ஒரு பெரிய காட்டில் சிங்கம், புலி, கரடி, யானை என அனைத்து மிருகங்களும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அவற்றுக்கு இருந்த ஒரே பிரச்சனை மனிதர்கள்தான். யானையைத் தந்தங்களுக்காகவும், புலி, மான் ஆகியவற்றைத் தோலுக்காகவும் பிற மிருகங்களை இறைச்சிக்காகவும் கொல்வது வேட்டைக்காரர்களின் வழக்கமாக இருந்தது. அதனால் மனிதர்களுக்குப் பயந்து மிருகங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தின.
"இது என்ன சிறை வாழ்க்கை, எப்போது பார்த்தாலும் யாருக்காவது பயந்து கொண்டு; சுதந்திரமே இல்லாத இந்த வாழ்க்கை எதற்கு?" என்று ஒரு புள்ளிமான் சிந்தித்தது. தனது கூட்டத்திலிருந்து பிரிந்து சற்றேனும் சுதந்திரமாக வாழ அது முடிவு செய்தது. தன் நண்பர்களையும் துணைக்கு அழைத்தது. ஆனால் அவையோ "அது நமது உயிருக்கே ஆபத்தாகும்" என்று கூறின. ஆனால் புள்ளிமான் அதனைக் கேட்கவில்லை. தன் குழுவை விட்டுப் பிரிந்து சென்றது.
அங்கும் இங்கும் சுற்றி, காட்டின் வெளிப்பகுதிக்கு வந்தது புள்ளிமான். அங்கே அழகான நீர்நிலைகள் இருந்தன. அழகிய புல்களும், தழைகளும் செழித்து வளர்ந்திருந்தன. அதனைக் கண்டதும் புள்ளிமானுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அங்கும் இங்கும் தாவியது. துள்ளிக் குதித்து ஓடியது. பின் நன்றாகப் புல் மேய்ந்துவிட்டு, நீரை வயிறு புடைக்கக் குடித்தது. ஒரு ஓரமாகப் படுத்துக் கொண்டது. தன்னைப் போக வேண்டாமென்று தடுத்த நண்பர்களை நினைத்துப் பரிதாபப்பட்டது.
அப்போது அங்கே சில வேட்டைக்காரர்கள் வந்தனர். படுத்துக் கொண்டிருந்த மானைக் கண்டதும் அவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அப்படியே சூழ்ந்து நின்று கொண்டு வலையை எடுத்து வீசினர்.
மான் நிலைகுலைந்தது. தப்பிப் பிழைக்க முயற்சி செய்தது. வலைக்குள் சரியாகச் சிக்கிக் கொண்டதால் தப்பித்து ஓட முடியவில்லை. நமது நன்மையை விரும்புவோர் சொல்லும் அறிவுரையைக் கேட்டு நடக்காவிட்டால் துன்பம் வரும் என்பதைத் தாமதமாகவே உணர்ந்து கொண்டது புள்ளிமான்.
சுப்புத்தாத்தா |