ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
MY 2008க்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கிறார் குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். தென்றலுக்கெனப் பிரத்தியேக நேர்காணலுக்காக அட்லாண்டா நகரின் மத்தியப் பகுதியில் தங்கியிருந்த குருஜியை அபை, நந்து, வால்மீகி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தனர். நந்து தென்றல் இதழின் விநியோகஸ்தர். வால்மீகி Blue Shif நிறுவனத் தலைவர், சமூகத் தொண்டர். சந்திரசேகர் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS) உபதலைவர், FeTNA வின் இணைச் செயலாளர். அந்தச் சந்திப்பிலிருந்து...

கேள்வி: வணக்கம் குருஜி. 2009ல் ஜூலை 3, 4 தேதிகளில் அட்லாண்டாவில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு (FeTNA) நடக்க உள்ளது.

பதில்: நல்லது. எவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் வட அமெரிக்காவில்? எத்தனை பேர் இந்த நிகழ்ச்சிக்கு வருவார்கள்?

கே: இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். மாநாட்டில் 2000 முதல் 3000 பேர் வரை கலந்து கொள்வார்கள்.

கே: நீங்கள் பல ஆன்மீக நூல்களை எழுதியிருக்கிறீர்கள். தங்களைப் போன்ற ஆன்மீகவாதி ஒருவர் திருக்குறளுக்குத் தெளிவுரை எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம்.

##Caption## ப: கண்டிப்பாக. எனக்கும் ஆசையிருக்கிறது. போதிய காலஅவகாசம் இல்லாத காரணத்தால் என்னால் எழுத முடியவில்லை. கண்டிப்பாகக் நேரம் கிடைக்கும் போது 'திருமந்திரம்', 'திருக்குறள்' இரண்டுக்கும் உரை எழுத ஆவலாக உள்ளேன்.

கே: தமிழக அரசியலில் ஆன்மீகத்தை முற்றிலுமாக அகற்றிவிட முயற்சி நடந்து வருகிறது. இதனை எப்படி எதிர் கொள்வது?

ப: பொதுவாக ஜாதி என்பது தமிழக அரசியலில் அதிகமாகி விட்டது. ஜாதியை முன்வைத்த அரசியல் அதிகரித்து விட்டது. அதனால் அரசியல் தர்மம் தாழ்ந்து விட்டது. இந்தச் சூழல் மாற ஆன்மீகம் அதிகமாக, பரவலாகக் கொண்டாடப்பட வேண்டும். வெறும் பொருள் புரியாத மந்திரத்தைக் கேட்பதும் சூடம் ஏற்றுவதும் மட்டுமே ஆன்மீகம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.

கே: உலக அளவில் பல நல்ல காரியங்களில் ஈடுபட்டு வருகிறீர்கள். மனித நேயத்திற்கு எதிரான செயல்களில், குறிப்பாக இலங்கையில் நடைபெறும் தமிழருக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதிலும் நல்ல நிரந்தரமான தீர்வு கிடைப்பதிலும், முழு மனதோடு ஈடுபட்டுள்ளீர்கள். அது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!

ப: இது தமிழ் இனத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரும் இழப்பு. வெறும் கோபத்தாலோ, போராலோ வெல்லக் கூடிய விஷயம் அல்ல இது. அங்கு வாழும் தமிழ் இனத்தின் நன்மை கருதி ஒரு புதிய யுக்தியோடு செயல்பட்டால் மட்டுமே வெல்ல முடியும். அதுவும் படிப்படியாகத்தான் செய்ய முடியும். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் ஒரு நல்ல நோக்கத்திற்காக. எதுவும் சாத்தியமே!

கே: எங்களுக்கு உங்களது இந்த முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. வட அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் என்ற முறையில் எப்படி நாங்கள் உதவலாம்?

ப: இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமை பற்றி உங்கள் உள்ளூர் அரசியல்வாதிகளிடம் சொல்லுங்கள். பல்கலைக்கழகங்களில் புகைப்படக் கண்காட்சி நடத்துங்கள். பல பேரிடம் இது குறித்துப் பேசுங்கள். பல அமைப்புகளை அணுகுங்கள். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.

கே: குருஜி, சமீபத்தில் FeTNA இப்பிரசனை குறித்து சோனியா காந்தி அவர்களுக்கும் தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறது.

