எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர் டாக்டர் நிர்மலா பிரசாத் ஒரு சிறந்த கல்வியாளர், சமூகச் சிந்தனையாளர், பெண்ணியவாதி. பிற கல்லூரிகளில் இல்லாத பல புதிய துறைகளைத் தோற்றுவித்துத் தமது கல்லூரியின் தரத்தை உயர்த்திக் காட்டியவர். பலவீனங்களை பலமாக மாற்றும் மனவுறுதி கொண்டவர். தென்றலுக்காக அவரைச் சந்தித்தோம். அந்த நேர்காணலிலிருந்து...
கே: உங்களது கல்விப் பின்னணி என்ன? ப: அக்காலத்தில் பெண்கள் பி.காம் படிக்க முடியாது. பெண் பி.காம். பட்டதாரிகளே இல்லாத நிலையில் ஆந்திரா யூனிவர்சிடி மூலம் நான்கே வருடங்களில் பி.காம். படிப்பை முடித்தேன். அப்போதுதான் கோயமுத்தூர் பி.யூ.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பெண்களுக்கென்று பி.காம். தொடங்கினார்கள். தமிழ்நாட்டிலேயே பெண்களுக்கென்று முதன்முதல் பி.காம் தொடங்கிய கல்லூரி அதுதான். அவர்கள் என்னை வேலைக்கு அழைத்தனர். அது உதவி விரிவுரையாளர் பணி. எம்.காம். முடித்திருந்தால்தான் விரிவுரையாளராகப் பணியாற்ற முடியும். என்னுடன் பணியாற்றிய மற்றவர்கள் எம்.காம் பட்டதாரிகள். அவர்கள் அடிக்கடி என்னிடம் 'நீ வெறும் பி.காம். தான், நாங்கள் எம்.காம்.' என்று சொல்லி வந்தனர். இது ஒரு தூண்டுகோலாக அமையவே, ஒரிஸா யூனிவர்சிடியில் எம்.காம். சேர்ந்து பல்கலைக் கழகத்தில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வாங்கினேன்.
##Caption##கே: எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரிக்கு வருமுன் கல்வித்துறையில் உங்கள் அனுபவம் என்ன? ப: சென்னை S.I.E.T.யில் காமர்ஸ் துறை விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். அடுத்து எதிராஜ் கல்லூரியினர் அழைப்பை ஏற்று அங்கே சேர்ந்து, பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு வணிகவியல் துறையை ஆரம்பித்தேன். ஆரம்பித்த முதல் பேட்சிலேயே ஒரு மாணவி பல்கலைக்கழக அளவில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்ததுடன், எட்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றாள். பி.காம். என்றால் எதிராஜ் காலேஜ்தான் என்னும் அளவுக்கு அது பெயரையும், புகழையும் பெற்றுத் தந்ததுடன், பி.காம் என்பது சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து மிக்க படிப்பாகவும், எதிராஜ் கல்லூரி என்பது சென்னையின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகவும் ஆனது.
தொடர்ந்து எம்.காம், பிஹெச்.டி ஆகியவற்றை எதிராஜில் ஆரம்பித்தேன். நான் துறைத்தலைவராக அங்கே ஏறத்தாழ 21 ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். 24 வயதிலேயே நான் துறைத்தலைவராகி விட்டேன். காரணம், அப்போது காமர்ஸ் படித்த பெண்கள் அதிகம் இல்லை. அந்நிலையில்தான் எம்.ஓ.பி, வைஷ்ணவா கல்லூரியில் முதல்வர் பதவிக்கான அழைப்பு வந்தது.
