அந்தச் சிறுவனுக்கு துடுக்குத்தனம் அதிகம். எதற்கும் அஞ்சாதவன். பள்ளிப்படிப்பில் அவனுக்கு அவ்வளவு அதிக ஆர்வம் இருந்ததாகச் சொல்ல முடியாது. கணக்கு வகுப்பு என்றால் அவனுக்கு எட்டிக் காயாய்க் கசந்தது. தினம்தோறும் பள்ளி செல்வதைவிடக் குளம், தோப்பு துரவு என்று சுற்றிக் கொண்டிருப்பதையே அவன் மனம் விரும்பியது. பள்ளிக்குச் செல்லும் வழியில் புத்தகப்பையை யார் வீட்டுத் திண்ணையிலாவது போட்டுவிட்டு நேராகக் குளத்தங்கரைக்குச் சென்றுவிடுவான். நீரில் துள்ளி விளையாடும் மீன்களையும், தோப்பில் கூவிக் கொண்டிருக்கும் குயில்களையும் கண்டு பரவசத்தில் ஆழ்ந்திருப்பான். இயற்கையை ரசிப்பதில் அவனுக்கு அளவில்லாத ஆர்வம் இருந்தது. சமயங்களில் வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது புத்தகப் பையை எடுத்துப் போக மறந்துவிடுவான். அவனுடைய சிறிய தாயார்தான் அதனைத் தேடி எடுத்து வருவார்.
சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் அவனுக்குக் கைகூடியிருந்தது. இயற்கை, கடவுள், சமுதாயம் இவைபற்றிக் கவிதைகள் எழுத ஆரம்பித்தான். அவன் படைப்பாற்றலைப் பற்றிக் கேள்விப்பட்ட சமஸ்தான மன்னர், அவனை தனது அவைக்கு வரவழைத்துப் பாடச் சொல்லிக் கேட்டதுடன், அவனுக்குப் பட்டமும் அளித்து கௌரவித்தார்.
அந்தச் சிறுவன் பெரியவனானதும் சமூகம், சுதந்திரம், காவியம், வேதாந்தம், பெண் விடுதலை, நாட்டு முன்னேற்றம் என்று எல்லாத் துறைகளிலும் உணர்ச்சியூட்டும் பாடல்களையும் உரைநடைகளையும் எழுதிக் குவித்தார். தனது பேனா முனையால் ஆங்கிலேய அரசை உலுக்கிப் பார்த்தார். தமிழ் இலக்கிய உலகில் எல்லாப் புதுமைகளுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
யார் அவர்?
விடை
தேசியகவி என்றும் மகாகவி என்றும் போற்றப்பட்ட சுப்ரமணிய பாரதியார் தான் அவர். டிசம்பர் 11 பாரதியார் பிறந்த நாள்.. |