திணறல்கள்
மனம் படபடவென அடித்துக்கொண்டது. எனக்குள் நான் ஆடிப்போனேன். தலைக்குள் சின்னச்சின்னதாய் அதிர்ச்சி மின்னல்கள். ஊசியால் குத்தப்படுவது போன்ற வலிகளும். வாழ்க்கையே ஒரு கனவாகிவிடக்கூடாதோ என என் வாழ்க்கையின் நிஜங்கள் மெல்ல என்னை நினைக்க வைக்கின்றன. அது உள்ளீடற்ற கடைசி நம்பிக்கை. எனக்குள் மெலிதாக இறங்கும் விழுதின் நுனி. அதைப் பின்பற்றி மேலே போனால்தான் தெரியும், அது எவ்வளவு பெரிய பின்புலத்தைக் கொண்டிருக்கிறது என்று. அத்தனையும் துன்பப் பின்புலங்கள்! என்னை, என் வாழ்க்கையை மொத்தமாய் வேட்கையோடு வேட்டையாடிய தீ நிழல்கள். என்னை இப்போதும் சுடுகின்றன அவை. அனலைக் கக்குகின்றன. காலம் சென்றாலும் அவற்றின் நீளமான பசிதாகம் கொண்ட நாக்குகள் இன்னும் இன்றும் என்னைக் கவ்வி இழுக்கின்றன. கோரமாய் புயலில் தாண்டவமாடும் மிகப்பெரிய மரத்தின் இலைதழைகள் போல சுற்றிச்சுழன்று என்னை நடுநடுங்க வைக்கின்றன.

பயங்கரப் பசி கொண்ட நாக்கு அது. எத்தனையோ மனித உயிர்களைப் பல்வேறு உருவில் வந்து பலி வாங்கினாலும் இன்னும் அதன் வேட்கை தீரவில்லை. விடாது போல இருக்கிறது; யானைத்தீயாய் மனிதத்தைக் கொன்றுவிட்டுத்தான் செல்லும்போல் இருக்கிறது. எத்தனையோ இதயம் கருக்கும் செய்திகளைக் கேட்டு ஒரு 'த்ச்சொ' சொல்லிவிட்டு மறந்து போய்விடும் எனக்குக் காலம் அளித்த மிகப்பெரிய தண்டனை இது.

##Caption##அண்ணாந்து பார்த்தேன். வேப்பமரம் வெயிலை வாங்கிக் குளுமையை எனக்கு தருவித்துக் கொண்டிருந்தது. அவற்றின் இலைகளையும் கிளைகளையும் மீறி ஒருசில வெப்ப நாக்குகள் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன. எப்படியாவது என்னை அவற்றிலிருந்து காக்க என் வேப்பமரம் போட்டி போட்டுக்கொண்டு அவைகளைத் தடுத்துக் கொண்டிருந்தது, கண்ணுக்குக் கண்ணான என் மனைவியைப்போல!

தலை, மேலிருந்து கீழே மெதுவாக இறங்கியது. கண்கள் மூடிக்கொண்டன. தூரத்தில் எரியும் தீயின் அனலை இந்த வேப்பமரத்தின் மெல்லிய காற்று விலக்கிவிட்டிருந்தது.

"என்னப்பா ஒரு மாதிரி இருக்கீங்க...?"

தன் இடது கையை எடுத்து என் மார்பின் குறுக்கே போட்டுவிட்டு காதோடு வாய் வைத்துக்கேட்டாள் வெண்ணிலா.

"இல்லேடா..சின்ன சந்தேகம்" என்றேன் நான். "என்ன...கழுதைக்கி எத்தினி வயசுன்னா... ஏம்பா இப்படி காலங் காத்தாலெ கடுப்பேத்துறே... வெளியிலெ பாத்தியா? நல்ல மழை. சில்லுன்னு காத்து. அஞ்சு மணிக்கி இந்த மாதிரி கிளைமேட்ல நீ எம்பக்கத்துலெ படுத்துக் கெடக்கும்போது எப்படி இருக்கு தெரியுமா? நீ என்னடான்னா...?"

