தென்றல் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அமெரிக்க மண்ணில் தமிழர்களுக்காகத் தமிழர்கள் நடத்தும் தமிழ் இதழ் ஒன்று பல மேடு பள்ளங்களைக் கடந்து 8 ஆண்டுகள் தாண்டி வந்திருப்பது ஒரு சாதனைதான். இதற்கு இணையாக வேறெந்த இந்திய மொழிப் பத்திரிகையும் கிடையாது என்று உறுதியாகச் சொல்லமுடியும். வெகு அழகான வடிவமைப்பு, நேர்த்தியான உள்ளடக்கம், தெளிவான தமிழில் பொறுப்பான எழுத்துக்கள் என்று தமிழ்ச் சமுதாயத்துக்கு இணையற்றதொரு பாலமாக இருக்க உறுதிபூண்டு அடி எடுத்து வைத்த தென்றல் ஆண்டுக்காண்டு மெருகேறியபடிதான் இந்த இடத்தை வந்து அடைந்திருக்கிறது.
வாய்ப்புக்களின் சொர்க்கமான அமெரிக்காவிலும் பொருளாதார மேன்மை, சரிவு, செழிப்பு, இழப்பு என்று காலச்சக்கரத்தின் சுழற்சியில் 'மேலது கீழாய், கீழது மேலாய்' ஆன போதும், விளம்பரதாரர்களும், வாசகர்களும், எழுத்தாளர்களும் சற்றும் தென்றல் மீதான நம்பிக்கை தளராமல் தோள் கொடுத்து நின்றனர். நிற்கின்றனர். 'வாசக ரசனை'யைக் குறைகூறித் தன்னை மலினப் படுத்திக் கொள்ளாமல் தென்றல் நெடிதுயர்ந்து நிற்பதை இங்கிருப்போரும் வருவோரும் பலவாறாகப் பாராட்டியுள்ளனர். இதற்குப் பின்பலம் நீங்கள்தாம்.
இப்போது தென்றல் மாஸசூசட்ஸ், பென்சில்வேனியா, நியூயார்க், நியூ ஜெர்ஸி, வாஷிங்டன் டி.சி., வர்ஜீனியா, ஜார்ஜியா, ஃப்ளோரிடா, மிசௌரி, இல்லினாய், டெட்ராயிட், ஒஹையோ, டெக்ஸாஸ், கொலராடோ, அரிஸோனா, கலிபோர்னியா, ஒரிகான், வாஷிங்டன், தென் கரோலினா ஆகிய இடங்கள் வரை தனது சிறகுகளை விரித்துள்ளது. நீங்கள் வசிக்கும் பகுதியில் நிறையத் தமிழர்கள் இருக்கிறார்கள், அங்கு தென்றல் கிடைக்கவில்லை என்றால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் பகுதியிலிருக்கும் கடைக்காரரைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள். பதிந்து வைத்துக்கொண்டு, காலக்கிரமத்தில் உங்களையும் தென்றல் குடும்பத்தில் சேர்ப்பதற்கு ஆவன செய்கிறோம்.
'இரண்டு நாள் தாமதித்துப் போனால் தென்றல் கிடைப்பதில்லை' என்று பல இடங்களிலிருந்தும் போனில் அழைத்து வாசகர்கள் கூறுகிறார்கள். தென்றல் எப்போது வரும் என்று காத்திருந்து, வந்து விட்டதா என்று கடைக்காரரிடம் விசாரித்து எடுத்துச் செல்வதற்குக் கடைக்காரர்கள் சாட்சி சொல்கிறார்கள். மொழி தெரியாதவர்கள்கூடத் தென்றலின் மிக அழகான அட்டைப்படங்களால் கவரப்பட்டு விளம்பரம் செய்ய உந்தப்படுகிறார்கள். இந்த எட்டு ஆண்டுகளில் தென்றல் இதைச் சாதித்திருக்கிறது.
சேவை நிறுவனங்களுக்குச் சாதகமான கட்டணத்தில் விளம்பரங்களை ஏற்றும், இலவசமாக விளம்பரத்தை வடிவமைத்துக் கொடுத்தும் தென்றல் எப்போதும் தனது அனுசரணையான அணுகுமுறையைக் காட்டியே வந்துள்ளது. 'இது ஒரு லாப நோக்கம் கொண்ட நிறுவனத்தின் செய்தி ஆயிற்றே' என்று தவிர்க்காமல், மக்களிடம் சென்றடைய வேண்டிய பயனுள்ள தகவல் என்றால் அதைக் கொண்டுசெல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது தென்றல்.
தென்றலை வடிவமைக்கும் ஜீவமணி, இலக்கியக் கட்டுரை எழுதும் ஹரிகிருஷ்ணன், 'அன்புள்ள சிநேகிதியே' சித்ரா வைத்தீஸ்வரன், மருத்துவர் வரலட்சுமி நிரஞ்சன், 'சூரியா துப்பறிகிறார்' கதிரவன் எழில்மன்னன் ஆகியோர் தத்தம் துறையில் உச்சத்தைத் தொடுகிறவர்கள். தென்றலையும் அவர்களது கைவண்ணம் உயர்த்திப் பிடிக்கிறது. தென்றல் சிறுகதைகளுக்கும் நேர்காணல்களுக்கும் கட்டுரைகளுக்கும் உலகத் தமிழ் இலக்கியத்தில் தனி இடம் நிச்சயம் உண்டு. இந்தத் தன்னம்பிக்கையும் பெருமிதமும் தொடர, தென்றல் விளம்பரதாரர்களும், எழுத்தாளர்களும், வாசகர்களும் தமது ஆதரவைத் தொடர்ந்து தரவேண்டும்.
***
தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மேலும் ஒரு பணியாக 'தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை'யை நிறுவிச் சேவை செய்வதை முன்னரே அறிவித்திருந்தோம். எமது நிதி ஒதுக்கலை அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச் சங்கமும், விரிகுடாப் பகுதித் தமிழ்ச் சங்கமும் தமது குழந்தைகள் விழா நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டதில் எமக்கு மகிழ்ச்சி. வரும் காலத்தில் இன்னும் பல தமிழ் அமைப்புகளுக்கு உதவத் திட்டமிட்டுள்ளோம். முழு விவரங்களைப் பார்க்க: TamilOnlince.com
*** ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், கவிமாமணி இலந்தை ராமசாமி ஆகியோரின் நேர்காணல்கள், பரிசு வென்ற சமையல் குறிப்புகள், சுவையான சிறுகதைகள், கிறிஸ்துமஸ் செய்தி என்று பல அற்புதமான அம்சங்களோடு வருகிறது தென்றலின் இந்த 9ஆம் ஆண்டுத் தொடக்க இதழ். சுவைப்பதோடு நிற்காமல் உங்கள் கருத்துகளை எங்களுக்குத் தெரிவியுங்கள்.
வாசகர்களுக்குத் தென்றலின் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறைநாள் வாழ்த்துகள்!
டிசம்பர் 2008 |