ஒருமணிப் பொழுது
வீட்டிலிருந்து பாதிவழி வந்தபிறகுதான் சாமி கவனித்தான். "நீலக் கார்ல வந்திருக்கணும்" என்றான்.

பக்கத்தில் அமர்ந்திருந்த சரவணப்ரியா அதற்குக் காரணம் கேட்கவில்லை. வான்டர்பில்ட் கார்நிறுத்தும் அடுக்கில் நுழைவதற்கான சாவி அட்டையும், கண்ணாடியில் தொங்கும் அனுமதி அட்டையும் அந்தக் காரில் இருந்தன. இந்த சந்தன நிறக் காரை இன்று அங்கே நிறுத்த வழியில்லை.

"உன்னை க்ளினிக்கிலே விட்டப்புறம் லேபுக்குப் போலாம்னு பாத்தேன்."

"சாரி! எனக்கும் மறந்திட்டுது. கிளினிக் பின்னாலே ஒரு பார்கிங் லாட் இருக்கு" என்று சரவணப்ரியா நினைவூட்டினாள்.

"அங்கே நிறுத்திட்டு என்னோடு வாயேன். வெயிடிங் ரூம்லே இருக்கலாம்." ஒன்பது மணிக்கு அங்கே அவளுக்கு மருத்துவப் பரிசோதனை. சனிக்கிழமை காலை, சாலைகளில் கும்பலில்லை. ஊர்திகள் பறந்தன. ஆகஸ்ட் இறுதியாகிவிட்டது, ஆனாலும் எண்பது டிகிரி வெப்பம்.

'விமன்ஸ் கிளினிக்' முன்னாலொரு சாலைசந்திப்பு, அதற்கொரு போக்குவரத்து விளக்கு. கட்டடத்தின் கீழ்வழியாக நுழைந்து பின்னால் சென்று காரை நிறுத்துவதற்காக தெருவிலிருந்து வலமாகத் திரும்ப சாமி எத்தனித்தபோது ஒரு மஞ்சள் மரச்சட்டம் தடுத்தது. அதன்மேல் 'நுழையாதே' என்ற அறிவிப்பு வேறு. சாலையை அடைத்துக் கொண்டு பாதித் திருப்பத்தில் கார் நின்றது. ஒன்பதுக்குச் சில நிமிடங்களே இருந்தன. மனைவியைத் தாமதிக்க வைக்காமல், "நீ இறங்கிக்கோ! நான் காரை எங்கேயாவது நிறுத்திக்கிறேன்" என்றான் சாமி.

##Caption## வலதுபுறத்திலிருந்து சரவணப்ரியா கைப்பையுடன் இறங்கினாள். "டெஸ்ட் முடிஞ்சதும் கூப்பிடறேன். பை!" அவள் கட்டடத்தின் முன்வாசல்வரை நடந்து கதவைத் திறந்து நுழையும்வரை சாமி காத்திருந்தான். அதற்குள் நீல விளக்குகள் சுழல ஒரு மோட்டார் சைக்கிள் இடதுபுறம் வந்து நின்றது. சாமி ஜன்னலை இறக்கினான். கறுப்புக்கண்ணாடி அணிந்து போலிஸ்காரர் சைக்கிளின்மேல் கம்பீரமாக வீற்றிருந்தார். 'எர்னெஸ்ட்' என்று பாட்ஜ் குத்தியிருந்தார். அச்சுறுத்தும் விளக்குகள் அணைந்தன.

அவர் கேட்பதற்கு முன்பே அவன், "மன்னிக்கவும்! திரும்பியபிறகுதான் இந்த அறிவிப்பைக் கவனித்தேன். என் மனைவிக்குக் கட்டடத்தின் மாடியில் ஒரு அபாய்ன்ட்மென்ட். இப்போதுதான் இறங்கிப் போனாள்" என்றான்.

அவர் புரிதலுடன் அவனைப் பார்த்தார். "இன்று பல்கலைக்கழகத்திற்கு ஃப்ரெஷ்மென் வரும் நாளாயிற்றே" என்றார்.

"மறந்தே போய்விட்டது."

"புதிய மாணவர்களை அழைத்துவரும் பெற்றோர்கள்தான் இன்று கிளினிக் பின்னால் காரை நிறுத்தலாம்."

"நானென்ன செய்ய?"

எதிரிலேயே பொரித்த கோழிக்குஞ்சு உணவகம். அதைச் சுற்றிலும் காலிஇடம். "நீ அங்கே போகலாம்" என்று கை காட்டினார்.

