தன்னுடைய முதல் நாவலுக்கே புக்கர் பரிசைத் தட்டிச் செல்லும் மூன்றாவது இந்திய எழுத்தாளர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார் அரவிந்த் அடிகா. அவரது ‘த ஒயிட் டைகர்' (The White Tiger) என்னும் நாவலுக்கு இந்த ஆண்டுக்கான மான் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. 33 வயதாகும் அரவிந்த் சென்னையில் பிறந்தவர். ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கொலம்பியாவில் உயர்கல்வி கற்றவர். அடிப்படையில் பத்திரிகையாளரான அரவிந்த் டைம் இதழின் நிருபராக வேலை பார்த்திருக்கிறார்.
தனது பத்திரிகை அனுபவமும், நிருபராக வேலை பார்த்தபோது தான் மேற்கொண்ட பயணங்களும்தான் இந்த நாவல் உருவாகத் துணையாக இருந்தன என்று குறிப்பிடுகிறார் அரவிந்த். சென்னையில் பிறந்து மங்களூரில் வளர்ந்த தனக்கு, இந்தப் பயணங்கள் புதிய பல வாசல்களைத் திறந்து விட்டன என்றும் கூறுகிறார்.
இந்த நாவல் மூலம் நவீன இந்தியாவின் இருண்ட பக்கங்களைப் படம் பிடித்த முதல் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அரவிந்த், 'நான் ஒரு நாவலாசிரியர், எழுத்தாளர்தான். என்னை ஒரு சமூகப் போராளியாக்கி விடாதீர்கள்' என்று வேண்டுகோள் விடுக்கிறார். ஆனாலும் இந்தியாவை அவலமாகச் சித்திரித்தே பன்னாட்டுப் பரிசு பெறுவதும் ஒரு அருங்கலையாகி விட்டதோ என்ற சந்தேகம் வராமலில்லை.
வி.எஸ். நைபால், அருந்ததி ராய், கிரண் தேசாய் வரிசையில் தனது இந்த நாவல் மூலம் சர்வதேச இலக்கியச் சந்தையின் கவனத்தை இந்தியா மீது திருப்பி இருக்கிறார் அரவிந்த்.
அரவிந்த் |