நவம்பர் 2008: வாசகர் கடிதம்
அக்டோபர் மாத தென்றல் இதழ் படித்து மிகவும் மகிழ்ந்தேன். எல்லே சுவாமிநாதனின் நகைச்சுவை விருந்து வெகு அருமை. வற்றாயிருப்பு சுந்தரின் இந்திய அனுபவம் பற்றிய நகைச்சுவைக் கட்டுரை சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்க வைப்பதாகவும் அமைந்திருந்தது. இந்திய மக்களும் இளைஞர்களும் தொலைக்காட்சியால் எவ்வளவு சீரழிந்து கொண்டு வருகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்தியது.

உமா அருண் அவர்களின் ‘கொன்றன்ன இன்னா செயினும்' ஒரு மிக உயர்ந்த சிறுகதையாகும். அந்தக் கதையில் இயற்கை வர்ணனையும், இளகிய மனதும் பாராட்டுக்குரிய வகையில் உயர்வாக இருந்தன. ஐ.ஏ.எஸ். அதிகாரி கரியாலி அவர்கள் இந்திரா காந்தி அம்மையாரைப் பற்றி சில விஷயங்களை எழுதாமல் விட்டுவிட்டார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, அதன் விதிகளை மதிக்காமல் கட்சியை இரண்டாக உடைப்பது, நீதித்துறையில் தலையிட்டு சட்டத்தை இஷ்டம்போல் வளைப்பது, நீதிமன்றத் தீர்ப்பை மதியாமல் பதவியில் ஒட்டிக்கொண்டு தீர்ப்பை மாற்றியமைப்பது, மக்களால் தேர்ந்தெடுத்த அரசைக் கவிழ்ப்பது போன்ற மோசமான காரியங்கள் அனைத்திற்கும் இந்திராகாந்திதான் முன்னோடி என்பது, கரியாலி போன்ற அரசு உயர் அதிகாரி ஒருவருக்குத் தெரியாமற்போனது வருந்தத்தக்க விஷயமாகும்.

எஸ்.மோகன்ராஜ்,
ஜமைக்கா க்வீன்ஸ், நியூயார்க்

*****


'தென்றல்' இதழை நாங்கள் தொடர்ந்து படித்து வருகிறோம். தமிழ்நாட்டில் படிக்க முடியாத பல விஷயங்களைத் தென்றலில் பார்க்கிறோம். நமது தென்றல் வளர வாழ்த்துக்கள்!

முத்யாலு ஸ்ரீநிவாசன்,
சாண்டா க்ளாரா, கலி.

*****


'கொன்றன்ன இன்னா செயினும்' கதையும் கதையின் தத்துவமும் அருமை. வற்றாயிருப்பு சுந்தரின் 'மூன்றாண்டுகளுக்குப் பிறகு' சிந்திக்க வேண்டிய நிஜம். சீதா துரைராஜின் நவராத்திரி பற்றிய 'சக்தி வழிபாடு' விளக்கம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம். தென்றலில் வரும் ஒவ்வொரு நேர்காணலும் அருமை. இந்திராவின் மொழிப்பற்று பாராட்டத்தக்கது. மாமேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு வாசகர்களின் அஞ்சலியும் உரித்தாகுக. கடமை வீரர் சர்மாவின் மரணம் மனதைத் தாக்கியது.

லதா சந்திரமௌலி,
காலேஜ்வில், பென்சில்வேனியா.

*****


தென்றலில் வெளியாகும் மற்ற கட்டுரை களைப் படித்து முடிக்கும் பொழுது ‘சினிமா சினிமா' பக்கங்கள் அவசியமா என்ற கேள்வி மனதிலே எழுகின்றது.

அன்புள்ள சிநேகிதியே, 'முதலில் கலகலப்பு, பின்னர் சலசலப்பு": பதினோரு பேர் குழுவில் ஒருவராவது புதிதாக வந்த பெண்மணியிடம், ‘நீங்கள் அடுத்த பாட்லக் பார்ட்டிக்கு என்ன கொண்டு வருகிறீர்கள்' என்று கேட்டிருந்தால், அந்தப் பெண்மணிக்குச் சமைக்கத் தெரிந்திருக்காது என்பது தெரிய வந்திருக்கும்!