ப: இந்திய மத்திய அரசு தமிழர்களுக்காக ஒரு நல்ல நிலைப்பாட்டை எடுக்க இயலாத சூழ்நிலையில் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.

கே: இன்று தமிழ் இனம் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து ஒரு பொது நோக்கத்திற்காக உலக அளவில் ஒன்றுபட்டுச் செயல்பட முடியாத சூழ்நிலையில் இருக்கிறது. இதனை ஆன்மீகம் மூலம் எப்படி மாற்ற இயலும்?

ப: கண்டிப்பாக மாற்ற முடியும். உங்களைப் போன்றவர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்பட்டால் தமிழ் இனத்தில் மாற்றம் வரும்.

கே: சில சமுதாயங்களில் குறிப்பிட்ட நேரமும், அவர்களின் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையும் பொது நலனுக்காகக் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு விதி இருக்கிறது. நம் இனத்தில் ஏன் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை?

ப: நம் மக்கள் தற்போது இதனை உணர்ந்து வருகிறார்கள். கண்டிப்பாக எதிர்காலத்தில் மக்கள் செய்வார்கள். ஒரு நல்ல தலைமையும், சிறப்பான வழிகாட்டுதலும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்.

கே: சுவாசப்பயிற்சி என்பது எந்த அளவுக்கு முக்கியமானது?

ப: முறையான சுவாசப்பயிற்சி அனைத்து நன்மைகளையும் தரும். குறிப்பாக வன்முறையைக் குறைக்கும்.

கே: மலேசியத் தமிழர்களின் இனப் பிரச்சனையில் எப்படி நாங்கள் உதவ முடியும்?

ப: ஒரு குழுவை அமையுங்கள். பல மனிதநேய நிறுவனங்கள் வாஷிங்டனில்தான் உள்ளன. அந்தக் குழுவினர் சென்று நேரில் சந்தித்துப் பேசுங்கள். இதைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இதனால் உங்களுக்கும் நல்ல அனுபவம் ஏற்படும்.

கே: வட அமெரிக்கத் தமிழர்களுக்கு உங்கள் செய்தி என்ன?

ப: வாழும்கலைப் பயிற்சியின் அடிப்படை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்குச் செல்லுங்கள். உங்களால் முடிந்தவரை உங்கள் காலம் மற்றும் பொருள்கள் வழியே உதவுங்கள். ஒற்றுமையாக இணைந்து செயல்படுங்கள்.

குருதேவரிடம் நன்றி கூறி விடைபெற்றோம்.

ஸ்ரீஸ்ரீ அவர்களின் புத்தகங்கள்,
ஒலி-ஒளி நாடாக்கள் பெற:
THE ART OF LIVING
வியக்தி விகாஸ் கேந்திரா (இந்தியா)
எண். 19, 39வது 'ஏ' கிராஸ், 11வது மெயின், 4வது டி பிளாக்,
ஜெயநகர், பெங்களூரு - 560041

தொலைபேசி: 080-20622473
தொலை நகல்: 91-80-28432392
மின்னஞ்சல்: wkpress@gmail.com
இணையதளம்: www.artofliving.org

***


நோய் நீக்கும் மூச்சுப் பயிற்சி

வாழும் கலைப் பயிற்சி வகுப்புகளில் அடிப்படையானது நோய் நிவாரணம் தரும் மூச்சுப் பயிற்சி ஆகும். 4-6 நாட்களில் 16-18 மணி நேரம் நடத்தப்படும் இப்பயிற்சி, ஆயிரமாயிரம் பேர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி தந்துள்ளது.

