அயல்நாட்டில் இருப்பவர்கள்தாம் தமிழுக்கு அதிகம் உழைக்கிறார்கள்: கவிமாமணி இலந்தை ராமசாமி
கவிமாமணி, பாரதி பணிச் செல்வர், சந்தத் தமிழ்க்கடல் எனப் பல்வேறு பட்டங்கள் பெற்றவர் இலந்தை சு. ராமசாமி. அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஏமன், ஹவாய், கோலாலம்பூர், பாங்காக், அலாஸ்கா என உலகின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். சிறந்த கவிஞர். கட்டுரையாளர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், இலக்கியவாதி எனப் பன்முகம் கொண்டவர். ஆசுகவி. தொலைபேசித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தொடங்கி நடத்திவரும் 'சந்தவசந்தம்' மின்மடற்குழுவும் ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இது மரபுக் கவிஞர்களுக்கு பயிற்சிக்கூடமும் காட்சியகமும் ஆகும். தென்றலுக்காக இலந்தையாரைச் சந்தித்த போது...

கே: உங்கள் இளமைப்பருவத்திலிருந்தே தொடங்குவோமா?

ப: என் பெற்றோருக்கு நான் எட்டாவது பிள்ளை. வசதியான சூழல் கிடையாது. நான் கயத்தாறில் படித்தேன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவன் நான்தான். பள்ளி இறுதித் தேர்விலும் முதலாவதாக வந்தேன். அப்போதெல்லாம் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை, கல்லூரி நிர்வாகத்தினரே தேடிவந்து தமது கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்வார்கள். எனது பள்ளித் தலைமையாசிரியர் சுப்ரமணிய பிள்ளை பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களின் நண்பர். அ.சீ.ரா. அப்போது தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் முதல்வர். அவரிடம் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். உடனே அ.சீ.ரா. என்னைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறும், உயர்கல்விக்குத் தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார். அது என் வாழ்வின் திருப்புமுனை.

1958 முதல் 1962 வரை அ.சீ.ரா. அவர்கள் இல்லத்திலேயே தங்கிப் படித்தேன். விடுமுறைக்குக் கூட ஊருக்குச் செல்ல மாட்டேன். பேராசிரியரின் இல்லத்தில் மிகப் பெரிய நூலகம் இருந்தது. ஓய்வு நேரத்தில் அதிலிருந்த நூல்களைப் படிப்பேன். எனது இலக்கிய ஆர்வமும் வளர்ந்தது.

கே: கவிதை ஆர்வம் தொடங்கியது எப்போது?

ப: பள்ளியில் படிக்கும் போதே. பின்னர் கல்லூரிப் படிப்பின்போது தொடர்ந்தது. எங்கள் கிராமத்தின் முதல் பட்டதாரி நான்தான். யாரிடமிருந்தாவது நூல் கிடைக்கும்போது ஒருமுறை படித்து விட்டால் அதை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் எனக்கு இருந்தது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் கி.வா.ஜ. அவர்களின் 'கவி பாடலாம்' தொடர் மஞ்சரியில் வெளியாகிக் கொண்டிருந்தது. நூலகத்தில் அதை வாசித்துக் கவிதை இலக்கணத்தைக் கற்றுக் கொண்டேன். மற்றொரு முக்கிய காரணமாகப் பேராசிரியர் அ. சீனிவாசராகவனைச் சொல்லலாம்.

கே: பேராசிரியர் சீனிவாசராகவனுடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் குறித்து...

ப: பேராசிரியர் ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் அளவற்ற புலமை மிக்கவர். சிறந்த சொற்பொழிவாளர். கம்பன், சிலம்பு, தேவாரத் திருமுறைகள் உட்பட இலக்கியங்கள் பலவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். 'நாணல்' என்ற புனைபெயரில் கவிதைகள் பல இயற்றியவர். டெல்லியில் நடைபெற்ற மொழிகளுக்கான மாநாட்டில், தமிழ் மொழியின் சார்பாகக் கலந்து கொண்டு ஹிந்தி ஆர்வலர்களே வியப்புறும் வண்ணம் பேசி, நேருவையே வியப்படைய வைத்ததுடன் அவரது பாராட்டையும் பெற்றவர். அந்தக் காலத்தில் அவரைப் பார்க்க வரும் பெரியோர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. பாரதியாரின் மாமா, கி.வா.ஜ. ஆகியோர் வந்திருக்கிறார். காரைக்குடி கம்பன் விழாவுக்குப் பேராசிரியருடன் செல்லும்போது பல அறிஞர்களைச் சந்தித்திருக்கிறேன்.

