கவிஞன் தன்னை மறந்த, இழந்த நிலையில் கவிதையுள் சொல்வீழ்ச்சி எப்படி நிகழ்கிறதோ, அப்படியே--அதுபோலவே--அவனையறியாத பொருள்வீழ்ச்சி ஒன்றும் நிகழத்தான் செய்கிறது என்பதைப் பற்றிச் சென்றமுறை பேசத்தொடங்கினோம். கவிஞனுடைய வாக்கில் அவனையறியாமல் இன்னொரு உட்பொருள் கலந்தே தோன்றி விடுகிறது. இப்படிப்பட்ட உட்பொருள் அல்லது மறைபொருளை அவன் உணர்ந்துதான் செய்தானா அல்லது அவன் உணராமலேயே இவ்வாறு அமைந்து விட்டதா என்பதை நம்மால் அறியக்கூட முடிவதில்லை என்றெல்லாம் சென்றமுறை பார்த்தோம். கவிஞன் எதைச் சொல்ல விழைந்தானே அந்தப் பொருளை விழை பொருள் என்றும்; அவன் சொல்லியிருக்கும் விதத்தாலே, அவனுடைய வாக்கில் உள்ளுறையாக அமைந்திருக்கும் அந்த இன்னொரு பொருள் தானாக விளைந்து வந்திருக்கும் பொருள் என்பதனால் அதனை விளைபொருள் என்றும் அழைத்தோம். அப்படிப்பட்ட வேறுபொருள் தொனிக்க அமைந்த பாடல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, பரதன் நாடாளவும்; இவன் காடேகவும் தசரதன் சொல்லியிருப்பதாகச் சொல்லும் கைகேயிக்கு ராமன் அளிக்கும் விடையாக அமைந்துள்ள பாடலை எடுத்துக் கொண்டோம்.
'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ? என்இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்; மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.'
##Caption## ‘அம்மா, (நீங்கள் கௌசலையைப் பார்க்கிலும் மேலான தாயல்லவா எனக்கு! நான் உங்களையல்லவா அவளிலும் மேலானவளாகப் போற்றி வருகிறேன்!) இப்படி ஒரு கட்டளையை மன்னவன் இட்டால்தான் நான் மேற்கொள்வேனா! இதற்கு மன்னவன் சொல்லியிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் உண்டா! நீங்களே உங்களுடைய வாக்காக, ஆணையாகச் சொன்னால் கேட்காமல் போய்விடுவேனா! என்னுடைய தம்பி (பின்னவன்) பெறுகின்ற அரசாட்சி என்பதான இந்தச் செல்வம் நானே பெற்றதைப் போன்றது அல்லவா? (‘அரசாட்சியை பரதன் பெற்றாலென்ன, நான் பெற்றாலென்ன? என்வரையில் இரண்டிலும் எந்த வித்தியாசமுமில்லை'.) ஆகவே, தாயே, இதைவிடவும் நன்மை தருவது வேறு என்ன இருக்கிறது? காட்டுக்கு இன்றே கிளம்புகிறேன். (இன்றே என்ன, இப்போதே, இந்தக் கணமே செல்கின்றேன்.) விடையும் கொண்டேன். அம்மா, நான் போய்விட்டு வருகிறேன்.' ‘விடையும் கொண்டேன்' என்று சொல்லும்போதே ‘இந்தக் கணத்திலேயே நான் கிளம்பியாகி விட்டது' என்ற தீர்மானமான பேச்சும், ‘போய்வருகிறேன்' என்று தான் அவ்வாறு கிளம்புவதற்கான ‘அனுமதி விண்ணப்பமுமாக ராமன் பேசும் அழகைப் பலநூறு முறைகள் பேச்சாளர்களும் ஆய்வாளர்களும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
ஆனால், இந்தப் பாடலைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஒருமுறை என் மனத்தில் சிறுபொறி தட்டியது. பாடலின் முதலடியில் நிறுத்தக் குறிகளை சற்று மாற்றி இட்டுப் பார்ப்போம். ‘மன்னவன் பணி அன்று. ஆகின் நும்பணி. மறுப்பனோ?' ‘அம்மா இது அரசன் இட்ட கட்டளை அன்று (என்பதனை நான் நன்கறிவேன்.) எனவே (‘ஆகின்') இது உன்னுடைய ஆணை (என்பதனையும் அறிவேன்)' என்றொரு தொனிப்பொருள் வருகிறதல்லவா? அடுத்த அடியில் வரும் தொடரையும் இதைப்போலவே நிறுத்தக்குறி மாற்றியிட்டுப் பார்த்தால், ‘என்பின், அவன் பெற்ற செல்வம், அடியனேன் பெற்றது அன்றோ!' ‘நான் இதோ அரசாட்சியை விட்டு நீங்கிப் போகிறேனே, இப்படி நீங்கும் எனக்குப் பின்னால் அவன் (பரதன்) பெறப்போகின்ற செல்வம் எதுவென்றால், இதோ இப்போது நான் பெற்றிருக்கின்றேனே இதே மரவுரியும் சடாமுடியும் அல்லவா?' என்ற பொருள் இந்த இரண்டாம் அடிக்குள் மறைந்திருக்கிறதல்லவா!