நெஞ்சு முடிகளைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள்.

"ஆ...."

"சொல்லுப்பா என்ன சந்தேகம்?"

"இல்லேடா... ஒண்ணு கேட்டா கோபப்படமாட்டியே..."

"என்னப்பா புதிர்ல்லாம் போடுறெ... நீ என்ன சொன்னாலும் கோபப்படமாட்டேன். இன்னொரு கல்யாணம் கட்டிக்கவான்னு கேட்டாக்கூட! போதுமா?"

"நீ வேற. ஒன்னை வெச்சே சமாளிக்க முடியலெ. இதுல இன்னொன்னு. சும்மா இருடா. ஒரு முத்தம் கொடுவே"

"இதெல்லாம் சொல்லித்தான் தருவேனா... எத்தனை வேணும்? இந்தா மொத்த முத்த ஸ்டாலும். ஓகேயா?"

அடுத்த ஐந்து நிமிடங்கள் ஒரு குழந்தையாய் படுக்கையறையில் அவள் மடியில் இருந்தேன்.

"சொல்லுப்பா... என்ன சந்தேகம்?"

"இல்லே நீ சந்தோசமா இருக்கியா? ஒன்னை நான் சந்தோசமா வெச்சிருக்கேனாடா... மனசுவிட்டுப் பேசேன்."

"அய்யய்யோ. அய்யாவுக்கு என்னாச்சி இன்னைக்கி? உலகத்திலே உள்ள எல்லாப் பொண்ணுங்களையும் விட சத்தியமா நான் சந்தோசமா இருக்கேன். போதுமாப்பா? எனக்கென்ன குறைச்சல்.

உயிரையே எம்மேல வெச்சிருக்க நீங்க; உங்கள மாதிரியே எனக்கு வாச்ச நம்ம குழந்தை சித்தார்த்! வேறென்னப்பா வேணும்? ரொம்ப சந்தோசமா இருக்கேன்."

"நிஜந்தானடா சொல்றே?"

"அய்யோ... என்ன புராப்ளம் உங்களுக்கு? ஏன் ஒருமாதிரி பேசுறீங்க... எனிதிங் ராங்?" என் நெற்றியில் கைவைத்தாள். இழுத்து மூச்சு விட்டு மெதுவாக ஆரம்பித்தேன்.

"ஒண்ணுமில்லேடா. சாதாரண ஒரு ஐ.டி.ஐ. படிச்சவனா இதோ இங்க வந்தேன். பத்து வருஷம் ஆச்சி. ஃபிட்டர் படிச்சி முடிச்சிட்டு ரெண்டு வருஷம் அங்க இங்க சும்மா சுத்தித் திரிஞ்சிட்டு கடைசிலெ பெரியப்பா பையன் வாங்கிகொடுத்த பொய் சர்டிஃபிகேட்டை வெச்சி ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்ஸுன்னு இண்டர்வியூவிலெ கதை விட்டுட்டு, இதோ இங்க வந்து, தத்தக்க பித்தக்கன்னு இங்கிலீஷ் பேசி, எங்கெங்கோ எவனெவன்னுட்டேயோ திட்டு வாங்கி இன்னக்கி ஷிப் யார்டுலெ 'சீஃப் இஞ்சினீயர்'. இந்த நாட்டுலெ 'பிஆர்' வாங்கி எங்க கிராமத்துலெ பணக்காரன்னு சொல்ற அளவுக்கு பேங்க் பேலன்ஸையும் உயர்த்திட்டு என் தேவதையா ஒன்னக் கல்யாணம் பண்ணி ஒரு கொழந்தைக்கும் அப்பனாகி... பாத்தியா. எத்தனை 'சர்க்கிள்' தாண்டி வந்துட்டேன். ஆனாலும் என் மனசுக்குள்ளே ஏதோ ஒண்ணு இருந்துக்குட்டே இருக்குடா. என் வாழ்க்கையோட முடிவுதான் என்ன? இன்னும் எதுக்காக நான் இப்படி ஓடி ஆடிக்கிட்டு இருக்கேன். எல்லாம் போதும்ன்னு தோணுதுடா."