அ.சீ.ரா. ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் சொல்வார். முதலடி கொடுத்து, இவ்வாறு முடிய வேண்டும் என்று குறிப்புக் கொடுத்து எழுதச் சொல்வார். தினம்தோறும் இரவு உணவின் போது கவிதை, இலக்கிய உரையாடல் நடக்கும். அவர் கொடுத்த பயிற்சிகளால் எனது இலக்கிய ஆற்றல் மேம்பட்டது. அவர் 'சக்தி' என்னும் தலைப்பு கொடுத்து நான் எழுதியதுதான் என் முதல் கவிதை. அதன் பின்னர் 1960ல் பேராசிரியர் தலைமையில் நடந்த ஒரு கவியரங்கத்தில் கவிதை வாசித்தேன். அது தான் எனது முதல் கவியரங்கம்.

கே: எப்பொழுது சென்னை வந்தீர்கள், சென்னை வாழ்க்கை குறித்தும், பாரதி கலைக்கழகத்துடன் உங்கள் தொடர்புகள், அனுபவங்கள் குறித்தும் சொல்லுங்கள்...

##Caption##ப: 1965வரை தூத்துக்குடியில் இருந்தேன். பின்னர் தொலைபேசித்துறையில் இள நிலைப் பொறியாளர் பணி கிடைத்தது. அதற்காகத் திருவனந்தபுரம் சென்றேன். மீண்டும் 1966ல் சென்னைக்கு வந்தேன். 1968ல் திருமணம் நடந்தது. நான் குடியிருந்த வீட்டின் மாடியில் பாலசுப்ரமணியன் என்பவர் இருந்தார். அவர் பாரதி கலைக் கழகத்தின் பொருளாளர். 1971 மே மாதத்தில் இளங்கார்வண்ணன் இல்லத்தில் நடந்த குழந்தைக் கவியரங்கத்தில் கலந்து கொள்ள பாலசுப்ரமணியன் அழைப்பு விடுத்தார். 'ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... டெலிபோன் ஒலிக்குது' எனத் தொடங்கும் ஒரு குழந்தைப் பாடலை நான் வாசித்தேன். அது அனைவரது பாராட்டையும் பெற்றது. தொடர்ந்து குழந்தைகளுக்காகப் பாடல் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தையும் அது தந்தது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினேன். அழ. வள்ளியப்பாவின் குழந்தை எழுத்தாளர் யார், எவர் என்ற நூலில் என்னைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து மாதாந்திரக் கவியரங்குகளில் நான் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். இன்றைக்குத் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் பல கவிஞர்கள் பாரதி கலைக் கழகத்தில் கலந்து கொண்டு கவிதை பாடியிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் விஞ்ச வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்து கவிதை படிப்போம். இலக்கிய உலகில் அது ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். இளையவன், மதிவண்ணன், தேவநாராயணன், தமிழழகன், இளந்தேவன், கே.வி.ராமசாமி எனப் பல பிரபல கவிஞர்கள் பாரதி கலைக்கழகத்தினர்தான். 1981ல் எனக்கு 'கவிமாமணி' பட்டம் கிடைத்தது.

கே: கவிதை தவிர வேறு எந்தெந்தத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டு?

ப: கவிதை நாடகங்கள் எழுதியிருக்கிறேன். அவை நடிக்கப்பட்டிருக்கின்றன. வானொலியில் அப்போது நடந்து வந்த 'உங்கள் கவனத்திற்கு' என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறேன். சென்னை வானொலி நடத்திய கவிதைப் போட்டியில் நான் வழங்கிய 'நம்மைச் சுற்றி' என்ற கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டில் வடிவமைத்து நடத்தினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து 'அய்யப்பன் வில்லுப்பாட்டு' எனச் சிலவற்றை வடிவமைத்தேன்.

கதை எழுத வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. அப்போது அமுதசுரபியில் குறுநாவல் போட்டி அறிவித்திருந்தார்கள். தூத்துக்குடியில் விஸ்வநாத அய்யர் என்ற என் உறவினர் இருந்தார். அவர் சிலம்பாட்டத்தில் மிகப் பெரிய விற்பன்னர். கால்களில் சலங்கை கட்டிக் கொண்டு ஆடுவார். சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் எல்லாம் அவரிடம் வந்து பயின்றார்கள். அந்த அளவுக்கு வீரமும் சிறப்பும் மிக்கவர். அவரையும், எனது தந்தை கதாபாத்திரத்தையும் முன் மாதிரியாகக் கொண்டு எழுதி அனுப்பிய 'சிலம்பில் தெறித்த சிவப்பு முத்துக்கள்' நாவலுக்கு முதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து பல கதைகள் எழுதினேன். அமுதசுரபி, கலைமகள் என பலவற்றில் எனது கவிதைகள் வெளியாகின. பரிசுகள் பெற்றன.

