அக்டோபர் 11, 2008 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் 'தேனிசை மழை' திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியை வழங்கியது. இதில் சிகாகோ கலைஞர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ரகுராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்புப் பாடகரான ஐங்கரன் 'மடை திறந்து' பாடலைப் பாடி ரசிகர்களின் ஆரவாரத்தைப் பெற்றார். தொடர்ந்து ரவிசங்கர், ராம் பிரசாத், அரவிந்தன், ரமா ரகுராமன், பவித்ரா ஆகியோர் தனித்தும் இணைந்தும் பாடினர்.
பவித்ரா பாடிய ‘சாரல்' நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரும் ரமாவும் இணைந்து பாடிய 'கண்ணன் வரும் வேளை' பாடலும், ரவிசங்கருடன் இணைந்து பாடிய ‘மதுரைக்குப் போகாதடி' பாடலும் இனிமையாக இருந்தன. பிரஷாந்தும், சுவேதாவும் இணைந்து பாடிய ‘கோலிக் குண்டு கண்ணு' பாடலும், தனித்தனியாகப் பாடிய 'அடடா அடடா அடடா', ‘செய் ஏதாவது செய்' பாடல்களும் வெகு அருமை. ரங்கா, சரண்யா, நிவேதாவுடன், ஸ்ரீராமன், சந்திரகலா ஆகியோரும் அற்புதமாகப் பாடினர்.
ஐங்கரன் இரு குரலில் பாடிய 'பெண்ணொன்று கண்டேன்' பாடலும், ‘உனக் கென்ன மேலே நின்றாய்' பாடலும் அவரது இசைத் திறமையைப் பறைசாற்றின. மேலும் இவர் லாவண்யாவுடன் இணைந்து பாடிய பீமா படத்தின் ‘முதல் மழை' பாடலுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு. கீதா பாடிய 'நீ வரும்போது', ரோச் பாடிய ‘வசந்த முல்லை போலே வந்து' ஆகியவை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. அன்று மாலை அரங்கத்தையே பரபரபாக்கியது பவித்ரா பாடிய 'நாக்க முக்க' பாடல்தான்.
நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள் ராமன், இருதயராஜ், லக்ஷ்மி மற்றும் வித்யா ஆகியோர்.
மேலும் விவரங்களுக்கு: www.chicagotamilsangam.org
ஆர்வீ |