கே: எம்.ஓ.பி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி என்றாலே ஒரு தனித்த அடையாளம், பெயர், புகழ் உள்ளது. இதனை எப்படிச் சாதித்தீர்கள்? ப: எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி அதிகம் அறிமுகமாகாத கல்லூரியாக இருந்தது. இந்தக் கல்லூரியைச் சிறந்த, பிரபலமான கல்லூரியாக மாற்றிக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் பணியில் சேர்ந்தேன். நான் முதல்வராகச் சேர்ந்த பொழுது அது ஐந்தாண்டுகளைக் கடந்திருந்தது. நிதிப் பற்றாக்குறையில் இருந்தது. ஆசிரியர்களுக்கு அதிகம் ஊதியம் தர இயலாத நிலைமை. ஸ்டெல்லா, எதிராஜ் போன்ற அரசு நிதி உதவி பெறும் மற்றக் கல்லூரிகள் எல்லாம் 3% கட்டணம் வாங்கும்போது, நாங்கள் 100% கட்டணம் வாங்கினால்தான் கல்லூரியை நடத்த முடியும் என்ற நிலைமை. எப்படி மாணவர்களை வரவழைப்பது? குறைந்த சம்பளமே கொடுத்தும் ஆசிரியர்களை எப்படித் தக்க வைப்பது? இவை என் முன்னிருந்த சவால்கள்.
முதலில் மாணவர்களுக்குக் குறைவான கட்டணத் தொகையை நிர்ணயித்தோம். ஆனால், பாடத்திட்டங்களில் பல புதுமைகளைச் செய்தோம். பாடம் சொல்லிக் கொடுத்ததோடு, பல்வேறு சுயமேம்பாட்டுப் பயிற்சிகள், மென்திறன்கள் (Soft Skills) பலவற்றைக் கற்பிக்க ஏற்பாடு செய்தோம். 'உங்களது படிப்பு மட்டுமல்ல; பிற திறமைகளுக்கும் இங்கே இடம் உண்டு' என்று மாணவிகளிடம் கூறினோம். அது மாணவிகளைக் கவர்ந்தது. நடனம், இசை, ஊடகம் என்று பலதுறை ஆர்வம் கொண்ட மாணவிகள் ஆர்வத்துடன் பயில வந்தார்கள். நாளடைவில் பலருக்கும் எங்கள் கல்லூரி திறமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடியது, கல்வியோடு பல்திறன் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்குவது என்ற எண்ணம் பரவ ஆரம்பித்தது.
இது போன்றவற்றால் எங்கள் கல்லூரிக்குத் தனித்த அடையாளம் கிடைத்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் இவற்றைச் சாதித்தோம். அதன் பின்னர்தான் கட்டணத்தை உயர்த்தினோம். அதன்மூலம் கல்லூரியின் நிதிநிலைமை சீரானதுடன், பிற வளர்ச்சித் திட்டங்களிலும் கவனம் செலுத்த முடிந்தது. இன்று சென்னையின், ஏன் தமிழகத்தின், சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி விளங்குகிறது.
கே: பாடத்திட்டத்துடன் இணைந்து மாணவிகளுக்கு நீங்கள் எந்த விதமான பயிற்சிகளை அளிக்கிறீர்கள்? ப: பாடத்திட்டத்துடன் சேர்த்து ஒரு சிறப்புப் பாடத் திட்டமும் (Special Syllabus Course) கற்றுத் தருகிறோம். அது திறன் வளர்ப்பதாக இருக்கும். உதாரணமாக, கம்ப்யூட்டர் மாணவி பாடத்திட்டத்தில் இல்லாத 'இணையதள வடிவமைப்பு' கற்க வேண்டும். அல்லது ‘மென்பொருள் சோதனை'. வணிகவியல் மாணவி ‘காப்பீடு' பற்றிக் கற்க வேண்டும். இல்லாவிட்டால் 'நிதித்துறைச் சேவைகள்'. இவற்றிற்கும் மதிப்பெண் உண்டு. இதற்காக அந்தந்தத் துறை வல்லுநர்களை வரவழைத்துப் பயிற்சி அளிக்கிறோம். மாணவிகளின் தனித்திறன்கள் வெளிவருமாறு பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறோம். உதாரணமாக, ஒரு மாணவிக்கு சமைப்பதில் ஆர்வம் இருந்தால், அதில் அவருக்குப் பயிற்சி அளித்து, ஒரு உணவு விடுதி, ஃபாஸ்ட் ஃபுட் சென்டர் ஆரம்பிக்கும் அளவுக்கு உருவாக்குகிறோம். ஒவ்வொரு மாணவிக்கும் அவருடைய ஆர்வம், திறமைகளைக் கண்டறிந்து அதில் மேம்பாடு அடையப் பயிற்சி தருகிறோம்.
