காய்கறி-டோஃபு, தேங்காய்ப்பால் உருண்டைக் குழம்பு (மூன்றாம் பரிசு)
தேவையான பொருட்கள்:

குழம்பு செய்ய:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கிண்ணம்
வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு - 2 கிண்ணம்
நறுக்கிய மிளகாய் - 10-15
இஞ்சி - 1 துண்டு
கிராம்பு - 5
பட்டை - 1
தேங்காய்ப் பால் (சர்க்கரை சேர்க்காதது) - 1 1/2 கிண்ணம்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப
ஆலிவ் எண்ணெய் (அ) கனோலா எண்ணெய் - 1 மேசைக் கரண்டி

வெஜிடபிள் உருண்டை செய்ய:
நறுக்கிய காரட், பீன்ஸ், காலிப்ளவர், பட்டாணி - 1/2 கிண்ணம் (ஒவ்வொன்றும்)
டோஃபு துருவியது (Extra firm Tofu) - 1/2 கிண்ணம்
வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு - 1/2 கிண்ணம்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
மசாலாப் பொடி - 1/4 தேக்கரண்டி
ஓமப்பொடி - கொஞ்சம் (தேவைப்பட்டால்)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:
காய்கறிகளை வேகவைத்து, டோஃபு, பொடிகள், உப்பு சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அதை ரொட்டித் தூளில் பிரட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். (பொரிப்பதற்கு பதிலாக அவனில் 15 நிமிடம் 375 டிகிரியில் பேக் செய்து கொள்ளலாம்)

குழம்பு:
பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, லவங்கம், பட்டை, வெங்காயம் போட்டு 4-5 நிமிடத்திற்கு வதக்கவும். அத்துடன் இஞ்சி அரைத்தது, நறுக்கிய மிளகாய் போட்டு மேலும் 2-3 நிமிடத்திற்கு வதக்கவும். பிறகு மசித்து வைத்த உருளைக் கிழங்கு சேர்த்து ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டு 2-3 நிமிடத்திற்குக் கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால், கறிவேப்பிலை, மிளகுப் பொடி சேர்த்து 1-2 நிமிடத்திற்குக் கொதிக்க விட்டு நிறுத்தவும். பரிமாறுவதற்கு முன்பு பாத்திரத்தில் உருண்டைகளைப் பரத்தி, குழம்பை அதன் மேல் ஊற்றி கொத்த மல்லியால் அலங்கரித்துப் பரிமாறவும்.

இந்த உருண்டைக் குழம்பை இட்லிக்கோ இடியாப்பத்துக்கோ தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். இதில் புரதம், நார்ப்பொருள், தாது உப்புகள் நிறைந்துள்ளது. இது எல்லா வயதினருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும்.

சித்ரா ராஜசேகரன், காவேரி கணேஷ்
தமிழாக்கம்: ஜெயந்தி ஸ்ரீதர், சாக்ரமெண்டோ (கலி.)

© TamilOnline.com