அவர் நீலக்குழல் விளக்குகளை மறுபடி எரித்து சாமி இடதுபுறம் திரும்பிச் செல்ல வழிவிட்டார். கடைக்கு எதிரில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான். அங்கிருந்து ஆராய்ச்சி அறைக்கு நடந்துசென்று திரும்ப அரைமணி ஆகும். சரவணப்ரியாவின் சோதனைக்கும் அந்த நேரம்தான். அதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். கிளினிக்கினுள் சென்று பழைய, கிழிந்துபோன பத்திரிகைகளைப் படிக்கப் பிடிக்கவில்லை. அங்கேயே காத்திருக்க முடிவுசெய்தான். பொழுதைப் போக்க ஒரு கோடிக்கும் இன்னொரு கோடிக்குமாக நடந்தான்.

அப்போது காரில் ஒரு கும்பல் வந்து உணவகம் திறக்கவில்லையென்று ஏமாற்றத்துடன் கிளம்பிச்சென்றது. சாமி நடையை நிறுத்திவிட்டுக் கதவின் முன்புறத்தில் ஒட்டியிருந்த நேர அட்டவணையைப் படித்தான். சனிக்கிழமைகளில் பத்து மணிக்குத்தான் கடைதிறக்கும்.

சாமி திரும்பிப் பார்த்தான். சாமியை நுழையாமல் தடுத்த மரச்சட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. கிளினிக்கின் பின்னாலிருந்து கார்கள் வெளிவரத் தொடங்கின. எர்னெஸ்ட், சாலையின் போக்குவரத்தை நிறுத்திவிட்டு எல்லாக் கார்களும் வருவதற்கு வழிவிட்டார். பிறகு, காத்துநின்ற நீண்ட கார்வரிசை செல்வதற்குக் கைகாட்டினார். வெளியேறிய ஊர்திகளிலொன்று சாமியின் காருக்குப் பக்கத்தில் வந்துநின்றது. அதைப் பார்த்துக் கொண்டே அவன் மெல்ல நடந்தான். ஒரு வெள்ளிநிற ஹான்டா பைலட். லைசன்ஸ் தகடு இல்லினாய் மாநிலத்திலிருந்து வந்ததாகக் காட்டியது. தகட்டில் மாமூலான எழுத்துகளும் எண்களுமில்லை. அதிலிருந்த எழுத்துகளைச் சேர்த்து 'நமஸ்கார்' என்று படித்தான்.

பின்னிருக்கைக்குப் பின்னால் பெட்டிகள், ஹாங்கரில் மாட்டிய துணிகள், புத்தகங்கள். அதிலிருந்தவர்கள் பல்கலைக்கழகம் அளித்த அறிவுரைகளைக் கேட்டுத் திரும்பி விட்டார்கள் போல. வண்டியின் வலது பக்கக் கதவு திறந்து ஒரு நடுவயதுப் பெண் வெளிப்பட்டாள். இறுக்கமான சல்வார் கமீஸ், பான்ட்ஸ்-சட்டையைப் போலிருந்தது. தலைமயிரைப் பிரித்து மணிகள்கோர்த்த கயிற்றில் கட்டியிருந்தான். அவள் கடைப் பக்கம் செல்லாமல் அவனை நோக்கி வந்தாள். அவளைப்பார்த்து சாமி நின்றான்.

"எக்ஸ்க்யூஸ் மீ, எனக்கு சோடா வாங்க வேண்டும்" என்றாள். கொழுப்பும் சர்க்கரையும் அள்ளித்தெளித்த காலை உணவு அவள் வயிற்றைப் பதம்பார்த்திருக்க வேண்டும். "பக்கத்தில் சூபர் மார்க்கெட் இருக்கிறதா?"

சாமி சாலைசந்திப்பின் விளக்கைக் காட்டினான். "அதில் திரும்பிச் சென்றால் நான்காவது விளக்கைத் தாண்டியவுடனே வலதுபக்கம் ஹாரிஸ் டீடர் கடை தெரியும்."

"தாங்க்ஸ்."

##Caption## திரும்பிச் சில தப்படிகள் எடுத்து வைத்தவள் உடனே தன் காருக்குப் போகவில்லை. சாமியின் காரை நோட்டம் விட்டாள். காரில் ஒட்டியிருந்த பெயரட்டையை அவள் கவனித்திருக்க வேண்டும். மறுபடி சாமியருகில் வந்தாள். "நீங்கள் வான்டர்பில்ட்டில் வேலை செய்கிறீர்களோ?"

