கலாசாரமும் உடல்நலமும்
சமீபத்தில் இந்திய கலாசாரம் பற்றி மகப்பேறு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் எடுத்துரைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, நமது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிந்தது. மேற்கத்திய வாழ்க்கைக்குப் பழகி வரும்போது பல வேளைகளில் எது சரி, எது தவறு என்று தடுமாறுவதுண்டு. நடை, உடை, பாவனையில் நம்மில் பலர் வெவ்வேறு அளவுகளில் அமெரிக்க நாகரீகத்தைக் கைக்கொண்டு இருக்கிறோம். நமது கலாசாரத்தில் இருந்து வழுவாமல் இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது வரவேற்கத் தக்கது. அதே நேரத்தில் சில பாரம்பரிய நம்பிக்கைகளில் இருந்து விடுபட வேண்டியும் இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கு பேசுவோம்.

வலி
மருத்துவரிடம் உடல்நிலை பற்றிப் பேசும் முறையில் நமது கலாசாரம் இடையூறாக இல்லாமல், இணையாக இருக்க முயற்சிக்க வேண்டும். பல சமயங்களில் மருத்துவர்களும் செவிலியர்களும் வேறு நாட்டைச் சேர்ந்தவராக அமையக் கூடும். இதில் பல முரண்பாடுகள் இருக்கக் கூடும். உதாரணமாக, நமது கலாசாரத்தில் வலி அல்லது சிலவகை உடல்நிலைக் குறைபாட்டை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் பழக்கம் இல்லை. வலி இருந்தாலும் பொறுத்துப் போகவேண்டும் என்று பலர் வளர்ந்திருக்கலாம். 'வலியைக் கொண்டாடாமல் இருந்தால் அது தானாகவே பழகிப் போய்விடும்' என்று வசனம் கேட்டிருக்கிறோம். இது சரியா தவறா என்று இங்கு விவாதிக்கப் போவதில்லை. ஆனால் மருத்துவரோ செவிலியரோ கேள்வி கேட்கும்போது, மறைக்காமல் சொல்வது நல்லது. இந்த ஊரில் வலியை 1 முதல் 10 வரையிலான அளவுகோலில் நிர்ணயிப்பது வழக்கம். வலி மிக அதிகமாக இருந்தால் 10 என்றும், மிகக் குறைவாக இருந்தால் 1 என்றும், இடைப்பட்டதாக இருந்தால் அளவின்படி எண்ணிக்கையைச் சொல்ல வேண்டும்.

கதை சொல்லுதல்
மருத்துவ உலகில் 'History taking' என்று சொல்லப்படும் நோயாளியின் கதை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நோயாளியின் உடலைச் சோதிப்பது, மற்றப் பரிசோதனைகள் மூலம் நோயைக் கண்டுபிடிக்க முடிந்தாலும், கதையின் மூலம்தான் முழுப் பின்னணி கிடைக்கும். வேறு என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்க முடியும். ஆகவே நோயின் ஆரம்ப அறிகுறியிலிருந்து தற்சமயம் நடந்ததுவரை தேவையான விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எது தேவை எது தேவையில்லை என்று தெரியாது போனால் அனைத்து விவரங்களையும் சொல்லுவது நல்லது. பல சமயம் முந்தைய மருத்துவ வரலாறு (Past Medical History) மிக முக்கியம். உதாரணத்திற்கு வேறு எந்த ஒரு நோயும் இல்லாத 30 வயது ஆண் மார்வலி என்று சொல்லும் போதும், முன்பே ஒருமுறை இருதய அடைப்பு ஏற்பட்ட 60 வயது ஆண் மார்வலி என்று சொல்லும் போதும் அவசர சிகிச்சைப் பிரிவினர் வெவ்வேறு விதமாகச் செயல்படுவது உண்டு. ஆக, பழங்கதை, புதுக்கதை என்று அனைத்தையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப் பழகிக்கொள்ள வேண்டும்.