மேலும் தொழில்துறைப் பயிற்சி என்ற முறையில் மாணவிகளை நாங்கள் தொழில் சார்ந்த பயிற்சிக் களங்களுக்கும் கட்டாயமாக அனுப்புவதால் மாணவிகளின் திறமை, ஆர்வம், செயல் ஊக்கம் பற்றித் தெரியவந்து, பெரிய நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கின்றன. அவர்கள் பயிற்சிக்காகச் செல்லும் இடங்களில் அவர்களது ஆளுமைத் திறன், பன்முக ஆற்றல், பழகும் தன்மை, அறிவு போன்றவற்றால் கவரப்பட்டு பெரிய நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன.
எங்கள் கல்லூரிக்குத் தன்னாட்சி அந்தஸ்து கிடைத்த பிறகு, எங்களால் பலவற்றைச் சுதந்திரமாகச் சாதிக்க முடிகிறது. எங்கள் கல்லூரிக்கென்று ஒரு நல்ல பெயர் இருப்பதுடன் பல விருதுகளும் தேடி வருகின்றன.
##Caption##கே: பிற கல்லூரிகளில் இல்லாத பல் வேறு புதுப்புதுத் துறைகளை, படிப்புகளை உங்கள் கல்லூரியில் உருவாக்கி இருக்கிறீர்கள், அது குறித்து... ப: சென்னைப் பல்கலைக்கழகம் தவிர வேறு எங்கும் இல்லாத எம்.ஏ. கம்யூனிகேஷன்ஸ் பட்ட வகுப்பை முதன்முதலில் ஆரம்பித்தது நாங்கள்தான். அடுத்து பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ். பெண்களுக்கென்று விஷுவல் கம்யூனிகேஷன் ஆரம்பித்தது முதன்முதலில் நாங்கள் தான்.இன்று பல பிரபல பத்திரிகைகளில் எங்கள் கல்லூரி மாணவிகள் பணியாற்றுகிறார்கள். பின்னணிப் பாடகி சைந்தவி எங்கள் கல்லூரியைச் சேர்ந்தவர்தான்.
ஒருமுறை எங்கள் கல்லூரிக்கு வருகை தந்திருந்த யூ.ஜி.சி சேர்மன், எங்கள் மாணவியரின் Presentation Skills-ஐப் பார்த்து வியந்து எலக்ட்ரானிக் மீடியா ஆரம்பிக்க உடனடியாக அனுமதி அளித்தார். இந்தியாவிலேயே நாங்கள்தான் முதன்முதலில் அந்தத் துறையை ஆரம்பித்தோம். இதில் ஆடியோ ப்ரொடக்ஷன், வீடியோ ப்ரொடக்ஷன் என பல பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதாவது 'மீடியா' என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு அதில் இருக்கும் எல்லாவிதப் பயிற்சிகளும் முழுமையாக வழங்கப்படுகின்றன.
அடுத்து இதழியலில் பட்டப் படிப்பை ஆரம்பித்தோம். இதுவும் இந்தியாவிலேயே முதன்முதலில் எங்கள் கல்லூரியில்தான் துவங்கப்பட்டது. ஜர்னலிசம், எலக்ட்ரானிக் மீடியா, விஷுவல் கம்யூனிகேஷன் எதுவானாலும் எங்கள் கல்லூரியில் சேர்ந்துதான் படிக்க இயலும் என்ற நிலையை உருவாக்கி னோம். பன்னாட்டு சிஸ்டம் நிர்வாகம், கணிதத்துடன் கணினித் துறை, வர்த்தக நிறுவனச் சமூகவியல் என்று பல புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். இன்று இந்தியாவில் முதன்மையான துறையாக இருப்பது உணவு பதப்படுத்தும் (Food processing) துறைதான். இது போன்ற படிப்புகள் வேறு எந்தக் கல்லூரியிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களிடம் தனியாக ஒரு பண்பலை (FM) வானொலி நிலையம் உள்ளது. அதில் படைப்பு, தொகுப்பு, தொழில்நுட்பம், தலைமைப் பணி என எல்லாவற்றையும் ஒரு மாணவி தானே நிர்வாகம் செய்யும் அளவுக்கு 'வானொலி நிலைய நிர்வாகப் பயிற்சி' அளிக்கிறோம். ஒவ்வொரு மாணவியும் குறைந்தபட்சம் 100 மணி நேரமாவது பயிற்சியில் ஈடுபடுவது கட்டாயம். அவர்கள் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது வேலை வாய்ப்பு எளிதாகிறது. எங்கள் கல்லூரியில் 'யுவசக்தி' என்ற ஒரு பத்திரிகை நடத்துகிறோம். இதழியல் மாணவிகள் அதில் எழுதுதல், படிச்செப்பம் (editing), படிதிருத்தம் (proof reading) எனப் பல பிரிவுகளிலும் பயிற்சி பெறுகிறார்கள்.