"ஆமாம்."

"எங்கே?"

"மருத்துவ மையத்தில்." அவள் கேட்கு முன்பே, "பெயர் சாமிநாதன்" என்று சேர்த்தான்.

"நான் அனுராதா சம்பத். நீங்க தமிழ்நாடோ?"

"ஆமாம்."

"ரொம்ப செளகரியமாப் போச்சு."

எதற்கு செளகரியமென்று சாமி யோசிப்பதற்குள், "உங்க குழந்தைகள் யாராவது இங்கே படிக்கிறார்களோ?"

"ஒரு பையன். அவன் இங்கேயில்லை. பெர்க்கிலிலே படிக்கிறான்."

"ரமாவைக் கொண்டுவிட வந்தேன். அவ இங்கேயே பொறந்து வளர்ந்திருந்தா எனக்கு தைரியமா இருந்திருக்கும். சென்னைலே டென்த் வரைக்கும் படிச்சா. ஷிகாகோலே ரெண்டு வருஷமாத்தான் இருக்கோம். சம்பத் பிசினஸை வித்துட்டு இந்த வருஷக் கடைசிலே பையனோட வரப்போறார்" என்று தலைப்புச் செய்திபோல் சொன்னாள்.

"அப்படியா?"

"போன டிசம்பர்லே வான்டர்பில்ட்டை வந்து பாத்தோம். ரமாவுக்கு கேம்பஸ் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவளைத் தனியா இவ்வளவு தூரம் அனுப்ப பயமா இருந்தது. நீங்க இருக்கிறது மனசுக்குத் தெம்பா இருக்கு. அவளைக் கொஞ்சம் பாத்துக்கணும்!"

இந்தச் சம்பிரதாயப் பேச்சை ஏற்கனவே சாமி பலமுறை கேட்டிருக்கிறான். பெற்றோரிடமிருந்து விலகி, சுதந்திரம் தேடத் தொலைவிலிருக்கும் கல்லூரிகளுக்குப் படிக்கவரும் மாணவர்களுக்கு இன்னொரு தந்தையாக இருந்து தொந்தரவு தர அவன் தயாரில்லை. இருந்தாலும் அனுராதாவுக்கு ஏமாற்றமாகாமல் "அதுக்கென்ன, செய்தாப் போச்சு" என்று சொல்லிவைத்தான்.

அனுராதா விடவில்லை. கார் டிரைவர் பக்கம் சென்று தன் பெண்ணிடம் எதையோ சொல்லி அழைத்துவந்தாள். மஞ்சளில் நீண்ட ஆடை அணிந்த ஒரு பதினெட்டு வயதுப் பெண். கல்லூரியில் ஃப்ரெஷ்மன் என்பதற்கேற்ப வெகுளித்தனமும் அச்சமும் கலந்த புதியமுகம்.

"இது ரமா. இது டாக்டர் சாமிநாதன்."

"ஹாய் ரமா! டாக்டரெல்லாம் வேண்டாம், நான் என்ன வைத்தியமா பாக்கறேன்? சாமின்னாப் போதும்."

"ஹை, சாமி அங்கில்!" குரலில் ஒரு ரீங்காரம். அம்மா சொன்னதற்காகக் கடனே யென்றில்லாமல் ரமா முகத்தில் நிஜமான அக்கறை. ஒருவேளை வீட்டுநினைவு வரும்போது அவள் அவனைக் கூப்பிடலாம். அப்படிக் கூப்பிட்டால் சாப்பிட வீட்டுக்கு அழைத்துச்செல்லலாம்.

"ரமா! எதிலே மேஜர் பண்ணப் போறே?"

"இப்போதைக்கு பயோமெட் எஞ்ஜினீரிங்."

"குட்லக் ரமா!"

"தாங்க்ஸ், அங்கில்!"

ரமாவிடமிருந்து அனுராதா செல்பேசியை வாங்கினாள். "உங்க நம்பரைக் குடுங்க" சாமி சொன்ன எண்களை அதில் பதிந்து கொண்டாள்.

"நாங்க கிளம்பறோம். பத்துமணிக்கு மேலதான் ரூம்லே போய் ரமாவோட சாமானெல்லாம் வைக்கணும். சாப்பிட்டுட்டுக் கிளம்பினா இன்னிக்கே ஷிகாகோ போயிடுவேன். ரொம்ப தேங்க்ஸ்!" என்றாள் அனுராதா.