ஒருபக்கம், ‘ராமன் இப்படிப் பொருள்படச் சொல்வது அவனுக்கு இழுக்கல்லவா' என்ற கேள்வி எழும். எழுகின்றது. புகழ்பெற்ற ஒரு பேச்சாளர் இப்படி ஒரு பொருள் வருவதைக் குறிப்பிட்டு, ‘அப்படிப் பொருள் சொல்வது தவறு. அப்படியெல்லாம் எகத்தாளமாக ராமன் பேசுவானா? கைகேயியை எடுத்தெறிந்து பேசுவதுபோன்ற பொருள் இதில் வருகிறதல்லவா' என்ற கேள்விகளை எழுப்பிய சமயத்தில் என் மனத்தில் குழப்பம் நிலவியது என்பதும் உண்மைதான்.
ஆனால், அதன்பிறகு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதிய ‘கம்பன் கவிநயம்' என்ற புத்தகத்தை வாசிக்கும்போது, சுவாமிகளும் இப்படிப்பட்ட ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்த்த சமயத்தில்தான் ‘இப்படி ஒரு பொருள் இருப்பதாக நாம் கண்டுபிடிக்கவில்லை. நமக்கு முன்னாலேயே பெரியபெரிய அறிஞர்களுக்கும் இது போலவே தோன்றியிருக்கிறது. ஆகவே, நாம் கண்ட பொருளில் நியாயம் இல்லாமலில்லை' என்ற ஆறுதல் உண்டானது. இனி, கிருபானந்த வாரியார் இந்தப் பாடலுக்குச் சொல்லியிருக்கும் உட் பொருளை (விளைபொருள் என்று நாம் குறிக்கும் அந்த மறைபொருளை) அவருடைய வார்த்தைகளிலேயே தருகிறேன்.
“மன்னவன் பணியன் றாகில் நும்பணி மறுப்பனோ?"
“இந்த வரிக்குள் இன்னொரு பொருள் மறைந்திருக்கிறது. ‘அம்மா! அறுபதினாயிரம் ஆண்டுகள் மகவின்றி மாதவம் செய்தும், புத்திரகாமேஷ்டி யாகம் செய்தும் என்னை மகனாகப் பெற்று, மடிமேலும், மார்மேலும் தோள்மேலும் எடுத்து வளர்த்து, ‘பொன்னே! மணியே!'என்று அன்பாகச் செல்வப் பேரிட்டு வளர்த்த தந்தை, பதினான்காண்டுகள் மரவுரியோடும், சடைமுடியோடும் அரக்கர்களும் விலங்குகளும் அரவினங்களும் வாழும் கானத்துக்குச் செல்லுமாறு கூறுவாரா? ஆகவே, இது தந்தையின் கட்டளை அன்று. தாங்களே அவர் கூறுவதாகப் புனைந்து கூறுகின்றீர். ஆயினும் நான் மறுக்க மாட்டேன்.
##Caption## "சரி...! அதுதான் போகட்டும். அரசைப் பெற்றுக் கொள்ளப் போவது யார்? அன்னியன் பெறவில்லையே. என் உடன் பிறந்த பரதன் பெற்ற செல்வம் நான் பெற்றதுதானே. ‘என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?' என் பின் அவன் பெற்ற செல்வம் என்று பிரித்துப் பொருள் காண்க." என்று, நிறுத்தக் குறிகளை இடம்மாற்றிப் போட்டு எப்படி நான் பொருள் கண்டேனோ, அப்படியே வாரியார் சுவாமிகளும்--எனக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரேயே--கண்டிருக்கிறார். என்னுடைய பெருமதிப்புக்கு உரிய வாரியார் சுவாமிகள் இவ்வாறு பொருள் கண்டிருக்கிறார் என்பதனை அறியாத சமயத்திலேயே எனக்கும் இவ்வாறு ஒரு பொருள் தென்பட்டிருக்கிறது. மிக உயர்ந்த அறிவுச் செல்வம் நிறைந்த பேரறிவுக் களஞ்சியத்துக்கும், மிகச் சாதாரணமான வாசக அனுபவம் பெறுகின்ற ஒருவனுக்கும் ஒரு பாடலைக் குறித்து ஒன்றுபோலவே இரண்டாவதாகவும் ஒருபொருள் தோன்றுமானால், அப்படி மாற்றிப் பிரித்துப் பொருள் காண்பதில் ஏதோ ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்பது உறுதியாகிறது; அப்படிப் பொருள்கொள்ள அங்கே இடமிருக்கிறது என்பது வலியுறுத்தத் தேவையில்லாமலேயே விளங்குகிறது.