கே: கவியரங்கம், கவிதைப் பட்டிமனறம் என்று நாடெங்கும் பயணம் புரிந்த அனுபவம் உங்களுக்கு உண்டு. அந்த அனுபவம் பற்றி...

ப: கிட்டத்தட்ட 1200 கவியரங்குகளுக்கு மேல் கலந்து கொண்டிருக்கிறேன். 200 கவியரங்குகளுக்கு மேல் தலைமை தாங்கி யிருக்கிறேன். நான், வ.வே.சு, இளந்தேவன், மதிவண்ணன் எனப் பலர் ஒரு குழுவாக இயங்கி, தமிழகம் முழுவதும் சென்று பல கவிதைப் பட்டிமன்றங்களை நடத்தியிருக்கிறோம். அதற்கு அக்காலத்தில் அவ்வளவு வரவேற்பு இருந்தது.

ராமநாதபுரம் பகுதியிலுள்ள 'கானூர்' என்ற ஊருக்கு 1984-ல் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக நடந்த பட்டிமன்ற விழாவிற்காகச் சென்றிருந்தோம். கவிஞர்களை எப்படி வரவேற்பது என்பதை அவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். ராஜ உபசாரம். அற்புதமான விருந்தோம்பல்.

ஊர்மக்கள் கவிஞர்களை வரிசையில் நிற்க வைத்து, எண்ணெய் தடவிக் குளிப்பாட்டி, பின் உணவிற்காகத் தரையில் குழிவெட்டி தலைவாழை இலையை அதில் வைத்து, உணவு படைத்தனர். குடிப்பதற்குத் தண்ணீர் கிடையாது, முழுக்க முழுக்க இளநீர்தான். அதே மாதிரிதான் உணவும், அவ்வளவு சிறப்பு. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடிச் செய்தனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் எங்களுக்கு உணவு வந்தது. கானூர் அனுபவம் என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒன்று.

கே: நீங்கள் எழுதிய நூல்கள் குறித்து...

ப: பல மரபுக் கவிதை நூல்களை இயற்றியிருக்கிறேன். ஆனால் மரபுக் கவிதைகளிலும் புதுக்கவிதையின் கூறுகளைக் கொண்டு வர முடியும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. கணவனின் மீதான ஏக்கத்தை மையமாக வைத்து நாட்டுப்புறப் பாடலாக நான் எழுதிய ஒரு கவிதை கல்கி தீபாவளி மலரில் வெளியாகிப் பாராட்டைப் பெற்றது.

'பஜ கோவிந்த'த்தைச் சந்தமும், கவிதை நயமும், பொருள் விளக்கமும் மாறாமல் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ஆதிசங்கரரின் 'கனகதாரா ஸ்தோத்திர'த்தை மொழி பெயர்த்திருக்கிறேன். அதை அமுதசுரபி இதழுக்கு அச்சுக்கு அனுப்பும் சமயம் வெகுநாட்களாக எனக்கு வராமல் இருந்த அலுவலகப் பணம் வந்து சேர்ந்தது. அதனைப் படித்த பலபேருக்கு இவ்வகை அதிசய நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருக்கின்றனர். ஆதிசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம், தோடகாஷ்டகம் எனப் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன். இதுபோன்ற ஆன்மீகப் பணிகளுக்காக சிருங்கேரி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் சார்பாகப் புதுக்கோட்டை ராமகதா ரத்னம் தியாகராஜன் என்னை கௌரவித்திருக்கிறார்.

'கீத கோவிந்தம்' என்னும் ஜெயதேவரின் அஷ்டபதியைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதில் சிருங்கார ரசம் சற்று அதிகமாக இருக்கும். அதனால் நான் எழுதி முடித்தாலும் அதை வெளியிடச் சற்றுத் தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அது உண்மையில் கூறுவது சிருங்கார ரசமல்ல; ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஒன்றிணையும் தத்துவத்தையே அது கூறுகிறது என்பதும், அதனை நான் அவசியம் வெளியிட வேண்டும் என்பதும் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளரால் எனக்கு உணர்த்தப்பட்டது. அதன் பின் அது நூலாக வெளியானது.