"என்னப்பா ஏன் இப்புடில்லாம் பேசுறீங்க? என்னாச்சி.? பேசாமெத் தூங்குங்க! டயர்டா இருக்கா?"

"இல்லடா. ஒனக்குத் தெரியுமா? நீயெல்லாம் வாத்தியாரு புள்ளெ. இங்கிலீஷ்ல்லாம் நல்லாப்பேசுவெ. நான் அப்படி இல்லடா. அஞ்சாவதுலெதாண்டா ஏபிசிடியே படிச்சேன். நம்புறீயா? இங்கீலீஷ் வார்த்தைகளையெல்லாம் தமிழ்ல்லெ 'இஸ் வாஸ்'ன்னு எழுதி வெச்சிப்படிச்சவண்டா. எனக்கு இந்த வாழ்க்கையே பெரிசு. கடவுளுக்கு அதுக்காக எப்பவும் நன்றி சொல்லிக்கிட்டிருக்கேன்டா. சில சமயங்களிலெ பாத்தியன்னா எதுவுமே புடிக்கலை. அதுதாண்டா உங்கிட்டே கேக்குறேன். எங்கிட்டெ ஏதாவது மாற்றம் இருக்கான்னு. எதாவது இருக்கா அப்படி?"

"அட... சத்தியமா அதெல்லாம் இல்லைப்பா. நானும் நீங்களும் எப்பவும் சந்தோசமாத்தாம்ப்பா இருக்கோம். வாழ்க்கையிலே சந்தோசமும் துன்பமும் நம்ம மனசு தர்றதுதான். துக்கத்திலேயும் உங்ககூட நான் இருந்தா அது எனக்கு சந்தோசம். சந்தோசத்துலெ கூட நீங்க என்னைவிட்டுட்டுத் தனியா இருந்தா அது எனக்கு துக்கம்."

என்னை மார்போடு அணைத்துக் கொண்டாள். அன்று இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். நான் தப்பு செய்து விட்டேன். பெரிய தப்பு செய்துவிட்டேன்.

வேப்ப மரக்காற்று இதமாக இருந்தது. ஆனால் என் உடம்பு தீச்சுவாலைக்கு அருகில் நிற்பது போல தகித்துக் கொண்டிருந்தது. மெல்ல கண் திறந்தேன். என் கண்ணில் நேரடியாக வந்து விழுந்து கொண்டிருந்தது அந்த வெளிச்சக்கீற்று. வேப்ப மர இலைகளைத்தாண்டி என் கண்ணுக்குள்ளும் இதயத்துக்குள்ளும் நிறைய சூடு ஏற்றியிருந்தது அது.

சாய்வு நாற்காலியை எழுந்து இழுத்துப் போடுவதற்கு எரிச்சலாக இருந்தது. திரும்பவும் இமைகளை இணைத்து, கையிலிருந்த துண்டால் கண்களை மூடிக் கொண்டேன். கொதித்த நீரில் இருந்து வரும் ஆவி போன்றதன் வெப்பம் என் கண்களுக்குள் குடியேறிவிட்டிருந்தது.

அன்று நான் வேலையில் இருந்து திரும்பும் போதே கொஞ்சம் காய்ச்சல் இருந்தது எனக்கு. கண்டதும் பதறிப்போய்விட்டாள் வெண்ணிலா. இதெல்லாம் சும்மாடா என்றேன். ஆனாலும் அவள் விடவில்லை. மாத்திரை மருந்தெல்லாம் கொடுத்துவிட்டு திருஷ்டியும் சுற்றினாள். அதுமட்டும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அடுத்த நாள் நான் வேலைக்குப் போகவில்லை. அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றோம். வெறும் காய்ச்சல் தான் என்றாலும் எங்களைத் தொடர்ந்து நான்கு நாட்கள் வரச்சொல்லியிருந்தார்கள்.

