட் அட்டார்னி பதவியைத் தேர்தலில் வென்ற முதல் பெண்மணி, தந்தை வழியில் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர், தாய் வழியில் முதல் இந்திய-அமெரிக்கர் ஆகிய பெருமைகளை அடைந்தார். 2007-இல் இப்பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தப் பதவியில் உறுதியுடனும் திறம்படவும் செயலாற்றிப் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். வன்முறைக் குற்றங்களுக்கான தண்டனைகள் இவரது பதவிக் காலத்தில் அதிகரித்தன. குறிப்பாக குழந்தைகள்/சிறார்களுக்கு எதிரான குற்றங்கள், சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள், துப்பாக்கி வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார். கலிஃபோர்னிய வீட்டுக்கடன் சிக்கல், தெருக்கும்பல் வன்முறை ஆகிய பிரச்சனைகள் தீரப் போராடப் போவதாக அறிவித்துள்ள கமலா ஹாரிஸ் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்காமல் இருக்கும் வண்ணம் சிறை அமைப்பில் அடிப்படை மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். மரண தண்டனையை எதிர்க்கும் இவர் கலிபோர்னியக் குற்றத் தடுப்பு நீதித்துறைக்கு உறுதியான புதிய கருத்துக்களும் சிந்தனைகளும் தேவை என்கிறார்.

தற்போதைய அட்டார்னி ஜெனரல் ஜெரி பிரவுன் 2010 தேர்தலில் கலிபோர்னியா கவர்னராகப் போட்டியிடவுள்ள நிலையில், கலிபோர்னியா அட்டார்னி ஜெனரல் பதவியை அந்தத் தேர்தலில் கமலா ஹாரிஸ் வென்றால், அடுத்த சில ஆண்டுகளில் மாநில கவர்னர் பதவிக்கு அவரை இட்டுச்செல்லும் படிக்கட்டாக அது அமையும் என்பது உறுதி.

சுந்தரேஷ்

© TamilOnline.com