யார் இவர்?
அந்தச் சிறுவனுக்கு ஒன்பது வயது இருக்கும். தந்தை இல்லாததால் அவனது அண்ணனும் அண்ணியும் அவனை மிகச் செல்லமாக வளர்த்து வந்தனர். அருகிலுள்ள பள்ளியில் அவன் படித்து வந்தான். ஆனால் பள்ளி செல்வதைவிட வழியில் இருக்கும் ஆலயத்துக்குச் செல்வதுதான் அவனுக்கு மிக விருப்பமான ஒன்றாக இருந்தது. நண்பர்கள் பலமுறை சொல்லியும், ஆசிரியர் எச்சரித்தும் அவன் கேட்பதாக இல்லை. பள்ளிக்குக் கிளம்புவான். ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் நேராக ஆலயத்துக்குச் சென்று விடுவான். இது பல நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்தத் தகவல் அவனைச் செல்லமாக வளர்த்து வந்த அவனது அண்ணனுக்குத் தெரியவந்தது. சிறுவனைக் கூப்பிட்டு மிகக் கடுமையாகக் கண்டித்ததுடன், இனி தேவையில்லாமல் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது, மேலே உள்ள அறையில் தங்கிப் படிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டார். தம்பியும் அண்ணன் சொற்படி தனியறையில் தங்கிப் படித்து வரலானான்.

ஒருநாள்... திடீரென அண்ணனுக்கு உடல்நலமில்லாமல் போய்விட்டது. அவர் வழக்கமாகச் செல்லும் சொற்பொழிவுக்குச் செல்ல இயலவில்லை. எனவே தன் தம்பியை அழைத்து, விவரத்தை ஏற்பாட்டாளரிடம் சொல்லிவிட்டு, சில பாடல்களையும் பாடிவிட்டு வருமாறு அறிவுறுத்தினார்.

மறுநாள் அண்ணனைச் சந்தித்தவர்களெல்லாம் தம்பியின் சொற்பொழிவு பிரமாதம் என்றும், இனி அவரையே வழக்கமாக அனுப்பி வைக்கவேண்டும் என்றும் கூறினர். அண்ணனுக்கு ஆச்சரியம். சரியாகப் பள்ளிக்குச் சென்று படிக்காத தன் தம்பி எப்படி எல்லோரும் புகழும்படி சொற்பொழிவாற்றியிருக்க முடியும் என்று வியந்தார். அதைக் கண்டறிய ஆவல் கொண்டார். மறுநாள் தம்பியைச் சொற்பொழிவு செய்ய அனுப்பிவிட்டு, யாருமறியாமல் பின் தொடர்ந்தார் அண்ணன். மடைதிறந்த வெள்ளம் போல், பக்திச்சுவையுடன் தம்பி ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டார். ஆச்சரியமுற்றார். இவர் தன் தம்பி மட்டுமல்ல; சகலமும் உணர்ந்த ஞானி. இறையருள் பெற்ற அவதார புருடர். அறிவில் மிகப் பெரியவர் என்பதை உணர்ந்தார். தம்பி என்றும் பாராமால் வணங்கித் தொழுதார்.

இவ்வாறு சிறுவயதிலேயே அனைத்தையும் ஓதாமல் உணர்ந்த அந்த மகான்; அவதார புருடர் யாரென்று தெரிகிறதா?

விடை


© TamilOnline.com