என்னைச்சுற்றி மருந்து வாசனையும் மருத்துவமனையின் டெட்டால் நெடியும் கலந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு. கண்ணைத் திறந்து பார்த்தேன்.

வாசலில் நர்ஸிடம் ஏதோ அவள் பேசிக்கொண்டிருந்தாள். அவளது முகத்தில் பயக்களை. தீவிரமாகவே அது அவளை பதட்டப்படச் செய்தது. நான் விழித்ததைக் கண்டவுடன் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு என்னருகே வந்தாள்.

கைகளைக் கோத்துக்கொண்டு பக்கத்தில் அமர்ந்தாள்.

"என்னாச்சிடா... என்னாச்சி எனக்கு? எப்படி நான் இங்கெ வந்தேன்?"

"ஒண்ணுமில்லே... திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க நீங்க. அதான் டக்குன்னு ஒரு டாக்ஸி எடுத்து இங்கே கூட்டிட்டு வந்திட்டேன். பாபு அண்ணாவை போன் பண்ணிக் கூப்பிட்டேன்.

உடனே வந்தார். உங்களுக்கு ஒண்ணுமில்லையாம். ஜஸ்ட் லோ பிரஷர், அவ்வளவுதான். இப்போத்தான் டாக்டரிடம் கேட்டேன். ஓக்கேங்கிறார். நாளைக்கு மார்னிங் வீட்டுக்கு போகலாங்கிறார். அதுவரைக்கும் பேசாமெ தூங்குங்க. நான் இங்கேதான் இருக்கப்போறேன். குழந்தையைத் தூக்கிட்டு பாபு அண்ணா வெளில இருக்கார். எப்படிப் பயந்துபோயிட்டேன் தெரியுமா?" கண்களில் இருந்து விழும் பாசம்!

கட்டிக்கொள்ளவேண்டும் போலிருருந்தது அவளை. கட்டிக் கொண்டிருந்திருக்கலாம். காற்று புகாதளவுக்கு கட்டிக் கொண்டிருந்திருக்கலாம். தப்புச் செய்துவிட்டேன்.!

அங்குமிங்கும் அலைந்து மாத்திரை மருந்து வாங்கியதைக் கண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் நான் கொஞ்சம் தேறியிருந்தேன். வீட்டுக்கு வந்தோம். காலையில் உடம்பெல்லாம் பயங்கரவலி. ஒத்தடம் வைத்துக் கொடுத்தாள். அப்போதே அவளைக் கவனித்தேன். ஏதோ வித்தியாசம் தெரிந்தது.

அவளை அருகிலழைத்து அமர வைத்துக் கொண்டேன்.

"ஏண்டா ஒரு மாதிரி இருக்கே...?"

"இல்லைப்பா. நல்லாயிருக்கேன்."

"சித்தார்த் எங்க?"

"தூங்குறான். வீட்டில் இருந்து மாமா அத்தை லெட்டர் போட்டுருக்காங்க. பயந்து போயிருக்காங்க போலயிருக்கு. உடனே நம்மளை கெளம்பி வரச்சொல்லியிருக்காங்க. ரொம்பப் பயந்துட்டாங்க போல."

"அப்படியா... அது சரி. நீ ஏண்டா இப்படி இருக்கே?"

"ஒண்ணுமில்லைப்பா. ஒரு நர்ஸ் கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன். அதிலேயிருந்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. என்னடா உலகம் வாழ்க்கையின்னு. கட்டின புருஷனே இப்படி இருந்தா பின்னே எப்படி மனசுலே நிம்மதி இருக்கும்?"

"என்னடா பிரச்சனை?"