வாழ்க்கையின் இரகசியத்தை உள்ளடக்கியது மூச்சு. நம்மில் உள்ள பிராணன் அதாவது உயிர்ச்சக்தியுடன் தொடர்புடையது மூச்சு. பிராணன் குறைவாக இருக்கிறபோது மனச்சோர்வு, மந்தம், சோம்பல், எதிலும் ஆர்வமின்மை போன்றவை நம்மில் ஏற்படுகின்றன. நமது மனமும் உடலும் பிராண சக்தியால் நிரம்பி இருக்கிறபோது, அதி ஜாக்கிரதை உணர்வு, உற்சாகம், நல்ல நகைச்சுவை உணர்வு ஆகியவை பொங்கிப் பெருகி வழிகின்றன. சில மூச்சுப் பயிற்சிகள் நமது உயிர்ச்சக்திக்குப் புத்துயிரளித்து, நமது உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. வாழும் கலைப் பயிற்சியில் நோய் நிவாரண மூச்சுப் பயிற்சி ஒரு செயல்முறை ஞானமாகவும், ஒரு நேரடி அனுபவப் பயிற்சியாகவும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் சிகரம் 'சுதர்சன கிரியா' எனும் தன்னிகரற்ற மூச்சுப் பயிற்சி. இது நம் உயிரணுக்களுக்குப் பிராண வாயுவை முழுமையாக வழங்கிப் புத்தெழுச்சியும் வீரியமும் தருகிறது. உடலில் நச்சுப் பொருட்களாகத் தேங்கிக் கிடக்கும் எதிர்முறை உணர்வுகள் எளிதாக வேருடன் களையப்பட்டு, முற்றிலுமாக வெளியேற்றப்படுகின்றன. மன இறுக்கம், விரக்தி, ஏமாற்றம், கோபம் ஆகியவை அகலுகின்றன. மனச்சோர்வு, சோம்பல் ஆகியவையும் களையப்படுகின்றன. உலகைப் பற்றியும், நமது உறவுகள் பற்றியும், நம்மைப் பற்றியும் ஒரு தெளிவான காட்சியுடன் மனம் அமைதியாக ஒரு நிலைப்படுகின்றது.

'சுதர்சன கிரியா' கற்கவும், கடைப்பிடிக்கவும் எளிதானது. பயில விரும்புபவர்கள் அருகிலுள்ள வாழும் கலை மையத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

***


வாழும் கலை முதுநிலைப் பயிற்சி

நோய் நிவாரண மூச்சுப் பயிற்சியில் அடிப்படைப் பயிற்சி பெற்றவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சி இது. சில நாட்கள் (5-7) முழுநேரம் தங்கிப் பெற வேண்டிய பயிற்சி. இது ஆழ்ந்த தியானம் மூலமாக உள்ளார ஆழ்ந்த அமைதியை அனுபவிக்கும் ஒரு வாய்ப்பினை அளிக்கிறது. பயிற்சியில் உள்ள பலவிதமான விளையாட்டுக்கள், இன்பம் தரும் முறைகள், பயிற்சியில் அடுத்தது என்ன வரும், அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும். ஒவ்வொரு நாள் மாலையும் ஆடல், பாடல், உபதேசம் எனக் கோலாகலத்துடன் நிறைவு பெறுகிறது. இப் பயிற்சியில் கலந்து கொள்பவர்கள், பயிற்சியின் இறுதியில் மனவியல் ரீதியான புத்தெழுச்சி பெற்று, ஆன்மீக மேம்பாடு கண்டு, செயல்களில் மாபெரும் வெற்றிகளைக் காண உற்சாகமும் உத்வேகமும் உடையவர்களாகத் தங்களை உணருகிறார்கள். சில பயிற்சிகள் ஸ்ரீஸ்ரீ அவர்களின் முன்னிலையில் நடத்தப்படுகின்றன. குருநாதருடன் இருந்து பயிற்சி பெறும் அனுபவம், வாழ்நாள் முழுவதும் இன்பம் துய்க்கின்ற ஓர் ஒப்பற்ற அனுபவமே.

***


சஹஜ சமாதி தியானம்

நாம் தேடி அலைகின்ற சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்கனவே நம்முள் இருக்கின்றன. அவை மன அழுத்தம், மன இறுக்கம் என்னும் மேகங்களால் மூடப்பட்டிருக்கின்றன. ஸ்ரீஸ்ரீ அவர்கள் இவ்வுலகிற்கு அருளியிருக்கின்ற மற்றுமோர் அற்புதம் சஹஜ சமாதி தியானம். இது உறக்கம் தருகின்ற ஓய்வை விட அதிக ஓய்வைத் தருகின்றது. இதன் மூலம் புத்தெழுச்சி ஏற்படுகின்றது. வாழ்க்கை பற்றிய நோக்கு ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் காணுகிறது. மன அழுத்தம் அகலுகிறது. அலைபாயும் மனம் அமைதி அடைந்து ஆக்கத்திறன் பெறுகிறது. முதுமையடையும் வேகம் குறைகிறது. சஹஜ சமாதி தியானம் கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் மிகவும் எளிமையானது.

© TamilOnline.com