புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவுடையார் கோவில் அருகிலிருக்கும் தீயத்தூர் இவரது சொந்த ஊர். தற்போது 32 வயதாகும் எம்.கே.குமார் படித்ததெல்லாம் சென்னை தரமணியிலுள்ள வேதியல் தொழிநுட்பக் கல்லூரியில். திருச்சி, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் ஆறாண்டுகள் பணியாற்றிய பின், ஏழெட்டு ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
காலச்சுவடு, வார்த்தை போன்ற அச்சிதழ்களிலும் அனைத்து இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள், கட்டுரைகள், கட்டுரைத் தொடர்கள் மற்றும் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. தமிழோவியம் மின்னிதழில் எழுதிய 'மாஜுலா சிங்கப்பூரா' என்ற சிங்கப்பூர் வரலாறு குறித்த தொடர் வாசகர்களுக்கிடையே இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
2006ல் பிரசுரமான 15 சிறுகதைகள் அடங்கிய இவரது சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'மருதம்'. மருதுசேர்வையை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்ட ஒரு சிறுகதையின் பெயர் இது. விவசாய வாழ்க்கையைச் சித்திரிக்கும் கதை என்பதும் குறிப்பிடத்தக்கது. நூலின் தலைப்பே சொல்வதுபோல இந்தத் தொகுப்பின் பெரும்பாலான சிறுகதைகள் தஞ்சாவூர் விவசாயப் பகுதிகளைக் களமாகக் கொண்டவை. மூத்த எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இந்நூலுக்கு எழுதி வழங்கிய முன்னுரையில் குமார் மீதான தனது நம்பிக்கையைப் பதிவு செய்திருப்பார். கிராமியக் களமும், கருவும், பாத்திரங்களும் எம்.கே. குமாருக்கு மிகவும் இலகுவான பரப்பு என்று இந்தத் தொகுப்பின் சிறுகதைகள் நிரூபிக்கின்றன. சம்பவங்களும் கதைமாந்தர்களும் இயல்பாகவும் எளிமையாகவும் புனையப்பட்டுள்ளன.
##Caption## சங்க இலக்கியங்களின் போக்குகளும் மொழிகளும் இவரில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை இவரது சில சிறுகதைகளில் உணரலாம். பரீட்சார்த்தமான மொழிச்சோதனைகள் பலவற்றைச் செய்யும் இவரது எழுத்தில் அதற்கான சாத்தியங்கள் நிலவுகின்றன. ஆகவே, ஓரளவுக்கு இயல்பாகவும் அமைகின்றன. 'வேட்டை' போன்ற மிகச்சில கதைகளில் மட்டும் கொஞ்சம் ஒட்டாமல் விலகி நிற்கும் மொழி வாசகனுக்கு ஒருவித சுவாரசியத்துடன் புலப்படக்கூடும்.
சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட சிறுகதைகளையும் எம்.கே. குமார் எழுதி யுள்ளார். அவை அந்நாட்டிலுள்ள இடங்களின் பெயர்களையும் உள்ளூர் வழக்குகளையும் மட்டுமே கொண்டவையன்று. உள்ளூர் வாழ்க்கையையும் சமூகச் சிக்கல்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு எழுதப்பட்டவை. உதாரணமாக, 'மஹால் சுந்தர்' என்ற இவரது சிறுகதை சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நல்ல சிறுகதை. பிலிப்பைன்ஸ் பெண் ஒருத்தி சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக வந்து வேலை செய்கிறாள். தனது பங்களாதேஷி காதலனால் ஏற்படும் கர்ப்பத்தைக் கலைக்க உதவுவது சுந்தர் எனும் இந்தியன். நிரந்தர வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு சராசரி ஆணுக்கு ஏற்படும் குழப்பங்களுடன் ஊருக்குப் போய் முறையாகத் திருமணம் முடித்துத் திரும்பும் சுந்தர் என்று நகரும் இக்கதையின் முடிவும் மிக எதார்த்தமாக அமைகிறது. முழுக்க முழுக்க சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட சிறுகதைகள் மட்டுமே அடங்கிய இவரது ஒரு தொகுப்பு இனிமேல்தான் வெளியாக வேண்டியுள்ளது.
எழுதாமல் இருக்கமுடியுமா என்று குமாரிடம் கேட்டால் சுருக்கமாக 'முடியும்' என்று சொல்வார். இவருக்கு எழுத்து பொழுதுபோக்கும் இல்லை. ஆனால் அதற்கு கனமான ஒரு நோக்கமும் இல்லை என்று சொல்லும் குமார், எழுத்தைத் தன் 'அகத்துடனான கலவி' என்றும் சொல்வார். வாசிப்பவனுக்கு எத்தனை நெருக்கத்தில் இருக்கிறது என்பதே இலக்கியத்தின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று கருதும் எம்.கே. குமார், இலக்கியத்தை உலக வாழ்க்கையின் ஒரு சாளரமாகப் பார்க்கிறார். படிக்கும்போது இந்தச் சாளரம் திறந்து கொள்கிறது என்பார். வாழ்க்கைக்கு இலக்கியம் தேவையா என்ற விவாதத்திற்குள் புகுந்தால், 'தன்னையறிந்தவனுக்கு எதுவுமே தேவையில்லை' என்று கூறுவார். இவரை மிகவும் கவரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி. ஏனெனில் "வார்த்தைகளில் வாழ்வைச் சொன்ன ஓர் எழுத்தாளர் அவர்".
பழந்தமிழ் மொழியைக் கையாள்வதிலும் நவீனமாக எழுதுவதிலும் இவருக்கு இருக்கும் திறமை சிறுகதையில் புதிய முயற்சிகளுக்கு வழிசெய்கிறது. கவிதையிலும் இவர் குறிப்பிடத்தகுந்த ஆக்கங்களைச் செய்துள்ளார். எழுத்துத் துறையில் மென்மேலும் துடிப்போடு இயங்குவதற்கான அனைத்துத் திறன்களுமுடையவர். எழுத்துப் பயணத்தில் அதிக காலம் தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து எழுதுவாரேயானால், இவரது பங்களிப்பு கணிசமானதாக ஆகும். சிங்கப்பூர் தமிழிலக்கியத்துக்குச் சிறந்த ஓர் எழுத்தாளர் கிடைத்துவிடுவதும் உறுதி. வெள்ளைச் சிரிப்புடன் இதமாகப் பேசிப்பழகும் இவர், காலச்சுவடு நடத்திய சுந்தர ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி-2008ல் முதல் பரிசைப் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவருக்கு குறும்படங்களிலும் ஆர்வமுண்டு. 'பசுமரத்தாணி' இவரின் முதல் குறும்படம். இவர் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்.
ஜெயந்தி சங்கர் |