##Caption## "இல்லே... நீங்க ஆஸ்பிட்டல்லெ இருந்தீங்கல்லெ. அப்போ அந்த நர்ஸ்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன். ஒரு வாரமா அவங்க வீட்டுக்கு போறதில்லையாம். அங்கேயே வேலை பாத்திட்டு அங்கேயே தங்கிக்கிறாங்களாம். புருஷன் இதுவரைக்கும் போன் கூடப் பண்ணலையாம். என்னவோ மாதிரி இருந்ததுப்பா. நீங்களும் அப்படித்தான் இருப்பீங்களா எனக்கு ஏதாவது ஒண்ணு வந்தா?"

"என்னடா சொல்றே... ஒண்ணுமே புரியலை!"

"இல்லெங்க. அவங்க ஆஸ்பிட்டல்லெ வேலை பாக்குறாங்க இல்லியா? அதுதான் எல்லாத்துக்கும் காரணம். ஒண்ணு சொல்லட்டுமா? அந்தம்மா புருஷன் பெட்ரூம்லகூட வந்து ஒண்ணாப் படுக்கலையாம். ஹால்லெ படுத்துக்குட்டாராம். அதுலேயே அவங்களுக்கு பாதி உயிர் போயிடுச்சி. வீட்டுக்குப் போகவும் பிரியப்படலியாம். அதான்... யோசிச்சேன். ஒரு மாதிரி இருந்தது."

"அய்யோ... என்னமோ சொல்றே! ஒண்ணுமே புரியலை. சரி அதை விடு. இந்த மாசந்தானே உன்னோட பர்த்டே. என்ன வேணும் உனக்கு. அன்னக்கி லீவு போட்டுட்டு வீரமாகாளியம்மன் கோயில் போறோம். அங்கேயிருந்து பெருமாள் கோவில். அப்படியே முஸ்தபா சென்டர். உனக்கு ஏதாவது ஸ்பெசலா வாங்கித் தரணும்ன்னு நெனச்சிக்கிட்டு இருக்கேன். ரூபி நெக்லஸ் வாங்கிக்கிறியா? இல்லாட்டி வேற ஏதாவது டயமெண்ட் ஆர்னமென்ட் வாங்கிக்க. அப்படியே எனக்கும் புடிச்ச எடத்துக்கும் போவோம். ஓக்கேயா?"

"சரி. அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு வேற ஒண்ணு வேணும். தருவீங்களா? பிளீஸ்!"

"அட...! என்ன வேணுனாலும் சொல்லு. கண்டிப்பா வாங்கித்தாரேன்."

"அய்யோ... அது வாங்கித் தரவேண்டிய பொருள் இல்லே. நீங்க உங்ககிட்ட இருந்து தான் தரணும். கல்யாணம் ஆகி மூணு வருஷத்துலெ இப்போத்தான் அதை கேக்கப் போறேன். கண்டிப்பாத் தருவீங்கல்ல?"

"தருவேனா இல்லையாங்கிறதைக் காதைக் கொடு சொல்றேன்..."

காது மடல்களை மெதுவாக கடித்து விட்டுத்தான் அதைச்சொன்னேன்.

நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டுச் சென்றாள். அதைக்கூட நான் திருப்பிக் கொடுக்கவில்லையே... தப்பு செய்து விட்டேன்.

காலம் ஓடியிருந்தது. வெயில் இப்போது என் வயிற்றில் விழுந்து கொண்டிருந்தது. வயிறு எரிந்தது. கண்களைத் திறக்கவில்லை. எழுந்து செல்லவும் தோணவில்லை. மீண்டும் வேப்பமரக் காற்று.

குழந்தை அழுதது. என் கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக ஓடிக்கொண்டிருந்தது. மனத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் பிணமாக எழுந்தேன். 'அம்மா அம்மா' என்ற என் குழந்தையின் அழுகை. தாங்கமுடியவில்லை எனக்கு. 'ஓ' வென்று கதற வேண்டும் போலிருந்தது. வாரி அவனை அணைத்துக்கொண்டேன். பால் ஊற்றிக்கொடுத்தேன். மெதுவாக அவனைத் தட்டித் தூங்க வைத்தேன்.