"தேங்க்ஸ் எதுக்கு? நானொண்ணும் பண்ணிடலியே."

அனுராதா பை சொல்ல, பெண் மயக்கும் புன்னகையில் விடை சொன்னாள். ஹான்டா பைலட் அகன்றது.

சரவணப்ரியா அழைத்தாள்.

"முடிஞ்சுதா?" என்று சாமி ஆவலுடன் கேட்டான்.

"மெஷின் ஆபரேடர் இப்பத்தான் வந்தா. இன்னும் அரைமணியாகும்" என்ற ஏமாற்றமான பதில் வந்தது. "நீ என்ன செய்யறே?"

"நான் வெளிலே உலாத்தறேன். என்னைப் பத்திக் கவலைப்படாதே! கார் கிளினிக் எதிரிலேயே இருக்கு."

சாமி நடையைத் தொடர்ந்தான். அடுத்து ராணுவ கேமோஃப்ளாஜ் உடையில் ஒருவனும் குள்ளமான ஒருத்தியும் எதிர்ப்புறத்திலிருந்து நடந்துவந்தார்கள். அவன் கையில் மருத்துவப் பதிவுகள் வைக்கும் ஒருபெரிய காக்கிநிறப் பை. பார்ப்பதற்கு மிகவும் பலவீனமாகத் தோன்றினான்.

அவர்களும் கடையின் சாத்திய கதவருகில் சென்று ஏமாற்றம் அடைந்தார்கள். என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். சாமியைப் பார்த்து அவள் நின்றாள்.

"எக்ஸ்க்யூஸ் மீ! என் கணவருக்கு டயபெடிஸ். அவருக்கு உடனே சாப்பிட்டாக வேண்டும். போலிங் க்ரீனிலிருந்து அதிகாலையிலேயே சாப்பிடாமல் கிளம்பினோம். இந்தக் கடை இன்னும் அரைமணி கழித்துத்தான் திறக்கும். பக்கத்தில் வேறு எதாவது உணவுக்கடை இருக்கிறதா?"

"அரை மைலில் ஒரு மெக்டானால்ட்ஸ் இருக்கிறது."

"அங்கே கூட்டிப்போக முடியுமா? அவனால் அவ்வளவு தூரம் நடக்கமுடியாது. நாங்கள் வெடரன்ஸ் வானில் வந்தோம்." சொந்தமாக ஒரு கார்கூட இல்லையென்று அவர்கள்மேல் சாமிக்கு இரக்கம் வந்தது. உதவிசெய்ய விரும்பினான், சும்மாத்தானே இருக்கிறான்.

"நான் வாங்கி வருகிறேன். என்ன வேண்டும்?"

"ஒரு சதர்ன் ப்ரேக்ஃபாஸ்ட்."

"ஒன்றென்ன இரண்டே வாங்கி வருகிறேன்" என்றான்.

"எனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை."

சாமி காரிலேறி வெளியேறும்போது பைலட் திரும்பிக் கொண்டிருந்தது. அனுராதா சோடா வாங்கிவிட்டாள் போலிருக்கிறது.

சாமி கையசைத்தான். காரைத் திருப்பும் கவனத்தில் ரமா அவனைக் கவனிக்கவில்லை. சாமி மருத்துவ மையத்தின் பாதிவட்டத்தில் காரை நிறுத்தி அதன் மஞ்சள் விளக்குகளை எரித்தான். நடைவழியில் ஓடினான். ஒரு கட்டடத்தின் தரைத்தளத்தில் மெக்டானால்ட்ஸ். கடையில் ஒன்றிரண்டு பேர்கள்தான். காலியான கெளன்டரில் இரண்டு சதர்ன் ப்ரேக்ஃபாஸ்ட் என்று சொல்லிப் பணத்தைத் தருவதற்குள் இரண்டு பெரிய மெக்டானால்ட்ஸ் பைகள் நீட்டப்பட்டன. அவற்றோடு காருக்கு விரைந்தான். அதைக் கிளப்பிப் பழைய இடத்திற்கு வந்தபோது...

