முதியோர் இல்லத்தில் ராஜம் கிருஷ்ணன்
ராஜம் கிருஷ்ணன் - சிறந்த எழுத்தாளர், பெண்ணியச் சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி, சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் இன்று உறவுகளால் கைவிடப்பட்டு, விச்ராந்தி முதியோர் இல்லத்தில் தனித்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.

சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்ட ராஜம் கிருஷ்ணன், பாவப்பட்ட, சுரண்டப்படும் ஏமாற்றப்படும் மக்களின் வாழ்க்கை நிலையினை, கவர்ச்சி முலாம் எதுவும் பூசாமல் மிகைப்படுத்தாமல் தமது புதினங்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியவர். கரிப்புமணிகள், வேருக்கு நீர் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப் படைப்புகளைத் தந்தவர். தான் எழுதும் புதினங்களுக்காக, சம்பந்தப்பட்ட இடங்களுக்கே நேரில் சென்று, அங்குள்ள மக்களோடு நேரிடையாகப் பழகி அதனைத் தன் கதைகளில் பதிவு செய்தவர்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ராஜம் கிருஷ்ணன், சற்றும் பந்தா இல்லாதவர். பெண்கள், அடித்தட்டு மக்கள், தலித் என்று எல்லாவித முற்போக்கு இயக்கங்களுடனும், தன்னைத் தயங்காமல் இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். பெண்களின் எல்லாப் பிரச்சனைக்கும் முன்வந்து குரல் கொடுத்தவர். உற்ற துணையாக இருந்த கணவர் இறந்த பிறகு, குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில், சுற்றத்தாரிடம் தன் சொத்துக்களையும் உடைமைகளையும் இழந்துவிட்டு இன்று நிர்க்கதியாக இருக்கிறார். நெருங்கிய இரு எழுத்தாள நண்பர்கள் மூலம் முதியோர் இல்லத்தில் சேர்ந்திருக்கிறார் அவர்.

தன்னை முற்போக்காளராகவே இனம் கண்ட எழுத்தாளர் இன்று புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லத்தைத் தஞ்சமடைகின்ற அவலம் நிகழ்ந்திருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com