ஆகஸ்ட் 23, 2008 அன்று, ஸ்ரீக்ருபா நடனப்பள்ளி மாணவி ஷரண்யாவின் அரங்கேற்றம் ஸாரடோகா உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. ஒன்பது வயதான ஷரண்யா, குரு ஸ்ரீமதி விஷால் ரமணியிடம் நூறாவதாக அரங்கேறும் மாணவி ஆவார். சிறுமி ஷரண்யாவின் நடனம் வெகு சிறப்பாக இருந்ததற்கு குரு விஷால் ரமணியின் உழைப்பும், பொறுப்பும், ஆசிகளும் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.
ஆரபியில் அமைந்த விநாயகர் பதத்தின் நடனம் அருமை. ஸ்ரீ அசோக் சுப்ரமண்யத்தின் ப்ருந்தாவன சாராங்கா வர்ணம் அட தாளத்தில் களையாக இருந்தது. ஐம்பது நிமிட வர்ணத்தை அலுங்காமல் அழகான முகபாவத்தையும், சிறப்பான ஜதிகளையும் வைத்து, மிக அழகாக ஆடினார் ஷரண்யா. இந்த வர்ணத்திற்கும் இதுவே முதல் அரங்கேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ரஞ்சனியில் அமைந்த ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் பாடலில் கிருஷ்ண பரமாத்மாவை வெகு சிறப்பாக வர்ணித்து ஆடியது அனைவரையும் கவர்ந்தது. கமாஸ் ராகத்தில் அமைந்த ‘இடது பதம் தூக்கி' பாடலுக்கு ஷரண்யா அபிநயித்த விதம் அருமை. கௌளை ராக சக்தி பதத்தை முகபாவத்தில் வெகு அழகாகக் கொண்டு வந்து வர்ணித்தார் ஷரண்யா. தொடர்ந்த மாண்டு ராகத் தில்லானா நன்று. அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ வைரவன் அவர்கள், ஷரண்யாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். சென்னை ந்ருத்யோ பாஸன நடனப்பள்ளியைச் சேர்ந்த திருமதி ஹேமாராஜன் ஷரண்யாவின் நடனத் திறமையைப் புகழ்ந்தார்.
இந்தியாவிலிருந்து இதற்காகவே வந்திருந்த நட்டுவாங்கம், மிருதங்கம், வயலின் பக்க வாத்தியக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் ஒத்துழைப்பு நிச்சயம் பாராட்டத்தக்கது.
செல்லம் ஸ்ரீனிவாசன் |