மும்பை தமிழ்ச் சங்கம் வெளியிட்ட ‘சீர்வரிசை' என்ற இதழில் 'திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும்' என்ற தலைப்பில் மேலாண்மைச் சிந்தனைகள் குறித்து 22 இதழ்களில் தொடர்கட்டுரை எழுதினேன். பின்னர் அது நூலாக வெளியிடப்பட்டது. தற்போது வெளிநாடுகளில் சொல்லித் தரப்படும் மேலாண்மைக் கலை உத்திகளையெல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பது, நாம் எண்ணி மகிழத் தக்கது. பாரதியின் விஞ்ஞானக் கருத்துக்களை மையமாக வைத்து 'பாரதியின் அறிவியல்' என்ற நூலை எழுதியிருக்கிறேன். அதனை ஸ்ரீராம் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.

நான் எழுதிய எடிசன், ஹென்றி ஃபோர்டு, கிரஹாம்பெல், வ,வே.சு. அய்யர், வீர சாவர்க்கர் போன்றோர் வாழ்க்கை வரலாறுகளை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தற்போது பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். பாரதியைப் பற்றி மற்றவர்கள் சொல்லாததை, பாரதியின் நோக்கிலிருந்தே சொல்ல வேண்டும் என்று கவனமாகச் செய்து வருகிறேன்.

கே: பல வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ்ப் பணி ஆற்றியிருக்கிறீர்கள் அல்லவா, அந்த அனுபவங்கள் குறித்து...

ப: ஏமனில் நான்காண்டுகள் இருந்தபோது தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து, பல நல்ல இலக்கியப் பரிச்சயங்களை அவர்களுக்கு ஏற்படுத்தினேன். வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், கவியரங்கம் என யாவற்றையும் சிறப்பாக நடத்தினேன். அங்குள்ள குழந்தைகளுக்கு இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்து, அவர்களை வைத்து ‘பாரதி விழா'வை மிகச் சிறப்பாக நடத்தினேன். தமிழ்ச்சங்கத்தின் சார்பாக 'சங்கம்' என்ற பத்திரிகையையும் உருவாக்கி நடத்தினோம்.

அமெரிக்கா, லண்டன், கோலாலம்பூர், சிங்கப்பூர், பாங்காக், சியோல், தைவான், கனடா, அலாஸ்கா, ஹவாய் தீவுகள் சென்றிருக்கிறேன். அமெரிக்காவில் 30 மாகாணங்களுக்குச் சென்றிருக்கிறேன். அந்த அனுபவம் பற்றி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'தமிழ் டைம்ஸ்' இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். என் மகள் நியூஜெர்சியிலும், மகன் சிகாகோவிலும் இருப்பது, என் பயணங்களுக்கு உதவியாக இருக்கிறது. அலாஸ்கா பயண அனுபவங்களையும் நூலாக எழுதியிருக்கிறேன்.

அமெரிக்காவில் யூனிவர்சிடி ஆஃப் மிஷிகனின் தெற்காசிய மொழிகள் பிரிவில், திருக்குறள் சிந்தனைகள் குறித்து உரையாற்றியிருக்கிறேன். அங்குள்ள பல தமிழ்ச்சங்கங்களில் சிறப்புரையாற்றியிருக்கிறேன். தமிழ்ச்சங்கப் பேரவையான FeTNA-வில் உரையாற்றியிருக்கிறேன். FeTNA 2006ல் நியூயார்க்கில் நடத்திய தமிழ்க் கருத்தரங்கில் 'தமிழால் முடியும்' என்ற தலைப்பிலான கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தினேன்.

கே: இணைய உலகில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக மடற்குழுக்களை உருவாக்கி நடத்தியிருக்கிறீர்கள், அந்த அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்.

ப: தமிழ்நாட்டில் இருப்பவர்கள் 'தமிழ் வாழ்க' என்று வெற்றுக் கூச்சல் போட்டுக் கொண்டு தமிழுக்குச் செய்கிறதை விட, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள், பிறமொழி பேசினாலும் தமிழின் மீது ஆர்வம் கொண்ட தமிழார்வலர்கள், தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பிறநாட்டு அறிஞர்கள்தான் தமிழின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் அதிகம் உழைத்திருக்கிறார்கள். இன்னமும் உழைத்து வருகிறார்கள். இதனை நான் உறுதிபடவே சொல்கிறேன். அமெரிக்கா, ஜெர்மன், ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் என உலகெங்கிலும் உள்ள தமிழார்வலர்கள் தமிழின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் சீரிய பணி ஆற்றியிருக்கிறார்கள். எழுத்துரு ஆக்கம், எழுத்துரு மாற்றி, தமிழ்ச் செயலிகள், தமிழ் அகராதி என அவர்கள் சேவை மிகப் பெரிது.