சொல்லப் போனால், ‘என் பின், அவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது, அன்றோ?' என்று மாற்றிப் பிரிக்கும்போது இன்னொரு உன்னதமான பொருள் கிளைக்கிறது. ‘அம்மா! பரதனைப் பற்றி நீங்கள் இன்னமும் சரியாக அறியவில்லை. அவன் இப்படிப்பட்ட அரசாட்சியை நாடுபவன் அல்லன் என்பதனை நான் நன்கறிவேன். அவனுடைய இதயம் உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் வேண்டுமானால் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் அரசை ஏற்கிறானா அல்லது என்னைப் போலவே மரவுரியையும் சடாமுடியையும் எற்கிறானா என்பதை நீங்களே போகப்போகத் தெரிந்துகொள்வீர்கள்' என்று மிகமிக மறைமுகமாகவும், குறிப்பாகவும் பரதனுடைய குணசித்திரத்தை ராமன் தீட்டும் அருமையான இடமாகவே இதைக் கொள்ள இயலும்.
அப்படியானால், பரதன் இப்படிப்பட்டவன் என்பதனை ராமன் அறிந்தே இருந்தானா என்றொரு கேள்வி எழுமல்லவா? அதற்கும் ராமனே பின்னொரு சமயத்தில் விடையும் சொல்கிறான். பின்னால் கானகத்துக்கு ராமனைத் தேடிக்கொண்டு வரும் பரதனைத் தவறாகப் புரிந்துகொண்டு, லக்ஷ்மணன் அவனோடு போர்புரிந்து ‘உரஞ்சுடு வடிக்கணை ஒன்றில் வென்று முப்புரஞ்சுடும் ஒருவனிற் பொலிவன்' -- பரதனுடைய மார்பைப் பிளக்கும் அம்பு ஒன்றை எறிந்து, அந்தக் காரணத்தாலே திரிபுரங்களையெல்லாம் எரித்த சிவனைப்போல் நான் பொலிந்து தோன்றுவேன்' என்று பேசும் சமயத்தில் அவனுக்கு விடையாக ராமன் பேசுவதில் பரதனுடைய இந்த குணத்தைப் பற்றி ராமன் குறிப்பிடுகிறான் என்பதையும் பார்க்கிறோம் அல்லவா?
பெருமகன் என்வயின் பிறந்த காதலின் வருமென நினைகையும் மண்ணை என்வயின் தருமென நினைகையும் தவிர, தானையால் பொருமென நினைகையும் புலமைப் பாலதோ!
பரதன் எவ்வளவு பெரிய மனத்தை உடையவன்! பெருமகன் அல்லவா அவன்! அவன் என்மீது வைத்திருக்கும் அன்பின் தன்மை எப்படிப்பட்டது என்பதனை, லக்ஷ்மணா, நீ அறிய மாட்டாயா? அவன் என்மீது கொண்டிருக்கும் அன்பின் காரணமாகவே என்னைப் பார்ப்பதற்காக வருகிறான். நாட்டை என்வசம் ஒப்படைக்கும் நோக்கத்தையே தன் மனத்துள் கொண்டிருக்கிறான் என்றல்லவா நாம் அவனுடைய வருகையைக் குறித்து உணரவேண்டும்! அவ்வாறு உணராமல், ‘நம்மீது போர் தொடுப்பதற்காகவே படையைத் திரட்டிக்கொண்டு வந்திருக்கிறான்' என்று நாம் நினைப்போமானால், அது ‘புலமைப் பாலதோ?' புத்திசாலிக்கு அழகா? அறிவுள்ளவன் அப்படி நினைக்கலாமா? அறிந்தவன் இப்படி நினைக்கலாமா?' என்று லக்ஷ்மணனிடத்தில் ராமன் கேட்கும் இந்தக் கேள்வியே, பரதனுடைய மனம் எப்படிப்பட்டது என்பதனை, கைகேயியைக் காட்டிலும் மிகத் தெளிவாக ‘விடையும் கொண்டேன்' என்று சொல்லும் அந்தக் கணத்தில் ராமன் அறிந்தே இருந்தான்; பரதனை மிகத் துல்லியமாகக் கணித்து வைத்திருந்தான் என்பதற்குச் சான்றளிக்கிறது; உறுதி செய்கிறது; அடிக்கோடிட்டு, தெள்ளத் தெளிவாக ‘என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ' என்ற சொல்லமைப்பை ‘என்பின் அவன் பெற்ற செல்வம், அடியனேன் பெற்றது, அன்றோ!' என்று பிரித்துப் பொருள் காண ஏது உண்டு என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொல்கிறது. இதில் ஐயம் கொள்ள இடமே இல்லை. கவிஞனே நமக்குச் சான்றளிப்பதற்காக சாட்சிக் கூண்டில் ஏறிநிற்கிறான். It is the Poet who testifies for us.
