பூர்ணம் விஸ்வநாதன்
வானொலி செய்தி வாசிப்பாளர், நாடக இயக்குநர், நடிகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட பூர்ணம் விஸ்வநாதன் (86) அக்டோபர் 1, 2008 அன்று சென்னையில் காலமானார்.

டெல்லி வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக, அறிவிப்பாளராகப் பணியாற்றிய பூர்ணம் விஸ்வநாதன், பாரதம் சுதந்திரம் பெற்றதை முதன்முதலாக வானொலியில் அறிவிக்கும் பேறு பெற்றார். நாடக நடிகராகவும், இயக்குநராகவும் தன்னை வளர்த்துக்கொண்ட இவர், தந்தை பெயரான பூரணம் ஐயர் என்பதைத் தன் பெயரில் இணைத்துக் கொண்டு பூர்ணம் விஸ்வநாதனாகப் பரிணமித்தார். சுப்புடு போன்றோருடன் இணைந்து ‘சவுத் இண்டியன் தியேட்டர்' என்ற நாடகக் குழுவை உருவாக்கிப் பல நாடகங்களைத் தயாரித்தார். பின்னர் தனக்கெனத் தனியாக ஒரு நாடகக் குழுவை (பூர்ணம் தியேட்டர்ஸ்) உருவாக்கி, பல நாடகக் கலைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், நாடக வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்தார்.

எழுத்தாளர் சுஜாதாவின் பல நாடகங்களை இவர் மேடை ஏற்றியிருக்கிறார். 'டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு', 'அடிமைகள்', 'கடவுள் வந்திருந்தார்', 'அன்புள்ள அப்பா', 'வாசல்', 'ஊஞ்சல்', 'சிங்கம் அய்யங்காரின் பேரன்', 'பாரதி இருந்த வீடு' உள்ளிட்ட பல நாடங்களை சுஜாதா எழுதி, பூர்ணம் விஸ்நாதன் மேடையேற்றியுள்ளார். டெல்லி, லக்னோ, மும்பை உட்படப் பல நகரங்களில் இவர் நாடகம் நடத்தப்பட்டுள்ளது. தனது நாடக சேவைக்காக சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். தவிர, 'வறுமையின் நிறம் சிவப்பு', 'தில்லுமுல்லு', 'மகாநதி', 'விதி', 'மூன்றாம் பிறை' உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

மிக எளிமையானவரும், அனைவருடனும் அன்புடன் பழகும் சுபாவம் கொண்டவருமான பூர்ணம், மிமிக்ரி செய்வதிலும், கர்நாடக சங்கீதம் பாடுவதிலும் வல்லவர். தனது ஏற்ற இறக்கமான குரல் பாவத்தினாலும், அமைதியான அலட்டலில்லாத நடிப்பினாலும் ரசிகர் உள்ளங்களைக் கவர்ந்தவர். அவருக்குத் தென்றல் தனது அஞ்சலிகளைச் செலுத்துகிறது.

அரவிந்த்

© TamilOnline.com