நான் 1998-ல் பதவியிலிருந்து ஓய்வு பெற்று என் மகனைப் பார்க்க அமெரிக்கா சென்றபோது தான் கணினி எனக்கு அறிமுகமானது. அதுவரை எனக்கு கம்ப்யூட்டர் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு கற்கத் தொடங்கினேன். நெட்வொர்க்கிங் பற்றிய மைக்ரோசாஃப்டின் MCSE என்னும் பட்டப்படிப்பை ஆறே மாதங்களில் முடித்தேன். கற்கும் ஆர்வத்துக்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு நானே உதாரணம்.


##Caption## உலகளாவிய தமிழர்கள் பலருக்குக் கவிதை ஆர்வம் இருக்கிறது. ஆனால் கவிதை இலக்கணத்தில் போதிய பயிற்சி இல்லை. ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஏற்கனவே Forumhub (மன்ற மையம்) ஹரிகிருஷ்ணன், பசுபதி, அனந்த் போன்றோர் தமிழ்க் கவிதை, இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருந்தனர். ஆகவே தமிழ்க் கவிதை வளர்ச்சிக்காக ஒரு மடற்குழு தொடங்கி நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எனவே 'சந்த வசந்தம்' என்ற யாஹூ குழுமத்தை ஆரம்பித்தேன். நான் ஏற்கனவே 'சந்தவசந்தம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை (http://www.sysindia.com/emagazine/santha/index.html) வெளியிட்டிருந்ததால் அதனையே குழுமத்தின் பெயராகச் சூட்டினேன்.

பல்வேறு பரிசோதனை முயற்சிகளை அதில் மேற்கொண்டோம். சான்றாக 'பின்னல்' என்ற வடிவத்தைச் சொல்லலாம். வார்த்தைகளை பின்னல் மாதிரி முன் பின்னாகப் போட்டுக் கவிதையாக்கும் வடிவம் அது. அதுபோக இலக்கணம் பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டோம். உதாரணமாக, கட்டளைக் கலித்துறையில் பாடல் இயற்றுவது எப்படி, அதற்கான இலக்கண வரைமுறைகள் என்னென்ன, யார், யார் அது குறித்து என்னென்ன கூறியிருக்கிறார்கள் என்றெல்லாம் கட்டுரைகள் எழுதப்பட்டு அவை மின்நூலாக ஆக்கம் பெற்றன.

தமிழ் இலக்கணத்தில் அடிப்படை அறிவும், இலக்கிய ஆர்வமும் இருந்தால் போதும் ஒருவர் சந்தவசந்தத்தின் மூலம் கற்றுக் கவிஞராகி விடலாம். இம் மடற்குழுவில் சேர்ந்து கவிஞராக உருமாற்றம் பெற்ற பலர் இருக்கிறார்கள். மரபுதான் என்றில்லை, புதுக்கவிதைகளும் எழுதலாம்.

அடுத்து நான் ‘துறைமுகம்' என்ற குழுமத்தை ஆரம்பித்தேன். தமிழில் கவிதைகள் எழுதினால் மட்டும் போதாது. அதை தமிழறியாத பிற நாட்டவர்க்கும் அறிமுகப்படுத்த வேண்டும். அதுபோலப் பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை, கவிதைகளை தமிழ்ப்படுத்தி அதனை தமிழருக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டது இது. மரபின் வளர்ச்சிக்காக ‘மரபு மலர்கள்' என்ற குழுமத்தை ஆரம்பித்தோம்.

மடற்குழுக்களில் பல புதுமைகளைச் செய்தோம். முதன்முதலில் இணைய உலகில் கவியரங்கம் நடத்தியது நாங்கள் தான். தலைவர் வரவேற்புரை, கவிஞரின் கவிதை, அதன் மீதான விமர்சனம், இறுதியில் தலைவரின் கருத்து, தீர்ப்பு என வழக்கமான கவியரங்கம் போலவே அதனை நடத்தினோம். கவிஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சாதாரணக் கவியரங்குகள் ஓரிரு மணிநேரத்தில் முடிந்துவிடும். ஆனால் எங்களது இணையக் கவியரங்கம் முடிய ஒரு மாதம் வரை கூட ஆகும். படிக்க, விமர்சனம் பண்ண என நாட்கள் கூடுதலாகும். இதுவரை முப்பது கவியரங்கங்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். கவியரங்கம் போதாது என்று கவிதைப் பட்டிமன்றமும் நடத்தியிருக்கிறோம்.