கே: உங்கள் கல்லூரியின் சாதனையாக, தனித்த அடையாளமாக எதைச் சொல்வீர்கள்? ப: எங்கள் கல்லூரி நகரின் மையமான இடத்தில் இருக்கிறது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவுதான் உள்ளது. கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவியர் இங்கு படிக்கிறார்கள். எங்களுக்கென்று தனியான விளையாட்டுத் திடல் கிடையாது. நமது பலவீனத்தையே பலமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடைய நான், விளையாட்டுத் துறையிலும் சாதிக்க முடிவு செய்தேன். நகரில் இருக்கும் சிறந்த விளையாட்டுத் திடல்களை வாடகைக்கு எடுத்து அதில் எங்கள் மாணவிகள் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்தேன். சிறந்த தனித்துவ மிக்க பயிற்சியாளர்களை நியமித்தேன். நாடெங்கிலுமிருந்து விளையாட்டில் சிறந்த மாணவிகள் எங்கள் கல்லூரியில் சேர்ந்து பயில ஏற்பாடுகளைச் செய்தேன். எல்லோரும் கடினமாக உழைத்தார்கள். இன்று ஹாக்கி, வாலிபால், பேஸ்கெட் பால், அத்லெடிக்ஸ் என்று எங்களிடம் சிறந்த 18 டீம்கள் உள்ளன. நகரில் நடக்கும் எந்த விளையாட்டிலும் எங்கள் கல்லூரிக்கு முதல் பரிசு நிச்சயம் உண்டு. இது ஒரு சாதனை.
கடந்த 41 ஆண்டுகளாக ‘மினி ஒலிம்பிக்ஸ்' போட்டிகளை நடத்தி வருகிறார்கள். 60, 70 ஆண்டுகளாக நடக்கும் கல்லூரிகள்தாம் அதில் கோப்பையை வெல்லும். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக அந்தப் போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். அதுவும் மற்றக் கல்லூரிகளைவிட அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில். கடந்த ஆண்டு 85 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம். இதுவும் ஒரு சாதனை தான்.
தனியார் கல்லூரிகளுக்கு என்.சி.சி. பயிற்சி கிடையாது, அது விதிகளில் ஒன்று. நான் அந்தப் பயிற்சியை வழங்குங்கள், அதற்கான அனைத்துச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்று உறுதி கொடுத்தேன். மூன்று வருடங்களுக்கு முன்னால் எங்கள் கல்லூரியில் என்.சி.சி. தொடங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணி வகுப்பிற்கு மாணவிகளை அனுப்பினோம். இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதே போன்று நகரில் நடக்கும் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு எமது என்.சி.சி. மாணவிகள் பரிசு பெற்றிருக்கிறார்கள். எங்களிடம் இருப்பது ஒரு யூனிட்தான் என்றாலும் இதுவரை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறோம்.
ஹமாம் நலங்கு மாவு இசைப் போட்டி, ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டி எனத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் எங்கள் மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருகின்றனர்.
நான் மாணவிகளிடம் சொல்வது இதைத் தான். 'நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்பதற்காக யாரும் சிரமப்பட வேண்டாம். 60% வாங்குங்கள் போதும். ஆனால் மீதி 40% வாங்குவதற்கான நேரத்தை உங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக, Career Developmentற்காகச் செலவழியுங்கள். அதுவும் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்றுதான் சொல்வேன்.