அந்த இருவரும் இல்லை. பத்து நிமிடங்களில் எங்கே போயிருப்பார்கள்? பார்வையைச் சுற்றிலும் ஓடவிட்டான். அவர்களுக்குப் பதிலாக முன்பு பார்த்த தெருவாசி. அவனது உலக உடமைகள் அனைத்தும் பக்கத்திலிருந்த ஒரு தள்ளுவண்டியில் அடக்கம். தட்டுப் பாத்திரங்களுக்கு மேல் நைந்துபோன துணிகள், என்ன நிறமென்று சொல்லமுடியாத ஒரு கோட். கைக்கு ஒரு பையாகக் காரிலிருந்து இறங்கிய சாமியின் கைகளில் அவன் பார்வை பதிந்தது.

"உன் ஒருவனுக்கு இரண்டு ப்ரேக்ஃபாஸ்ட் மிக அதிகம். ஒன்றை எனக்குத் தருகிறாயா? நான் நல்ல சாப்பாட்டைப் பார்த்து இரண்டு நாளா..."

சாமிக்கு ஏதோ சரியில்லையென்றொரு உள்ளுணர்வு. "இங்கே இருந்தார்களே இரண்டுபேர், அவர்கள் எங்கே?" என்று வேகமாகக் கேட்டான்.

"ஆர்மி சட்டையில் ஓராளும், குள்ளமாக ஒருத்தியும்."

"அவர்கள்தான்."

"நீ ஒரு பை தந்தால் சொல்வேன்."

சாமி ஒன்றை வண்டியின் மேல் வைத்தான். அதன் மேல்மடிப்பைப் பிரித்து உள்ளே பார்த்த தெருவாசியின் முகத்தில் அழுக்கு மீசை, தாடியையும் தாண்டி ஒரு திருப்தியான புன்னகை.

"போய்விட்டார்கள்."

"நடந்தா?"

"இல்லை. ஒரு வேன் வந்தது. அதிலிருந்த டிரைவரை ஏதோ கேட்டார்கள். வானில் அவர்கள் ஏறியதும் அது சென்றுவிட்டது."

"எப்படிப்பட்ட வேன்? எந்தப் பக்கம் திரும்பியது?"

"எனக்கென்ன தெரியும்? நிம்மதியாகச் சாப்பிட விடு!" என்று பையிலிருந்த பிஸ்கட்டை எடுத்துக் கடித்தான். "ஒரு சாப்பாட்டுக்கு எத்தனை கேள்விகள்?"

"இது மிகமிக முக்கியம். நான் இந்தப் பையையும் தருகிறேன். அவனுக்கு ஹான்டாவுக்கும் டொயோடாவுக்கும் என்ன வித்தியாசம் தெரியப்போகிறதென்று, "வேன் என்ன நிறம்?" என்று கேட்டான்.

"வெள்ளை."

"வெள்ளையா வெள்ளியா?"

"எதுவாக இருந்தாலென்ன?"

“சரி, அதில் அந்த இருவரும் ஏறிச் சென்றார்களா?"

"ஆமாம். சொன்னபடி அதையும் கொடு" என்று கையை நீட்டினான்.

"இந்தா! வேன் எந்தப் பக்கம் போனது?" சாப்பிடும் மும்முரத்தில் வாயைத் திறவாமல் வடக்கு திசையைக் காட்டினான். சாமி செல்பேசியில் சேமித்திருந்த ரமாவின் எண்ணை அழைத்தான். மணி அடித்தது. ஆனால் பதிலில்லை. நான்குமுறை ஒலிப்பதற்குள் அது அணைக்கப்பட்டது. செய்தி வைக்கும்படி கேட்டது. செல்பேசியை மூடித்திறந்து பழைய எண்ணை மறுபடி அழைத்தபோது மணி அடிக்கக்கூட இல்லை. இயந்திரக் குரல்தான் குறுக்கிட்டது.

சாலை சந்திப்பில் ஒரு மோட்டார் சைக்கிள். அது கிளம்புவதற்குள் சாமி ஓடிச்சென்று கைகாட்டினான். எர்னெஸ்ட் தான். அவனைப் பார்த்ததும் சைக்கிளை நகர்த்தி சாலையைக் கடந்து அவனருகில் வந்தார்.

"ஆஃபீசர்! தயவு செய்து..." என்று சாமி தடுமாறினான்.

‘என்ன நடந்தது? நிதானமாகச் சொல்!"

"சற்றுமுன் இரண்டு பேர் என்னை மெக்டானால்ட்ஸ் அழைத்துப் போகும்படி கேட்டார்கள். மறுத்துவிட்டு நானே அவர்களுக்கு உணவு வாங்கிவரப்போனேன்."

