தென்றல் பேசுகிறது
'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்று பாரதி பாடியதற்கேற்ப, நிலவுக்கு 'சந்திரயான் 1' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய இந்திய விஞ்ஞானிகளைத் தென்றல் பாராட்டுகிறது. இது ஒரு மைல்கல். பலமுனைகளிலும் இந்தியா பெற்றுவரும் முன்னேற்றங்களில் இது மிகக் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத் தக்கது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றை அடுத்து ஆறாவதாக இந்தச் சாதனையை பாரதம் செய்துள்ளது. அமெரிக்காவின் நாஸா இதில் இரண்டு பொறிகளை அனுப்பியிருக்கிறது. 29 கிலோ எடையுள்ள இந்தியப் பொறி ஒன்று தாய்க்கலத்திலிருந்து பிரிந்து நிலாத்தரையில் இந்திய தேசியக் கொடியோடு சென்று இறங்கவும் உள்ளது.

அதே நேரத்தில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதையும் 'தென்றல்' வரவேற்கிறது. மரபுசாரா எரிபொருள் துறையிலும் இந்தியா ஒரு பெரிய அடியை எடுத்துவைத்துச் சாதித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தொழில்துறையில் அபரிமித வளர்ச்சி பெற்றுவரும் இந்தியாவில் தொடரும் மின்வெட்டு சகாப்தம் முடிந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பன்னாட்டுக் குழுமங்கள் பிறநாடுகளுக்குக் குடிபெயர அதிக காலம் ஆகாது.

இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும் போது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து பராக் ஹுஸைன் ஒபாமா அதிபராகவே அறிவிக்கப்பட்டிருக்கலாம். இது சிறுபான்மையினருக்குக் கிடைத்த பெரு வெற்றியாக இருக்கும். அமெரிக்க ஜனநாயகம் எவரையும் தனது தலைமையேற்க வழிவிடுகிறது என்பதற்கும் ஒரு நிரூபணம். ஒருவேளை, உலகின் மிக முக்கியத் தனிநபராக அவர் உயர்ந்துவிட்டால், அவரே மாறுபட்டவராகிச் செயல்படவும் கூடும். அவரால் மக்களைத் தொட, ஈர்க்க முடிந்தது, முடிகிறது என்பது இந்தப் பீடத்தில் அவருக்கு ஒரு முக்கியமான தகுதி. அந்தத் தொடர்பை இழந்துவிடாமல் நல்ல அரசை அவர் அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும். அதைச் செய்ய பராக் ஒபாமாவை தென்றல் வாழ்த்துகிறது.

அமெரிக்கப் பொருளாதாரம் கண்டது மிகப் பெரும் சரிவு. ஆனாலும், பிற நாணயங்களுக்கு எதிரே டாலர் வலுக்கூடியிருப்பது ஒரு வியக்கத்தக்க உண்மை. இதற்குக் காரணம் அமெரிக்க அரசின் விரைவான சில நடவடிக்கைகள். வீழ்ச்சியை எதிர்கொண்ட ஏ.ஐ.ஜி. போன்ற நிறுவனங்களுக்கு உடனடியாகப் புது ரத்தம் பாய்ச்சி, அவற்றை நிமிர்த்தி நிறுத்தியதும், தவறு செய்த சில பெருந்தலைகளைக் கருணையின்றிச் சாய்த்ததும் அமெரிக்க அரசின் தயார் நிலையை உலகுக்கு அறிவித்தன. சந்தைச் சக்திகளை மதிக்கும் அமெரிக்காவில் நிறுவனங்களை அரசு அதிகம் நெறிப்படுத்துவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட சமயத்தில் சற்றே நெறிப்படுத்தினால் நல்லதுதான் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும், டாலர் தனக்கென்று உலகப் பொருளாதாரத்தில் ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது அமெரிக்க அரசு எந்திரத்தின் துடிப்பான செயலாண்மையைக் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை.

மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த்தை தென்றல் வாழ்த்துகிறது.

நல்ல நேர்காணல்களுக்குத் தென்றல் என்கிற பெயரை இந்த இதழும் தக்க வைத்துக்கொள்கிறது. ஆரம்ப நிலையில் இருந்த கல்லூரி ஒன்றைக் கையிலெடுத்து 'ஏட்டுக் கல்வி மட்டுமல்ல, வாழ்க்கைக் கல்வியும் தருவேன்' என்று தொடங்கி, அந்தக் கல்லூரியைச் சென்னையின் முன்னோடிக் கல்லூரிகளில் ஒன்றாக்கிய டாக்டர் நிர்மலா பிரசாத் அவர்களின் நேர்காணல் உற்சாகம் தருவது. எல்லே சுவாமிநாதனின் நகைச்சுவை தெறிக்கும் கதை, வற்றாயிருப்பு சுந்தரின் கட்டுரை, உயர் ரத்த அழுத்தம் பற்றிய மருத்துவக் கட்டுரை என்று பல தெரிந்தெடுத்த அம்சங்களுடன் மீண்டும் தென்றல் உங்களைத் தேடி வருகிறது. அதுமட்டுமா? இந்த இதழ் அட்டைப்படம் ஓர் இளம் ஒளிப்படக் கலைஞரின் சொக்கவைக்கும் படைப்பைத் தாங்கியிருக்கிறது.

வாசகர்களுக்கு கந்த சஷ்டி மற்றும் குழந்தைகள் தின வாழ்த்துகள்!. Happy Thanksgiving.


நவம்பர் 2008

© TamilOnline.com