வேளுக்குடி கிருஷ்ணன் விரிவுரை
தமிழ்நாட்டில் தினந்தோறும் தொலைக்காட்சி வழியே பகவத் கீதை விளக்கவுரைகள் அளித்து வரும் ஆன்மீகச் செம்மல், உபய வேதாந்தி ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள், அமெரிக்காவின் பல நகரங்களிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் செய்து வருகிறார். அந்த வகையில் தனது ஆன்மீகச் சொற்பொழிவுகளை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் அக்டோபர் மாதம் நிகழ்த்தினார்.

ஃப்ரீமாண்ட் இந்துக் கோவிலில் 'கிருஷ்ண லீலா' என்ற தலைப்பில் அக்டோபர் 9, 10, 11 ஆகிய நாட்களில் உரையாற்றினார். எளிய இனிய ஆங்கிலத்தில் சுவாமிகள் அருளிச் செய்த பேருரைகள் அன்பர்களைக் கட்டிப் போட்டன. அக்டோபர் 11, 12 நாட்களில் லிவர்மூர் சிவா விஷ்ணு கோவிலில் 'பத்மாவதி கல்யாணம்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

'ஹரிநாம சங்கீர்த்தனம்' குறித்து அக்டோபர் 4 முதல் 8 வரை சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்திலும், நவராத்திரியில் லக்ஷ்மி வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்து அக்டோபர் 12 அன்று இரவில் ஃப்ரீமாண்ட் இந்துக் கோவிலிலும் சுவாமிகளது சொற்பொழிவுகள் தொடர்ந்தன. திராவிட வேதமாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் குறித்தும் அவற்றை அருளிச் செய்த ஆழ்வார்களின் வரலாறுகள், சிறப்புக்கள் குறித்தும், பிரபந்தத்தில் காணப்படும் பக்தி, தமிழ்மொழியின் இனிமை குறித்தும் அருமையான இரண்டு மணி நேரச் சொற்பொழிவை அக்டோபர் 12 அன்று மாலை 6 முதல் 8 மணி வரை சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்தில் நிகழ்த்தினார்.

தமது தந்தையார் ஸ்ரீ உ.வே.வேளுக்குடி வரதாசாரி சுவாமிகளிடம் சம்ஸ்கிருத வேதங்கள், ஆழ்வார்கள் அருளிச் செய்த திராவிட வேதமாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார் திரு கிருஷ்ணன் சுவாமிகள். அவற்றை உலகெங்கிலும் உள்ள பக்தர்களிடம் கதாகாலட்சேபங்கள், உபன்யாசங்கள் மூலமாக அயராது கொண்டு சேர்த்து வருகிறார். ஸ்ரீ ராமனுஜர் மற்றும் வைணவ ஆசாரியார்களின் தத்துவங்களைப் பரப்பி வருகிறார் ஸ்ரீகிருஷ்ணன் சுவாமிகள். இவர் ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆவார். பல லட்ச ரூபாய் வருமானம் தந்த பன்னாட்டு நிறுவன நிதி மேலாண்மைப் பணியைத் துறந்துவிட்டு வேதங்கள், உபநிஷத்துக்கள், பகவத் கீதை, நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலானவற்றைப் பாமரரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். பிரவசன சங்கீத பூஷணா, சொல்லின் செல்வர், ஸ்ரீ ராமானுஜ சேவஸ்ரீ ஆகிய பட்டங்கள் கிருஷ்ணன் சுவாமிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் வேத பாடசாலைகள் நடத்தி வருகிறார். பழைய கோவில்களின் புனரமைப்புப் பணிகளும், கோவில் திருப்பணிகளும் செய்து வருகிறார்.

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகளது திருப்பணிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்களும், அவர் ஏற்பாடு செய்யும் ஆன்மீக யாத்திரைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்களும் www.kinchitkaramtrust.org என்ற இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த சொற்பொழிவுத் தொடரை வேதிக் பவுண்டேஷன் www.vedics.net என்ற அமைப்பு ஏற்பாடு செய்து நடத்தியது. திராவிட வேதம் - ஒரு அறிமுகம் சொற்பொழிவை இவர்களுடன் பாரதி தமிழ்ச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சிகள் குறித்து மேலதிகத் தகவல்களுக்கு www.vedics.net இணையதளத்தையும், இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மற்றும் சுவாமிகளது பிற சொற்பொழிவுகள் குறித்த ஒலி/ஒளி தகடுகள் வாங்கவும் கீழ்கண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகலாம்

முரளி: 408-615-1599
கைலாஷ்: 408-329-7435

ராஜன் சடகோபன்

© TamilOnline.com