கே. பாலமுருகன் (மலேசியா)
அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அடிக்கடி கண்ணில் படும் பெயர் கே.பாலமுருகன். இவரை நாம் தயங்காமல் எழுதிக் 'குவிக்கும்' எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம். என்னைக் கவர்ந்தது இவரது படைப்புக்களின் எண்ணிக்கையன்று. அவை ஆக்கப்படும் நவீன முறைதான். குறிப்பாக, சிறுகதைகளின் மொழியிலும் விதவிதமான உத்திகளிலும் புதிதாகச் செய்யும் குறிப்பிட்ட சிலரில் இவரும் கவனிக்கப்படுகிறார். திடுக்கிடும் திருப்பங்களையோ நாடகத்தன்மையான நிகழ்வுகளையோ நம்பி இயங்காமல் வாசகனுக்கு வாழ்வனுபவத்தை மட்டுமே விட்டுச்செல்லும் நோக்கில் இவரது சிறுகதைகள் உருவாவதை நம்மால் உணர முடிகிறது. அதுவே தனிச்சிறப்பாகவும் தெரிகிறது.

எழுதுவது எவ்வளவு முக்கியம் என்று உணராத ஒரு தருணத்தில் எழுதத் தொடங்கியதாகச் சொல்லும் இவர் ஏதோ ஒரு சக்தி, வேகம், தொடர்ந்து தன்னை எழுதுவதற்கு முன்னகர்த்தியதென்பார். எழுதாமல் இருக்கும் சமயத்தில் அதை ஈடுகட்ட வாசிக்கத் தொடங்கிவிடுவார்.

விரைவில் இவர் மணம் முடிக்கப் போகும் பெண்ணின் பெயர் கவிதா. மலேசியாவின் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் இவர் 'அநங்கம்' என்கிற மலேசிய தீவிரச் சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பில் உள்ளார். இவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவர் 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்', 'நடந்து கொண்டிருக்கிறார்கள்' போன்ற இவரது சிறுகதைத் தலைப்புகள் கூட சற்று வித்தியாசமாகவும் சுவாரஸியமாகவும் இருப்பதைக் கவனித்திருக்கலாம்.

##Caption## 26 வயதாகும் பாலமுருகன், "பலமுறை கடவுள்களிடம் நேரடியாகப் பேசியிருக்கிருக்கிறேன். அவ்வப்போது சன்னலின் விளிம்பில் உலகத்திற்காகக் காத்திருப்பேன்", என்று தன்னைப்பற்றிய அறிமுகமாக தனது வலைப்பதிவில் எழுதியிருப்பார். இவர் மலேசியாவின் சுங்கைப்பட்டாணி என்ற ஊரில் இருக்கும் தமிழ்ப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால், மலாய் மொழியிலும் இவருக்குக் கற்பிக்கும் அளவிலான தேர்ச்சியுண்டு.

இவரது சிறுகதைகள் மலேசிய ஊர்களையும் மக்களையும் சித்தரிப்பவை. இவரது எழுத்துக்களில் மலேசியத் தோட்டங்கள் நிறைய இடம் பெறுகின்றன. நகர்சார்ந்தும் இவரால் எழுதமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. மலேசியாவில் பாலமுருகனைப் போன்ற பத்திருபது துடிப்புள்ள இளம் தமிழ் எழுத்தாளர்கள் துளிர்த்தாலே போதும். மலேசியத் தமிழிலக்கியத்தின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் கிடைத்துவிடும் என்பது என் கருத்து.

ஏதோ ஒரு குழப்பத்திலும் சந்தேகத்திலும், அதிருப்தியாலும்தான் ஓர் எழுத்தாளன் எழுதிக் கொண்டிருக்கிறான் என்று நினைப்பவர் இவர். அந்த மாதிரிச் சாமன்ய மனிதனாக இருக்கும்வரை ஏன் எழுதாமல் இருக்க வேண்டும் என்ற உணர்விலேயே தொடர்ந்து எழுதுவாராம். எழுத்தாளனைப் பற்றிச் சொல்லும்போது பாலமுருகன், "சமூகத்திற்காக எழுதுபவன் சீர்த்திருத்தவாதியாகவோ அரசியல்வாதியாகவோ ஆகிவிடலாம், தனக்காக மட்டும் எழுதுபவன் சுயநலவாதியாகக் கருதப்படலாம் அல்லது பின்நவீனத்துவாதி ஆகிவிடலாம்.. நோக்கத்திற்காக-நோக்கத்துடன் எழுதுபவன் மட்டும்தான் அசல் இலக்கியவாதி என்கிற மாயை இருக்கிறது. அது வெறும் மாயையே. வாழ்க்கையை - மனிதர்களைப் பற்றி முணுமுணுக்க நினைத்தாலும் அது ஒரு படைப்பு உருவாவதற்கான தருணம்தான். பலப்படுத்தப்பட்ட சீர்தூக்கி அமைக்கப்பட்ட, மிக நேர்த்தியான ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று தோன்றவில்லை" என்பார்.

'நடந்து கொண்டிருக்கிறார்கள்' என்ற சிறுகதை தேசிய பல்கலைக்கழகச் சிறுகதைப் போட்டி-2006ல் முதல் பரிசும் 'பழைய பட்டணத்தின் மனித குறிப்புகள்' என்ற சிறுகதை தேசிய பல்கலைக்கழகச் சிறுகதைப் போட்டி-2007ல் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளன. 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' என்ற இவரது புதினம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ற்றோ வானவில்லும் இணைந்து நடத்திய மலேசியத் தமிழ் நாவல் போட்டியில் முதல் பரிசை வென்றது. இவர் எழுதிய 'போத்தகார அண்ணன்' என்ற சிறுகதை மலாயாப் பல்கலைகழகத்தின் பேரவைக் கதைகள் 21 (2006) மாணவர் பிரிவில் முதல் பரிசும் 'கருப்பாயி மகனின் பட்டி' மலாயாப் பல்கலைக்கழகம் (2007) பொதுப் பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளன.

கவிதை முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இவர் கவிதையிலும் பாடுபொருள் மற்றும் சொல்லும் முறைகளில் பல சோதனைகளைச் செய்து வருவதாக உணர முடிகிறது. மலேசிய நாளிதழ் 'மக்கள் ஓசை'யில் 'ஒரு நகரமும் சில மனிதர்களும்' என்ற தொடர்கட்டுரையையும் வார்த்தை, யுகமாயினி, உயிரெழுத்து போன்ற இதழ்களில் சிறுகதைகளும் சிற்றிதழ்களில் கவிதைகளும் என்று தொடர்ந்து எழுதிவரும் இவர், தற்போது மலேசிய ஆசிரியர் கவிதைகள் தொகுப்பு நூலாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் '11 மணி பேருந்து' மூன்றாம் பரிசை வென்றது. மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்தும் மாதாந்திரக் கதைத் தேர்வில் இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்கான சிறந்த கதையாக இவரின் 'அலமாரி' தேர்வானது. இவ்வருடம் மார்ச் மாதத்தில், 'மக்கள் ஓசை' நடத்திய மோதிரக் கதை போட்டியில் 'அப்பா வீடு' சிறந்த சிறுகதையாக தேர்வாகிப் பிரசுரம் கண்டுள்ளது.

ஜெயந்தி சங்கர்

© TamilOnline.com