இது போன்றவற்றை எங்கள் கல்லூரியின் சாதனையாக, தனித்த அடையாளங்களாகச் சொல்லலாம்.
கே: தற்போதைய கல்வி முறையில் அடிப்படைக்கல்வி முதற்கொண்டே பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர். உங்கள் கருத்து? ப: மாற்றம் தேவை என்பது உண்மைதான். குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக ஆங்கிலேயர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மெக்காலே கல்வி முறையைத்தான், சுதந்திரம் பெற்று 61 வருடங்களாகியும் இன்னமும் நாம் பின்பற்றி வருகிறோம். காலத்துக்கேற்றவாறு புதிய தொழில்முறைக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதையும் அடிப்படைக் கல்வியிலிருந்தே கொண்டுவர வேண்டும். தற்போது நாம் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால் Application Skills, Problem Solving Skills போன்றவற்றில் நாம் இன்னமும் பின்தங்கியே இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.
கே: அக்கால மாணவர்களுக்கும், இக்கால மாணவர்களுக்கும் இடையே கற்கும் திறன், ஆர்வம், செயல் ஊக்கம் போன்றவற்றில் என்ன வேறுபாடுகளை நீங்கள் காண்கிறீர்கள்? ப: தற்கால மாணவர்கள் சில துறைகளில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக, அதுபற்றிய நல்ல அறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். இணையம் போன்ற ஊடகங்கள் மூலம் அதற்கான வாய்ப்புகளும் பெருகியுள்ளன. அதனால் ஆசிரியர்கள் குறித்த ஒருவித அலட்சிய மனோபாவமும், தங்களைக் குறித்த அளவுக்கு அதிகமான நம்பிக்கையும் இருக்கிறது. மேலும் கடின உழைப்பு என்பது தற்போது அதிகம் இல்லை. முன்பு மாணவர்களிடம் எப்படியாவது சாதிக்க வேண்டும், முன்னுக்கு வரவேண்டும், எதையாவது செய்யவேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. ஆனால் தற்போதைய மாணவர்களிடம் அது அதிகம் இல்லை. காரணம், எளிதில் கிடைக்கும் வேலை வாய்ப்பு, பெருகிவிட்ட ஊடக வசதிகள் போன்றவை. இன்றைய மாணவர்கள் ஸ்மார்ட்தான். ஆனால் பொறுப்பு, கீழ்ப் படிதல், செயலாற்றும் வேகம், ஆசிரியர்கள் மீதான மதிப்பு, கல்லூரி மீதான மதிப்பு, அக்கறை போன்றவையெலாம் முந்தைய தலைமுறை மாணவர்களைவிட மிகக் குறைந்திருக்கிறது என்பதே உண்மை.
கே: ஒரு முதல்வராக நீங்கள் சாதித்த விஷயங்கள் என்னென்ன? ப: 50, 60 ஆண்டுகள் பழைமையான கல்லூரிகள் செய்த சாதனைகளை, ஆரம்பித்து 15 வருடங்களே ஆன, புதிய, அதிகம் பிரபலமாகாத கல்லூரியான நாங்கள் சாதித்திருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு பெயரை, அடையாளத்தை குறுகிய இந்தக் காலத்திற்குள் உருவாக்கி, பிரபல கல்லூரிகளுக்கு இணையாக எங்கள் கல்லூரியைத் தேடி மாணவர்களை வரச் செய்தது ஒரு சாதனை.
இந்தியாவிலேயே முதன் முதலில் தனியாக பண்பலை வானொலி ஆரம்பித்த கல்லூரி எங்களுடையது தான். டெக்னாலஜியைப் பொறுத்த வரையில் நான் இருக்கும் இந்த இடத்திலிருந்தே 3000 மாணவிகளையும் என்னால் ஒருங்கிணைத்து வழி நடத்த முடியும். வகுப்புக்கு வகுப்பு டி.வி. நெட்வொர்க் இணைப்புகள் கொடுத்துள்ளோம்.
