செப்டம்பர் 28, 2008 அன்று தசராவை ஒட்டி சாக்ரமண்டோ சித்தி விநாயகர் கோவிலில் டயராமாவும், மாறுவேடப் போட்டியும் நடைபெற்றன. திருமதி ஜெயந்தி ஸ்ரீதரின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
சுவையான உணவுப் பண்டங்கள் தயார் செய்யப்பட்டு, டயராமா (Diorama) மற்றும் மாறுவேடப்போட்டிகளில் பங்கு கொள்ளவும் காணவும் வருகின்ற அன்பர்கள் கூட்டத்துக்கு குறைந்த விலையில் விற்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் தொகை, கோவில் வளர்ச்சி நிதிக்காக வழங்கப்படுகிறது.
மழலையர்கள் மாறுவேடப்போட்டியில் பங்குகொண்டு, கண்கவர் ஆடைகளில் கடவுளர் வேடம் பூண்டு வந்திருந்தனர். குழந்தைகளின் தோற்றம் காணும்போதே களிப்புறச் செய்தது. சிறப்பாக வேடம் அணிந்து வந்திருந்தோருக்குப் பரிசு வழங்கப்பட்டதுடன், பங்குபெற்ற எல்லாக் குழந்தைகளுக்குமே நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
டயராமா அருமையாகச் செய்யப்பட்டிருந்தது. புராணச் சம்பவங்களை கொலு போல் மினி அரங்கத்தில் அமைத்து கூடவே அதை உருவாக்கிய சிறார்களை வைத்து விவரிக்கச் செய்திருந்தார்கள். ஞானப்பழத்துக்காக கோபித்துக்கொண்டு மலை ஏகிய கந்தவேள், கஜேந்திர மோட்சம், கண்ணப்ப நாயனார், பாற்கடல் கடைதல், ஜானகி சுயம்வரம், மலேசிய பத்துமலை முருகன் கோயில், மாயமான் படலம், காளிங்க நர்த்தனக் கண்ணன், மலையையே குடையாய்ப் பிடித்த கிரிதாரி போன்றவை கருத்தைக் கொள்ளை கொண்டன. இதில் பங்குபெற்ற சிறார்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சுந்தர் பசுபதி |