இதில் இணைந்து 70 வயதிற்கு மேற்பட்ட தங்கமணி என்ற பெண்மணி பல பாடல்களை இயற்றியிருக்கிறார். அவருக்கு இருந்த இதய அழுத்த நோயிலிருந்தும் குணமாகியிருக்கிறார். இலக்கியம் அமைதியைத் தருகிறது என்று கூறி மகிழ்ச்சி தெரிவிக்கிறார். ஆக இலக்கியத்தினால் நோய்களும் குணமாகின்றன என்பது நமக்கு ஒரு புதிய, இனிய செய்தியாக இருக்கிறது.

சொக்கன் அவர்கள் நடத்திய ‘தினம் ஒரு கவிதை' குழுமத்தின் தமிழார்வலர்களுக்காக 'விருத்தம் எழுத வருத்தம் எதற்கு' என்ற தலைப்பில் 77 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பின்னர் மரபு மலர்களில் அந்தக் கட்டுரையைத் தொடர்ந்தேன். அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விருத்தத்திற்கு என்று அது ஒரு தனி நூலாகி விட்டது. அக்காலத்தில் வீரபத்ர முதலியார் என்பவர் ‘விருத்தப்பாவியல்' என்னும் நூலை எழுதியிருக்கிறார். அவர்கூட உதாரணங்களுக்கு மூன்று நான்கு வகைகளைக் கூறி விட்டு, இதற்கு மேல் யாரும் எழுதக்கூடாது என்று கூறிவிட்டார். கவிஞனின் கற்பனைக்கும், ஆர்வத்திற்கும் தடைபோடக் கூடாது அல்லவா? ஆகவே அதன் பிற வகைமைகள் பற்றி எனது கட்டுரைகளில் மிக விரிவாக நான் குறிப்பிட்டிருக்கிறேன். விருத்தம் பற்றிய ஆதார நூலாக அதைக் கொள்ளலாம்.

கே: எதிர்காலத் திட்டம் என்ன?

ப: பாரதியின் இலக்கிய ஆழம், அவரது எழுத்து, கவிதை வீச்சு, சமுதாயப் புரட்சிபற்றிப் பல எழுத்தாளர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். ஆனால் பாரதியைப் பற்றிக் கூறும் யாரும் இதுவரை யாரும் தொடாத துறை ஒன்று உள்ளது. அதுதான் அறிவியல். அந்தத் துறையில் பாரதிக்கு இருந்த ஆர்வம், அவன் எண்ணங்கள், சிந்தனைகள் பற்றி விரிவான ஒரு நூல் எழுதவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பாரதி வெறும் கவிஞன் மட்டுமல்ல. சிறந்த உரைநடையாளனும் கூட. ஒருவேளை பாரதி கவிதை எழுதாமலே போயிருந்தாலும் கூட, உரைநடை எழுத்துக்களினாலேயே இந்தப் புகழ் கிடைத்திருக்கும். பாரதியின் உரைநடையும், கதைகளும் அவ்வளவு சிறப்பானவை. தனது எழுத்துக்களில் பாரதி அறிவியலைப் பற்றி மிக அழகாகச் சொல்லியிருக்கிறான்.

வானத்து நட்சத்திரங்கள், அதன் தன்மை, அவற்றிற்கிடையே உள்ள தூரம், வால் நட்சத்திரம், அதன் உள்ளே உள்ள நியூக்ளியஸ், வாயுக்கள் பற்றி, அண்டங்கள் பற்றி, விரிவாக அழகாக பாரதி சொல்லியிருக்கிறான்.

1910ல் முதன்முதலில் ஆகாய விமானம் சென்னை ‘சிம்சன்' நிறுவனத்தில் செய்யப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்ட நிகழ்ச்சியைத் தனது பத்திரிகையில் பாராட்டி, படங்கள் மற்றும் குறிப்புகளுடன் விளக்கியிருக்கிறார். அதை வடிவமைத்தது ஒரு ஃப்ரெஞ்சு விஞ்ஞானி. அதைச் செயல்படுத்தியது முழுக்க முழுக்கத் தமிழர்கள். அதன் எடை, அதன் குதிரை சக்தி, அதை தீவுத்திடலிலிருந்து பல்லாவரம் வரை வெள்ளோட்டம் விட்ட செய்தி என விரிவாக எழுதியிருக்கிறார். 1903ல்தான் ரைட் சகோதரர்கள் ஆகாய விமானத்தை உருவாக்கிப் பறக்கவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஒரு தீர்க்கதரிசியாக, விஞ்ஞான ஆர்வலராக பாரதி இருந்திருக்கிறார். அதனை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதே என் அவா.

கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

ப: தென்றல் இதழ் ஒரு தரமான இதழ். தமிழ்நாட்டில் இருக்கும் இதழ்கள் முழுக்க முழுக்க சினிமா சம்பந்தப்பட்ட வணிக இதழ்களாக மாறிவிட்டன. தமிழுக்குத் தொண்டு செய்வதாக எதுவும் இல்லாத சூழலில், ஓர் அமெரிக்க இதழ் இலக்கியம், மருத்துவம், இசை என மக்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்து செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, நல்ல இலக்கியப் பத்திரிக்கையாக வெளிவருவது பாராட்டத்தக்கது. அதிலும் வருவாயை கவனத்தில் கொள்ளாமல் இலக்கிய சேவையையே நோக்கமாகக் கொண்டு தரமான இதழாக வெளிவருவதற்காக நான் தென்றலை வாழ்த்துகிறேன்.

இலந்தையாரின் மின்னஞ்சல்: elandhai@gmail.com

சந்தவசந்தம் மடற்குழு முகவரி: groups.google.com/group/santhavasantham

***

கையில் கிடைத்த கைலாய மலை!

கைலாய மலை சுற்றுப் பயணத்தின் போது மலையின் அடிவாரத்திற்குச் சென்று தங்கினோம். பரிக்ரமா (மலை வலம் வருதல்) செல்லலாம் என்றால் முடியவில்லை. வயது காரணமாகத் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. ஆகவே என் மகன் மட்டும் சென்றான். வயது காரணமாகக் கைலாய தரிசனம் கிட்டாத திருநாவுக்கரசருக்கு இறைவன் திருவையாற்றில் காட்சி தந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. அவர் தமிழில் கவிதை பாடினார், இறைவன் காட்சி அளித்தார். நாமும் கவிஞன்தானே, இறைவனை வேண்டிப் பாடுவோம் என்ற எண்ணத்துடன்

சுற்றியே தேவா வந்து தொழுதுனைக் காண்பதற்கு
உற்றதோர் தொய்வினாலே ஒருவனே கூடவில்லை
முற்றுமே உனைக்காணாது முடங்கவோ கயிலைநாதா
எற்றுணையாக வேணும் எனக்குனைக் காட்ட வேண்டும்

என்று ஒரு கவிதையை நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுதி முடித்தேன். எழுதி நிமிர்ந்தால் என் மகன் வந்து நிற்கிறான். ‘பனி அதிகம் இருப்பதால் செல்ல முடியவில்லை. திரும்பி விட்டோம்' என்று கூறினான். அதுமட்டுமல்ல. அவன் செல்லும் வழியில் உடன் சில திபெத்திய லாமாக்கள் வந்திருக்கின்றனர். இவனும் வழியில், லிங்க வடிவிலிருந்த சிறுசிறு கற்களைச் சேகரித்துக் கொண்டே சென்றிருக்கின்றான். லாமா காரணம் வினவியதற்கு, லிங்க வடிவில் இருப்பதால் அவற்றைச் சேகரிப்பதாக பதில் கூறியிருக்கிறான். அவர் உடனே ஏன் லிங்கத்தைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாய், நான் உனக்கு இந்தக் கைலாய மலையையே தரட்டுமா என்று கேட்டிருக்கிறார். இவன் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் போதே, மற்றொரு லாமா, தன்னிடமிருந்த ஒரு பையிலிருந்து கறுப்புநிறக் கல் ஒன்றை எடுத்து அவன் கையில் வைத்திருக்கிறார். அதைப் பார்த்ததும் அவன் அப்படியே திகைத்துப் போய் நின்று விட்டிருக்கிறான். காரணம், அந்தக் கல் அப்படியே கைலாய மலையின் சிறு வடிவத்தில், கறுப்பு நிறத்தில் இருந்திருக்கிறது.

'அப்பா, நான் கைலாயத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் அப்பா' என்று கூறி, அவன் அந்தக் கல்லையும் என்னிடம் காண்பித்து. நடந்த சம்பவத்தை விவரித்தபோது என்னால் பரவசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது அதை எனது மகன் சிகாகோவில் பூஜையறையில் வைத்து பூஜை செய்து வருகிறான். அதற்கு விபூதி அபிஷேகம் செய்தால் கயிலை மலையையே பார்ப்பது போலவே இருக்கும்.
***

இலந்தையார் மகளைக் காப்பாற்றிய இரட்டைக் குழந்தைகள்!