இதை எல்லாவற்றையும் விட முக்கியமான சாதனை, பிற கல்லூரிகள் 90%, 95% பெற்ற மாணவிகளைத் தான் மேலும் வெற்றிகரமாக ஆக்குவார்கள். ஆனால் எங்களுடையது அப்படி அல்ல. மாணவிகள் போர்டில் 40% வாங்கி இருந்தாலும் சரி, 50% வாங்கி இருந்தாலும் சரி, எங்களிடம் முழுமையாக மூன்றாண்டுகள் படித்துவிட்டு வெளியேறும் போது அவர் நிச்சயம் ஏதாவது ஒரு துறையில் வெற்றிகரமானவராக மாறி இருப்பார். உதாரணமாக எங்களது ஸ்போர்ட்ஸ் மாணவிகளுக்கு ரயில்வேயிலோ, காவல் துறையிலோ வேலை கிடைக்காவிட்டால் கூட, ஒரு ஃபிட்னஸ் சென்டர் வைத்தோ, அதில் வேலை பார்த்தோ சம்பாதிக்க முடியும். அந்த அளவுக்குத் தன்னம்பிகையாளராக அவரை உருவாக்குகிறோம்.
கே: எழுத்தாளர் சுஜாதா உங்களது உறவினர். அவருடனான உங்களது அனுபவங்கள் குறித்து... ப: சுஜாதா உறவினர்தான். எங்களது கல்லூரியில் ஊடகக் கல்வி ஆரம்பித்த போது அதில் ஆர்வம் காட்டினார். அதுபற்றி அடிக்கடி விசாரிப்பார். பல ஆலோசனைகளைக் கூறுவார். மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பேசுவார். தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். நிறைய ஆலோசனைகளைக் கூறுவார். குறிப்பாக 'பாரதி' திரைப்படம் வெளியானபோது எங்கள் கல்லூரியில் வந்து அந்தத் திரைப்படம் பற்றி ஒரு அறிமுக உரையாற்றினார். எங்கள் கல்லூரியில் தமிழல்லாத பிற மொழி பேசும் மாணவிகளும் படித்து வருகின்றனர். ஆனால் அவரது பேச்சில் மயங்கிய மாணவிகள் அனைவருமே ஆர்வத்துடன் எங்கள் கல்லூரியில் திரையிடப்பட்ட அந்தப் படத்தைப் பார்த்தார்கள். அந்த அளவுக்கு உரையாற்றல் மிக்கவர் அவர்.
கே: மாணவிகள் குறித்ததான மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது... ப: ஒரு மாணவி - வெளிநாட்டில் திருமண மாகிச் சென்றவர், அங்கிருக்கப் பிடிக்காமல் ஊர் திரும்பத் தீர்மானித்தார். கடைசி சமயத்தில் நான் கூறிய அறிவுரைகள் ஞாபகத்திற்கு வர, எப்படியாகிலும் அனுசரித்து கணவனுடனே வாழ்க்கை நடத்துவது என்று முடிவு செய்து அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டார். என்னை ஒருமுறை யதேச்சையாக விமான நிலையத்தில் சந்தித்தபோது இந்த விவரங்களைத் தெரிவித்தார். என் மாணவி ஒரு தங்கப் பதக்கம் வாங்குவதைவிட இதுபோன்ற நிகழ்ச்சிகளை நான் மிகப் பெருமையானதாகக் கருதுகிறேன். வாழ்க்கையில் வெற்றி பெறுவதுதானே முக்கியம்!
கே: பெண் சுதந்திரம் பற்றி உங்கள் கருத்து என்ன? ப: சுதந்திரம் தேவைதான். ஆனால் அதைத் தவறாக பயன்படுத்தக் கூடாது. மேலும் எந்த விஷயங்களில் சுதந்திரம் தேவை என்பதும் முக்கியமானது. கல்வி கற்கச் சுதந்திரம் கண்டிப்பாகத் தேவைதான். ஆனால் சமூக நியதிகளுக்கு மாறாக நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், எப்படி வேண்டுமானாலும் ஆடை உடுத்துவேன், நினைத்தபடி வாழ்வேன், ஆண் ஊர் சுற்றிவிட்டு லேட்டாக வருவது போல நானும் ஊர் சுற்றிவிட்டு வருவேன் என்றெல்லாம் ஒரு பெண் நினைத்தால், அதன்படி நடக்க ஆரம்பித்தால் அது சுதந்திரமாகாது. அது மாதிரியான சுதந்திரங்களும் தேவையில்லை. அது சமூகச் சீர்கேட்டுக்குத்தான் வழி வகுக்கும்.