கடந்த ஒரு வாரமாக நான் வேலைக்குப் போகவில்லை. எண்களை அனிச்சையாய்ச் சுழற்றினேன். எதிர் முனையில் கொஞ்சம் வருத்தத்துடன் எதிர்கொள்ளும் ரிசப்சனிஸ்ட்டின் தேய்ந்த குரல்.

ஆர்வமாக கேட்பது போல் 'ஹல்லொ..டிடிஎஸ்ஹெச்'* என்றாள்.

வழக்கமான பதில்தான் வரும் என்று எனக்குத்தெரியும். அதற்குள் எனக்கு அழுகை வந்துவிட்டது. எதிர்முனையில் பதில் வருவதற்குள், போன் கையில் இருந்து நழுவியது. விசும்பி விசும்பி அழுதேன்.

இதே போன்றதொரு வேதனையில் தனிமையில் அழுவதுதான் மிகப்பெரிய வேதனை என்பதாய்ப்பட்டது எனக்கு. அழுது கொண்டே இருந்தேன். இதயம் முழுதும் விரக்தியிலும் வேதனையிலும் நிரம்பி வழிந்தன.

நண்பர்கள் யாரும் என்னை நேரில் வந்து பார்க்கவில்லை. போனிலேயே விசாரித்துக் கொண்டார்கள். வீட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டேன். குழந்தையையும் என்னிடமிருந்து தனியே பிரித்துவிட்டார்கள். அனாதை போல வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்தேன். என் அழுகை மட்டும் குறையவேயில்லை.

காலண்டரைப்பார்த்தேன். சனிக்கிழமைக்கு இரண்டு நாள் இருந்தது. பக்கென்று மனம் வெடித்துவிட்டது. வாயைப் பொத்திக் கொண்டு கதறிக்கதறி அழுதேன். இன்றே நான் செத்துப்போய் விடக்கூடாதா என்றிருந்தது என் மனம்.

எப்படி இந்த ஏற்பாடெல்லாம் நடந்தது என்றே தெரியவில்லை. அம்மா அப்பா வந்திருந்தார்கள். அவர்களும் என்னைச் சந்தித்துப் பேசவில்லை. குழந்தையைக் காட்டிவிட்டுப் போய்விட்டார்கள். மீண்டும் எனக்குத் தனிமை. ஜன்னலைத் திறந்து குதித்துவிடலாமா என்றிருந்தது.

சனிக்கிழமையை நினைத்து நான் தூங்கவே இல்லை. சென்ற வருட டயரியை எடுத்தேன். சென்ற வருடத்தின் இன்றைய நாள். கண்களை எழுத்துக்களின் மேல் உருட்டினேன். விழிகள் ஈரமாகிவிட்டன.

'நாளை என் இதய மனைவிக்குப் பிறந்த நாள். எனக்குத் திருமணம் என்றதும் மிகவும் பயந்துபோயிருந்தேன், இவள் எப்படியிருப்பாளோ என்று. இன்றுவரை அவள் எந்தவொரு உவமையும் தந்து விவரிக்க முடியாத என் இதய ராணியாகத்தான் இருக்கிறாள். முதலிரவில் என்னிடம் கேட்டாள், உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றைச் சொல்லுங்கள் என்று. அதுவும் ரொம்ப நேரம் கழித்துத்தான் கேட்டாள். வழக்கம்போல் சொன்னேன். தூக்கம் என்று. என்ன ஆச்சரியம். அவள் முகத்தில் எந்தவொரு வேதனையோ அல்லது அது மாதிரியான அறிகுறியோ இல்லவே இல்லை. பேசாமல் தூங்கலாமா.. என்றாள். அப்போதே எனக்குத்தெரிந்துவிட்டது.