"நீ செய்தது ரொம்பசரி. புரியாதவர்களைக் காரில் ஏற்றுவது மகாதப்பு."

"ஆனால் ஊருக்குப் புதிதான இரண்டு பேர் அவர்களிடம் ஏமாந்துவிட்டார்களென்று எனக்குப் பயமாக இருக்கிறது" என்று தன் சந்தேகத்தைச் சொன்னான். "நான் அழைத்தபோது அந்தப்பெண்ணின் செல்பேசி அணைக்கப்பட்டது."

"சரி காரின் விவரங்ளைச் சொல்!"

"ஹான்டா பைலட். இல்லினாய் லைசன்ஸ். தகட்டில் என் ஏ எம் எஸ் கே ஏ ஆர் என்கிற எழுத்துகள்."

"எங்கேயென்று தேடுவது?"

"அந்த அந்நியர்கள் போலிங் க்ரீனிலிருந்து வந்தோமென்று என்னிடம் சொன்னார்கள். அவர்கள் கென்டக்கியை நோக்கிக் காரை விடும்படி பணித்திருக்கலாம்."

"இங்கிருந்து கிளம்பி எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?"

"பத்துப் பதினைந்து நிமிடங்கள்."

"நெடுஞ்சாலை 65ஐப் பிடிக்க ஏழு நிமிடங்கள்" என்று கணக்கிட்டார். இடுப்பில் செருகியிருந்த ஒலிக்கருவியை இயக்கினார். இரைச்சலுக்கு நடுவில், "நான் எர்னெஸ்ட். ஐ-65இல் வடக்கே செல்லும் ஒரு வண்டியைப் பிடிக்க வேண்டும்" என்று விவரங்கள் தந்தார். "மைல் மார்க்கர் தொண்ணூறிலிருந்து தொண்ணூற்றியைந்திற்குள் இருக்கலாம். அங்கே தென்படாவிட்டால் வேறு நெடுஞ்சாலைகளில் தேடவேண்டும்."

சாமி அவரையே வேடிக்கை பார்த்து நின்றிருந்தான்.

சில நிமிடங்களில் பதில்வந்தது. "விவரங்களுக்குப் பொருந்துகின்ற கார் தெரிகிறது. ஒரு பெண் ஓட்டுகிறாள். வண்டியில் மொத்தம் நான்குபேர்."

சாமியிடமிருந்து அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டு எர்னெஸ்ட் நெடுஞ்சாலைக் காவலருக்குச் சொன்னார்.

"அடுத்த எக்சிட்டில் அதை வெளியேற்றுங்கள்!" அவர் முகத்தில் திருப்தி. காத்திருக்கும் நேரத்தில், "எப்படி உனக்கு அவர்கள்மேல் சந்தேகம் வந்தது?" என்று கேட்டார்.

"நான் உணவு வாங்கி வருகிறேனென்று போயிருக்கும்போது இன்னொருவரிடம் எதற்கு உதவி கேட்கவேண்டும்? அவர்கள் அனுபவப்பட்ட திருடர்களைப்போல் தெரியவில்லை. இது முதல் முயற்சியாக இருக்கலாம்."

"இருந்தாலும் ஒரு குற்றம் நடக்காமல் தடுத்ததற்கு நாங்கள் உனக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்."

"அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்தால் சரி."

அடுத்த ஐந்து நிமிடங்களில் பதில் வந்தது. "எதிர்ப்புத் தரவில்லை. பிடித்துவிட்டோம். யாருக்கும் ஆபத்தில்லை."

"தாங்க்ஸ். குட் ஜாப். இனி நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்!"

சாமியின் பக்கம் திரும்பி கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்துவிட்டு எர்னெஸ்ட் அகன்றார். அவன் நிம்மதியோடு மனைவியின் வருகைக்குக் காத்திருந்தான். கிளினிக் அமைந்திருந்த கட்டடத்தின் கதவைத் திறந்து சரவணப்ரியா வெளியே வந்தாள். அவனருகில் அவள் வந்தவுடன், "டெஸ்ட் எப்படிப் போச்சு?" என்று சாமி கேட்டான்.

"பிரச்சனை ஒண்ணுமில்லை. பாவம்! உனக்குத்தான் ஒருமணி நேரம் போரடிச்சிருக்கும்."

சாமி புன்னகைத்தான்.

அமர்நாத் வெங்கடராமன், டென்னஸி

© TamilOnline.com