உதாரணமாக எங்கள் கல்லூரியில் ஆடைக் கட்டுப்பாடு உண்டு. ஓர் ஆணைப் போல ஒரு பெண் ஆடை உடுத்திக் கொண்டு வரக்கூடாது. ஆடை என்பது அழகைக் காட்டுவதாக இருப்பதை விட, ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பைத் தருவதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். அதுவும் பேருந்திலோ, ஸ்கூட்டரிலோ தனியாக வரும் மாணவிகளுக்கு இது மிக மிக அவசியம். மேலும் கல்வி கற்கும் இடம் ஆலயத்தைப் போன்றது. அந்த இடத்திற்கு உடல், உள்ளத் தூய்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும்தான் வர வேண்டும்.
சுதந்திரம் என்பது, கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு தனியாக வாழ்வதோ, மனம் போன போக்கில் நடந்து கொள்வதோ, கணவன் அல்லாத வேறொருவனுடன் வாழ்வதோ அல்ல. பெண் சுதந்திரம் என்ற பெயரில் இவையெல்லாம் தேவையுமல்ல.
கே: கல்லூரிமூலம் நீங்கள் செய்யும் பிற சமுதாயப் பணிகள் குறித்து... ப: எங்கள் கல்லூரி மாணவிகளே சமுதாயப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அதற்கு மதிப்பெண்ணும் உண்டு. பின்தங்கிய பகுதிகளுக்குச் செல்வது, ஏழை மாணவர்களுக்குச் சுகாதரம், கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்றுத் தருவது, தாய்மார்களுக்குச் சுய தொழில் பயிற்சி அளிப்பது, திடீரென விபத்து, காயம் ஏற்பட்டால் உதவுவது, தீ விபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது, உடல் நலிவுற்றவர்களுக்கு முதலுதவி செய்வது போன்றவற்றைப் பற்றியெல்லாம் மாணவர்களுக்கு, குழந்தைகளுக்குக் கற்றுத் தரும் பணிகளை எங்கள் மாணவிகள் செய்கிறார்கள்.
சுயதொழில் செய்யும் பெண்களுக்கு, காய்கறிகளை நறுக்கி விற்பனை செய்வது, பூங்கொத்துச் செய்வது எனப் பல புதிய தொழில்களைச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் வருமானத்தை உயர்த்துவதற்கான பயிற்சிகளில் மாணவிகள் ஈடுபட்டுள்ளார்கள். பூத்தையல், தையல் போன்று பல பயிற்சிகளை பெண்களுக்கு அளிக்கிறார்கள். மேலும் ஏழைகளுக்குத் துண்டுப் பிரசுரங்கள், டாகுமெண்ட்ரி மூலம் நோய்கள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்றனர். கேன்சர் இன்ஸ்டிட்யூட், ஔவை இல்லம் போன்ற இடங்களுக்குச் சென்றும் சேவை செய்கின்றனர். லேடி வெலிங்டன் பள்ளிக் குழந்தைகளுக்கு நடனம், இசை, கணினிக் கல்வி, ஆங்கில உரையாடல் சொல்லித் தருகிறார்கள்.
கே: உங்களது எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன? ப: நாங்கள் தன்னாட்சி பெற்ற கல்லூரியாக இருந்தாலும், சில கட்டுப்பாடுகள் உள்ளன. இக்கல்லூரியை ஒரு நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக ஆக்க வேண்டும். ஆனால் அதற்கு நிறையப் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். சான்றாக எங்கள் கல்லூரிக்கு இருக்கும் இந்த ஒன்றரை ஏக்கர் இடம் போதாது. பெரிய வளாகம் வேண்டும். இன்னும் பல புதிய வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்களைத் தொழிலுக்கு மட்டுமல்லாமல், நல்ல குடிமகளாக, நல்ல தாயாக, நல்ல மனைவியாக, நல்ல மருமகளாக என வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துக்கும் முழுமையானவர்களாகத் தயார் செய்ய வேண்டும்.
