சஹானா கிருபாகரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 23, 2008 அன்று, ஜெயேந்திர கலாகேந்திராவின் நடன இயக்குனர் திருமதி. சுகந்தா ஸ்ரீநாத்தின் மாணவியான செல்வி சஹானா கிருபாகரனின் அரங்கேற்றம், கலிபோர்னியாவில் உள்ள கபர்லி அரங்கில் நடந்தேறியது. பாரம்பரியம் மிக்க பரதக்கலையை 25 ஆண்டுகளாகக் கற்றுத் தரும் குரு சுகந்தாவுக்கு இந்த அரங்கேற்றம் மேலும் ஓர் மைல்கல். திரு வி.பி. தனம்ஜயனின் நடன அமைப்பில் கம்பீர நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த நடராஜ அஞ்சலியுடன் நிகழ்ச்சி துவங்கியது. சங்கீரண அலாரிப்பைத் தொடர்ந்து ரூபக தாளத்தில் அமைந்த வாசஸ்பதி ஜதீஸ்வரத்தில் நிகழ்ச்சி மேலும் மெருகேறியது. மிஸ்ரசாபு தாளம், ராகமாலிகையில் அமைந்த கணேஷ சப்தத்திற்கு சஹானா அழகான அபிநயங்களுடன் நளினமாக நடனமாடினார். சங்கராபரண வர்ணம் இவ்வரங்கேற்றத்திற்கு மேலும் வர்ணம் சேர்ப்பதுபோல் அமைந்தது. சிவபெருமானின் மீது தனக்கேற்பட்ட பக்தியோடான காதலை ஓர் இளம்பெண் தன் தோழியிடம் சொல்லி, தூதுசெல்ல மன்றாடுவதுபோல் அமைந்த இவ்வர்ணத்தில், சஹானா தெளிந்த முகபாவனைகளுடன், தாள ஜதிக்கேற்ப அதிவேகமாக நடனமாடியது ரசிக்க வைத்தது.

மாணவிகளின் திறமைகளை ஊக்குவித்து வெளிப்படுத்துவதில் வல்லவரான சுகந்தா, சஹானாவின் திறமைக்குச் சவால் விடும் வகையில் அலாரிப்பு, பதம், கீர்த்தனம் மற்றும் தில்லானாவிற்கு அதி அற்புதமாக நடனத்தை வடிவமைத்திருந்தார். உடு மலைப்பேட்டை நாராயணகவியின் ‘பாற்கடல் அலைமேலே' என்ற தசாவதாரப் பாடலுக்கு சஹானா, ஒற்றைகாலில், மீன் முத்திரையுடன் சுழன்று, சுழன்று ஆடியது பார்ப்போரை வியக்க வைத்தது. மீனாட்சியின் அவதாரப் பெருமைகளை உணர்த்தும் ஆபோகிப் பதம், சஹானாவின் பதமான நடனத்தால் பாங்குற அமைந்தது. இதில் மிக அற்புதமான நடனம் எதுவென்றால், பாரதியின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடலுக்கு சஹானா அழகாக அபிநயம் செய்து ஆடியதுதான். கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி தினத்தன்று நடைபெற்ற இந்த அரங்கேற்றத்தில் சஹானா, அந்தக் கண்ணனது லீலைகளைக் கண்ணனாகவும், யசோதையாகவும், கோபிகைகளாகவும் மாறிமாறி நடனம் ஆடியது, பிரமிப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது கதனகுதூகல தில்லானா. அதிவேக ஜதிகளுக்கும் துரித கதி கோர்வைகளுக்கும் மின்னல் வேகத்தில் சஹானா ஆடியதை அனைவரும் கண்டு களித்தனர்.

சுகந்தா ஸ்ரீநாத் (நட்டுவாங்கம்), ஈஸ்வர் ராமகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), ரமேஷ்பாபு (மிருதங்கம்), சுபா நரசிம்மன் (வயலின்) ராதாகிருஷ்ணன் ராமகிருஷ்ணன் (புல்லாங்குழல்) ஆகியோரது பக்கவாத்தியம் இவ்வரங்கேற்றத்திற்கு மேலும் மெருகூட்டியது.

வான்மதி தரணிபதி

© TamilOnline.com