இயக்குநர் ஸ்ரீதர்
தமிழ்த் திரைப்படங்களில் புதுமைக்கு வித்திட்ட இயக்குநர்களுள் ஒருவரான ஸ்ரீதர் (78) அக்டோபர் 20 அன்று சென்னையில் காலமானார். ரத்தபாசம் என்ற படத்தின் வசனகர்த்தாவாகத் திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர், தமிழ் சினிமாவுக்குப் புத்துயிர் அளித்தவர். புதிய கருத்துக்களைக் கொண்ட வித்தியாசமான படங்களைத் தந்தவர்.

சரித்திர புராணக் கதைகளில் கட்டுண்டு கிடந்த சினிமாவை நவீன யுகத்துக்கு மீட்ட பெருமை ஸ்ரீதருக்கு உண்டு. எதிர்பாராதது, கல்யாணப் பரிசு, தேன் நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, நெஞ்சம் மறப்பதில்லை, சுமைதாங்கி, வெண்ணிற ஆடை, ஊட்டிவரை உறவு, உரிமைக்குரல், மீனவ நண்பன், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா உள்பட பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ள ஸ்ரீதர், காதல், நகைச்சுவை, சஸ்பென்ஸ், சோகம், வீரம் என நவரசங்களிலும் முத்திரை பதித்திருக்கிறார். சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி எனத் தமிழ்த் திரையுலகின் மும்மூர்த்திகளையும் இயக்கிய பெருமைக்குரியவர். முதன்முதலில் இயக்குநருக்கென்று ஒரு மரியாதையை, முக்கியத்துவத்தை திரையுலகில் ஏற்படுத்தியவர் ஸ்ரீதர்தான்.

1961ல் சொந்த நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தினார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் வெற்றிக் கொடி நாட்டினார். நெஞ்சில் ஓர் ஆலயத்தின் ஹிந்தி வடிவமான ‘தில் ஏக் மந்திர்' அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படமாகும். முதன்முதலில் வெளிநாடுகளில் படப்பிடிப்புக்களை நடத்தி எடுக்கப்பட்ட தமிழ்ப் படமான ‘சிவந்தமண்'ணின் இயக்குநர் ஸ்ரீதர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.வி.ராஜேந்திரன், பி.வாசு, சந்தானபாரதி எனப் பல இயக்குநர்களை உருவாக்கிய பெருமையும் ஸ்ரீதருக்கு உண்டு. ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெயலலிதா, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, விக்ரம் எனப் பல கலைஞர்களையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். புதுமைக்கும் பழமைக்கும் பாலமாகத் திகழ்ந்த ஸ்ரீதர், கதை-வசனம், இயக்கம், பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்திலும் நல்ல திறமை மிக்கவர். தனது திரைப்படங்களில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தவர். திரைப்படத்துறை மட்டுமல்லாது தொழில்துறையிலும் சாதித்துக் காட்டியவர். நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையை தனது பொறுப்பில் எடுத்து, தனது நிர்வாகத் திறமையினால் அதனை லாபத்தில் இயங்க வைத்தவர். பக்கவாத நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீதர், ‘நல்ல கதை இருக்கிறது, குணமடைந்தவுடன் விரைவில் அதை இயக்குவேன்' என்று தன்னைக் காண வரும் கலைஞர்களிடம் எப்போதும் நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

எந்தவிதப் பின்புலமுமில்லாமல் திரைப்படத்துறையில் நுழைந்து, உழைப்பினாலும், திறமையினாலும் சாதித்துக்காட்டிய ஸ்ரீதரின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்புத்தான்.

அரவிந்த்

© TamilOnline.com