இலந்தையாரின் மகள் கவிதா நியூஜெர்ஸியில் வாழ்கிறார். சட்டம் பயின்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். திருமணத்திற்குப் பிறகு அமெரிக்கா வந்து நியூஜெர்சியில் வசிக்கிறார். அமெரிக்காவில் சட்ட உயர்படிப்புப் படித்துத் தற்சமயம் குடிவரவு வழக்கறிஞராக (இமிக்ரேஷன் அட்டர்னி) இருக்கிறார். அவரும் அவரது கணவர் பாலாஜியும் 'மித்ர' என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். பல ஆதரவற்ற பெண்களுக்கு அந்நிறுவனம் கைமாறு கருதாது உதவி வருகிறது.

9/11 துயரச் சம்பவம் நடந்தபோது கவிதா அதிலிருந்து தெய்வாதீனமாகத் தப்பினார். அதைக் கவிதாவின் வாயாலேயே கேட்போம்:

"1999ம் ஆண்டு. அட்லாண்டாவில் உள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தின் நியூயார்க் கிளை அலுவலகத்துக்கு இடம் தேடும் பொறுப்பில் இருந்தேன். நானும் அந்நிறுவனத்தின் தலைவரும் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் 93 மாடியில் நின்று கொண்டிருந்தோம்.

"வெளியே நீலக்கடல், வான்தடவும் மாடிக் கட்டடங்கள் கொண்ட நியூயார்க் நகரம் தெரிந்தது. அலுவலகம் தொடங்க அந்த இடமே சரி என நினைத்தோம். அதை வாடகைக்கு எடுப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க மறுநாள் அந்தக் கட்டடத்திற்குள் நுழையுமுன் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. அந்தக் கட்டிடத்திற்கு நேர் எதிரே இருந்த மற்றொரு கட்டிடத்தில் 16ம் மாடியில் ஓர் அறை காலியிருப்பது தெரியவந்தது. அதைப் போய்ப் பார்க்கலாம் என்றேன். நிறுவனர்களுக்கு உலக வர்த்தக மையத்திலேயே (WTC) அறை எடுக்க ஆசை.

"அடுத்த கட்டிடத்தில் அறையிருந்தால் WTC என்ற பிரம்மாண்டத்தை அங்கிருந்து கண்டு ரசிக்கலாம். வாடிக்கையாளர்களுக்கும் அதன் அழகைக் காட்ட முடியும்" என்று சொன்னேன். ஏற்றுக்கொண்டார்கள். எதிர்க் கட்டடத்தில் அலுவலகக் கிளை அமைந்தது. தினந்தினம் WTCயின் பிரம்மாண்டத்தில் மயங்கினேன். என் தந்தை அக்கட்டிடங்களைப் பார்த்துவிட்டு ‘வானம் இன்னும் கொஞ்ச தூரம் என்று சொல்லும் மாடிகள்' என்றும் அடுத்துள்ள கட்டிடங்களைப் பார்த்து

'அம்மாடி இம்மாடி எங்கெங்கு பார்த்தாலும் அடுக்குமாடி' என்றும் சொன்னது நினைவுக்கு வந்தது.

"2000 ஆண்டில் எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அளவில்லா சந்தோஷம்.

"செப்டம்பர் 11, 2001. என் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு செல்போன் வாங்க வேண்டி இருந்தது. WTCயில் உள்ள கடை ஒன்றில் தள்ளுபடி விற்பனை இருந்ததால் அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தேன். அன்று என் மாமனார் இந்தியாவுக்குப் பயணப்படுவதாக இருந்தது. திடீரென எனது இரண்டு குழந்தைகளும் அழுது தீர்த்தன. எனவே அலுவலகத்திற்கு வழக்கமான நேரத்தில் கிளம்ப முடியவில்லை.

"செல்கிற வழியில் இடிபோல் செய்தி இறங்கியது. இரண்டு விமானங்கள் தாக்கி உலக வர்த்தக மையக் கட்டடங்கள் இடிந்து தீப்பிடித்து எரிவதாகச் சொன்னார்கள். மேலும் சிறிது தூரம் சென்றதும், கட்டடங்கள் தீப்பிடித்து எரிவதையும், இடிந்து விழுவதையும், மக்கள் குதிப்பதையும் தொலைவிலிருந்து காண நேர்ந்தது. அந்த நேரத்தில் நான் அந்தக் கட்டடத்தில் இருந்திருந்தால்...! உடல் பதறியது. அதை எழுதும் இந்தக் கணத்திலும் பதைக்கிறது.

"93ம் மாடியில் அலுவலகம் எடுப்பதிலிருந்து என்னைத் தடுத்தது எது? அன்றைக்கென்று குழந்தைகள் ஏன் என்னைத் தாமதப்படுத்த வேண்டும்?"

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com