ஆயின், முதலடியின் மறைபொருள்--அல்லது விளைபொருள்--இன்னமும் ஐயத்துக்கு உரியதாகவே இருக்கிறது. இப்படி ஒரு பொருளைச் சொல்ல ஏது உண்டா, இப்படிப்பட்ட விளைபொருளுக்கு ஏற்றாற்போல்தான் கவி தன்னுடைய நாடகத்தை, சித்திரத்தை, தன் காவியத்தின் மற்ற நிகழ்வுகளை அமைத்திருக்கிறானா என்பதனையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்த்தாலொழிய, நாம் கண்டிருக்கும் இந்த விளைபொருள் சரியானதுதானா என்பதற்கான ‘கவிச்சான்று' கிடைக்காது. நம் வரையில், வாரியார் சுவாமிகள் நாம் எடுத்த முடிவுக்குத் துணைநிற்கிறார் என்ற உறுதிப்பாடு இருக்கின்றது. கல்விச் சிறப்பில் ஈடு இணையில்லாமல் உயர்ந்து நிற்கின்ற, அதைக்காட்டிலும் பெரிதாக பக்தித் துறையில் மிகப்பெரிய, முதிர்ந்த, கனிந்த பெரியோர்களின் வரிசையில் முன்னவராக நிற்கின்ற, நாயன்மார் வரிசையில் ‘அறுபத்து நான்காமவர்' என்று கொண்டாடப்படுகின்ற--கல்வியிலும் பக்தியிலும் ஒன்றே போல் முதிர்ந்த--ஒருவருடைய துணை நம்முடைய முடிவுக்குக் கிட்டியிருக்கிறது என்றபோதிலும், கவிஞனுடைய துணை நமக்குக் கிட்டியிருக்கிறதா என்று பார்ப்பது மட்டுமே அல்லவா நடுவுநிலைமை தவறாத ஆய்வுக்குப் பொருத்தமானது! அப்படி ஒரு தராசில் நிறுத்தினால் நாம் எடுத்த இந்த முடிவு, கண்டிருக்கும் விளைபொருள், நிற்குமா? கம்பனுடைய கவித்தராசில் நிறுத்தால் இந்த முடிபு ‘துலையேறுமா? எடையுள்ளதாக அங்கீகரிக்கப்படுமா?' இதைச் செய்து பார்த்தால் அல்லவோ நாம் உண்மையான நடுநிலையாளராக, தன்னுடைய கருத்தின் மேல் வைத்த காதலால் அன்றி, சத்திய, சந்தர்ப்பங்களுக்குக் கட்டுப்பட்ட, dispassionate judgement என்ற தகுதிப்பாட்டுக்குப் பொருத்தமுள்ளவர்களாக நிற்க இயலும்? அப்படியானால், ‘மன்னவன் பணியன்று; ஆகில் நும் பணி' என்ற விளைபொருளுக்குக் கம்பசித்திரம் எவ்வளவு தூரம் பொருந்தி வருகிறது என்பதைப் பார்க்க வேண்டுமல்லவா? இந்தக் கணத்தை வால்மீகி எப்படித் தீட்டியிருக்கிறார், கம்பன் எப்படித் தீட்டியிருக்கிறான் என்பதையும் காணவேண்டுமல்லவா? இந்த ஒரு கட்டத்துக்குள் கம்பன் என்னென்ன மாறுதல்களைச் செய்திருக்கிறான், எப்படியெல்லாம் நம்மில் பெரும்பாலானோர் கவனிக்கத் தவறுகின்ற சித்திர மாறுதல்களைச் செய்திருக்கிறான், ஏன் அவ்வாறு செய்திருக்கக் கூடும், அவன் செய்திக்கும் இந்த மாறுதல்களுக்கு என்ன பொருள் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு கவனமாகவும் ஆழமாகவும் கண்டால் அல்லவா நாம் கொள்ளும் இந்த விளைபொருள் நிரூபணமாகும்? ராமனுடைய ‘பணிவான' விடையில் மன்னவன் ‘பணியானது‘ இன்னொரு பொருளிலும் கொள்ளத்தக்கதே என்பதற்குக் கவிஞனுடைய ஆசியும் அணுக்கச் சான்றும் கிட்டும்?
செய்வோம்.
ஹரி கிருஷ்ணன் |