'பிங்க்' நிற கல் வைத்து சின்னதாய் அழகான மோதிரம் வாங்கியிருக்கிறேன். இன்றிரவு பனிரெண்டு மணிக்கு அவளை எழுப்பி கொடுக்கவேண்டும்.'

அடுத்த பக்கம் திருப்பினேன்.

'உனக்கு நான்-

முத்தங்களால் ஒரு வாழ்த்து.

இந்த வாழ்க்கை மட்டுமல்ல
எத்தனை வாழ்க்கை உண்டோ
அத்தனையும் உன்னோடு!
இறைவன் அருளட்டும்.'
பின்குறிப்பு:(நேற்று இரவு பனிரெண்டு மணிக்கு நான் தூங்கிவிட்டேன்.!)

கண்ணீர் என் கண்களை விட்டு அகலவில்லை. விழிகளில், ஓடுகின்ற நீரின் மேல் தெரியும் நிழல்களைப்போல வெண்ணிலா படர்ந்து நின்றாள். அழுகையும் நின்றபாடில்லை. தொண்டை கனத்தது.

பாபு போன் பண்ணினான். நான் எழுதிக் கொடுத்ததைத் தலைமை அதிகாரியிடம் காட்டி அனுமதி வாங்கியிருக்கிறானாம். மெல்லியதாய் ஒரு சந்தோசம் வந்திருந்தாலும் வெண்ணிலா படர்ந்து விரிந்து என் பெயரைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது அதில். பாதி இறந்து போய்விட்டிருந்தேன் நான்.

வீடியோ கான்ஃபெரன்ஸில் என் தேவதையின் முகம் தெரிந்தபோதே என் வெடிப்பைத் தடுக்க முடியவில்லை என்னால். அவளை அப்படியே கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. கைகளை நீட்டி 'வெண்ணிலா..ல்லா..வெண்ணீ...' என்றேன். வார்த்தைகள் குழறின. 'என்னடா... எப்படிடா இருக்கே' என்றேன். அவளிடமிருந்து எந்தவொரு ரியாக்சனும் இல்லை. பின்னர் மெதுவாக வார்த்தைகளைக் காற்றில் இருந்து தேடியெடுத்துப் பேசுவதுபோல ஒவ்வொரு எழுத்தாகச் சொன்னாள். "எ..ப்..ப..டிப்..பா இ..ருக்.. கீங்..க...?"

அவளை அதிகம் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றார்... என் எதிரில் கூப்பிடு தூரத்தில் இருந்த அந்த அதிகாரி.

"நல்லா... நானும் சித்தார்த்தும் நல்லா இருக்கோம்டா. அப்புறம் மஹால் கிட்டாடா*. ஹேப்பி பர்த்டேடா என் கண்ணம்மா. சீக்கிரம் வாடா வந்து என்னைக் கட்டிக்கடா." கண்ணீர் அதற்கு மேல் என்னைப் பேச விடவில்லை. அவள் முகத்தில் நிரந்தரமாய் ஒரு புன்னகை.

போதும் போதும் என்று தடுத்து விட்டார்கள். இதயம் முழுவதும் இறக்கை இழந்த பறவையின் தவிப்பு. தலையில்லா ஆட்டு உடலின் ரத்தச் சிதறல்களுடன் கூடிய கடைசியாட்டம். வேண்டும் வேண்டும் எனத் தோணும்போது இல்லை இல்லை என்கிற இயற்கையாட்டம். இன்னும் இன்னும் என்கிறபோது போதும் போதும் என்கிற தடுப்புஆட்டம். எல்லாத்தையுமே இழந்தது போன்றிருந்தேன்.

மூச்சடைத்துக் கீழே சாய்ந்தேன். அப்பா... என்று என் அம்மா என்னை நோக்கி ஓடி வந்தது கடைசியாய் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

கண்ணீர் என் கண்களைச் சூறையாடியிருந்தது. பார்வை மங்கிப்போய் திடுமென வயதான மனநிலை வந்திருந்தது.