இதோ பார் இந்தியாவில் கப்பலோட்டிய தமிழரின் வாரிசுகள் பற்றிய செய்தி மனதைக் கலங்க வைக்கிறது. கோவை மத்திய சிறை வழியாகப் போகும்போது, சிறையில் சிதம்பரனார் செக்கிழுத்த ஞாபகம் வரும். அவருடைய வாரிசுகள் மட்டுமல்ல; யாருக்குமே அந்த அவலநிலை வரக்கூடாது. மக்களுக்கு இலவச டி.வி.ப் பெட்டி அவசியமா அல்லது அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது எனத் திண்டாடும் மக்களுக்கு உதவுவது அவசியமா என அரசு சிந்திக்க வேண்டும்.

தில்லானா மோகனாம்பாள் கதையை விகடனில் படித்து மகிழ்ந்த வாசகர்களில் நானும் ஒருவன். அது ஒரு காவியம். அதனை ஞாபகத்திற்குக் கொண்டு வந்ததற்கு காந்தி சுந்தர், பேரா. இந்திரா பீட்டர்சன் ஆகியோருக்கு நன்றி. பேராசிரியர் தொடர்ந்து ஆராய்ச்சிகளை நடத்த இறைவன் அருள்புரிவாராக. அமெரிக்கப் பெற்றோர்கள் குழந்தைகளைத் தமிழ்நாடு அழைத்துச் செல்லும்போது அவசியம் தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் சரஸ்வதி மஹால் நூலகத்திற்கும் அழைத்துச் செல்ல வேண்டும்.

- விஜயராகவன்,
ஃபார்மிங்டன் ஹில்ஸ், மிச்சிகன்

*****


தென்றலுக்கு வாழ்த்துகள். போன வாரம் கச்சேரிக்காக ஆல்பனி, நியூயார்க் சென்றிருந்தேன். அங்கே நண்பர் நாகராஜன் வீட்டில் அறையின் ஒரு பக்கத்தில் தென்றல் இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்னும் பல ஊர்களில் பல வீடுகளில் இப்போது தென்றல் நறுமணம் பரப்புவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

'தென்றல்' இதழின் முக்கிய அம்சமாக நான் கருதுவது, சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றி எழுதிவிட்டு அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையையும் பிரசுரிப்பதுதான். தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பல இதழ்களில் இப்போது சிறுகதைகள் வெளியாவதில்லை. அப்படி இருக்க, தென்றல் தொடர்ந்து சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சென்னையில் என் சகோதரிகளுடன் நேரம் செலவழிக்கும் போது வாஞ்சிநாதனின் குறுக்கெழுத்துப் புதிர் நிச்சயம் இருக்கும். மூளைக்கு வேலை கொடுக்கும் இந்தப் பகுதி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

தென்றல் ஆரம்பித்த சமையத்தில் 'கீதா பென்னட் பக்கம்' என்று மாதாமாதம் தொடர்ந்து எழுத வாய்ப்புக் கிடைத்தது என்னுடைய எழுத்துலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல். இரண்டு வருடங்கள் வெளிவந்த இந்தக் கட்டுரைகள், எனக்கு அமெரிக்கா முழுவதும் வாசகர்களை அருகாமையில் கொண்டு வந்து சேர்த்தது.

மைலாப்பூரில் இருந்து மன்ஹாட்டன் வரை உலகெங்கும் ‘தென்றல்' இதே தரத்துடன் தவழவேண்டும் என்று, ஒன்பதாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கப்போகும் இந்த நேரத்தில் தென்றலை வாழ்த்துகிறேன்.

- கீதா பென்னட்
www.geethabennett.net
தென் கலிஃபோர்னியா

© TamilOnline.com