உளவுத்துறையின் செயல்பாடுகளில் ஓட்டை இருப்பது உண்மைதான்
காலத்திற்கேற்றாற்போல் எல்லாக் கலைகளும் மாறி வருகின்றன. எந்தத் துறையிலும் புதுமை இருந்தால்தான் அக்கலை வளர்ச்சி பெறுவதாக அர்த்தம். எந்தப் புதுமை வந்தாலும் பரதக் கலையின் கண்ணியம் கெடக்கூடாது. ஆபாசத்தைக் கலையில் கொண்டு வரக்கூடாது. ஆபாசம் இல்லாத நடனத்திற்குதான் 'சபாஷ்' கிடைக்கும்.
- சித்ரா விஸ்வேஸ்வரன்

பல முன்னணி நாளிதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதுகிறேன். சில முன்னணி வார இதழ்களுக்குச் சிறுகதைகளும் அவ்வப்போது எழுதுவது உண்டு. என்னுடைய துறை சார்ந்த எழுத்துப் பணிகளில் கவனம் செலுத்துவதற்கே பெரும்பாலும் நேரம் சரியாகிவிடும். தற்போது சென்னைப் பல்கலையில் பிஎச்.டி. சேர்ந்துள்ளேன். 'தமிழகக் காவல்துறை சரித்திரத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? மனித நேயம் காக்கப்பட்டுள்ளதா?' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.
- ஆர்.நடராஜ், சிறைத்துறை டி.ஜி.பி.

திராவிட இயக்கம் என்று பேசிக்கொண்டே, அதற்கு முரணான வகையில் செயல்பட்டு வருபவர் அவர்தான். இன்றுவரை மஞ்சள் துண்டு அணிவது ஏன் என்பதற்கு கலைஞரால் பதில் சொல்ல முடிந்ததா? புத்தர் மஞ்சள் ஆடை அணிந்திருந்தார் என்று ஒருமுறை காரணம் சொன்னார். இவர் போய்ப் பார்த்தாரா?
- வை.கோ

கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் கருணாநிதி தொடங்கிய டி.வி.க்கு 'கலைஞர் டி.வி' என்று பெயர் வைத்துக் கொண்டார். ஏன், அண்ணாவின் பெயரை வைக்கவில்லை? குறைந்தபட்சமாக இசையருவி டி.விக்காவது அண்ணாவின் பெயரை வைத்திருக்கலாமே?
- ராமராஜன்

இந்தியாவில் உள்ள மாநகரங்களுக்கு தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ளது. அந்த வகையில் சென்னை நகரமும் தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ளது.
- கே.பி. ஜெயின், டி.ஜி.பி.

உளவுத்துறையின் செயல்பாடுகளில் ஓட்டை இருப்பது உண்மைதான். தீவிரவாதத்தைத் தடுக்க, தற்போதுள்ள தீவிரவாதச் சட்டங்களை மேலும் கடுமையாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
- மன்மோகன் சிங்

யாசகமோ பிச்சையோ தேவையில்லை. மக்கள் மானத்தோடு வாழ்வதற்கு முதலில் விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள்.
- தா. பாண்டியன்

ஈருருளி என்னும் சொல் அறிமுகமாகி 45 ஆண்டுகள் இருக்கலாம். எனினும் யாது செய்ய இயலும். இன்னும் சைக்கிள் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
- நாஞ்சில் நாடன்

கத்தே, ரூஸோ, டால்ஸ்டாய், தஸ்தாயெவெஸ்கி, விக்டர் ஹ்யூகோ, காஃப்கா போன்ற மேதைகளை நாம் மொழிபெயர்ப்புகள் மூலம்தான் படிக்க முடியும். பிரமிப்பூட்டும் அந்த மொழிபெயர்ப்புகளை நமக்குத் தந்தவர்களின் காலில் விழுந்து வணங்கத் தோன்றுகிறது. இருப்பினும் ஒரிஜினல் மொழியில் படிப்பது என்பதற்கு இணை கிடையாது. ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்றைத் தமிழிலும், பிறகு ஆங்கிலத்திலும் படித்துப் பாருங்கள், வேறுபாடு புரியும்!
- மதன், கார்ட்டூனிஸ்ட்

ஊழல் ஒழிப்பு பற்றி பதில் சொல்லுமாறு ஒரு மேடையில் அரசியல்வாதிகளைப் பார்த்து நான் கேட்டபோது, அவர்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.
- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அணு ஒப்பந்தத்தை ஆதரித்துக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது.
- சிரஞ்சீவி, பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர்

மெட்டுக்கேற்பப் பாடல் எழுதுவது என்பது கடினமானது. மெட்டுக்கேற்பப் பாடல் எழுதுவதற்கு அளவுகோல் உள்ளது. உங்களுக்காகக் காத்திருக்கும் மெட்டுக்குள் பொருந்தும் வகையில் நீங்கள் வரிகளைப் போட வேண்டும். அதை எழுதிப் பாருங்கள், அப்போதுதான் அதன் சிரமம் உங்களுக்குப் புரியும்.
- வைரமுத்து

அரவிந்த்

© TamilOnline.com