முக்கியமான திட்டம் கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பது. பெரும்பாலான கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிதான் உள்ளது. அந்த ஆசிரியர் வராவிட்டால் அந்தப் பள்ளிக்கு அன்று விடுமுறைதான். இதற்கு மெய்நிகர்க் கல்வி (Virtual Education) மூலம் நாம் தீர்வு காண முடியும். நல்ல இணையத் தொடர்பு இருந்தால் கணினி மூலம் ஓரிடத்தில் இருந்தபடியே பல பள்ளிகளில் பாடம் நடத்த முடியும். இதுபோன்ற ஊடாட்டு முறை மூலம் கற்றுக்கொடுக்கும் போது குழந்தைகளுக்கும் கல்வி ஆர்வம் அதிகரிக்கும். தற்போது பள்ளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இதில் அரசு அனுமதி போன்ற பல நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன. அதை நிறைவேற்றுவற்கான திட்ட வேலைகளைத் தற்போது செய்து கொண்டிருக்கிறோம். இதை எனது கனவுத் திட்டம் என்றுகூடச் சொல்லலாம்.
டாக்டர் நிர்மலா பிரசாத் 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்பதில் உறுதியானவர். இதையும் சாதிப்பார் என்பதில் நமக்கு ஐயமில்லை. அதற்காகத் தென்றல் சார்பில் வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.
விளையாட்டுத் திடல் இல்லை; ஆனால் பதக்கம் குவிக்கிறோம்! எங்களிடம் உலக அளவில் விளையாட்டு வீராங்கனைகள் 40 பேர் உள்ளனர். இது வேறு எந்தக் கல்லூரியிலும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். ஆஸ்திரேலியாவில் மெல்பர்னில் நடந்த ஆசிய காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்ட எங்கள் கல்லூரி மாணவி ஷாமினி டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று வந்திருக்கிறார். இன்று ஹாக்கி, வாலிபால், பேஸ்கெட் பால், அத்லெடிக்ஸ் என்று எங்களிடம் சிறந்த 18 டீம்கள் உள்ளன. நகரில் நடக்கும் எந்த விளையாட்டிலும் எங்கள் கல்லூரிக்கு முதல் பரிசு நிச்சயம் உண்டு. இது ஒரு சாதனை. நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் வைத்திருக்கும் கல்லூரிகள் சாதிக்காதவற்றை விளையாட்டுத் திடலே இல்லாத நாங்கள் சாதித்துக் காட்டியிருக்கிறோம்.
மருமகள் பெருமை! நான் மூன்றாண்டுகளுக்கு முன்னால் சான்பிரான்சிஸ்கோவில் ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். என்னுடைய முன்னாள் மாணவி ஒருவர் உடனிருந்தார். ஒரு தமிழ்ப் பெண்மணி ஆர்வத்துடன் எங்களை நோக்கி வந்தார். நான் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர் என்று சொன்னதும் அந்தப் பெண்மணியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். அவரே விளக்கினார். அவரது மருமகளும் எங்கள் கல்லூரி மாணவிதான் என்றும், இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து அமெரிக்கா வந்ததாகவும், அவள் திருமண வரவேற்பு விழாவுக்கு அவளே அனைத்து வேலைகளையும் - மெனு தயாரித்தலிலிருந்து, சமைப்பதுவரை பார்த்துப் பார்த்துச் செய்ததாகவும், அவள் பெற்றோர் அவளை நன்கு வளர்த்திருபதாகத் தான் கருதியபோது, இது அனைத்தையும் தான் படித்த எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் கற்றுக் கொண்டதாக அவள் கூறியதாகவும் கூறினார். ‘ஒரு கல்லூரியில் இதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரிந்தபோது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. உங்களுக்கு மிகவும் நன்றி' என்று கூறினார். எனக்கு மிகவும் மன மகிழ்வாக இருந்தது. - டாக்டர் நிர்மலா பிரசாத்
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன் |