வேப்ப மரத்தின் நிழல் சற்றே கிழக்கு நோக்கி சாய்ந்திருந்தது. என் காலில் இப்போது வெப்பம் குடியேறி விட்டிருந்தது.

உள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்டது. அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

"நாங்க அங்கெ போகும்போதே மருமக ஆஸ்பத்திரிலெதான் இருந்தா. ரகுவுக்கு காய்ச்சல்ன்னு ஆஸ்பத்திரிக்கி போனாங்க இல்லியா அன்னக்கித்தான் இவளுக்கு அந்த நோயி பரவியிருக்கு. இவளுக்கு மட்டுமில்லாமெ, அங்கெயிருந்த நர்ஸ்க்கும். ரெண்டு பேருமே இப்போ இல்லெ. நாங்க என்ன பாவம் செஞ்சோமோ பெத்த மக மாதிரி எங்கள பாத்துக்கிட்ட எம் மருமவ இப்போ எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டா..."

குழந்தை இன்னும் அழுதுகொண்டிருந்தது.

"ரோ... ரோ... ரோ என் கண்ணே ஆராரோ...ஆரீரரரோ
சீமைக்கி போன புள்ளே...
சிரிச்சி வாந்த குடும்பத்துலெ
எந்தக்கண்ணு பட்டுடுச்சோ
எங்கண்ணெ நீ ஒறங்கு
பட்டகண்ணு கொள்ளிக்கண்ணோ
பாவி மக பொயிட்டாளே
எம்பொட்டபுள்ள நெத்தியிலெ ஒத்தக்காசெ வெச்சிட்டொமே
பெத்தபுள்ளெ நீ ஒறங்கு...
பேசாமத் தான் ஒறங்கு
கண்ணுக்குள்ளெ வெச்சிருப்பேன் காலமெல்லாம் பாத்திருப்பேன்
படச்சிப்போட்ட சாமிகளே
பெத்துபோட்ட மவராசா
தாயைச்சேய பிரிச்சிப்புட்டா
சந்தோசம் வந்துடுமா
கண்ணெ மூடி நீ ஒறங்கு
என் கண்ணான மகராசா
எந்த நோயி வந்தாலும்
எதுத்து நின்னு பாத்துக்குவேன்
சார்க் நோயா இருந்தான்ன?
சார்ஸ் நோயா இருந்தான்னெ
பதறாமெ கண்ணுறங்கு
பத்திரமாத் தான் ஒறங்கு.
அம்மா எங்கேயும் போகலடா.. அம்மனாத்தான் ஆகிப்புட்டா
சந்தோசமா தூங்கிப்பாரு
சாயங்காலம் வந்துருப்பா
மார்போட ஒன்ன அள்ளி
மடுவுக்குள்ளெ மறைச்சிவெச்சி
முட்டி முட்டி நீ பால் குடிக்கெ
கட்டாயம் வந்துடுவா
ஆராரோ.. கண்ணுறங்கு
ஆரிரரரோ கன்னுக்குட்டி
செல்லமே கண்ணுறங்கு
சாயங்காலம் வந்துருவா
ரோ..ரோ...ரோ... என் கண்ணே ஆராரோ ஆரிரரரோ"

அம்மா தாலாட்டிக்கொண்டிருந்தாள். தொட்டிலில் நான் கண்மூடியிருந்தேன்.

*****

சிங்கப்பூரை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்த SARSல், இறைவனுக்கு நிகரான செவிலிப்பணியில் ஈடுபட்டு தம் இன்னுயிரை நீத்த செவிலித்தாய்களுக்கு இந்தக்கதை அர்ப்பணம்.

அருஞ்சொற்கள்
*டிடிஎஸ்ஹெச் - டான் டோ க் செங் ஹாஸ்பிட்டல். சிங்கப்பூர்.
*மஹால் கிட்டா- டக்காலோ பிலிப்பினோ மொழியில் I Love You.

எம்.கே.குமார்

© TamilOnline.com