மொழிப் பிரச்சனை
அரைகுறை ஆங்கிலம் மட்டுமே தெரியுமானால், தகுந்த மொழிபெயர்ப்பாளரை நியமித்துக் கொள்வது நல்லது. அல்லது பல சமயம் ஆங்கிலம் தெரிந்தாலும் அமெரிக்க ஆங்கிலம் புரிவது கடினமாக இருக்கலாம். புரியாதபோது, புரியவில்லை என்று சொல்லக் கூச்சப்படக் கூடாது. மருத்துவ மனைகளில் AT&T மூலம் மொழி பெயர்ப்பாளரைத் தொலைபேசியில் அழைக்க முடியும். ஆங்கிலம் பேசக்கூடிய குடும்ப உறுப்பினர் உடன் இருக்க முடிந்தால் நல்லது. இல்லையெனில் தொலைபேசி வசதியை உபயோகிக்கலாம்.

##Caption##பாரம்பரிய நம்பிக்கைகள்
ராகு காலம், நல்ல நாள் போன்றவை அவசரத்துக்கு உதவாது. நோயின் தீவிரம் பற்றியும், அவசரநிலை பற்றியும் அறிந்து கொள்வது மிக முக்கியம். அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கும்போது நோயாளியின் தீவிரம், மருத்துவரின் வசதி போன்ற பலவற்றை நினைவில் கொள்ள வேண்டும். மனச்சாந்திக்கு வேண்டுமானால், வீட்டிலிருந்து கிளம்பும் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்.

மகப்பேறும் மன அழுத்தமும்
முதல் குழந்தை ஆணாக இருந்தால் நல்லது என்று நம்புவது சரியல்ல. ஆணோ பெண்ணோ, உடல் நலத்தோடு பிறந்தால் நல்லது என்று நினைப்பது ஏற்புடையது. பல வேளைகளில் பிறப்பு நேரத்தை மருத்துவரால் சரியாக நிர்ணியிக்க முடியாது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உண்பது நல்லது. நமது மூதாதையர் சொன்னவற்றில் நல்லதும் பல இருக்கின்றன். அதையும் மருத்துவரின் ஆலோசனையோடு உண்பது நல்லது. ஒரு சில இந்தியக் காய்கறிகள் இந்த ஊர் மருத்துவர்களுக்கு பரிச்சயம் இருக்காது. மகப்பேறு காலத்தில் நமது பத்திய உணவு, எளிதில் செரிமானம் ஆவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அதைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை. அதேபோல, தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது. தாய்ப்பாலை அதிகப்படுத்த நமது மூதாதையர் சொல்லும் வழிமுறைகள் இன்றைக்கும் பயன் தர வல்லன. ஆனால் தீட்டு என்று சொல்லி மகப்பேறு முடிந்த நிலையில் பெண்ணை ஓர் அறையில் இருக்க வைப்பது நல்லதல்ல. அந்த நேரத்தில் மன அழுத்த நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே அவரை வீட்டிற்கு வெளியில் போகவும் தடை சொல்வது நல்லதல்ல. நடமாடி, சூரிய வெளிச்சம் படுவதும், புதிய நண்பர்களைக் காண்பதும் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும்.

மருத்துவ முடிவுகள்
அமெரிக்காவில் பல சமயம் மருத்துவ முடிவுகளை நோயாளிகளையே எடுக்கச் சொல்லுவதுண்டு. குடும்பத்தினரை ஆலோசித்து எடுப்பது அவ்வளவாக பழக்கத்தில் இல்லை. ஆனால் மருத்துவரிடம் அதைத் தெளிவாக எடுத்துச் சொல்வதன் மூலம் நமது கலாசாரத்தைப் புரிய வைக்க முடியும். மருத்துவரிடம் கேள்வி கேட்டு விவரங்களைப் பெறவும் பழகிக் கொள்ள வேண்டும்.

பாலையும் நீரையும் பிரித்து எடுக்கும் அன்னப் பறவை போல் நமது பழக்க வழக்கங்களில் எது தேவை, எது தேவையில்லை என்று சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும்.

எனது முழு உரையை இணையம்வழிக் கேட்க

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com