சந்தோசத்தின் நற்செய்தி
உலகெங்கிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த பேரரசன் அகஸ்து கட்டளைப் பிறப்பித்திருந்தான். எல்லாரும் தத்தமது சொந்த ஊருக்குப் பிரயாணமாகிக் கொண்டிருந்தனர். யோசேப்பும் தனது மனைவி மரியாளுடன் நாசரேத்திலிருந்து பெத்லகேம் என்னும் ஊருக்குப் புறப்பட்டார். யோசேப்புக்கும் மரியாளின் பேறுகாலம் நெருங்கிக் கொண்டிருந்தபடியால் பரபரப்பு அதிகமாகி விட்டது. போகிறவழியில் மரியாளுக்குப் பிரசவ வலி ஏற்ப்பட்டதால், தாங்கள் தங்குவதற்கு எங்காவது ஒரு இடம் கிடைக்காதா என்று ஒவ்வொரு சத்திரத்தையும் நாடுகிறார் யோசேப்பு. அவருக்கு மிஞ்சியதோ ஏமாற்றம் தான். கடைசியாக ஒரு சத்திரக்காரன் அங்கிருந்த ஆடுமாடுகள் கட்டுகிற தொழுவத்தில்தான் இடம் இருக்கிறது என்றும் வேண்டுமென்றால் அங்கே அவர்கள் தங்கிக் கொள்ளலாம் என்றும் கூறவே, யோசேப்பு தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கே செல்லுகிறார். அங்கே தன் முதல் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மரியாள் பெற்றாள்.

யேசு பிறப்பதற்கு ஏறக்குறைய 600 வருடங்களுக்கு முன்பே 'ஒரு கன்னிகை ஒரு குமாரனைப் பெறுவாள்; அவர் உலகத்தின் இரட்சகராக இருந்து உலக மக்களின் பாவங்களைப் போக்க கல்வாரியிலே மரிப்பார்' என்று ஏசாயா என்ற தீர்க்கதரிசியாலே தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருந்தது.

##Caption## 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல, பிறப்பு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். அவர்கள் சாதிக்கிற சாதனைகளும் படைக்கிற சரித்திரங்களும் உலகையே அவர்கள் பக்கம் திருப்பும். இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்ற செய்தி அங்கு வயல்வெளிகளில் தங்கியிருந்த ஆடுகளை மேய்ப்பர்களுக்குத் தேவ தூதனால் தெரிவிக்கப்பட்டது. தூதன் சொல்லும்போதோ "பயப்படாதிருங்கள்; இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்கர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றான்.

இந்த நற்செய்தியின் மூன்று முக்கிய அம்சங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்:

பயப்படாதிருங்கள்!

இயேசு கிறிஸ்து பிறந்தவுடனேயே எளிய மக்களுக்குச் சொல்லப்பட்ட செய்தி "பயப்படாதிருங்கள்" என்பதுதான். ஒரு மனிதனு டைய வாழ்க்கையிலே மிகப்பெரிய பயம் 'மரண பயம்'. தற்கொலை என்ற ஆவியினாலே பாதிக்கப்பட்ட சிலர் இந்த உலக மரணத்திற்கு பயப்படுவதில்லை என்பது விதிவிலக்கு. அவரவர் கிரியைகளுக்கேற்ப இந்த உலகத்திலே சரீரப்பிரகாரமாக மரித்த பின் நியாயப் பிரமாணத்தின்படி நித்திய மரணமோ நித்திய ஜீவனோ நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒருவர் செய்த பாவங்களுக்காக நியாயப் பிரமாணத்தின் கூற்றின்படி அவர் மரிக்க வேண்டிய இடத்தில் இரட்சகரான இயேசு கிறிஸ்து அவருக்காக மரித்து மரண பயத்தைப் போக்கினார். எனவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் மோட்ச லோகத்திற்கு நம்மை அவர் தகுதியுள்ளவர்களாக்கினார்.

சந்தோசத்தை உண்டாக்கும் செய்தி!

ஒரு குழந்தை பிறந்தாலே எல்லாருக்கும் சந்தோசம்தான். துக்கத்தோடு இருக்கிற மனிதனுடைய வாழ்க்கையில் சந்தோசத்தை உண்டாக்குகிறவர் இயேசு. எனவேதான் அவர் பிறந்த காரியம் எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோசத்தை உண்டு பண்ணும் நற்செய்தி என்று தேவதூதன் சொன்னான். எவராயிருந்தாலும் இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு இயேசு சந்தோசத்தை அளிக்கிறவர். பன்னிரண்டு வருடங்களாக தீராத வியாதியாயிருந்த ஒரு பெண் தன் சொத்தையெல்லாம் மருத்துவத்துக்குச் செலவழித்தும் தன் நோயிலிருந்தும் அவளுக்கு சுகம் கிடைக்கவில்லை. அவளுடைய நோயை நீக்கி அவளுடைய துக்கத்தை சந்தோசமாக மாற்றினார் இயேசு! யூதரல்லாத கானானிய வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் பிசாசின் பிடியிலிருந்த தன் மகளுடைய விடுதலைக்காக இயேசுவை வேண்டிக்கொண்ட பொழுது அவர் அற்புதம் செய்தார். அவளுக்கு சந்தோசத்தை உண்டு பண்ணினார்.

கிறிஸ்து என்னும் இரட்சகர்

இயேசு கிறிஸ்து என்ற பெயரிலேயே இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. முதலாவதாக இயேசு என்பதற்கு பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கிறவர் என்றும் கிறிஸ்து என்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்றும் அர்த்தம். பாவங்களை மன்னித்து நாம் செய்த பாவங்களின் தண்டனை நம்மேல் வராதபடி தம்மீது ஏற்றுக் கொள்ளும்படியாக தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் இயேசு கிறிஸ்து. அதனால் பாவத்திற்கும் சாபத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் மேல் அதிகாரம் இல்லை. அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும்கூட பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

இதுவே கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி.

போதகர். பால்மர் பரமதாஸ், அட்லாண்டா தமிழ் சபை

© TamilOnline.com