வாசகர் கைவண்ணம் - ஆசையாக தோசைகள்
சிகப்பு தோசை

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
பச்சை அரிசி - 1 டம்ளர்
உளுத்தம் பருப்பு - 1/4 டம்ளர்
வெந்தயம் - சிறிதளவு
தக்காளி - 5
மிளகாய் வற்றல் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
அரிசி, பருப்பு வகைகளை நன்றாக மூன்றுமணி நேரம் ஊற வைக்கவும். அத்துடன் மிளகாய் வற்றலையும் சேர்த்து ஊற வைக்கவும். அனைத்தும் நன்றாக ஊறியவுடன் நன்கு அரைத்து, அத்துடன் தக்காளிப்பழத்தையும் அரைத்துச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயம் சேர்த்து உடனடியாக தோசை வார்த்தால் நல்ல கலருடன் தோசை மிக ருசியாக இருக்கும்.

*****


ஈஸி தோசை

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1/4 டம்ளர்
மைதா மாவு - 1/4 டம்ளர்
அரிசி மாவு - 1/4 டம்ளர்
ரவை - 1/4 டம்ளர்
ஓட்ஸ் - நான்கு தேக்கரண்டி
கெட்டித் தயிர் - சிறிதளவு
தக்காளி - 5
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம் - 2 தேக்கரண்டி

செய்முறை
எல்லா மாவையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அத்துடன் தயிர், ஓட்ஸ், ரவை எல்லாம் கலந்து சீரகமும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் கலந்து தோசை வார்த்தால் மாவு பதத்தில் தோசை மிகவும் ருசியாக இருக்கும்.

*****


அரைத்து விட்ட தோசை

தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 டம்ளர்
அரிசி மாவு - 1 டம்ளர்
பொட்டுக்கடலை - 4 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
அரிசி மாவு, மைதா மாவு இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். மற்ற பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் கலந்து நன்றாக அரைக்கவும். இவற்றுடன் தேவைக்கேற்ப உப்பு, சீரகம் கலந்து தோசைமாவு பதத்தில் தயார் செய்து கொள்ளவும். தோசை வார்த்துப் பரிமாறினால் நல்ல சுவையாக இருக்கும்.

லலிதா பாஸ்கரன்,
வெஸ்ட் வர்ஜீனியா

© TamilOnline.com